Home தேசிய national tamil 15 வயது சூர்யவன்ஷி அதிரடி காட்டிய ஆடுகளத்தில் சிஎஸ்கே குறைந்த ரன்களில் சுருண்டது ஏன்?

15 வயது சூர்யவன்ஷி அதிரடி காட்டிய ஆடுகளத்தில் சிஎஸ்கே குறைந்த ரன்களில் சுருண்டது ஏன்?

4
0

SOURCE :- BBC NEWS

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2026 சீசன் மிகவும் மோசமாகத் தொடங்கியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 2025-ஆம் ஆண்டு அவர்களின் பேட்டிங் எப்படி ஏமாற்றமளித்ததோ, அதுபோலத்தான் இந்தப் போட்டியும் தொடங்கியிருக்கிறது.

எந்தவொரு தொடராக இருந்தாலும் அதன் முதல் போட்டியில் தங்களின் மிகச் சிறந்த, பலமான அணியை விளையாட வைக்க வேண்டும் என்றுதான் எந்த அணியுமே விரும்பும். ஆனால், சூப்பர் கிங்ஸால் அப்படியொரு லெவனைக் களமிறக்க முடியவில்லை.

காயம் காரணமாக மஹேந்திர சிங் தோனி 2 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் டெவால் பிரெவிஸும் காயம் காரணமாக விளையாடாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் தடுமாறிக் கொண்டிருந்த போது பிரெவிஸ் வந்துதான் அந்த நிலைமையை மாற்றினார். இப்படி இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது ஆரம்பம் முதலே சிஎஸ்கே-வை பின்தங்க வைத்திருந்தது.

அதன்பிறகு ஆடுகளத்தின் தன்மையையும் சூழலையும் புரிந்துகொள்ளாமல் பேட்டிங் செய்து பெரும் சரிவை சந்தித்தது சூப்பர் கிங்ஸ். ஏமாற்றம் தரும் ஒரு பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது சிஎஸ்கே அணி.

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங் & ஃபீல்டிங் ஏமாற்றம்

இந்தப் போட்டியில் டாஸ் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. போட்டிக்கு முந்தைய நாள்களில் மழை பெய்திருந்தது. ஆடுகளம் மூடப்பட்டிருந்தது. அதனால் ஆடுகளத்தில் நல்ல ஈரப்பதம் இருந்தது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ‘சீம், மூவ்மென்ட், ஸ்விங்’ அனைத்தும் நன்றாகக் கிடைத்தது. அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர் இருவருமே மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்களால் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. அந்த இரு வீரர்களையும் எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமே சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு இருக்கவில்லை.

மோசமான பேட்டிங் என்று சொல்லிவிட மாட்டேன். ஆனால், அதே சமயம் ‘இன்டென்ட்’ இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. புதிய அணிக்கு முதல் போட்டியில் சாம்சன் நல்ல பங்களிப்பைக் கொடுப்பார் என்றும், கடந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜ் மீண்டும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இன்னொரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா தன் புதிய அணிக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். சர்ஃபராஸ் கான் மற்றும் ஷிவம் துபே என ஸ்பின்னை சிறப்பாக விளையாடும் இரண்டு வீரர்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். எப்போதும் ஸ்பின்னை சிறப்பாக விளையாடும் துபே ஏன் அந்த நேரத்தில் அப்படியொரு ஷாட் ஆடினார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் வந்துவிட்டதால் அவர் அதைத் தவிர்த்திருக்கலாம். இது, ஒட்டுமொத்த அணியும் நெருக்கடியில் இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

பேட்டிங் மட்டுமல்ல இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங்குமே ஏமாற்றமளிப்பதாக இருந்தது. முதல் பந்திலேயே சர்ஃபராஸ் கான் ஒரு பந்தைத் தவறவிட்டார். வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்சை கார்த்திக் ஷர்மா பிடிக்கத் தவறினார். இதுபோக மேலும் சில தவறுகளும் ஃபீல்டிங்கில் நடந்தது.

எதிரணிக்கு இலக்கு எளிதானதாக இருக்கும்போதுதான் ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். சூப்பர் கிங்ஸ் இந்த இடத்தில் உடனடியாக முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் முக்கியம். அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஃபீல்டிங் யூனிட்டாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான ஃபீல்டிங் யூனிட்டாகத் திகழவேண்டும். இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி வீரர் ஃபில் சால்ட் தன் ஃபீல்டிங்கால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பார்த்தோம். ஃபீல்டிங் அந்த அளவுக்கு அணியில் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

இதற்காக உடனே 500 கேட்ச்கள் பிடித்து பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை சரிசெய்ய ஒரு உளவியல் மாற்றம் தான் தேவை. உளவியல் ரீதியாக அடுத்த 2 தினங்களில் மாற்றம் நிகழ வேண்டும்.

