Home தேசிய national tamil வடமொழிப் பெயர் சர்ச்சை: ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் என்ன?

வடமொழிப் பெயர் சர்ச்சை: ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் என்ன?

7
0

SOURCE :- BBC NEWS

திருமாவளவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்

பட மூலாதாரம், Getty Images

”ராஜராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாம் வடமொழி பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வட மொழியில் மயங்கி கிடந்தவர்கள்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் பேசியது விவாதப் பொருளாகியிருந்தது.

இந்தக் கருத்தை பலர் மறுக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், “எந்த அரசன் மீதும் எனக்கு மதிப்புக் கிடையாது. யாரையும் நான் பெரிய சக்தியாக பார்ப்பது கிடையாது. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச் சுவராகி சமஸ்கிருதமயமானது. கோவில் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி, வெளியே வீசப்பட்டது எல்லாம் இந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான்.”

“ராஜராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாம் வடமொழி பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வட மொழியில் மயங்கி கிடந்தவர்கள். வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள். அவர்கள் எப்படிப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் எம் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே, எனக்கு ஆண்ட பரம்பரை என சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சோழ மன்னர்களுக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

திருமாவளவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்

பட மூலாதாரம், X/Thol Thirumavalavan

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் இயற்பெயர் என்ன?

விஜயாலயச் சோழனுடன் துவங்கிய பிற்காலச் சோழர் மரபில் வந்த ராஜராஜ சோழனும் அவருடைய புதல்வனான ராஜேந்திரச் சோழனும் சோழ மன்னர்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்த மன்னர்களாக விளங்கியவர்கள்.

இந்த சோழ மன்னர்களின் காலம், அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நிலவுடைமை, சமூகத்தின் எந்தப் பிரிவுக்குச் சாதகமாக இருந்தார்கள் என்பதெல்லாம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில்தான் தொல். திருமாவளவன் இதுபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

“சோழ மன்னர்களில் புகழ்பெற்ற மன்னனாக இருந்த ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி. கி.பி. 985-ஆம் ஆண்டு அருண்மொழி என்ற பெயரிலேயே அவர் சோழ அரியணையில் ஏறினார். கி.பி. 988-ஆம் ஆண்டில் அவருக்கு ராஜராஜ சோழன் என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டு, பிறகு அதுவே தொடர்ந்தது. அருண்மொழிக்கு வேறு பல சிறப்புப் பட்டப் பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன” என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

திருமாவளவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்

பட மூலாதாரம், Balasubramanian

“போளூர் அருகே உள்ள திருமலை பாறைக் கல்வெட்டில் ராஜராஜரின் இயற்பெயரான அருண்மொழியுடன் ‘அலைபுரியும் புனர் பொன்னி ஆறுடைய சோழன்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ராஜ ராஜகேசரி பன்மரான ராஜராஜ தேவர்க்கு யாண்டு 21ஆவது அலை புரியும் புனற் பொன்னி ஆறுடைய சோழன் அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்” என்கிறது அந்தக் கல்வெட்டு.”

“அதேபோல் இவரது மகன் ராஜேந்திரசோழனுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் மதுராந்தகன். இதனை திருவாலங்காட்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் தனது சித்தப்பனான மதுராந்தகச் சோழன் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்ததால், அந்தப் பெயரையே தனது மகனுக்கும் சூட்டியிருக்கலாம் என தன்னுடைய ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். கி.பி. 1012ஆம் ஆண்டில் இவருக்கு இளவரசுப் பட்டம் கட்டியபோது, ராஜேந்திரன் என்ற அபிஷேகப் பெயர் சூட்டப்பட்டது என்கிறது பிற்காலச் சோழர் சரித்திரம்.

“ராஜராஜனைப் போலவே இவருக்கும் மேலும் பல சிறப்புப் பட்டங்கள் இருந்தன.” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

திருமாவளவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்

பட மூலாதாரம், Bhavani

ராஜராஜசோழனின் விருதுப் பெயர்களை சதாசிவ பண்டாரத்தார் எழுதிய ‘பிற்கால சோழர் சரித்திரம்’ நூல் விரிவாகப் பட்டியலிடுகிறது. ராஜராஜ சோழனுக்கு “ஷத்ரிய சிகாமணி, ராஜேந்திர சிம்மன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், நித்தவினோதன், ராஜஸ்ராயன், சிவபாத சேகரன், தெலுங்க குல காலன், ஜனநாதன், ரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன், சோழேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், சோழ நாராயணன், கீர்த்தி பராந்தகன், மும்முடி சோழன், ஜெயங்கொண்ட சோழன், சிங்களாந்தகன்” ஆகியவை ராஜராஜ சோழனின் பட்டப் பெயர்களாக இந்த நூலில் குறிப்பிடப்படுகின்றன.

அதேபோல் அவரது மகன் மதுராந்தகன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜேந்திர சோழனுக்கு “உத்தம சோழன், சோழேந்திரசிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன், கடாரம் கொண்டான், கங்கைகொண்ட சோழன்” போன்ற பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்ததாக சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

திருமாவளவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்

பட மூலாதாரம், Getty Images

“திருவலஞ்சுழி கோவில் கல்வெட்டில் தன்னை சிவசரண சேகரன் என்று குறிப்பிட்டுள்ளான்” என்கிறது குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ‘இராஜேந்திர சோழன்’ நூல்.

இந்தப் பெயர்கள் தவிர, ராஜேந்திரச் சோழனுக்கு வீர ராஜேந்திரன், பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன், அதிசய சோழன், ஜெயசிம்ம சிம்ம சரபன், மலைநாடு கொண்டான், மண்ணைக் கொண்ட சோழன், மகிபால குலகாலன், வீரசோழன், ராஜராஜேந்திரன், மதுராந்தகன், இரட்டபாடி கொண்ட சோழன், நிருப திவாகரன், பார்திவேந்திரன், மனுகுல சோழன், ராஜ வித்யாதரன், உதர விடங்கன், தான வினோதன், பராக்கிரம சோழன் போன்ற சிறப்புப் பெயர்கள் இருந்ததாகவும் சொல்கிறார் குடவாயில் பலசுப்பிரமணியன்.

சோழ மன்னர்களின் தமிழ்ப் பணிகள்

சோழ மன்னர்கள் சில தமிழ்ப் பணிகளைச் செய்ததாக குறிப்பிடுகிறார் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவரான பேராசிரியர் மா. பவானி.

“சோழர் ஆட்சியில்தான் சிதம்பரத்தில் தேவாரப் பதிகங்கள் தொகுத்து ஒலைகளில் எழுதப்பட்டன. தஞ்சாவூர் இராஜராஜேஸ்வரத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்வதற்கென 48 பிடாரர்களை (ஓதுவார்களை) நியமித்தார்கள். தமிழில் பாடவும் ஆட்கள் நியமிக்கப்பட்டனர். மூவர் உலா, கலிங்கத்துப் பரணி , பெரிய புராணம் போன்ற இலக்கியங்கள் சோழர் காலத்தில்தான் உருவாயின. திருக்கைக்கோட்டி என்று கூறப்படும் மண்டபங்களில் தேவாரத் திருமுறைகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டதுடன் பாடவும் பட்டன” என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

“இந்தக் காலகட்டத்தில் பக்தி சார்ந்த தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழும் சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியுள்ளன” என்கிறார் மா. பவானி.

பொ. வேல்சாமி போன்ற ஆய்வாளர்கள், சோழர்கள் காலத்தில் வடமொழியை வளர்ப்பதற்கான பணிகளே வெகுவாக நடைபெற்றன என்கிறார்கள்.

‘சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?’ என்ற பொ. வேல்சாமியின் நூலில் இடம்பெற்றுள்ள ‘சோழர் காலத்தில் சமஸ்கிருதக் கல்லூரிகளே இருந்தன’ என்ற கட்டுரையில், “பல்லவர்கள் காலம், சோழர்கள் காலம், நாயக்கர்கள் காலம், மராட்டியர்கள் காலம், ஆங்கிலேயர்கள் காலத்தின் முன்பகுதி என்று தமிழ்நாட்டின் வரலாற்றுக் காலம் முழுமையும் வடமொழிக் கல்லூரிகளே செயல்பட்டுவந்தன” என்று குறிப்பிடுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU