Home தேசிய national tamil வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியா? இந்திய நிபுணர்கள் அலசல்

வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியா? இந்திய நிபுணர்கள் அலசல்

13
0

SOURCE :- BBC NEWS

பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசப் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெற்ற வெற்றிக்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் வங்கதேசத்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தத் தங்கள் நாடு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் பிஎன்பி-யின் வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக பாகிஸ்தான் வங்கதேசத்துடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.

தாரிக் ரஹ்மானின் தாயாரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் நிலைப்பாடு பாகிஸ்தான் மீது நேர்மறையாக இருந்தது என்பதால் பிஎன்பி அரசு பாகிஸ்தானிடம் நட்பு ரீதியான அணுகுமுறையைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு இந்திய ஆதரவு அரசாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு இளைஞர் போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 2024-ல் அவரது அரசு வீழ்ந்ததையடுத்து, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் உறவுகள் மோசமடைவது போல் தெரிந்தது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்த பிறகு, வங்கதேசத்தில் உள்ள அவரது எதிர்பாளர்களின் இந்தியாவைப் பற்றிய பார்வை கடுமையாக மாறியிருப்பதாகத் தெரிகிறது.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேச உறவுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இத்துடன், வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டித்தது. வங்கதேசம் இதைத் தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகப் பார்த்தது.

பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல்

பட மூலாதாரம், @shehbazsharif

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் நெருக்கம்

இதற்கிடையில், வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் மேலோங்கியது, பாகிஸ்தானுக்கு வங்கதேசத்துடனான உறவுகளை மேம்படுத்தும் வாய்ப்புகளை அளித்தது.

ஆகஸ்ட் 2024-ல் ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த பிறகு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச உறவுகளில் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

2024 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், யூனுஸை இரண்டு முறை சந்தித்தார்.

இந்தச் சந்திப்புகளின் போது ராணுவ மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 2025-ல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் டாக்கா சென்றடைந்தார்.

முகமது யூனுஸின் இடைக்கால அரசும் பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்து வந்தது.

1971 போருக்குப் பிறகு இரு நாடுகளும் முதல்முறையாக நேரடி வர்த்தகத்தைத் தொடங்கின. இரு நாடுகளுக்கும் இடையே 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமான சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.

கடந்த ஒரு ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நிபுணர்களின் கூற்றுப்படி, வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றத்தைப் பாகிஸ்தான் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது.

தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ், பிஎன்பி அரசாங்கங்களின் போது வங்கதேசத்தின் பாகிஸ்தான் உடனான உறவுகள் நன்றாக இருந்தன என்றார்.

பிபிசியிடம் அவர், “1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் வங்கதேசத்தில் பிஎன்பி அரசாங்கம் இருந்தபோது, பாகிஸ்தானுடன் அதன் செயல்பாட்டு உறவுகள் நன்றாக இருந்தன,” என்றார்.

“பாகிஸ்தானில் இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு அதிக ஊக்கம் கிடைக்கிறது, வங்கதேச தேசியவாதக் கட்சியும் ‘மென்மையான இஸ்லாம்’ பற்றிப் பேசுகிறது. வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிஎன்பி கூட்டணி அரசு இருந்திருந்தால், தீவிர இஸ்லாம் ஊக்கம் பெற்றிருக்கும். ஆனால் தற்போது அது நடப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், வங்கதேசத்தில் பிஎன்பி வருவது பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி,” என்றார்.

பாகிஸ்தான் மீது காலிதா ஜியா கொண்டிருந்த சாதகமான போக்கை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இப்போது வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டால் அது இந்தியாவின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

“2001 முதல் 2006 வரை காலிதா ஜியா அரசாங்கம் இருந்தபோது, பிஎன்பி-யின் அனைத்து விவகாரங்களையும் அதன் தலைவரின் அரசியல் அலுவலகமான ‘ஹவா பவன்’ மூலம் தாரிக் ரஹ்மான்தான் கவனித்து வந்தார். அந்த காலக்கட்டத்திலும் தாரிக் ரஹ்மானின் கொள்கை பாகிஸ்தானிடம் மென்மையாகவே இருந்தது. இந்தியாவுடன் செயல்பாட்டு உறவுகள் இருந்தன, ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கவில்லை,” என்றார் சஞ்சய் பரத்வாஜ்.

தற்போது ”வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய சக்திகள் வலுவடைந்துள்ளன. எனவே அதைச் சமன்படுத்த, வங்கதேசத்தில் தாரிக் அரசாங்கம் பாகிஸ்தானுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். இந்தியாவுடன் அவாமி லீக் அரசாங்க காலத்தைப் போன்ற உறவுகள் இருக்க முடியாது. இது பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி,” என்றார் சஞ்சய் பரத்வாஜ்.

பிஎன்பி-யுடன் நெருங்க இந்தியா முயற்சி

பட மூலாதாரம், @hamidullah_riaz

பிஎன்பி-யுடன் நெருங்க இந்தியா முயற்சி

வங்கதேச தேசியவாதக் கட்சியின் ‘வெற்றிக்காக’ இந்திய பிரதமர் நரேந்திர மோதி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியது தமக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தாரிக் ரஹ்மான் தெரிவித்தார்.

பிஎன்பி-யின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நஸ்ருல் இஸ்லாம் கான் கூறுகையில், “எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இது ஒரு நல்ல விஷயம். ஒரு ஜனநாயக நாடு மக்களின் முடிவை மதிக்க வேண்டும்,” என்றார்.

பிரதமர் மோதி மற்றும் தாரிக் ரஹ்மான் ஒருவரை ஒருவர் பாராட்டிய விதத்திலிருந்து, கடந்த காலங்களில் பிஎன்பி-யுடன் உறவை மேம்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளதாகத் தோன்றுகிறது.

இந்த ஆண்டு தாரிக் ரஹ்மானின் தாயாரும் வங்கதேச முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா காலமானபோது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டாக்கா சென்றிருந்தார்.

அந்த சமயத்தில், பிஎன்பி தலைவருக்கு அஞ்சலி செலுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் சென்றது மற்றும் இந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி அனுப்பியது, எதிர்கால உறவுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டின் தெளிவான அறிகுறி என்று சர்வதேச உறவு நிபுணர்கள் கருதினர்.

வரவிருக்கும் தேர்தல்களில் பிஎன்பி ஆட்சிக்கு வரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தியா பிஎன்பி-யுடன் உறவை வளர்க்க முயன்று வந்தது.

இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இடைக்கால அரசாங்கத்துடனான தனது அசௌகரியத்தை ஓரளவிற்கு குறைக்க முயன்றது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

 சஜீப் வஜீத்

பட மூலாதாரம், @sajeebwazed

ஷேக் ஹசீனாவின் மகன் என்ன கூறினார்?

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுடன் அதிகரித்து வரும் பாகிஸ்தானின் நெருக்கம் குறித்து ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜீத் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம்,”இது இந்தியாவுக்குக் கடுமையான கவலையளிக்கும் விஷயமாக இருக்க வேண்டும். எங்களது அவாமி லீக் அரசு இந்தியாவின் கிழக்கு எல்லைகளை அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருந்தது. அதற்கு முன்பு, இந்தியாவில் கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு வங்கதேசம் ஒரு தளமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது,” என்று கூறினார்.

“இப்போது அதே நிலை மீண்டும் வரும். யூனுஸ் அரசாங்கம் நாட்டில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிற இஸ்லாமியக் கட்சிகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமியக் கட்சிகளுக்கு ஒருபோதும் ஐந்து சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைத்ததில்லை. அனைத்து முற்போக்கு மற்றும் தாராளவாதக் கட்சிகளையும் தடை செய்து, மோசடியான தேர்தலை நடத்தி, யூனுஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அதிகாரத்தில் அமர்த்த முயற்சிக்கிறார்,” என்று அவர் கூறினார்.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் மற்றும் ‘இந்தியாவின் உலகம்’ இதழின் ஆசிரியர் ஹேபிமோன் ஜேக்கப், டிசம்பர் 22 அன்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழில் எழுதியதாவது, “வங்கதேசத்துடன் வேகமாக மோசமடைந்து வரும் உறவுகள் இந்தியாவுக்கு மும்முனை சவாலை ஏற்படுத்துகின்றன. 4,000 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையில் பாதுகாப்பின்மை மற்றும் ஊடுருவல் அபாயம் அதிகரிக்கும். இந்திய விரோத சக்திகள் எல்லை தாண்டிய தளங்களை அமைக்கும் அபாயமும் உள்ளது.”

“இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான பதற்றத்தைப் பாகிஸ்தான் மற்றும் சீனா சாதகமாகப் பயன்படுத்துகின்றன. வங்கதேசத்தில் பாகிஸ்தானின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன.” என கூறியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU