Home தேசிய national tamil ‘2 நாளில் ஏதேனும் நடக்கலாம்’: இரானுடன் மீண்டும் பேச்சு நடத்துவது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

‘2 நாளில் ஏதேனும் நடக்கலாம்’: இரானுடன் மீண்டும் பேச்சு நடத்துவது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

16
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, அமெரிக்க கடற்படை முற்றுகை, ஹோர்மூஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

இரானில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.

“நீங்கள் அங்கேயே (பாகிஸ்தான்) இருக்க வேண்டும், உண்மையில், அடுத்த இரண்டு நாட்களில் ஏதேனும் நடக்கலாம். நாங்கள் அங்கு செல்ல அதிக விருப்பத்துடன் இருக்கிறோம்,” என்று நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறி இந்த நடவடிக்கையின் முதல் 24 மணி நேரத்தில் இரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு எந்தக் கப்பல்களும் செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

‘பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க வாய்ப்பு’

டிரம்பின் கருத்துகளுக்கு இரான் தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை, ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு ‘அதிக வாய்ப்பு’ இருப்பதாகக் கூறினார்.

“அமெரிக்கா மற்றும் இரானின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்குத் திரும்பக்கூடும் என்று பாகிஸ்தான் மற்றும் இரான் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர், எனினும் இன்னும் தேதி எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ராஜ்ஜீய ரீதியிலான நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்ற நம்பிக்கை எண்ணெய் சந்தைகளை அமைதிப்படுத்த உதவியது, இது செவ்வாயன்று அடிப்படை விலையை 100 அமெரிக்க டாலருக்கும் கீழே கொண்டு சென்றது.

இரான் - அமெரிக்கா, அமெரிக்க கடற்படை முற்றுகை, ஹோர்மூஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், EPA/Shutterstock

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளானதில் இருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான முக்கியமான உலகளாவிய நீர்வழியான ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது.

பத்திற்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் சுமார் 10,000 ராணுவ வீரர்கள் மூலம் இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் எந்தவொரு நாட்டின் கப்பல்களுக்கும் எதிராக முற்றுகையை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இரானின் இன்றியமையாத பொருளாதார உயிர்நாடியை முடக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.

நாட்டின் இரண்டு முக்கிய வருவாய் ஆதாரங்களைக் குறிவைப்பதன் மூலம் தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது: எண்ணெய் வருவாய் மற்றும் அந்த முக்கியமான நீர்வழிப் பாதை வழியாகச் செல்வதற்காக கப்பல்களிடம் இரான் கோரிய குறிப்பிடத்தக்க சுங்கக் கட்டணம்.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (Centcom), முற்றுகையின் முதல் 24 மணிநேரத்தில் 6 வணிகக் கப்பல்கள் அமெரிக்கப் படைகளின் ‘உத்தரவுகளுக்கு இணங்கி’ இரானிய துறைமுகங்களுக்குத் திரும்பியதாகக் கூறியது.

ஹோர்மூஸ் நீரிணையை கடந்த கப்பல்கள்

பிபிசி வெரிஃபை (BBC Verify) பகுப்பாய்வு செய்த கப்பல் கண்காணிப்புத் தரவுகள், முற்றுகையையும் மீறி குறைந்தது 4 இரான் தொடர்பு கொண்ட கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்ததைக் காட்டுகின்றன. அந்த கப்பல்களில் குறைந்தது 2 கப்பல்கள், இதற்கு முன்பு இரான் துறைமுகங்களில் இருந்தவை.

இரானுடன் தொடர்பு இல்லாத மேலும் 3 கப்பல்கள் திங்களன்று முற்றுகை தொடங்கிய பின்னர் நீரிணையைக் கடந்ததாக பிபிசி வெரிஃபை கூறுகிறது.

கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆரம்பகட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை, இரான் தனது நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை என்று அமெரிக்கா கூறியது.

இரானின் அணுசக்தி தொடர்பான லட்சியங்கள் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருந்தன.

இரானின் அனைத்து யுரேனியம் செறிவூட்டலையும் 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்கா முன்மொழிந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

இரான், 5 ஆண்டுகள் நிறுத்தி வைக்க முன்வந்ததாக மற்ற அமெரிக்க ஊடகங்களிடம் சிலர் தெரிவித்தனர்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தை மந்தநிலைக்குத் தள்ளக்கூடும் என்று எச்சரித்த நிலையில், நீண்ட கால சர்வதேச பாதுகாப்பிற்காக ‘சிறிய அளவிலான பொருளாதார வலி’ மதிப்புமிக்கது என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், செவ்வாயன்று சீனா இந்த முற்றுகையை ‘ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது’ என்று விவரித்ததுடன், இது “பதற்றங்களை அதிகப்படுத்தும் மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும்” என்று எச்சரித்தது.

இதற்கிடையில், இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா தீவிரவாதக் குழுவைக் குறிவைத்து அதன் வடக்கு அண்டை நாடான லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

செவ்வாயன்று வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேலும் லெபனானும் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டன.

இந்த சந்திப்பு 1993-க்குப் பிறகு இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தையாகும்.

இது லெபனான் தூதரால் “ஆக்கப்பூர்வமானது” என்றும், இஸ்ரேலிய தூதரால் “அமைதியின் புதிய சகாப்தத்திற்கான பாதையை இது திறப்பதாகவும்” விவரிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கும், வாஷிங்டனில் நடக்கும் இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் வலியுறுத்தினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU