SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேடையான 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது.
மைதானத்தில் 1 லட்சம் பேர், வீடுகளில் தொலைக்காட்சிகள் முன்பு பல கோடி பேர் என்ற எதிர்பார்ப்பின் சுமை அவர்களை சறுக்க வைத்தது.
அதன் பிறகு ஐசிசி கோப்பைக்கான தேடலை நிறைவேற்றினர். 2024-இல் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியிலும் 2025-இல் துபையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியிலும் இந்திய அணி வென்றது.
ஆனால் சொந்த ஊரில் மீண்டுமொரு இறுதிப் போட்டி. அந்த அழுத்தம் அவர்களுக்கு தடையாக இருந்திருக்குமா?
மும்பையிலிருந்து ஆமதாபாத் புறப்பட்ட ரயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே எதிர்பார்ப்புடன் பயணித்தனர்.
2023-இல் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றதைப் பற்றி பேசுவதற்கு அச்ச உணர்வு வெளிப்படுவதைக் காண முடிந்தது. செய்தியாளர் சந்திப்புகளில் அதைப்பற்றி கேள்விகள் எழுப்பட்டபோதும் அவை தவிர்க்கப்பட்டன.
“அது முடிந்துவிட்டது, சார். மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது,” என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் தெரிவித்தார்.
வலியைக் கொடுத்த நகரம் இந்த முறை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்தியாவால் அவர்களை முன்பு தடுத்து நிறுத்திய ஒன்றைக் கடந்து வந்து இந்த இறுதிப் போட்டிகளை வெல்ல முடியுமென்றால், மற்ற அணிகளிடம் என்ன நம்பிக்கை இருக்க முடியும்?
‘சூப்பர் ஸ்டார்கள் இல்லாத அணி’
உண்மையில் இந்தியாவின் வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை.
அமெரிக்காவுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் தடுமாறிய இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியிடம் தோல்வியைக் கண்டது. அப்போதிலிருந்து உள்ளூர் நிலைமைகளில் வெல்வதற்கான வாய்ப்புள்ள அணியாகவே அவர்கள் பார்க்கப்பட்டனர். டி20 கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய சிறந்த அணிகளில் ஒன்றாக தற்போதைய இந்திய அணி உள்ளது.
தென் ஆப்ரிக்கா அளித்த தோல்விக்குப் பிறகு இந்தியா விளையாடிய நான்கு போட்டிகளுமே நாக்-அவுட் போட்டிகள் தான்.
அந்தச் சூழலில் ஜிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மூன்று முறை 250 ரன்களைக் கடந்திருந்தனர். முந்தைய 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளிலும் இது மாறுபட்ட இந்திய அணியாக உள்ளது.
இந்த அணியில், வேகப்பந்து வீச்சாளர் வடிவில் நவீன கால கிரிக்கெட்டின் அதிசயமான ஜஸ்ப்ரீத் பும்ரா இருக்கிறார்.
எனினும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பெயரைத் தாங்கிய ஆயிரக்கணக்கான ஜெர்சிகளை மைதானத்தில் பார்க்க முடிந்தது.
கடந்த கால சூப்பர் ஸ்டார்கள் இல்லாத அணி இது. கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரால் கூட்டுமுயற்சியில் கவனம் செலுத்த தூண்டப்படும் அணி இது.
சூர்யகுமாரும் இதற்கு முன்பு இருந்த கேப்டன்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கிறார். மிகவும் தாமதமாக, தனது 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார், ஐபிஎல் அணியின் கேப்டனாகக் கூட இல்லை.
இதற்கு முன்னதாக கபில் தேவ், தோனி மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே இந்தியாவுக்கு உலக கோப்பை வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
இவர்களுடன் தற்போது சூர்யகுமாரும் தனது சொந்த வெற்றியுடன் நிற்கிறார். தொடர் முழுவதும் அனைத்து முனைகளிலிருந்தும் பங்களிப்பு வந்திருக்கிறது.
‘ஒருங்கிணைந்து ஆடும் அணி’
தொடக்கத்தில் இரண்டு அரைசதங்கள் அடித்து இஷான் கிஷன் போட்டிகளை துடிப்புடன் வைத்திருந்தார். இந்த தொடரில் ஆரம்பத்தில் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கப் பெறாத சஞ்சு சாம்சன் சக வீரர் ஒருவரின் துக்கத்தால் அணியில் இடம் பிடித்து தனது சொந்த முயற்சியால் இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆட்டத்தின் இறுதி கட்டங்களில் ஷிவம் தூபே அதிரடி காட்டிய நிலையில் அக்சர் படேல் ஃபீல்டிங்கில் அசத்தினார். இந்தத் தொடர் முழுவதும் தடுமாறிய அபிஷேக் சர்மா கூட மிகவும் அவசியப்படும் போது இறுதிப் போட்டியில் ஒரு அரைசதம் அடித்தார்.
