Home தேசிய national tamil 2026 தேர்தலில் மேற்கு மண்டலத்தில் வெற்றி யாருக்கு? – கொங்கு கட்சிகளின் பலம் என்ன?

2026 தேர்தலில் மேற்கு மண்டலத்தில் வெற்றி யாருக்கு? – கொங்கு கட்சிகளின் பலம் என்ன?

9
0

SOURCE :- BBC NEWS

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

பட மூலாதாரம், Getty Images

”திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் மேற்கு மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன” என கூறுகிறார் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு.

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள இவர், “பாஜகவை கொங்கு என அழைக்கப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மண்டல மக்கள் தீவிரமாக ஆதரித்தும் மத்திய அரசு எந்தத் திட்டங்களையுமே இங்கு செயல்படுத்தவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் பாஜகவையும், அதற்கு ஆதரவாகவுள்ள அதிமுகவையும் கொங்கு மக்கள் தோற்கடிப்பார்கள்” என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

இதே கருத்தை திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் வழிமொழிகிறார்.

மேற்கு மண்டலத்தில் இருந்து அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் வாதம் வேறு விதமாக உள்ளது.

”தொழில் வளம் மிக்க மேற்கு மண்டலத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த நான்கரை ஆண்டுகளிலும் நிம்மதியாக தொழில் செய்ய முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் லஞ்சம், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் தொழில்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. அதனால் கொங்கு சமுதாய மக்களும், மேற்கு மண்டலத்திலுள்ள பிற மக்களும் திமுகவை ஆதரிக்கத் தயாராகயில்லை” என்கிறார் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் எஸ்.பி.ராஜேந்திரன்.

இதே போல தங்கள் கட்சியும் அதிமுக கூட்டணியிலேயே தொடர்வதாகக் கூறுகிறார் கொமுக தலைமைக் கழகச் செயலாளர் சந்திரசேகர்.

கொங்கு சமுதாய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிரெதிர் கூட்டணிகளை ஆதரிக்கும் நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்தில் திமுக, அதிமுகவின் வெற்றி தோல்விகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தத் தேர்தலில் கொங்கு கட்சிகளின் தாக்கம் குறித்து அலசுகிறது இந்தத் தொகுப்பு.

பாமகவை பார்த்து துவக்கப்பட்ட கொமுக

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாய மக்களுக்காகத் துவக்கப்பட்ட வன்னியர் சங்கம், பாமக என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்து, எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் எனப் பலவித அரசியல் அங்கீகாரங்களைப் பெற்றது.

அதைப் பின்பற்றி “கொங்கு மண்டலம்” எனப்படும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாகவுள்ள கொங்கு வேளாள கவுண்டர்களுக்கான அரசியல் கட்சியாக 2009ஆம் ஆண்டில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. இதற்காக கருமத்தம்பட்டியில் 3 நாட்கள் நடந்த பிரமாண்ட மாநாடும், அதற்குக் கூடிய கூட்டமும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொமுக தனித்துக் களம் கண்டது. அதில் மேற்கு மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் போட்டியிட்டு 5,79,703 வாக்குகள் பெற்றது. கோவை தொகுதியில் போட்டியிட்ட ஈஸ்வரனுக்கு அதிகபட்சமாக 14% வாக்குகள் கிடைத்தன. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய 6 தொகுதிகளில் மட்டும் 5,18,186 வாக்குகளை கொமுக வாங்கியிருந்தது.

தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வரி வருவாயில் அதிக பங்களிப்பு வழங்கும் மேற்கு மண்டலம், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும், மத்திய, மாநில அரசுகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பதே, அந்தத் தேர்தலில் கொமுகவின் முக்கிய முழக்கமாக இருந்தது.

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக கூட்டணியில் கொமுக சேர்ந்தது. அப்போது அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. அப்போது அதிமுக வென்று ஆட்சிக்கு வந்தது.

அதன் பிறகு கொமுக இரண்டாகப் பிரிந்தது. பொதுச் செயலாளராக இருந்த ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை துவக்கினார். மாநில தலைவராக இருந்த பெஸ்ட் ராமசாமி வசம் கொமுக உள்ளது. நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு கட்சிக்குப் போய்விட்டனர்.

இந்த அமைப்பு மற்றும் கட்சிகளுடன் இணையாமல் தனியாக கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்த தனியரசு, 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் பரமத்திவேலூரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். 2016 தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடர்ந்த அவர் காங்கேயத்தில் வென்றார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கொமதேக, திமுக கூட்டணியில் இடம் பெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், உதயசூரியன் சின்னத்தில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அக்கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு, இரு முறையும் வெற்றி பெற்றது.

ஈஸ்வரன், தனியரசு இருவருமே வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளனர். கொமுக, அதிமுகவை ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது. சமுதாய அமைப்பான கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது.

இப்படி கொங்கு கட்சிகளும், அமைப்புகளும் எதிரெதிர் கூட்டணிகளில் இருப்பதால், இந்தச் சமுதாய மக்களின் வாக்குகள் எந்தக் கூட்டணிக்கு அதிகமாகக் கிடைக்கும், அது தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துமென்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலப் பொதுக்குழு கூடி, எந்தக் கூட்டணிக்கு ஆதரவு என்ற முடிவை இனிமேல்தான் எடுக்கும் என்று கூறும் அமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி.ராஜேந்திரன், ”பொதுவாக கொங்கு சமுதாய மக்களிடம் அதிமுக ஆதரவு மனநிலைதான் உள்ளது. தொழில் சமூகமாகவுள்ள கொங்கு சமுதாயம், கடந்த 5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் அதீத லஞ்சம், சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது தேர்தலில் எதிரொலிக்கும்” என்று தனது கருத்தை கூறினார்.

”எடப்பாடி பழனிசாமியின் நான்கரை ஆண்டுக்கால ஆட்சியின் அருமை அப்போது தெரிந்ததைவிட, இந்த 5 ஆண்டுகளில்தான் நன்றாகத் தெரிந்தது. அத்திக்கடவு–அவினாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலமெடுப்பு உள்பட கொங்கு மண்டலத்துக்குப் பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில்தான்” என்றார் எஸ்.பி.ராஜேந்திரன்.

இந்தக் கூற்றை முற்றிலும் மறுத்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலமெடுக்கும் பணி பெருமளவில் நடந்தது திமுக ஆட்சியில்தான் என்று கூறும் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நிலமெடுத்துக் கொடுத்து இரண்டரை ஆண்டுகளாகியும் அதை விரிவாக்கம் செய்யாமல் தொழில் வளர்ச்சியை முடக்கியது பாஜக தலைமையிலான மத்திய அரசும், அதற்கு ஆதரவாகவுள்ள அதிமுகவும்தான் என்று குற்றம் சாட்டுகிறார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய ஈஸ்வரன், ”தமிழ்நாட்டுக்கு பாஜக ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை. கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுப்பதில் என்ன பிரச்னை, கோவைக்கு எய்ம்ஸ் கேட்டோம் தரவில்லை. விமான நிலையத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கவில்லை. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கும் ஒரு பைசா தரவில்லை. அத்தகைய பாஜகவுடன் கூட்டணி சேரவே மாட்டேன் என்று 2024இல் சொன்ன எடப்பாடி பழனிசாமி, இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறார். வளர்ச்சியை விரும்பும் கொங்கு சமுதாய மக்களும், கொங்கு மண்டல மக்களும் இதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்” என்றார் ஈஸ்வரன்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ஏராளமான பாலங்கள், சாலை விரிவாக்கம் எனக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன என்கிறார் எஸ்.பி.ராஜேந்திரன். அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வுக்குத் திட்டமிட்டபோதே சொத்துக்கு வரியா, சொத்தை விற்க வரியா என்று கேட்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் 250% சொத்து வரியை உயர்த்தியதில் இங்குள்ள தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் அவர்.

”ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கொங்கு மண்டலத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் நடந்தன. ஐந்து ஆண்டுகளில் ஆறரை லட்சம் கோடி கடன் வாங்கிய திமுக ஆட்சியில், இங்கே சொல்லிக்கொள்ளும்படி எந்தத் திட்டமும் நடக்கவில்லை. அதனால் கொங்கு சமுதாய மக்கள் மட்டுமின்றி, தொழில் செய்வோர், தொழிலாளர் என எல்லா தரப்பினரும் திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். திமுகவை அவர்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை” என்றார் ராஜேந்திரன்.

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

சட்டப்பேரவை தேர்தல்களில் திமுகவை புறக்கணிக்கும் மேற்கு மண்டலம்

இந்த இருவரின் கருத்துக்கு மாற்றாக மற்றொரு கருத்தை வெளிப்படுத்தும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, திமுக ஆட்சி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இரண்டிலுமே கொங்கு மண்டலத்துக்குப் பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பாஜகவுடன் இணைந்து தொழில்களை முடக்க அதிமுக ஆட்சி துணைபோனது என்கிறார் தனியரசு.

பிபிசி தமிழிடம் பேசிய தனியரசு, ”ஜவுளி தொழிலுக்குப் பெரும் சவாலாக இருந்த சாயக்கழிவு பிரச்னைக்கு ரூ.200 கோடியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தொழிலைக் காத்தார் ஜெயலலிதா. அவரது காலத்தில் பாசனத் திட்டங்களின் பாசனப்பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி காலத்தில் பல கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் பல ஆண்டுகளாகக் காத்திருந்த 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

”கொங்கு மண்டலத்தில் சுயமாக வளர்ந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஆதரித்தது என பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு தகர்த்தது எடப்பாடி பழனிசாமியும், தங்கமணியும், வேலுமணியும்தான். அதிமுக ஆட்சியில்தான் பனியன் தொழில் பாதிப்படைந்தது. விசைத்தறிகள் முடங்கின. வாகன உதிரி பாகங்கள் தொழில் நலிவுற்றது.” என்று பெரும் பட்டியலிட்டார் தனியரசு.

இவற்றையெல்லாம் சரி செய்வதற்கே திமுகவுக்கு ஐந்து ஆண்டுகளாகிவிட்டதாக ஈஸ்வரன், தனியரசு ஆகியோர் கருத்து தெரிவித்தனர். பாஜகவுடனும், தமிழக ஆளுநருடனும் கைகோர்த்துக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்ததை, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள கொங்கு மண்டல மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது இருவரும் கூறும் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதனால்தான் 2021க்கு பிறகு நடந்த தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜக தோல்வி அடைந்ததாகச் சொல்கிறார்கள் இவர்கள்.

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் தவிர, சட்டப்பேரவைத் தேர்தல்கள் என பெரும்பாலான நேரங்களில் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் திமுக தொடர் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வென்றது. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 33 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அக்கட்சி சந்தித்த முதல் தேர்தலில் அதிகமான வெற்றிகளை கொங்கு மண்டலத்தில்தான் பெற்றது.

ஆனால் அதற்குப் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக கூட்டணி தோல்வியுற்றது. இருப்பினும் சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பொருத்தவரை, மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்றே இப்போதும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்தத் தேர்தலிலும் அது தொடருமென்றும் நம்புகின்றனர்.

கொங்கு மண்டல மக்கள், தேர்தலைப் பொருத்து கூட்டணியைத் தேர்வு செய்து வாக்களிப்பதால்தான் இந்த மாற்றம் நடப்பதாகக் கூறுகிறார் கொங்கு வேளாள கவுண்டர்கள் கலாசார பாதுகாப்பு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் லோகநாதன். குறிப்பாக தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழக முதல்வராவதை கட்சிப் பாகுபாடின்றி அந்தச் சமுதாயத்திலுள்ள மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய லோகநாதன், ”மேற்கு மண்டலம் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அது எடப்பாடி பழனிசாமி காலத்தில் இன்னும் வலுப்பெற்றது. கொங்கு மண்டலத்தின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றியது உள்பட சில முக்கிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது செய்திருக்கிறார். அதனால் இந்தத் தேர்தலிலும் கொங்கு சமுதாய மக்களின் வாக்குகள், அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கவே வாய்ப்பு அதிகம்” என்றார்.

”உண்மையில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடந்த 1975ஆம் ஆண்டில் கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததால்தான் இன்றைக்கு அனைத்து அரசுத் துறைகளிலும் உயர் பதவிகளில் இருக்கும் வகையில் கொங்கு சமுதாயத்தினர் அதிகமாகப் பயன்பெற்றுள்ளனர். விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுத்ததால்தான், வேளாண் சமூகமான கொங்கு சமுதாயம், இன்றைக்கு கல்வி, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் வளர்ந்து நிற்கிறது. ஆனால் கொங்கு சமுதாய மக்கள் திமுகவை ஆதரிப்பதே இல்லை என்ற வருத்தம், கருணாநிதிக்கு கடைசி காலம் வரை இருந்தது” என்கிறார் லோகநாதன்.

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

பட மூலாதாரம், @annamalai_k

சமுதாயப் பற்று காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கிடைக்கிறதா?

இந்தக் கருத்துகளை மறுக்கும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமுதாயப் பற்று காரணமாக எடப்பாடி பழனிசாமி செய்யாத பல பணிகளை அவர் செய்ததாகக் கூறி, கொங்கு சமுதாய தலைவர்கள் பலரும் பேசி வருவது முற்றிலும் தவறு என்றார்.

வன்னியர் சமுதாயத்துக்கு 10.5% ஒதுக்கீடு தர ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கொங்கு சமுதாயத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்கிறார் தனியரசு.

”கொங்கு சமுதாய மக்களின் பேராதரவுள்ள இரு பெரும் கட்சிகள், இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். திராவிட கருத்தியலுக்கு எதிராக மதவாத கருத்தைப் பரப்பும் பாஜகவுடன் கைகோர்த்த காரணத்திற்காக, கொங்கு மக்கள் இந்த முறை சமுதாய பாசத்தை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்றார் தனியரசு.

இதே கருத்தைக் கூறும் கொமதேக ஈஸ்வரன், ”கடந்த 2021 தேர்தலின்போது கொங்கு மக்களிடம் எடப்பாடி பழனிசாமி மீதான சமுதாய உணர்வு அதிகமாக இருந்தது உண்மைதான். ஆனால் அவர் பிற சமுதாயத்துக்குச் செய்த அளவுக்குக்கூட கொங்கு சமுதாய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அது இந்தத் தேர்தலில் வெளிப்படும்” என்றார்.

ஆனால் திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் இடம் பெற்றுள்ள கொங்கு பெயரிலான கட்சிகள் எதற்குமே அந்தச் சமுதாய மக்களின் ஆதரவு இல்லை என்பதே உண்மை என்கிறார் லோகநாதன்.

கொமுக துவக்கப்பட்டபோது கிடைத்த 6 லட்சம் வாக்குகளில் பத்தில் ஒரு பங்கு வாக்கு வங்கிகூட எந்தக் கட்சிக்கும் இல்லை என்று கூறும் அவர், இக்கட்சிகளின் வேட்பாளர்கள் திமுக, அதிமுக சின்னங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருவதால், இந்தக் கட்சிகள் அனைத்துக்குமான தேர்தல் ஆணைய அங்கீகாரம் ரத்தாகிவிட்டது என்கிறார்.

2026 தேர்தலில் கொங்கு மண்டலம் திமுக வசமாகுமா? கொங்கு கட்சிகள் யார் பக்கம்?

”கொமதேக, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளை திமுக தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டிருப்பதை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கட்சிகள் எதற்கும் கட்டமைப்பும், வாக்கு வங்கியும் கிடையாது. அது மட்டுமின்றி, திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். சமுதாய ரீதியாகச் சந்திக்கும் சட்டப் பிரச்னைகளைத் தீர்க்காத சமுதாயக் கட்சிகளை கொங்கு மக்கள் நம்பத் தயாராகயில்லை” என்று கூறினார் லோகநாதன்.

அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு மாவட்டங்களில் பாஜக வேகமாக வளர்ந்துள்ளதாகக் கூறுகிறார் லோகநாதன். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில் இது வேகமாக நடந்தது என்பதை கொமதேக ஈஸ்வரனும் ஒப்புக்கொள்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் வளர்வதை பாஜக தலைமை விரும்பவில்லை என்பதால் அவரை மாற்றிய பிறகு பாஜக இங்கே தேய்வடைந்து வருவதாகக் கூறுகிறார் ஈஸ்வரன்.

கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறும் லோகநாதன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட அக்கட்சிக்கு அதிகளவிலான தலைவர்கள் இங்கே இருந்தும் கடந்த 12 ஆண்டுகளில் கோவை உள்பட மேற்கு மாவட்டங்களுக்கு எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு தரவில்லை என்ற அதிருப்தி, இங்குள்ள மக்களிடம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

”கோவை விமான நிலைய விரிவாக்கம், கொங்கு மண்டலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளம். ஆனால் நிலமெடுத்துக் கொடுத்தும் விரிவாக்கம் செய்யாமல் இழுத்தடிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தை அற்ப காரணம் கூறி நிராகரித்தனர்.

மருத்துவ சுற்றுலா நகராக மாறியுள்ள கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திருக்கலாம். ஜவுளி தொழில் சார்ந்த பல்கலைக்கழகம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் 12 ஆண்டுகளாக இப்பகுதிக்கு பாஜக அரசு எதையுமே செய்யவில்லை என்பதை இங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். அது தேர்தலில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார் லோகநாதன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து, மத்தியிலுள்ள பாஜகவுடன் இணக்கமாக இருக்கும்போதுதான் இத்தகைய திட்டங்கள் கோவைக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார் கொமுக தலைமைக் கழகச் செயலாளர் சந்திரசேகர்.

அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமியின் கருத்தும் இதுதான் என்று கூறிய அவர், அந்த நம்பிக்கையில்தான் இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்வதாகத் தெரிவித்தார்.

தவெகவின் வளர்ச்சி, கொங்கு மண்டல இளைஞர்களிடம் அக்கட்சியின் வாக்குகள் எந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று கொங்கு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பலரிடமும் கேட்டபோது, மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

புதிய கட்சி என்ற முறையில் அதற்கு இருந்த வரவேற்பு, விஜய் கூறும் கருத்துகளால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்தார் ஈஸ்வரன்.

விஜய் கட்சிக்குச் செல்லும் வாக்குகள், திமுகவைவிட அதிமுக கூட்டணிக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் தனியரசு.

விஜய்க்கு எல்லா சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களிடமும் கணிசமான ஆதரவு இருக்கிறது என்றாலும் அது எந்தக் கட்சியைப் பாதிக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்கிறார் கொங்கு வேளாளர் கலாசார பாதுகாப்பு மையத் தலைவர் லோகநாதன்.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU