SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Reuters
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிக கப்பல்கள் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பலில் இருந்து புகை கிளம்பி வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில் கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் மேலும் 2 வணிக கப்பல் ஹோர்முஸ் நீரிணை அருகே தாக்கப்பட்டன.
முன்னதாக இந்தப் பகுதியில் 16 இரானிய கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
அதன் பிறகு அங்கு எந்த கண்ணிவெடியும் வைக்க வேண்டாம் என டிரம்ப் இரானை எச்சரித்திருந்தார்.
சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட அந்தப் பிராந்தியத்தின் பகுதிகளில் இரான் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இதற்கிடையே துபை விமான நிலையம் அருகே இரண்டு டிரோன்கள் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்.
பட மூலாதாரம், US Central Command
16 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள்
அமெரிக்க மத்திய ராணுவ தலைமை (சென்ட்காம்), அமெரிக்கத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல இரான் கடற்படைக் கப்பல்களின் காட்சிகளை இரவில் வெளியிட்டது.
செவ்வாய்க்கிழமை “அழிக்கப்பட்ட” இலக்குகளில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இருந்த 16 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் அடங்கும் என்று சென்ட்காம் கூறுகிறது.
‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’யின் மூன்று முக்கிய நோக்கங்களில் இரான் கடற்படையை அழிப்பதும் ஒன்று என்று அமெரிக்க கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் திங்களன்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், US Central Command
மத்திய கிழக்கின் முக்கிய சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்க முயற்சிக்கும் எந்தவொரு இரான் கப்பலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.
எக்ஸ் தளத்தில் சென்ட்காம் வெளியிட்ட காட்சிகளில், பல்வேறு அளவிலான கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட பிறகு வெடிப்பதைக் காண முடிகிறது.
ஹோர்முஸ் நீரிணை அருகே தாக்குதலுக்கு உள்ளான தாய்லாந்து கப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த தாய்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்ட மயூரி நாரே சரக்கு கப்பல் தாக்கப்பட்ட நிலையில் அதில் தீப்பற்றியது. தேவையான அவசர உதவி வழங்கி வருவதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பலில் 23 பேர் இருந்ததாக தாய்லாந்து கடற்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல் குழுவினர் 20 பேரை ஓமன் கடற்படை மீட்டுள்ள நிலையில் மீதமுள்ள 3 பேரையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கலிஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் கப்பல் தாக்கப்பட்டதாக தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் கூறினர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வேறு இரு கப்பலும் தாக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துறைமுக நகரமான ராஸ் அல் காய்மாவுக்கு 47 கிமீ தொலையில் ஜப்பான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஓன் மெஜஸ்டி என்கிற சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் 10 செமீ அளவிலான குழி விழுந்த நிலையில் தற்போது பாதுகாப்பான இடம் நோக்கி அந்த கப்பல் செல்கிறது.
இன்னொரு கப்பலான மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார் குவனெத் துபையில் வடக்குப் பகுதியிலிருந்து 92 கிமீ தொலையில் தாக்குதலுக்கு உள்ளானது.
பட மூலாதாரம், Royal Thai Navy
துபையில் இந்தியர் காயம்
துபை சர்வதேச விமான நிலையத்தின் அருகில் இரண்டு டிரோன்கள் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக துபை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் இந்தியர் ஒருவர் “மிதமான காயங்களுக்கு” உள்ளானதாகவும், இரண்டு கானா நாட்டவர்கள் மற்றும் ஒரு வங்கதேச நாட்டவர் “லேசான காயமடைந்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் துபை ஊடக அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை விமான நிலையத்தில் ஜன்னல்களை விட்டு தள்ளி இருக்குமாறு கூறப்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவர், கண்ணாடி ஜன்னல்களை விட்டு விலகி இருக்குமாறும், பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் புகுமாறும் பயணிகளிடம் கூறப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, விமான நிலையத்தின் ஒரு முனைய கட்டடத்தின் அருகே ஒரு டிரோன் தாக்கியது.
பட மூலாதாரம், Reuters
அண்டை நாடுகள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கிய இரான்
இரான் தனது அடுத்த கட்ட தாக்குதல்களைத் தொடங்கியதாக தெரிவிக்கும் நிலையில் கத்தாரில் சில தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டன.
செளதி அரேபியா தனது ராணுவ விமானத் தளம் மற்றும் அதன் முக்கிய எண்ணெய் வயலை இலக்கு வைத்து வந்த ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது.
இன்று அதிகாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவித்தது. பஹ்ரைன் தனது நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள் ராணுவ தளம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அந்த இரண்டு நாடுகளும் உறுதி செய்யவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