“அவர்கள் ஒரு சிறந்த அணி. இந்த சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஃப்ளாட்டான விக்கெட்டுகளில் தரமான அணிகளுடன் அவர்கள் அதிகம் விளையாடியுள்ளனர். அவர்கள் விளையாடத் தொடங்கினால் நிறுத்துவது கடினம் என்பதை மீண்டுமொரு காட்டியுள்ளனர்,” என நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
34 போட்டிகளில் 2 மட்டுமே தோல்வி
டி20 போட்டிகளின் உச்சத்தில் இருக்கும் இந்திய அணி ஏற்படுத்தியிருக்கும் இடைவெளியை நிரப்புவதே மற்ற அணிகளின் பணியாக இருக்கும்.
மூன்று முறை சாம்பியன், டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ள இந்திய அணிக்குச் சாதகமாகவே அனைத்தும் நடக்கின்றன.
இளம் அணி மற்றும் ஐபிஎல்-இல் வளர்க்கப்படும் திறமைசாலிகள் மற்றும் அந்தத் தொடர் வழங்கும் பணத்தின் பலன்கள் இந்திய அணிக்கு கிடைக்கின்றன. இதோடு சர்வதேச விளையாட்டு வருவாயில் மற்றவர்களை விடவும் பெரும் பங்கு பிசிசிஐ-க்கு கிடைக்கிறது.
2024-இல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது ஐசிசி கோப்பைக்கான 13 வருட காத்திருப்பு முடிவுற்றது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது.
கடந்த நான்கு ஐசிசி தொடர்களில், 34 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. அவர்களை எட்டிப்பிடிப்பது எளிமையான பணியாக இருக்காது.
பட மூலாதாரம், Getty Images
நெருக்கடியான தருணங்கள்
கடந்த இரண்டு வாரங்களில் அவர்கள் சிறப்பாக ஆடியிருந்தாலும் மற்ற அணிகள் அளித்த நெருக்கடியான சில தருணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்தியா உடனான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு கேட்சுகளை தவறவிட்டது. அரை இறுதிப் போட்டியில் சாம்சன் கொடுத்த கேட்சை ஹாரி ப்ரூக் தவறவிட்டார். இவை நடந்திருக்கவில்லை என்றால் சூழல் வேறாக இருந்திருக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. இந்த வெற்றி பயணம் இந்திய அணி வென்றிருக்க வேண்டிய 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆரம்பித்தது. அதன் பின்னர் 2024-ல் மெதுவான பிட்சுகளைக் கொண்ட 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது.
அதன் பிறகு 2025-இல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் துபையில் நடைபெற்றன. சமீபத்திய உலகக்கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தியது.

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்லுமா?
இனி வரும் சர்வதேச தொடர்கள், சிறிது காலத்திற்கு இந்திய துணை கண்டத்தில் நடக்கப் போவதில்லை. 2027-இல் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையை ஜிம்பாப்வே, நமீபியா மற்றும் தென் ஆப்ரிக்கா இணைந்து நடத்துகின்றன. அங்குள்ள பிட்சுகள் வேகப்பந்து வீச்சுக்கும் பவுன்சுக்கும் உதவும்.
2028 டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்துகின்றன. அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
பும்ராவைக் கடந்து வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூரில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து உடன் தோல்வியைச் சந்தித்து இந்திய அணி தடுமாறி வருவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளுக்கு மத்தியில் 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்சும் டி20 வடிவத்தில் விளையாடப்பட உள்ளது. அந்தத் தொடரும் ஏற்கெனவே வீரர்களின் மனதில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
“நிச்சயமாக அடுத்த இலக்கு ஒலிம்பிக் தங்கமும் அடுத்த டி20 உலக கோப்பையும் தான்,” என்றார் சூர்யகுமார்.
“2024-இல் இருந்து நாங்கள் விளையாடிய விதத்தால் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளோம். அதையே 2027, 2028 மற்றும் 2029-இல் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
இது மற்ற அணிகளுக்கான எச்சரிக்கையாகவும் உள்ளது. யாராவது ஒருவர் இந்திய அணியை எட்டிப்பிடிக்க வேண்டும். இந்த விளையாட்டிற்கும் அது தான் தேவைப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



