Home தேசிய national tamil 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரி விதித்த அமெரிக்கா – 7 கேள்விகளும் பதில்களும்

100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரி விதித்த அமெரிக்கா – 7 கேள்விகளும் பதில்களும்

4
0

SOURCE :- BBC NEWS

100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரி விதித்த அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இது உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, சீனா, இலங்கை, பிரிட்டன் உள்ளிட்ட சுமார் 100 நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள ”மோசமான நாடுகளில்” ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டுள்ள அமெரிக்கா, இந்தியா மீது 27% வரி விதித்துள்ளது (டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும் காணப்பட்டது). இதுவரை 2% வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மீது தற்போது 27% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிகள் எதனால் விதிக்கப்படுகின்றன? இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?

1. ஏன் வரிகள் விதிக்கப்படுகின்றன?

அமெரிக்க வரி விதிப்பு –  8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை நாடுகள் விதிக்கின்றன. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விதிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும்.

நாடுகள் பல காரணங்களுக்காக வரிகளை விதித்தாலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை 3 முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

  • முதலில் உள்ளூர் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் இவை விதிக்கப்படலாம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும்போது, அவற்றின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரிக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க தூண்டப்படுவார்கள்.
  • அரசுக்கு கணிசமான வருவாய் ஈட்டும் ஆதாரங்களில் ஒன்று இறக்குமதி வரிகள் என்பதால் வருவாய் உருவாக்குவதற்காக வரிகள் விதிக்கப்படலாம்.
  • வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக வரிகள் விதிக்கப்படலாம்.

இதில் வர்த்தகப் பற்றாக்குறையையே அமெரிக்கா தனது வரி விதிப்புகளுக்கு காரணமாக குறிப்பிடுகிறது.

2. வர்த்தக பற்றாக்குறை என்றால் என்ன?

அமெரிக்க வரி விதிப்பு –  8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தால் அது வர்த்தகப் பற்றாக்குறை எனப்படும். ஒரு நாடு 100 கோடிக்கு பொருட்களை இறக்குமதி செய்து, 80 கோடிக்கு மட்டுமே பொருட்களை ஏற்றுமதி செய்தால், 20 கோடி வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.

3. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை எவ்வளவு?

அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறை 1.2 டிரில்லியன் டாலராகும்.

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 2024-ம் ஆண்டில் 45.7 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. அதாவது 2024-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்கா இறக்குமதி செய்தது. அதே நேரம், இந்தியாவுக்கு 41.8 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2023-ம் ஆண்டு இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை விட 2024-ம் ஆண்டின் பற்றாக்குறை 5.4% (2.4 பில்லியன் டாலர்) அதிகரித்திருந்தது.

அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியாவுடனானது 3.8% மட்டுமே.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையில் 24.7% சீனாவுடனானதாகும்.

இந்த வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவே பரஸ்பர வரிகளை விதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்க வரி விதிப்பு –  8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

4. பரஸ்பர வரிகள் என்றால் என்ன?

பரஸ்பர வரிவிதிப்பு என்பது ஒரு வர்த்தகக் கொள்கையாகும்.

வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை (ஒரு நாடு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது) நிவர்த்தி செய்ய அமெரிக்கா இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை அதிக விலை கொண்டதாக மாற்றுவதன் மூலம், பிற நாடுகள் விதிக்கும் வர்த்தக வரிகள், தடைகளை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

அமெரிக்க வரி விதிப்பு –  8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

5. அமெரிக்கா மீது இந்தியா விதிக்கும் வரி எவ்வளவு?

இந்தியா மீது வரி விதிக்கும் போது, அமெரிக்க சரக்குகளுக்கு இந்தியா 52% வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்தியா மிகவும் கடினமான அணுகுமுறையை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

2024-ம் ஆண்டு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அறிக்கை, ” அமெரிக்காவின் தாவர எண்ணெய் (45 சதவிகிதம் வரை) உட்பட பரந்த அளவிலான பொருட்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதித்து வருகிறது. ஆப்பிள், சோளம், மோட்டார் சைக்கிள்களுக்கு 50%, வாகனங்கள், பூக்களுக்கு 60%, இயற்கை ரப்பருக்கு 70%, காபி, திராட்சை, அக்ரூட் பருப்புகளுக்கு 100%, மதுபானங்களுக்கு 150% விதிக்கப்படுகிறது. கூடுதலாக, உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள், முழுவதும் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மீது இந்தியா மிக உயர்ந்த வரிகளை (சில சந்தர்ப்பங்களில் 20%க்கும் அதிகமாக) விதிக்கிறது” என கூறுகிறது.

6. இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா?

அமெரிக்க வரி விதிப்பு –  8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் வரி விதிப்பினால் இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளைப் போன்று ஏற்றுமதியை சார்ந்திருக்கும் நாடாக இந்தியா இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மற்றும் உலக வர்த்தகப் போக்கில் இந்த வரி விதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த பாதிப்பே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார நிபுணர் சோனல் பதன், “ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸை(17%) கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால், இந்தியாவுக்குதான் குறைந்த வரி விதிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அதே செய்தியில், பிரிமல் குழுவின் தலைமை பொருளாதார நிபுணர் தீபோபம் செளத்ரி, “உள்நாட்டை சார்ந்த இந்தியா போன்ற பொருளாதாரங்கள் வங்கி பணப்புழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் (bank liquidity). இதனால் உள்நாட்டு சில்லறை கடன் பெறுபவர்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் தாராளமாக கடன் வழங்க முடியும். இதன் மூலம், உள்நாட்டு நுகர்வை சீராக பராமரிக்க முடியும்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. வரி விதிப்பினால் அமெரிக்கா பாதிக்கப்படுமா?

வரி விதிப்பினால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு ஏற்படலாம். அமெரிக்க டாலரின் மதிப்பு விதிக்கப்பட்ட வரிகளுக்கு ஈடாக உயர்ந்தால் மட்டுமே அது அமெரிக்க மக்களை பாதிக்காமல் இருக்கும்.

உதாரணமாக இந்தியாவை பொருத்தவரை, 27% வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 85 முதல் 108 ஆக குறைவான காலக்கட்டத்தில் உயர்ந்தால், இந்த வரி விதிப்பின் பாதிப்பை அமெரிக்க மக்கள் உணரமாட்டார்கள். இதுவரை இந்திய சரக்குகளை எந்த விலையில் இறக்குமதி செய்து வந்தார்களோ அதே விலைக்கு தொடர்ந்து இறக்குமதி செய்யலாம்.

ஆனால், ரூபாயின் மதிப்பு டாலருக்கு 85 என்ற நிலையிலேயே நீடித்தால், அமெரிக்கர்கள் 27% அதிகம் செலவு செய்து இந்திய சரக்குகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்த போது வரிவிதிப்புகள் அதிகரித்ததால், அமெரிக்காவில் எஃகு விலை 2.4% மற்றும் அலுமினியத்தின் விலை 1.6% அதிகரித்தது.

அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான சார்பை பொறுத்து பிற நாடுகளிலும் விலைவாசிகள் உயர்ந்து, வளர்ச்சி குறையலாம். இது உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU