Home தேசிய national tamil ஹோர்மூஸ் நீரிணையை திறக்க கெடுவிதித்த டிரம்ப் – இரான் அளித்த பதில் என்ன?

ஹோர்மூஸ் நீரிணையை திறக்க கெடுவிதித்த டிரம்ப் – இரான் அளித்த பதில் என்ன?

7
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

22 மார்ச் 2026, 06:04 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்குப் புதிய காலக்கெடு விதித்துள்ளார்.

இரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அடுத்த 48 மணி நேரத்திற்குள் இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், அமெரிக்கா இரானின் பல மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; இது அவர்களின் மிகப்பெரிய நிலையத்திலிருந்து தொடங்கும்,” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இரானின் மின்னுற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்தால், வளைகுடாவில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி கட்டமைப்புகள் சட்டபூர்வ இலக்குகளாக கருதுவோம் என இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் அறிவிக்கப்படாத அணுசக்தி தளம் உட்பட தெற்கு இஸ்ரேலில் இரண்டு இரானிய ஏவுகணைகள் தாக்கிய சில மணிநேரத்திற்குப் பிறகு, சனிக்கிழமை (மார்ச் 21) டொனால்ட் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. போர் தொடங்கிய பிறகு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

டிரம்ப் இந்த சமீபத்திய பதிவை இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அதிகாலை சுமார் 5 மணியளவில் வெளியிட்டார்.

உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் கடல் வழியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது.

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது.

ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம்

இரான் மீது பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு உலகின் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய் விநியோகம் சிக்கலாகியுள்ளது.

இந்த நீர்வழிப் பாதையின் வடக்கே இரானும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. இது அதன் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சுமார் 50 கிலோமீட்டர் அகலமும், அதன் மிகக் குறுகிய புள்ளியில் சுமார் 33 கிலோமீட்டரும் அகலமும் கொண்டது.

இது வளைகுடா நாடுகளை அரபிக் கடலுடன் இணைக்கிறது.

உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG – எல்என்ஜி) இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

இதில் இரானின் எண்ணெய் மட்டுமல்லாமல், கத்தார், இராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற வளைகுடா நாடுகளின் எண்ணெயும் அடங்கும்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கம்

வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கின்றன. ஆனால் சமீப நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது, ஏனெனில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, போர் தொடங்கியது முதல் மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, குறிவைக்கப்பட்டுள்ளன அல்லது தாக்குதலுக்கு உள்ளானதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளன.

போருக்குப் பிறகு உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை இப்போது ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது.

இரான் பற்றி டிரம்ப் வேறு என்ன சொன்னார்?

கடந்த சில மணிநேரத்தில், டொனால்ட் டிரம்ப் இரான் குறித்து சில புதிய அறிக்கைகளை ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் செய்தியொன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, “அமெரிக்கா இரானை வரைபடத்திலிருந்தே அழித்துவிட்டது,” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் போர் சாதனைகளைப் பகுப்பாய்வு செய்யும் அந்த அறிக்கை, “டிரம்ப் இரான் போர் குறித்த உண்மையை மறைக்கிறார்” என்ற தலைப்பில் வெளியானது.

இரானில் தனது இலக்குகளை அடைவதில் “தோல்வி” அடைந்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அவர் கூறுகையில், “ஆம், நான் சாதித்துவிட்டேன், அதுவும் திட்டமிட்ட நேரத்திற்குப் பல வாரங்களுக்கு முன்னதாகவே.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் தலைமை இல்லாமல் போய்விட்டது, அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டன, அவர்களிடம் தற்காப்புக்கு எதுவுமே இல்லை, இப்போது அவர்கள் சமரசம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

இரான் பதில்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, டிரம்ப் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளின் எரிசக்தி மையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களைத் தாக்கப்போவதாக இரானிய ராணுவம் மிரட்டியுள்ளது.

முன்னதாக, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்ரி காலிபாஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்து ஏற்கெனவே எடுக்கப்பட்ட அடுத்தக்கட்ட உத்திகளைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது,” என்று பதிவிட்டிருந்தார்.

“மிகவும் பாதுகாக்கப்பட்ட டிமோனா பகுதியில் கூட இஸ்ரேலால் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை என்றால், இந்த மோதல் செயல்பாட்டு ரீதியாக ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். இஸ்ரேலின் வான்பரப்பு இப்போது பாதுகாப்பற்றதாக உள்ளது,” என்று காலிபாஃப் கூறினார்.

காலிபாஃப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தமது மற்றொரு பதிவில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் மின் நிலையங்களைக் குறிவைத்தால், வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை “மீளமுடியாத வகையில்” அழிப்பதாக எச்சரித்துள்ளார்.

இப்பகுதி முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், எரிசக்தி மற்றும் எண்ணெய் வசதிகள் ஆகியவை “நியாயமான இலக்குகளாக” கருதப்படும் என்று காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் விளைவாக எண்ணெய் விலை “நீண்ட காலத்திற்கு” உயரும் என்றும் சபாநாயகர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் ‘அணுஆயுத’ கிடங்கிற்கு இரான் குறியா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இரானின் சமீபத்திய தாக்குதல்கள் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி, குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறங்களை கடுமையாக சேதப்படுத்தியதோடு, தரையில் பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

மீட்புக் குழுவினரின் தகவல்படி, “அராட் நகரில் 88 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, அருகிலுள்ள டிமோனாவில் 33 பேர் காயமடைந்தனர்.”

ஏ.எஃப்.பி.டிவி காட்சிகள், தரையில் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம், சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் பரவலான அழிவைக் காட்டின.

மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு டிமோனாவில் இருப்பதாக நம்பப்படுகிறது; இருப்பினும் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதில்லை.

டிமோனாவில் உள்ள ஒரு கட்டடம் “நேரடி ஏவுகணைத் தாக்குதலுக்கு” உள்ளானதாக இஸ்ரேலிய ராணுவம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதில் ஏவுகணை சிதைவு தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறான்.

அராட் நகரில், கடுமையாக சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஒவ்வொரு முனையிலும்’ பதிலடி கொடுப்பது குறித்துப் பேசினார்.

இந்தத் தாக்குதலை “மிகவும் கடினமான மாலைப் பொழுது” என்று விவரித்த நெதன்யாகு, இரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என உறுதியளித்தார். சில மணிநேரத்திற்குப் பிறகு, தெஹ்ரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது.

இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே டிமோனா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தெற்கு இஸ்ரேலில் உள்ள மற்ற நகரங்களையும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராணுவத் தளங்களையும் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.

நடான்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்தி விபத்து அபாயத்தைத் தவிர்க்க “ராணுவக் கட்டுப்பாட்டை” கடைபிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் கிராஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படும் இயந்திரங்கள் நடான்ஸ் நிலையத்தில் உள்ளன. இது ஜூன் 2025 போரிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU