SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
கைபேசிகள், டேப்லெட்டுகள், தொலைக்காட்சிகள், கணினிகள் போன்ற திரைகளைப் பயன்படுத்துவதில் குழந்தைகள் எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டும் என்பது குறித்து பிரிட்டன் அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் மட்டுமே திரைகளைப் பயன்படுத்த வேண்டுமென்று அந்த வழிகாட்டுதல் கூறுகிறது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மேற்குறிப்பிட்ட மின்னணு திரைகளைத் தனியாகப் பார்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, வேகமாக நகரும் காட்சிகளைக் கொண்ட காணொளிகளை குழந்தைகளுக்குக் காட்டுவதைத் தவிர்க்குமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து திரைகளைப் பயன்படுத்த முயல வேண்டும்; இதன் மூலம் அவர்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், அவர்களுடன் கலந்துரையாடவும் முடியும்.
இந்த வழிகாட்டுதல் “திரை மாற்றீடுகள்” (screen swaps) எனப்படும் ஒரு முறையையும் பரிந்துரைக்கிறது. அதாவது, குறிப்பாக உணவுண்ணும் நேரங்களில், திரைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒன்றாகக் கதைப் புத்தகங்களைப் படித்தல் அல்லது எளிய விளையாட்டுகளை விளையாடுதல் போன்ற பிற செயல்பாடுகளில் ஈடுபடுவதில் அந்த நேரத்தைச் செலவிடலாம்.
இந்த விஷயத்தில், ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பிரிட்டன் அரசாங்கம் நடைமுறைக்கு உகந்த அறிவுரைகளை வழங்குவது இதுவே முதல்முறை. இருப்பினும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது, இந்த அறிவுரைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து புதுப்பிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரை நேரத்திற்கான புதிய வழிகாட்டுதல்
கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் ஃபிலிப்சன் இதுகுறித்துப் பேசியபோது, “பல அம்சங்களில் இது இன்னும் முழுமையாக அறியப்படாத துறையாகவே உள்ளது. எனவே நாங்கள் ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறையைக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
இது தொடர்பான சமீபத்திய ஆராய்ச்சியை, பிரிட்டனின் குழந்தைகள் ஆணையர் டேம் ரேச்சல் டிசௌசாவும், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் குழந்தை மருத்துவம் மற்றும் வளரிளம் பருவ ஆரோக்கியம் தொடர்பான பேராசிரியரான ரஸ்ஸல் வைனரும் இணைந்து மேற்கொண்டனர்.
மின்னணு திரைகளுக்கு முன்பாக நீண்ட நேரத்தைத் தனியாகச் செலவிடுவது குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று அவர்களுடைய ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இது, ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாக விளங்கும், உறக்கம், உடலியல் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பாதிக்கலாம்.
இது, கணினிகள், டேப்லெட்டுகள், கைபேசிகள், தொலைக்காட்சிகள் என அனைத்து வகையான மின்னணு திரைகளுக்கும் பொருந்தும்.
சுமார் 98% குழந்தைகள், தங்கள் இரண்டாவது வயதுக்கு உள்ளாகவே தினமும் திரைகளைப் பார்க்கத் தொடங்கிவிடுவதாக பிரிட்டன் அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
அதேநேரம், திரை நேரம் அனைத்துமே ஒரே மாதிரியானதல்ல என்றும் அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒரு குழந்தை தனியாகப் பார்ப்பதைவிட, செயல்பாட்டுடன் இணைந்து பங்கேற்கும் ஒரு பெரியவருடன் திரைகளைப் பார்ப்பது, குழந்தையின் கற்றல் மற்றும் சிந்தனைத் திறன்களுக்கு நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மூளை “பஞ்சு போன்றவை, அவை உங்கள் திரைப் பயன்பாட்டுப் பழக்கங்களைப் பார்த்து அப்படியே பின்பற்றும்” என்று அந்த வழிகாட்டுதல் விளக்குகிறது.
இவற்றோடு, பிரிட்டன் அரசாங்கம், ஆஸ்திரேலியாவை பின்பற்றி, 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்க வேண்டுமா என்பது குறித்து விவாதித்து வருகிறது.

குடும்ப அனுபவம்: நடைமுறை சிரமங்கள்
குழந்தைகளுக்கான இந்தப் புதிய அறிவுறுத்தல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பு, பிபிசி ஒரு குடும்பம் திரை நேரத்தைக் குறைக்க முயலும்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஒரு வாரம் அவர்களைப் பின்தொடர்ந்தது.
மொன்டேஸ்டியர் குடும்பம் என்று அழைக்கப்படும் அந்தக் குடும்பம், மான்செஸ்டரில் வசித்து வருகிறது.
தாயார் அலெக்சிஸ், “திரை நேரம் என்பது ஒவ்வொரு நாளும் பேசப்படும் விஷயமாக உள்ளது. ஏனெனில் நாங்கள் அதை அனுதினமும் செய்கிறோம்” என்று கூறினார்.
நான்கு வயதான ரோமி, ஒரு வயதான மார்லோ ஆகிய தனது இரு குழந்தைகளின் வளர்ச்சியில் திரை நேரத்திற்கு இருக்கும் பங்கைக் குறைக்க அவர் விரும்புகிறார்.
அவர்கள் தொழில்நுட்பம் நிறைந்த உலகில் வளர்ந்து வருகிறார்கள். அலெக்சிஸ் ஒரு யோகா பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிகிறார். பள்ளிப் பைகளை எடுத்து வைப்பது, உணவு சமைப்பது போன்ற பணிகளை விரைவாக முடிக்க வேண்டியிருக்கும்போது அவர் குழந்தைகளுக்கு திரைகளைக் காட்டுவதை அடிக்கடி செய்வதாகக் கூறுகிறார்.
சில நேரங்களில், ரோமி அதிகாலையில் எழும்போது அல்லது வாக்குவாதங்களை, மன உளைச்சல்களைத் தவிர்க்க குழந்தைகளுக்குத் திரைகளைக் காட்டுகிறார்.

“இப்படிச் செய்வதற்கு எனக்குக் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஆனால் எப்போதும் காலை ஆறு மணிக்கு அவர்களுடன் படுக்கையைவிட்டு துள்ளிக் குதித்து எழுந்து, கலை மற்றும் கைவினைப் பொருட்களைச் செய்யும் அளவுக்கு எப்போதுமே ஆற்றல் இருப்பதில்லை,” என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகளைப் பின்பற்றுவது எளிதானதல்ல என்றும் அலெக்சிஸ் கூறுகிறார்.
“வாரத் தொடக்கத்தில், ‘சரி வாருங்கள், நாம் இதைச் சாதித்துக் காட்டுவோம்’ என்று நான் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். வார இறுதியில், திரைகளைக் காட்டுவதையே நிறுத்திவிட வேண்டும் எனவும், அனைத்தும் மிகச் சிறப்பாகவும் இயல்பாகவும் மாறிவிடும் எனவும் நினைத்தேன். நாங்கள் எங்களால் முடிந்தவரையிலான முயற்சிகளை எடுத்தோம். ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை” என்று அவர் விளக்கினார்.
சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இதைத் தொடங்கினாலும், எவ்வளவுதான் தீவிரமாக முயன்றாலும், நடைமுறையில் திரைகளைக் காட்டும் நேரத்தைக் குறைப்பது என்பது கடினமான ஒன்றாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
சில மாற்றங்களைச் செய்துகொள்வது மிகவும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாக அலெக்சிஸ் கூறுகிறார். குறிப்பாகக் காலையிலும், பள்ளி முடிந்த உடனும், அவர் பல பணிகளை முடித்தாக வேண்டிய நேரங்களிலும் இது மிகுந்த சிரமமாக இருந்ததாகக் கூறினார்.
“எனக்கு அந்த நேரம் மிகவும் அவசியம். எனவே அந்த நேரத்தை ஒதுக்கிவிட்டு, வெறுமனே உட்கார்ந்து புத்தகம் படிக்கும் வேலையில் ஈடுபடுவது நடைமுறைக்கு உகந்ததல்ல என்பதால், நான் அத்தகைய மாற்றத்தைச் செய்யப் போவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
“நாம் ஒரு செயலைச் செய்துகொண்டே இருக்கும்போது, மற்றவர்களை மட்டும் அதைச் செய்ய வேண்டாமெனத் தடுப்பது மிகவும் கடினம்” என்று அலெக்சிஸின் கணவர் மார்ஷியல் கூறுகிறார்.
பணி நிமித்தமாகத் தனது சாதனத்தில் அதிகம் நேரத்தைச் செலவிடும் ஒருவராக இருக்கும் அவர், “பகல் நேரத்தில் வேலை சம்பந்தமாக ஏதேனும் செய்தி வந்திருந்தால், உடனே என் கைபேசியைப் பார்க்க வேண்டும் என்ற ஒருவிதத் துடிப்பு எனக்கு ஏற்படுகிறது. வேலை நேரம் முடிந்த பிறகும் அந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது,” என்கிறார்.
இருப்பினும், அந்தக் குடும்பத்தினர் தங்களது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் முடிவுடனேயே உள்ளனர்.
“இந்த முயற்சி என்னை நிச்சயமாக இன்னும் அதிக விழிப்புணர்வு கொண்டவளாக மாற்றியுள்ளது. மேலும், ‘ஓ நாம் இதைச் செய்தாக வேண்டும்’ என்று நான் நீண்ட காலமாகச் சொல்லிக்கொண்டே வந்த பல விஷயங்களை இப்போது உண்மையில் செய்யத் தொடங்கியுள்ளேன்” என்று அலெக்சிஸ் கூறுகிறார்.

காட்சிகளின் வேகம் ஏற்படுத்தும் தாக்கம்
கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘குழந்தைப் பருவ அறிவியல் நிறுவனத்தில்’ (Institute for the Science of Early Years) இளம் குழந்தைகள் (ஐந்து வயதுக்கு உட்பட்டோர்) எத்தகைய காணொளிகளைப் பார்க்கிறார்கள் என்பதை அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்கள் அலெக்ஸ் என்ற மூன்று வயது குழந்தையைக் கவனித்து ஆய்வு செய்தனர். அந்தக் குழந்தையின் மூளை செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, சென்சார்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறப்புத் தொப்பியை அவர்கள் பயன்படுத்தினர்.
திரையில் நிகழும் நிகழ்வுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குழந்தையின் மூளை திணறும் தருணங்களை ஆய்வு செய்வதில் தனக்குத் தனிப்பட்ட ஆர்வம் இருப்பதாக பேராசிரியர் சாம் வாஸ் விளக்கினார்.
“குழந்தையின் மூளையால் தொடர்ந்து பின்தொடர முடியாத, அதாவது திரையில் வரும் காட்சிகள் மூளையின் கண்காணிப்புத் திறனுக்கு மீறிய வேகத்தில் நகரும் தருணங்களையே நாங்கள் தேடுகிறோம்.” என்று அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலைகளின்போது உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் விளக்கினார். “காட்சிகள் நம்மை நோக்கி மிக வேகமாக வரும்போது, ‘போராடு அல்லது தப்பி ஓடு’ எனப்படும் மன அழுத்த எதிர்வினை அமைப்பு செயல்படத் தொடங்குகிறது. அப்போது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்குவதுடன், தசைகளுக்குப் பெருமளவு ஆற்றலும் விடுவிக்கப்பட்டு செலுத்தப்படுகிறது.”
அதாவது, திரையில் வரும் காட்சிகள் மிக வேகமாக இருக்கையில், குழந்தையின் உடல் ஏதோவொரு ஆபத்தில் இருப்பதைப் போலவே எதிர்வினையாற்றுகிறது. இதயம் வேகமாகத் துடிக்கிறது, உடல் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
ஆனால், “நிச்சயமாக இந்த எதிர்வினை தற்போதைய சூழலில் எவ்விதப் பயனையும் அளிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்துகொண்டு திரையில் வரும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த எதிர்வினைகள் நிகழ்கின்றன,” என்று பேராசிரியர் வாஸ் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி ரேடியோ 4இன் ‘டுடே’ நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் வாஸ், திரைகளின் வாயிலாகக் கற்றுக்கொள்வது என்பது நேரில் கற்றுக் கொள்வது போல் அவ்வளவு பயனுள்ளதாக அமைவதில்லை என்றும் கூறினார்.
இருப்பினும், குழந்தைகள் ஏன் திரைகளின்பால் இவ்வளவு தீவிரமாக ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை அறிவியலாளர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 20 முதல் 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான உள்ளடக்கங்கள் பெருமளவில் மாறியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முன்பு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் பொதுவாக மெதுவாகவும் அமைதியானதாகவும் இருந்தன. ஆனால் இன்று, பெரும்பாலான உள்ளடக்கங்கள் அதிக அசைவுகளுடனும் தொடர்ச்சியான பேச்சுகளுடனும் மிகவும் வேகமாக உள்ளன.
இந்த மாற்றம் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பேராசிரியர் சாம் வாஸ் கூறினார்.
இருப்பினும், அதிக வேகமான மற்றும் கணிக்க முடியாத உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கும், உணர்ச்சிக் கட்டுப்பாடின்மைக்கும் (அதாவது, குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படுவது) இடையே தொடர்பு இருப்பதைக் காட்டும் “சான்றுகள்” இருக்கின்றன என்றார் அவர்.
“இது நாம் கவனமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டுதல் ஒரு முக்கியமான தெளிவுபடுத்தலையும் அளிக்கிறது. சிறப்புக் கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு, வழக்கமான திரைநேர வரம்புகள் அதே வழியில் பொருந்தாமல் போகலாம்.
ஏனெனில், சில திரை சார்ந்த கருவிகள் அவர்களின் கற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அவை உதவிகரமாக இருக்கும்.
கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் ஃபிலிப்சன், “குடும்பங்களுக்குப் பல அழுத்தங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன். இந்த வழிகாட்டுதலின் நோக்கம் அவர்களைக் குறை கூறுவதல்ல. இதன் நோக்கம், அவர்களுக்கு ஆதரவளிப்பதும், பெற்றோர்கள் உண்மையிலேயே காண விரும்புவதாக எங்களிடம் கூறி வரும் தெளிவான நடைமுறை உதவியை வழங்குவதுமே ஆகும்,” என்று தெரிவித்தார்.
இந்த வழிகாட்டுதல், “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பொம்மைகளையோ கருவிகளையோ குழந்தைகளுக்குக் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்” என்ற மற்றொரு பரிந்துரையையும் வழங்குகிறது.
நியூஸ்நைட் நிகழ்ச்சியில் பேசிய இணைய பாதுகாப்பு ஆர்வலர் இயன் ரஸ்ஸல், இந்தப் புதிய வழிகாட்டுதல் ஒரு “நம்பிக்கையூட்டும் அறிகுறி” என்று கூறினார்.
மேலும் அவர், “இது ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அறிவுரைகள், அதுதான் இங்கு முக்கியமான அம்சம் என்று நான் கருதுகிறேன்” எனவும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இயன் ரஸ்ஸலின் 14 வயது மகள் மோலி ரஸ்ஸல், இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த பிறகு தற்கொலை செய்துகொண்டார். இளம் பருவத்தினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதம் சமூகத்திற்கு ஒரு பெரிய கவலையாக இருக்கலாம் என்று இயன் ரஸ்ஸல் கூறினார்.
மேலும், “இது தொடர்பாக எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், ‘பேரன்ட் ஸோன்’ என்ற அமைப்பைத் தொடங்கிய விக்கி ஷாட்போல்ட், சிறு குழந்தைகளைத் தொழில்நுட்பத்தில் இருந்து முழுமையாக விலக்கி வைப்பது மிகவும் கடினம் என்கிறார்.
பெற்றோர்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
“வீட்டில் செயற்கை நுண்ணறிவு ஸ்மார்ட் ஸ்பீக்கர் இருக்கும்போது, ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு சிறு குழந்தை அதனுடன் தொடர்புகொள்ளவே செய்யும்,” என்றும் அவர் விளக்கினார்.

எனவே, “அவர்களை முழுமையாக தொழில்நுட்பத்தில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்ற எண்ணம் ஒருவேளை தவறானதாக இருக்கலாம். ஆனால் இதுவொரு நல்ல பொதுவான வழிகாட்டுதல்” என்று அவர் கூறினார்.
ஷேடோ எட்சுகேஷனின் செயலாளர் லாரா ட்ராட், இந்த வழிகாட்டுதலை ஆதரிப்பதாகக் கூறினாலும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டியிருப்பதாகத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
உதாரணமாக, பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோன்களை சட்டபூர்வமாகத் தடை செய்தல், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுத்தல் போன்ற விஷயங்களை அவர் பரிந்துரைத்தார்.
இதற்கிடையே, லிப் டெம்மின் தலைவர் எட் டேவி, அரசாங்கத்துடன் ஓரளவுக்கு உடன்படுவதாகத் தெரிவித்தாலும், இந்த வழிகாட்டுதலைக் கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.
இந்த வழிகாட்டுதல் “முழுமையான பார்வையைத் தவறவிடுவதாகவும்”, “சமூக ஊடகங்கள் குறித்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் மிகவும் மெதுவாக செயல்பட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



