Home தேசிய national tamil 1970 எண்ணெய் நெருக்கடி பற்றி தெரியுமா? உலகம் அதைவிட மோசமான நிலைக்கு செல்கிறதா?

1970 எண்ணெய் நெருக்கடி பற்றி தெரியுமா? உலகம் அதைவிட மோசமான நிலைக்கு செல்கிறதா?

6
0

SOURCE :- BBC NEWS

1970 எண்ணெய் நெருக்கடி, இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், James Pozarik/Liaison via Getty Images

உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான ஒரு முக்கியமான நீர்வழிப்பாதை ஒரு மாத காலமாக மூடப்பட்டிருப்பது, 1970-களின் எண்ணெய் நெருக்கடியால் ஏற்பட்ட சிக்கல்களை விட மோசமான சிக்கல்களை நோக்கி உலகம் நகர்கிறது என்ற எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது.

கப்பல் போக்குவரத்து நிபுணரும், மேர்ஸ்க் (Maersk) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான லார்ஸ் ஜென்சன், “இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் தாக்கம் 1970-களில் காணப்பட்ட பொருளாதாரக் குழப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் பெரிதாக இருக்கலாம்” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

சர்வதேச எரிசக்தி முகமையின் இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் இந்த மாத தொடக்கத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜென்சன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம்” என்று ஃபாத்திஹ் பிரோல் எச்சரித்திருந்தார்.

“இது 1970-களில் காணப்பட்ட எண்ணெய் விலை தொடர்பான சிக்கல்களை விட மிகவும் பெரியது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு நாம் பார்த்த இயற்கை எரிவாயு விலை தொடர்பான சிக்கலை விடவும் இது பெரியது,” என்று லார்ஸ் ஜென்சன் பிபிசியிடம் கூறினார்.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவது உலகளாவிய விநியோகத்திற்கு இடையூறாக இருந்தாலும், இன்றைய உலகத்திற்கு விரைவாக மீண்டு வரக்கூடிய திறன் அதிகமாக உள்ளது என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர்.

1970-களின் எண்ணெய் நெருக்கடியில் என்ன நடந்தது?

“1970-களின் எண்ணெய் நெருக்கடி இன்றைய சூழலில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது, ஏனெனில் அப்போது நாம் எதிர்கொண்ட ‘முதல் எண்ணெய் தொடர்பான அதிர்ச்சி’ ஒரு திட்டமிட்ட கொள்கை முடிவின் விளைவாகும்” என்று பொருளாதார நிபுணரும், கிரிஸ்டோல் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான கரோல் நக்லே பிபிசியிடம் தெரிவித்தார்.

அக்டோபர் 1973-இல், யோம் கிப்பூர் (Yom Kippur) போரின் போது இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததற்காக அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் குழு மீது அரபு எண்ணெய் உற்பத்தியாளர்கள் தடை விதித்தனர். அந்த கொள்கை முடிவானது, எண்ணெய் உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த குறைப்பு நடவடிக்கையுடன் சேர்த்து கொண்டுவரப்பட்டது.

“இதன் விளைவாக சில மாதங்களிலேயே எண்ணெய் விலை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்தது,” என்று நக்லே கூறினார்.

இது முக்கிய எண்ணெய் நுகர்வு நாடுகளில் எரிபொருள் ரேஷன் முறைக்கு வழிவகுத்தது. இது நீடித்த தாக்கங்களுடன் கூடிய ‘உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைத்’ தூண்டியதாக நக்லே கூறினார்.

க்வீன்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்ட் ஆராய்ச்சியாளர் டாக்டர் டியர்னன் ஹேனி, “அதிக எண்ணெய் விலைகள் ஒட்டுமொத்தமாக பணவீக்கத்தைத் தூண்டின, இதன் பொருள் வணிகங்கள் மேலும் முடங்கின மற்றும் வேலையின்மை அதிகரித்தது” என்கிறார்.

“இது பல நாடுகளின் சமூகக் கட்டமைப்பைச் சேதப்படுத்திய தொடர் விளைவுகளுக்கு வழிவகுத்தது, அதனுடன் பரவலான வேலைநிறுத்தங்கள், அமைதியின்மை மற்றும் பல குடும்பங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடியதால் வறுமை அதிகரித்தது,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளுமே 1973 முதல் 1975 வரை மந்தநிலையைச் சந்தித்தன, இந்த நெருக்கடியானது 1974-இல் டெட் ஹீத்-இன் கன்சர்வேடிவ் அரசாங்கம் வீழ்ச்சியடையவும் காரணமாக அமைந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

தற்போதைய எண்ணெய் நெருக்கடியில் என்ன நடக்கிறது?

ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுடன் போரைத் தொடங்கியதிலிருந்து, குறுகிய ஹோர்மூஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை சீர்குலைத்துள்ளது.

வளைகுடா எண்ணெயை மீண்டும் கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு உத்திகளை முயற்சித்து வருகிறார். இதில் போர்க்கப்பல்களை அனுப்புமாறு நட்பு நாடுகளை கோருவது மற்றும் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாகச் செல்ல இரான் அனுமதிக்காவிட்டால் அதை இன்னும் கடுமையாகத் தாக்குவோம் என்று அச்சுறுத்துவதும் அடங்கும்.

ஆனால்வெஸ்புச்சி மேரிடைம் ஆலோசனைக் குழுவை நடத்தி வரும் ஜென்சன், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில் பேசுகையில், “ஒரு மாதத்திற்கு முன்பே வளைகுடாவை விட்டு வெளியேறிய பெரும்பாலான எண்ணெய் இன்னும் உலகெங்கிலும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைந்து கொண்டிருக்கிறது என்றும், அந்த ஓட்டம் விரைவில் நின்றுவிடும்” என்றும் கூறினார்.

“எனவே நாம் எதிர்கொண்டு வரும் எண்ணெய் பற்றாக்குறை இன்னும் மோசமாகத்தான் போகிறது, ஒருவேளை அதிசயமாக ஹோர்மூஸ் நீரிணை நாளையே மீண்டும் திறக்கப்பட்டாலும் கூட நிலைமை இதுதான்,” என்று அவர் கூறினார்.

“இந்த நெருக்கடி நீடிக்கும் போது மட்டுமல்லாமல், அது முடிந்த பிறகும் 6 முதல் 12 மாதங்கள் வரை நாம் மிகப்பெரிய எரிசக்தி செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.”

பிரச்னைகளை பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

தற்போதைய நெருக்கடி 1970-களின் நிலைமையை விட மோசமாகுமா?

அரபு எரிசக்தி கிளப்பின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் நக்லே, “1970-களில் இருந்ததை விட எண்ணெய் சந்தை தற்போது அதிக பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது” என்று கூறினார்.

தற்போதைய விலை அதிகமாக இருந்தாலும், இன்றைய நெருக்கடி அவ்வளவு கடுமையானது அல்ல என்று அவர் நம்புகிறார்.

“நாம் காணும் வர்த்தக அளவு சார்ந்த இடையூறுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தாலும் – சமீபகால வரலாற்றிலேயே மிகப்பெரிய இடையூறுகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் – 1970-களில் இருந்ததை விட சந்தைக்கு தற்போது விரைவாக மீண்டு விடும் திறன் அதிகம் உள்ளது” என்கிறார் அவர்.

“இது அதிக பன்முகத்தன்மை கொண்டது, குறைந்த எண்ணெய் பயன்பாடு கொண்டது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசரகால மீட்பு வழிமுறைகளைக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், நேடிக்ஸிஸ் சிஐபி நிறுவனத்தின் விளைபொருள் தொடர்பான ஆராய்ச்சிகளின் இயக்குனர் ஜோயல் ஹான்காக், “மற்றொரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், 1970 நெருக்கடியானது வளர்ந்த நாடுகளை இலக்காகக் கொண்டது, அவை அதை நிர்வகிக்கத் தேவையான பணம் மற்றும் அரசியல் பலத்தைக் கொண்டிருந்தன” என்கிறார்.

“தற்போதைய நெருக்கடி முதன்மையாக வளரும் நாடுகளைப் பாதிக்கிறது, அவர்களுக்கு இந்த நெருக்கடியைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான கட்டமைப்போ அல்லது நிதி ரீதியான வலிமையோ இல்லை,” என்றும் அவர் கூறுகிறார்.

“தற்போதைய நிலையில் இருப்பதைப் போல, எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட இணை சேதங்கள் 1970-களின் நெருக்கடியில் ஒரு காரணியாக இருக்கவில்லை”.

இன்றைய நெருக்கடி, “போர் தணிந்தால் மட்டுமே முடிவுக்கு வரும்” என்று ஹான்காக் கூறுகிறார்.

பொருளாதாரத்தைப் பற்றிய சிறந்த புரிதல் மற்றும் அதிகமான நாடுகள் எண்ணெய் இருப்புகளைக் கொண்டிருப்பது உட்பட, உலகிற்குச் சாதகமான சில வேறுபாடுகள் இன்று உள்ளன என்று ஹீனி கூறுகிறார்.

“நெருக்கடி நீடித்தால், எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகள் மிகவும் மோசமாகிவிடும் என்பதுதான் முக்கிய ஆபத்து,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“இந்த மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து, ஓரளவாவது ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது என்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU