Home தேசிய national tamil வங்கதேச ஆளும் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டவர் வெளியுறவு அமைச்சரானது எப்படி?

வங்கதேச ஆளும் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டவர் வெளியுறவு அமைச்சரானது எப்படி?

37
0

SOURCE :- BBC NEWS

கலிலூர் ரஹ்மான்

பட மூலாதாரம், Former CA press wing

வங்கதேசத்தில் சமீபத்தில் விடைபெற்ற இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை வகித்த கலிலூர் ரஹ்மானை, புதிய பிஎன்பி அரசாங்கம் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.

இந்த முடிவால் பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் கூட வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்துள்ளன.

ரஹ்மானை வெளியுறவு அமைச்சராக நியமித்த முடிவு தங்களுக்கு சங்கடத்தையும் அசௌகரியத்தையும் அளிப்பதாக பிஎன்பி-யின் சில தலைவர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தில் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன, ஏனெனில் 18 மாத கால இடைக்கால அரசாங்கத்தில் பலமுறை கலிலூர் ரஹ்மானின் பங்கு குறித்து விவாதங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டன.

பல விவகாரங்களில் பிஎன்பி-யின் உயர்மட்டத் தலைவர்களே ரஹ்மானை விமர்சித்ததை காண முடிந்தது. இவர்கள் அவரை விமர்சித்தது மட்டுமல்லாமல், அவரை இடைக்கால அரசாங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சமீபத்திய தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுடன் வங்கதேசம் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் சேர்ந்து பிஎன்பி-யின் சில தலைவர்களும் நாட்டின் நலன்கள் போதிய அளவு பாதுகாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

அந்த ஒப்பந்தம் தொடர்பாக இடைக்கால அரசாங்கத்தின் கடைசி நாட்களிலும் பிஎன்பி-யின் பல தலைவர்கள் பகிரங்கமாக ரஹ்மானை விமர்சித்தனர்.

ஆனால் அனைத்து விவாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலும், கலிலூர் ரஹ்மான் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராகிவிட்டார்.

ஏன் பிஎன்பி அவருக்கு இவ்வளவு முக்கியமான அமைச்சகத்தை வழங்கியது என்பதுதான் கேள்வி.

கலிலூர் ரஹ்மான் கூட இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டார். இதற்குப் பதிலளித்த அவர், தான் பிஎன்பி அமைச்சரவையில் ‘கட்டாயப்படுத்தி’ சேரவில்லை என்று கூறினார்.

பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் ‘வியப்பு’

தாரிக் ரஹ்மான் அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

வங்கதேசத்தில் ஜூலை 2024-இல் ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் வெடித்தது.

இந்தப் போராட்டத்திற்குப் பிறகு ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்தது, அவர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார்.

பின்னர் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிஎன்பி முழு பெரும்பான்மை பெற்று அரசாங்கத்தை அமைத்துள்ளது. எனவே பிஎன்பி அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மிகுந்த ஆர்வம் நிலவியது.

பல ஊடகங்கள் சாத்தியமான அமைச்சர்கள் குறித்துப் பல நாட்களாக ஊகங்களை வெளியிட்டு வந்தன.

அந்தப் பட்டியல்களில் பிஎன்பி-யின் இளம் மற்றும் மூத்த தலைவர்கள் தவிர, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

இந்தநிலையில் கலிலூர் ரஹ்மானை அமைச்சராக்கும் முடிவால் பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் கூட வியப்படைந்தனர். கலிலூர் ரஹ்மான் தங்களது அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பைப் பெறுவார் என்று தாங்கள் நினைக்கவே இல்லை எனப் பல தலைவர்கள் பிபிசி வங்கமொழி சேவையிடம் தெரிவித்தனர்.

இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது பல விவகாரங்களில் கலிலூர் ரஹ்மானை விமர்சித்திருந்ததாகவும், அவரது ராஜினாமாவைத் தாங்கள் கோரியிருந்ததாகவும் இந்தத் தலைவர்கள் கூறினர்.

இப்போது தங்களது சொந்த அரசாங்கத்திலேயே ரஹ்மான் அமைச்சராவதால் அவர்கள் சங்கடமாக உணர்கின்றனர்.

பல மாவட்டங்களின் அடிமட்டத் தலைவர்களுடன் பேசியபோதும் இதே போன்ற எதிர்வினையே கிடைத்துள்ளது.

இருப்பினும், பிஎன்பி-யின் கொள்கை வகுப்பாளர்களில் சிலர், கலிலூர் ரஹ்மானை அமைச்சராக்கும் தங்களது உயர்மட்டத் தலைவரின் முடிவிற்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கின்றனர்.

