Home தேசிய national tamil ஹசீனாவை தங்க வைத்துள்ள இந்தியா வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவை எவ்வாறு பராமரிக்கும்?

ஹசீனாவை தங்க வைத்துள்ள இந்தியா வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவை எவ்வாறு பராமரிக்கும்?

5
0

SOURCE :- BBC NEWS

இந்தியா - வங்கதேசம், தாரிக் ரஹ்மான் - ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்ட் 2024-ல் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது மட்டுமின்றி, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பல விவகாரங்களில் கசப்புணர்வும் காணப்பட்டது.

ஆனால் தற்போது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, வங்கதேசத்தின் அரசியல் சூழல் மாறியுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜமாஅத்-இ-இஸ்லாமி எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

பி.என்.பி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இப்போது நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.

பிப்ரவரி 13-ஆம் தேதி வங்கதேச தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்ததும், தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோதி வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

தாரிக் ரஹ்மானை வாழ்த்திய பிரதமர் மோதி, “இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.

மோதியின் இந்தச் செய்தியை, வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுடனான உறவை மேம்படுத்தும் முயற்சியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவுடனான தனது உறவுக்கு புதிய திசையை வழங்க வங்கதேசம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், செய்தி நிறுவனமான பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் ஹுமாயூன் கபீர், “இந்தியாவின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இன்றைய வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவும் அவாமி லீக்கும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஷேக் ஹசீனா

இந்தியா - வங்கதேசம், தாரிக் ரஹ்மான் - ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் அதிகாரத்தை விட்டு வெளியேறி 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவை வந்தடைந்தார், அன்றிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா இன்னும் ஏற்கவில்லை.

இந்தியாவில் ஷேக் ஹசீனா இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பி.என்.பி.யின் தாரிக் ரஹ்மான் மற்றும் அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையே இந்தியா எவ்வாறு சமநிலையைப் பேணும் என்பது முக்கியமானது.

புதிய வங்கதேச அரசாங்கத்துடனான உறவுகளை வலுப்படுத்துவது இந்தியாவுக்கு கடினமாக இருக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த உறவுகளில் ஷேக் ஹசீனா நிச்சயமாக ஒரு காரணியாக இருப்பார், ஆனால் அவர் இந்தியாவில் இருப்பது இந்திய-வங்கதேச உறவுகளுக்குத் தீர்மானிப்பதாக இருக்காது.

இருப்பினும், மூத்த பத்திரிகையாளரும் சர்வதேச விவகார நிபுணருமான ஜெயந்த சௌத்ரி, ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவில் புகலிடம் அளிப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு அல்ல என்றும், இது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான புதிய உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் கருதுகிறார்.

இதுகுறித்து ஜெயந்த சௌத்ரி கூறுகையில், “ஷேக் ஹசீனாவை இந்தியாவில் தங்க அனுமதிப்பது ஒரு அசாதாரண நடவடிக்கை அல்ல, அது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். சீனாவுடனான உறவு ஆபத்தில் இருந்த போதிலும் இந்தியா தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது, ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா குடும்பத்திற்கும் அடைக்கலம் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசியல் அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. எனவே, இதை எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்பாகவும் பார்க்கக் கூடாது”என்றார்.

“நேபாளத்தின் வெவ்வேறு பிரதமர்களாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானின் வெவ்வேறு அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, கடந்த காலங்களில் வெவ்வேறு அரசியல் தலைமைகளுடன் இந்தியா இணையான உறவுகளைப் பேணி வந்துள்ளது” என்றும் கூறினார்.

தாரிக் ரஹ்மானுடனான உறவுகளை இந்தியா மேம்படுத்துமா?

இந்தியா - வங்கதேசம், தாரிக் ரஹ்மான் - ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

தனது நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தாரிக் ரஹ்மானை தன்வசப்படுத்த முயற்சிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச விவகார நிபுணர் முனைவர் சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் யதார்த்தமானதாக மாறியுள்ளது. குறிப்பாக மியான்மர் அனுபவத்திற்குப் பிறகு, அங்கு நாம் ஆங் சான் சூச்சியுடன் நின்று ஜனநாயகம் பேசினோம், ஆனால் அதே நேரத்தில் சீனாவின் செல்வாக்கு அங்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது” என்கிறார்.

“இந்தியா ‘இன்றைய அரசாங்கத்துடன்’ நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொண்டது. அதாவது, அதிகாரத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுடன் உறவை வளர்த்து நமது நலன்களைப் பாதுகாப்பது முக்கியம். இந்தச் சூழலில், தாரிக் ரஹ்மான் மக்கள் ஆதரவைப் பெற்று பிரதமரானால், இந்தியா அவருடன் இணைந்து செயல்படும், ஏனெனில் வங்கதேசம் இந்தியாவின் மிக முக்கியமான அண்டை நாடு” என்று அவர் கூறுகிறார்.

அதேநேரத்தில் ஜெயந்த சவுத்ரி கூறுகையில், “இந்தியா ஒருபோதும் ஒரே ஒரு கட்சியுடன் மட்டும் உறவைப் பேணியதில்லை. ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் காலத்தில்கூட, இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் வங்கதேசத்திற்குப் பயணம் செய்தார். காலிதா ஜியா அதிகாரத்தில் இல்லாதபோது கூட, அவர் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு ‘அரசுத் தலைவர்’ அந்தஸ்திலான மரியாதை வழங்கப்பட்டது” என்கிறார்.

அதேபோல் “நரேந்திர மோதி வங்கதேசம் சென்ற போது, காலிதா ஜியாவைத் தனியாகச் சந்தித்தார். ஜமாஅத்-இ-இஸ்லாமி போன்ற தரப்பினருடன் கூட இந்தியா ராஜ்ஜீயப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இந்தியா ஒரு பக்கத்திற்கு மட்டுமே ஆதரவாக நிற்கிறது என்று சொல்வது முற்றிலும் சரியல்ல” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், ஷேக் ஹசீனா தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்தார் என்றும், அனைத்து மட்டங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்தார் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஷேக் ஹசீனா ஆட்சியின் போது, இந்தியா வங்கதேசத்திற்கு சுமார் 10 பில்லியன் டாலர் கடன் வழங்கியது. எரிசக்தி, வர்த்தகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் வங்கதேசத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில், “இந்தியாவின் கிழக்குப் பகுதியின் உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் வங்கதேசம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான சார்பு நிலை இருப்பதால், எந்தவொரு அரசாங்கமும் உறவுகளைத் துண்டிப்பதோ அல்லது இடைவெளியை உருவாக்குவதோ நடைமுறை சாத்தியமற்றது” என்கிறார்.

அதே சமயம், தாரிக் ரஹ்மானின் பி.என்.பி கட்சி, ஜமாஅத்-இ-இஸ்லாமி அளவுக்கு இஸ்லாத் விஷயத்தில் தீவிரமானதாக இல்லாவிட்டாலும், அது ‘மென்மையான இஸ்லாத்தை’ ஊக்குவித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இந்தியாவின் முன் உள்ள கேள்வியாக இருக்கும்.

பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில், “ஷேக் ஹசீனா இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்பு கவலைகளைத் தீர்க்க முயன்றார், அவரது தலைமையின் கீழ் இந்திய-வங்கதேச உறவுகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது. அவரது அரசியல் சிந்தனை, மத சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெங்காலி தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதற்கு நேர்மாறாக, பிஎன்பியின் அடிப்படை சித்தாந்தம் ‘மென்மையான இஸ்லாத்துடன்’ தொடர்புடையது. இதை ஜமாஅத்-இ-இஸ்லாமி போன்ற தீவிர இஸ்லாம் என்று சொல்ல முடியாது என்றாலும், வரலாற்று ரீதியாக இது அரசியல் கருத்தாக்கங்களில் மத அடையாளத்தைச் சேர்க்கும் போக்கைக் கொண்டுள்ளது” என்கிறார்.

தாரிக் ரஹ்மானின் தந்தை ஜியாவுர் ரஹ்மானின் ஆட்சியின் போது, வங்கதேச அரசியலமைப்பின் ஐந்தாவது திருத்தத்தின் மூலம் ‘மத சார்பின்மை’ என்ற சொல் நீக்கப்பட்டு, ‘எல்லாம் வல்ல அல்லாஹ் மீது நம்பிக்கை’ போன்ற சொற்கள் சேர்க்கப்பட்டன. பெங்காலி தேசியவாதம் என்பது ‘வங்கதேச தேசியவாதம்’ என மறுவரையறை செய்யப்பட்டது.

பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில், “இந்தச் சித்தாந்தப் பின்னணி பிஎன்பியின் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது, தாரிக் ரஹ்மான் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற கேள்வி இந்தியாவுக்கு முன் இருக்கும்” என்கிறார்.

இதற்குப் பின்னால் வரலாற்று காரணங்களும் உள்ளன.

2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பி.என்.பி வங்கதேசத்தில் அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை .

அதனை விவரித்த பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ், “அக்காலகட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல கிளர்ச்சிக் குழுக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்ததும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்ததும் தெரியவந்தது” என்கிறார்.

வங்கதேசத்தின் புதிய அரசாங்கமும் இந்தியாவுடனான உறவுகள் குறித்து தெளிவான செய்தியை அளித்து வருகிறது.

ஒரு பேட்டியில், தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறுகையில், “இந்தியா வங்கதேசத்தின் புதிய அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தனது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். வங்கதேசத்தின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒரு சீரான உறவை விரும்புகிறது, இது ஒருதலைப்பட்சமான சார்புநிலை கொண்டதாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியல் சவால்கள்

இந்தியா - வங்கதேசம், தாரிக் ரஹ்மான் - ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

சமீபத்திய மாதங்களில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பதற்றங்கள் காணப்படுகின்றன. சிறுபான்மையினர் உரிமை மீறல்கள் குறித்து இரண்டு நாடுகளும் கேள்வி எழுப்பி வருகின்றன.

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறை குறித்த செய்திகள் இந்தியாவில் கோபத்தைத் தூண்டின, பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்திய அரசியல் கட்சிகள் ‘சட்டவிரோத வங்கதேசத்தவர்’ எனும் விவகாரத்தை எழுப்பி வருகின்றன. பல தலைவர்கள் இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய மாதங்களில் வங்கதேசத்திலும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், வங்கதேசத்தில் ஒரு புதிய ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இது மாறக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கதேசம் குறித்த இந்தியப் பொதுமக்களின் மனநிலை மிகவும் நேர்மறையாக இருந்தது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அரசியலில் உறுதியற்ற தன்மை மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகளை இந்தியப் பொதுமக்களின் கருத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இத்தகைய உணர்வுகள் நிரந்தரமானவை அல்ல” என்கிறார்.

ஆனால், தாரிக் ரஹ்மான் இந்தியாவின் செல்வாக்கின் கீழ் தான் இல்லை என்பதை உள்நாட்டு மட்டத்தில் நிரூபிக்கும் சவாலையும் எதிர்கொள்வார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் சிறிய அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் இந்தியா குறித்த விவகாரம் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“சிறிய நாடுகளின் அரசியலில், ஒரு பெரிய அண்டை நாட்டின் மீது சந்தேக உணர்வு அல்லது போட்டி மனப்பான்மை இருப்பது இயல்பானது. வங்கதேசத்திலும், ஒரு தலைவர் ‘இந்தியாவுக்கு விலை போய்விட்டார்’ என்று குற்றம் சாட்டப்படுவது புதிதல்ல. எனவே, தாரிக் ரஹ்மானும் உள்நாட்டு அரசியலில் தனக்கு எதிராக இத்தகைய கருத்து உருவாகாமல் இருக்க கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கும்” என்று ஜெயந்த சௌத்ரி கூறுகிறார்.

இந்தியாவால் சமநிலையை பராமரிக்க முடியுமா?

கடந்த ஆண்டு நவம்பரில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும், வங்கதேச மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தான் உறுதியாக இருப்பதாக இந்தியா அப்போது கூறியிருந்தது.

இப்போது வங்கதேசத்தின் புதிய அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரினால், இந்தியா என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுகிறது.

“இந்தியா ஷேக் ஹசீனாவை எளிதில் திருப்பி அனுப்பும் என்று நான் நினைக்கவில்லை, இது வங்கதேசத்தில் ஒரு பெரிய அரசியல் சிக்கலாக அமையும். புதிய அரசாங்கம் அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால், அது நாட்டில் உறுதியற்ற தன்மையை அதிகரிக்கும். நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டாலும் அரசியல் ரீதியாக அபாயங்கள் இருக்கும்” என்று ஜெயந்தா சவுத்ரி கூறுகிறார்.

ஆனால், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜெயந்த சௌத்ரி கூறுகையில், “இந்தியாவும் வங்கதேசமும் ஒன்றையொன்று சார்ந்து இல்லாமல் இருப்பது கடினம் என்பதை அறிந்திருக்கின்றன. எனவே அரசியல் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஒத்துழைப்பு தொடரும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், புதிய அரசாங்கம் உள்நாட்டு அரசியல் மற்றும் பிராந்தியச் சமநிலைக்கு இடையிலான சமநிலையைக் கவனமாகக் கையாள வேண்டியிருக்கும்” என்கிறார்.

அதே சமயம், இந்தியாவின் நிலைப்பாடு வங்கதேசத்தின் புதிய அரசாங்கத்தின் நடத்தையைப் பொறுத்தே அமையும் என்று சஞ்சய் பரத்வாஜ் கூறுகிறார்.

இந்தியா - வங்கதேசம், தாரிக் ரஹ்மான் - ஷேக் ஹசீனா

வங்கதேசம் மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் மகேந்திர லாமா, இந்த நேரத்தில் வங்கதேசத்தை விட இந்தியாவிற்குத்தான் வங்கதேசம் அதிகம் தேவை என்று கருதுகிறார்.

இதுகுறித்து பேராசிரியர் லாமா கூறுகையில், “இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தியா தங்களை அதிகம் சார்ந்து இருக்க வைப்பதாக எப்போதும் உணர்ந்துள்ளன. இப்போது இந்தியா ஒருதலைப்பட்சமான சார்பிலிருந்து பரஸ்பர சார்பு நிலையை நோக்கி நகர வேண்டும் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்கிறார்.

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே நீண்ட எல்லை உள்ளது மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளன.

இந்த நிலவியல் யதார்த்தத்தை குறிப்பிட்டு பேராசிரியர் லாமா கூறுகையில், “வங்கதேசத்துடனான உறவுகளை மேம்படுத்த இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாரிக் ரஹ்மானின் தாயாரும், வங்கதேச முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா மறைவின் போது, பிரதமர் நரேந்திர மோதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வங்கதேசத்திற்கு அனுப்பினார். இது ஒரு நேர்மறையான செய்தி. இது பேச்சுவார்த்தைக்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்தியா இந்த திசையில் முன்னோக்கி நகர வேண்டும்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU