SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN/AFP via Getty Images
6 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி), வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தியாவிடம் மீண்டும் வைத்துள்ளது.
2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நிகழ்ந்த இளைஞர்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, அப்போதிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
“வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை ஏற்கெனவே முன்னெடுத்துள்ளது, நாங்கள் அதை ஆதரிக்கிறோம்,” என பி.என்.பி மூத்த தலைவர் சலாஹுதின் அஹமது கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
“சட்டப்படி இந்த நாடு கடத்தலை நாங்கள் கோருகிறோம். இது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான விவகாரம். அவர் விசாரணையை எதிர்கொள்ள விரைவாக வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்குமாறு நாங்கள் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனும் எங்களுக்கு பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் அடிப்படையிலான நட்புறவு தேவை என்று அஹமது கூறினார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது பி.என்.பி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இளைஞர்கள் போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.
பட மூலாதாரம், AFP via Getty Images
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸாமன் கான் கமால் ஆகியோர் விசாரணையில் ஆஜராகாத போதும் வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
2024-இல் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தை வன்முறையான வழியில் ஒடுக்கியதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக இருவரும் தண்டிக்கப்பட்டிருந்தனர்.
இந்தத் தீர்ப்பை ‘சட்டவிரோதமானது’ எனக் குறிப்பிட்ட ஷேக் ஹசீனா, தனது தரப்பை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
அவரது அவாமி லீக் கட்சியும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலை ‘ஜனநாயகமற்றது’ என ஷேக் ஹசீனா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தேர்தல் தொடர்பான விமர்சனங்களை சலாஹுதின் அஹமது நிராகரித்திருந்தார்.
“இந்தத் தேர்தல் அனைவரையும் உள்ளடக்கியது என்பது இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும். அவாமி லீக் புறக்கணிக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் கேட்டால் ஆகஸ்ட் 2024-இல் ஏற்பட்ட எழுச்சியின் மூலமாகவே மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர்.” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கும் முடிவை எடுத்திருந்தது.
போராட்டங்களின்போது அந்தக் கட்சியின் செயல்பாடு மீதான விசாரணைக்கு மத்தியில் 2025-இல் அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
“அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார், அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது செயல்முறையின் ஒரு அங்கம்,” என்கிறார் சலாஹுதின் அஹமது.
இந்தியா – அவாமி லீக் உறவு
பட மூலாதாரம், Narendra Modi/X
இந்தியா மற்றும் வங்கதேசத்தின் அவாமி லீக் இடையேயான உறவு வரலாற்றுப்பூர்வமானது. 1971-ஆம் ஆண்டின் வங்கதேச விடுதலைப் போரின் போது உருவான இந்த உறவு ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அவாமி லீக் கட்சி அதன் வரலாற்றில் கடினமான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தபோது அக்கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் அளித்தது.

இவைபோக, ஆகஸ்ட் 5, 2024 முதல் முன்னாள் எம்பிக்கள், அமைச்சர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில், வங்கதேசத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவரும் பங்கேற்கக்கூடிய தேர்தலை தான் விரும்புவதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்து வந்தது. இதன் அர்த்தம் அவாமி லீக் கட்சியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே.
ஆனால், அது நடக்கவில்லை. அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வங்கதேச தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவாமி லீக் கட்சியின் பங்கேற்பு இல்லாமல் பிப்ரவரி 12-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU