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

முடிவு மாறக்கூடியதுதான்

என்னதான் இதுவொரு மோசமான தோல்வியாக அமைந்தாலும், நான் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட மாட்டேன். இது ஒரு மோசமான போட்டி என்று நினைத்து மறந்துவிட வேண்டும்.

திறமையான, அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவார்கள். இப்படியொரு தோல்வி தொடரின் கடைசி கட்டத்தில் ஏற்படாமல் ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டதே என்று நேர்மறையாக நினைத்துக்கொள்ளலாம்.

இந்தத் தோல்வியிலிருந்து சூப்பர் கிங்ஸ் நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்.

சூப்பர் கிங்ஸ் தங்கள் அடுத்த போட்டியை (பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக) சேப்பாக்கத்தில் விளையாடப்போகிறார்கள். அங்கு ஆடுகளம் எப்படியும் பேட்டிங்கிற்கு தகமானதாக இருக்கும். அது சூப்பர் கிங்ஸுக்கு உகந்தது தான். என்னதான் இந்தப் போட்டியில் அவர்களின் பேட்டிங் சொதப்பியிருந்தாலும், அவர்களுடைய மிகப் பெரிய பலமும் அதுதான். அது நிச்சயம் சிஎஸ்கேவின் சொந்த மண்ணில் அவர்களுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால், அதற்கு சிஎஸ்கே அந்த தோல்வியில் இருந்து நகர்ந்து செல்லவேண்டும்.

வைபவ் சூர்யவன்ஷி – இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

15 வயது இளம் வீரர் எப்படியான ஒரு ஆட்டத்தை ஆடினார். 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார் சூர்யவன்ஷி. அவரது ஆட்டத்தை இன்னும் நம்பமுடியவில்லை. அவர் கோடியில் ஒருவர். நம்பர் ஒன் டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மாவின் பேட் வேகம், பேட் ஸ்விங் பற்றியெல்லாம் நிறைய பேசியிருக்கிறோம். அதுபோல் இவருடைய பேட் வேகம், பேட் ஸ்விங் இரண்டும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இன்னொரு ஒப்பீட்டை நிறையப் பேர் செய்திருக்கிறார்கள். அதைச் செய்வது சரியா என்றும் தெரியவில்லை; வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த ஆல்ரவுண்டரான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் பேட் ஸ்விங்கைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. நான் அவர்களை ஒப்பிடவில்லை. ஆனால், சோபர்ஸ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோவையெல்லாம் பார்த்துவிட்டு சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங்கைப் பார்த்தால் பல ஒற்றுமைகள் தெரிகின்றன. திரும்பவும் சொல்கிறேன், 0.1% கூட நான் அவர்கள் இருவரையும் ஒப்பீடு செய்யவில்லை. ஆனால், இந்த சிறு வயதில் வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அசாத்தியமாக இருந்தது.

அவரால் எல்லாப் பக்கமும் அடிக்க முடிகிறது. அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு வேகப்பந்துவீச்சாளரின் பந்தை பாயிண்ட் திசையில் சிக்ஸர் அடிப்பதே கடினம். அப்படியிருக்கையில் மேட் ஹென்றி வீசிய ஸ்லோயர் பாலை பாயிண்ட் திசையில் சூர்யவன்ஷி சிக்ஸர் ஆக்கினார். அப்படியொரு ஷாட்டை உருவாக்குவதெல்லாம் அசாத்திய திறமை இருந்தால் மட்டுமே முடியும்.

அதையெல்லாம் விட முக்கியமாக அவருடைய தைரியம்! எந்த பௌலர், என்ன சூழ்நிலை என்பதைப் பற்றியெல்லாம் பயப்படாமல் விளையாடுகிறார். சொல்லப்போனால், சிஎஸ்கே சூர்யவன்ஷியின் அந்த குணத்தை அவர்களும் சற்று வெளிக்கொண்டுவரலாம்

ராஜஸ்தான் ராயல்ஸ் முழுமையான செயல்பாடு

ஒட்டுமொத்தமாக ராயல்ஸ் அணி ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட் வீழ்த்தி அசத்த, சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

ஏலத்திற்கு பின்பு ராயல்ஸ் மீது பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில், தற்போது அந்த அணியின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அந்த அணி தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்றே தோன்றுகிறது. புதிய இளம் கேப்டன் ரியான் பராக்கும் இந்தப் போட்டியில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதனால், ராயல்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல முன்னேற்றம் காண்பதைப் பார்க்க முடியும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU