SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Bombay Jayashri Ramnath/Facebook
கர்நாடக சங்கீதத்தில் கொடிகட்டி பறந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, ஒரு காலகட்டத்தில் திரைப்படத்துறையிலும் கால் பதித்து, தனித்துவமான பாடல்களை பாட ஆரம்பித்தார்.
பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு, பாம்பே ஜெயஸ்ரீ பாடியதில் தனக்கு பிடித்த காதல் பாடல்களை பாடகி சைந்தவி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
”நான் பாம்பே ஜெயஸ்ரீயின் தீவிர ரசிகை. அவர் பாடல்கள் என்றால் எனக்கு உயிர். அவரின் அத்தனை பாடல்களையும் பிடிக்கும் என்றாலும், வெகுவாக ரசித்த சில பாடல்களை பற்றி சொல்கிறேன்” என்கிறார் சைந்தவி.
1) வசீகரா என் நெஞ்சினிக்க…(மின்னலே)
பட மூலாதாரம், Cee (I) TV Entertainment
”வசீகரா பாடல் அந்த காலத்தில் இருந்து இன்றுவரை கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வசீகரமான குரல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
பெரும்பாலான கச்சேரிகளில், விழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், முக்கியமான சந்தோஷ நிகழ்வுகளில் ‘வசீகரா’ பாடப்படுவது தொடர்கிறது. நானும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இந்த பாடலை பாடியிருக்கிறேன். அதிர்ஷ்டம் கொடுக்கும் தேவதை என இந்த பாடலை சொல்வேன்.
சிறு வயதில் ‘வசீகரா’ பாடலை பாடினால் முதல் பரிசு உறுதி என்ற நம்புவேன். அது நடக்கும். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் முதலில் ஆடிஷனுக்கு சென்றபோது வசீகராதான் பாடிக் காண்பித்தேன். விளைவு, அந்நியன் படத்தில் என்னை ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ பாடலை பாட வைத்தார். அப்படியென்றால், வசீகரா அதிர்ஷ்ட பாடல்தானே” என்கிறார் சைந்தவி.
பட மூலாதாரம், Saindhavi/Facebook
2) நறுமுகையே நறுமுகையே…(இருவர்)
”மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இருவர் படத்தில் இடம் பெற்ற ‘நறுமுகையை’ மறக்க முடியுமா? இந்த பாடலில் பாம்பே ஜெயஸ்ரீ பாடுகிற ஸ்டைல் அவ்வளவு பிடிக்கும். உன்னிமேனனுடன் இணைந்து அவர் பாடுகிற வரிகளும், குரலும், இசையும் ஒருவித மாயம் செய்யும். இந்த பாடலை பாடு என்று யாராவது கேட்டால், நேரம் காலம் பார்க்காமல் முழுமையாக ரசித்து பாடுவேன்.” என்கிறார் சைந்தவி
3) உனக்குள் நானே உருகும் இரவில்…(பச்சைக்கிளி முத்துச்சரம்)
”வழக்கமான பாணியில் இருந்து பாம்பே ஜெயஸ்ரீ கொஞ்சம் மாற்றிப் பாடிய பாடல் இது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த பாடலின் தனித்துவத்துக்காக நான் இதை அடிக்கடி கேட்டு ரசிப்பேன்.”
4) ஒன்றா இரண்டா ஆசைகள் (காக்க காக்க)
”யாருக்கு தான் இந்த பாடலை பிடிக்காது. மீண்டும் கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை, பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணியில் வந்து ஹிட்டான பாடல்.
பாடல், படமாக்கப்பட்ட விதம், குரல் இதெல்லாம் ஒன்றாக இணைவது எப்போதும் நடக்காது. இதில் நடந்தது” என குறிப்பிடுகிறார் சைந்தவி.
பட மூலாதாரம், Bombay Jayashri Ramnath/Facebook
”சினிமா பாடல்கள் தவிர, பாம்பே ஜெயஸ்ரீ தனிப்பாடல் ஆல்பங்களுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம். அந்த ஆல்பங்களை அத்தனை தடவை கேட்டு ரசித்து இருக்கிறேன். நிறைய கற்று இருக்கிறேன். சுட்டு விழி சுடர்தான் கண்ணம்மா என்ற பாடலை கல்யாணி ராகத்தில் பாடியிருப்பார். அதை கேட்டு, கேட்டு நான் இசை கற்று இருக்கிறேன்.
‘கான்ஃப்ளுயன்ஸ் ஆப் எலிமென்ட்ஸ்’ என்ற ஆல்பத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல்களை கற்று, அவர் பாணியில் நான் மேடையில் பாடி வருகிறேன். அவர் பாடிய ‘வேலனே சிவ பாலனே’ என்ற பாடலை ரசித்துக்கொண்டே இருப்பேன். பல கச்சேரிகளில் இந்த பாடலை அவரும் ரசித்து பாடுவார்.
பாரதியாரின் ‘கண்ணம்மா’ என்ற ஆல்பத்துக்கு தனி இடமுண்டு. அந்த ஆல்பத்தில் கண்ணம்மாவை அவர் பாடும்போது மனசு ஏதேதோ செய்யும். மாலைப்பொழுது, சின்னஞ்சிறு கிளியே ஆகிய பாடல்களும் பிடிக்கும். அதேபோல் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ‘கண்ணே என் கண்மணியே’ என்ற தாலாட்டு நம்மை உறங்க வைக்கும்” என்கிறார் பாடகி சைந்தவி.
பட மூலாதாரம், Kavignar Thamarai/Facebook
பாடலாசிரியர் தாமரை- பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி
பாம்பே ஜெயஸ்ரீ குறித்து பாடலாசிரியர் தாமரையிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“எங்கள் கூட்டணி வெற்றிகரமான கூட்டணி ஆச்சே” என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தார்.
“நானும் அவரும் இணைந்தது ‘வசீகரா’ பாடலில்தான். அந்த பாடலை முதலில் பாடகி, நடிகை வசுந்தராதாஸ்தான் பாடுவதாக இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவர் வேறு பணியில் சிக்க, அவரால் பாடல் பதிவுக்கு வர முடியவில்லை. மற்றவர்களின் குரலும் அந்த பாடலுக்கு சரிபடவில்லை. அந்த சமயத்தில் என் நண்பரின் மனைவி மூலமாக பாம்பே ஜெயஸ்ரீ குரல் எனக்கு பழக்கமாகி இருந்தது. அவர் குரலை பதிவு செய்து வைத்து இருந்தேன். இவரை பாட வைக்கலாமா என ஹாரிஸ் மற்றும் கௌதமிடம் கேட்க, அவர்களுக்கும் பிடித்துபோனது.” என்கிறார் தாமரை.
தொடர்ந்து பேசிய அவர், “உடனே பாம்பே ஜெயஸ்ரீயை தேடினோம். நல் வாய்ப்பாக அவரும் சென்னையில் இருந்தார். அன்றைக்கு இரவில் வந்து பாடிக்கொடுத்தார். அந்த பாடல் பதிவின் போது நானும் உடன் இருந்தேன். அந்த பாடல் வரிகள், உச்சரிப்பில் பங்காற்றினேன். அந்த பாடல் வெற்றி பெற, எங்கள் கூட்டணிக்கு தனி மவுசு ஏற்பட்டது. ‘வசீகரா’ பாடலை பாட அவரை அழைத்து வந்ததில் எனக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சி.” என்றார்.
”வசீகரா பாடலின் வெற்றியை தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நாங்கள் இணைந்து ‘மலர்களே…மலர்களே’ பாடலை கொடுத்தாம். அந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். ‘ஒன்றாக இரண்டா’, ‘பார்த்த முதல் நாளே’ என பல பாடல்களை அப்படி கொடுத்து இருக்கிறோம்.”
“பொதுவாக கர்நாடக சங்கீத பாணி வேறு, சினிமா பாணி வேறு. கர்நாடக சங்கீதத்தில் உச்சத்தில் இருந்தவர், சினிமாவுக்காக தன்னை மாற்றி அதிலும் வெற்றி பெற்றார். பழகுவதற்கு இனிமையானவர், பாடல் பதிவின்போது நான் சொல்வதை கேட்டுக்கொள்வார். நான் கடவுள் மறுப்பாளர், அவரோ கடவுள் பக்தை. ஆனாலும் எங்களை இசை சேர்த்தது” என்று கூறினார் பாடலாசிரியர் தாமரை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