‘கட்டாயப்படுத்திச் செல்லவில்லை’

செவ்வாய்க்கிழமை தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

பட மூலாதாரம், PID

பிஎன்பி அரசாங்கத்தின் முதல் நாளான புதன்கிழமை மாலை, டாக்கா வந்திருந்த நேபாள வெளியுறவு அமைச்சர் பாலா நந்தா சர்மாவை வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் மற்றும் இணை அமைச்சர் ஷாமா ஒபைத் ஆகியோர் அரசு விருந்தினர் இல்லமான ‘பத்மா’-வில், சந்தித்து பேசினர். இதன் பிறகு ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசினார்.

இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பை வகித்த பிறகு, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் அமைச்சரவையில் இணைவது ‘ஆதாய முரண்’ இல்லையா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான், “நான் ஒன்றும் கட்டாயப்படுத்திச் செல்லவில்லை. ஒரு நபரைக் குறித்து மற்றொருவருக்கு ஆரம்பக்கால கருத்து இருக்கலாம். ஆனால் அது மாறக்கூடும்” என்றார்.

இந்தப் பிஎன்பி வெற்றியில் முந்தைய அரசாங்கத்தின் பங்கு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர், “பலர் தேர்தல் முறைகேடு குறித்துப் பேசுகிறார்கள். இதன் பொருள் வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்கவில்லை என்பதுதான். இதைத்தான் கூறுகிறார்கள். மீண்டும் வாக்குகளை எண்ணுங்கள். எண்ணுவதில் எந்தச் சிரமமும் இல்லை” என்றார்.

பிஎன்பியும் அவரது ராஜினாமாவை கோரியிருந்தது

தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராகப் பதவியேற்கச் சென்ற போது

பட மூலாதாரம், Getty Images

கலிலூர் ரஹ்மான் முந்தைய இடைக்கால அரசாங்கத்தில் ஆலோசகராக இருந்தார். அவர் ரோஹிஞ்சா விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

அந்தப் பதவியில் இருந்தபோது அவரது செயல்பாடுகளைப் பிஎன்பி விமர்சித்தது.

இதன்பிறகு ரஹ்மான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டபோது, அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வழங்கியது குறித்தும் பிஎன்பி கேள்விகளை எழுப்பியது.

அந்த நேரத்தில் கட்சியின் சில தலைவர்கள் கலிலூர் ரஹ்மானின் குடியுரிமை குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.

கலிலூர் ரஹ்மான் அமெரிக்கக் குடிமகன் என்று கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். வேறொரு நாட்டின் குடிமகனுக்கு தேசிய பாதுகாப்புப் பொறுப்பை வழங்கி நாடு அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு, அதாவது 2025 மே மாதம், ரோஹிஞ்சா மக்களுக்காக ஐநா-வின் நிவாரணப் பொருட்களைப் அனுப்ப வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் ஒரு ‘மனிதாபிமான’ வழித்தடம் உருவாக்குவது குறித்துப் பேசப்பட்டது.

இந்த விவகாரத்தில் கலிலூர் ரஹ்மானும் இடைக்கால அரசாங்கமும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டனர்.

அப்போது சிட்டகாங் துறைமுக நிர்வாகத்தை வெளிநாட்டவர்களிடம் ஒப்படைப்பது குறித்த அரசாங்கத்தின் பல்வேறு கருத்துக்களும் பல விவாதங்களைத் தோற்றுவித்தன.

இந்தச் சூழலில், மே 22, 2025 அன்று டாக்காவில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிஎன்பி மூத்த தலைவர் கந்தக்கார் மொஷாரப் ஹுசைன், அப்போதைய இடைக்கால அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து கலிலூர் ரஹ்மான் விலக வேண்டும் என்று கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஆதரித்து ஹுசைன் கூறுகையில், “தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கருத்து மீண்டும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நற்பெயரைக் காப்பாற்ற அவரை நீக்க வேண்டும். பாசிசத்தின் கூட்டாளிகளான சில ஆலோசகர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கனவே பலமுறை எழுப்பியுள்ளோம்” என்றார்.

கலிலூர் ரஹ்மான் உள்ளிட்ட சில ஆலோசகர்களின் ராஜினாமாவை வலியுறுத்தி பிஎன்பி தரப்பிலிருந்து தலைமை ஆலோசகருக்கு எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவுடன் வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்தும் பிஎன்பி-யின் பல தலைவர்கள் கலிலூர் ரஹ்மானை விமர்சித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 9 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் வங்கதேசத்தின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்று பல பிஎன்பி தலைவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களின் விமர்சனத்தின் இலக்கு கலிலூர் ரஹ்மானாகவே இருந்தார்.

எந்த நபரைக் குறித்து பிஎன்பி தலைவர்களின் நிலைப்பாடு எதிர்மறையாக இருந்ததோ, அதே நபர் இப்போது கட்சியின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சகம் போன்ற முக்கியமான அமைச்சகத்தைக் கவனித்து வருகிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கலிலூர் ரஹ்மான் கிரீன் கார்டு வைத்திருப்பவரா?

பிஎன்பி அரசாங்கத்தின் முதல் நாளில் வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது

பட மூலாதாரம், SCREEN GRAB

இது குறித்துப் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக அவர் இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது பகிரங்கமாக கூற்றுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவர் அமெரிக்கக் குடிமகன் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர் என்று சில பிஎன்பி தலைவர்கள் அந்த நேரத்தில் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணங்களோ அல்லது அரசாங்க உறுதிப்படுத்தலோ பகிரங்கமாக வெளிவரவில்லை.

கலிலூர் ரஹ்மான் தரப்பிலிருந்தும் இது குறித்துத் தெளிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பகிரங்கத் தகவல்கள் இல்லை.

ஒரு நபர் கிரீன் கார்டு வைத்திருப்பதை அதிகாரப்பூர்வ ஆவணம் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் தெளிவான அறிக்கை இன்றி உறுதிப்படுத்த முடியாது.

எனவே, நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ மூலத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை, இது ஒரு அரசியல் குற்றச்சாட்டாக அல்லது சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது.

பிஎன்பி கலிலூர் ரஹ்மானை அமைச்சராக்கியது ஏன்?

கலிலூர் ரஹ்மான் வெளியுறவு அமைச்சரான செய்தி பிஎன்பி தலைவர்களையும் தொண்டர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பட மூலாதாரம், BNP

கலிலூர் ரஹ்மான் அமைச்சராக்கியதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிஎன்பி தலைவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பேசத் தயாராக இல்லை.

இருப்பினும், கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் சிலர் அவரது ராஜீய திறன் குறித்து குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா மற்றும் அண்டை நாடான இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு மத்தியில், வங்கதேசம் ஒரு சமநிலையைப் பேணுவது அவசியம்.

கலிலூர் ரஹ்மானுக்கு நெருக்கமான பல முன்னாள் தூதர்கள் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு மத்தியில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடைக்கால அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டபோது, பிஎன்பி-யும் தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி போராட்ட எச்சரிக்கை விடுத்திருந்தது.

இது ஒரு வகையான அரசியல் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் லண்டன் சென்றார், அங்கு வசித்து வந்த தாரிக் ரஹ்மானைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பிற்கு பிறகுதான் பிப்ரவரியில் தேர்தல் நடத்தும் அறிவிப்பு வெளியானது.

அப்போது யூனுஸுடன் கலிலூர் ரஹ்மானும் லண்டன் சென்றிருந்தார், பிஎன்பி தலைவருடனான சந்திப்பிலும் அவர் உடனிருந்தார்.

அந்த லண்டன் சந்திப்பின் போதுதான் கலிலூர் ரஹ்மான் பிஎன்பி-யுடனான தனது பழைய உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக்கொண்டதாக முன்னாள் தூதர்கள் கூறுகின்றனர்.

அன்றிலிருந்து தாரிக் ரஹ்மானுடன் அவரது தொடர்பு நீடித்து வந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, 2001-இல் தேர்தல் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர், முன்னாள் தலைமை நீதிபதி லத்தீபூர் ரஹ்மான், கலிலூர் ரஹ்மானைத் தனது தனிச் செயலாளராக நியமித்திருந்தார்.

அன்றிலிருந்தே பிஎன்பி தலைமையுடன் ரஹ்மானுக்கு நல்ல உறவு இருந்தது.

கலிலூர் ரஹ்மானுக்கு நெருக்கமான மற்றொருவர் கூறுகையில், இடைக்கால அரசாங்கத்தில் இருந்தபோதும் இறுதியாகத் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிஎன்பி-க்கு ஆதரவான பாத்திரத்தை ரஹ்மான் வகித்தார். அவர் கட்சியின் உயர்மட்டத் தலைமையில் இருந்தவர்கள் மத்தியில் தன்னைக் குறித்து ஒரு நல்ல கருத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU