SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், HANDOUT
-
2 மணி நேரங்களுக்கு முன்னர்
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் போலி ஆவணங்களைக் கொடுத்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 103 பேரை கடந்த ஓர் ஆண்டில் காவல்துறை கைது செய்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட சுமார் 3 மடங்கு அதிகம் எனக் கூறும் காவல்துறையினர், குறிப்பாக ஜவுளித்தொழில் சார்ந்த பணிகளில் இவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் (DISH) கீழுள்ள போர்ட்டலில் பதிவு செய்து வரும் நிலையில், அவற்றில் போலி ஆவணங்களைக் கண்டறிவதற்கான எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஒருபுறம் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் இவர்கள் ஊடுருவ வாய்ப்பில்லை என்று தொழில் அமைப்பினர் கூறுகின்றனர். ரகசிய தகவல்களையும், அவர்களிடம் உள்ள வங்கதேச அடையாள அட்டைகளையும் வைத்து இவர்களைக் கைது செய்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உண்மை நிலவரம் என்ன?
அசாம் முதல்வர் பேட்டிக்குப் பின் அதிகரித்த காவல்துறை சோதனைகள்
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உடல் உழைப்பு சார்ந்த பெரும்பாலான பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக, கட்டுமானம், ஜவுளி, உணவகம் போன்ற தொழில்களில் இவர்களின் பங்களிப்பு அதிகம். இவ்வாறு வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குப் பல்வேறு பணிகளுக்காக வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்தியில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் ஊடுருவி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அளித்த பேட்டி ஒன்றில், “கோவையைக் குறி வைத்து வங்கதேச அகதிகள் ஊடுருவுகிறார்கள்” என்று கூறியிருந்தார். அதோடு, ஜவுளித்துறை சார்ந்த பணிகளில் சேர்ந்தவர்கள் பற்றி விசாரிக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவருடைய இந்தக் கூற்றை, கோவை தொழில்துறையினர் ஒட்டுமொத்தமாக மறுத்தனர். இருப்பினும் அவருடைய பேட்டிக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் ஊடுருவலை அறிவதற்கான காவல்துறையின் சோதனைகள் தீவிரமாயின.
பட மூலாதாரம், HANDOUT
கோவையைக் குறிப்பிட்டு இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதால், கோவையை தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மண்டலத்தில் இதற்கான சோதனைகளை காவல்துறை அதிகப்படுத்தியது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஜவுளித்தொழில் அதிகமாக நடக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் காவல்துறையினர் மட்டுமின்றி, க்யூ பிராஞ்ச், பயங்கரவாத எதிர்ப்புப்படை (Anti-Terrorism Squad) ஆகியவற்றின் சார்பிலும், இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்களிடையே ஊடுருவியுள்ளதாக வங்கதேச நாட்டவர்கள் என கூறப்படுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கு மண்டலத்தில் கடந்த 2024ஆம் ஆண்டைவிட, 2025ஆம் ஆண்டில் 3 மடங்கு அதிகமான வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில்தான் அதிகளவிலான வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய கோவை மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தர், ”கடந்த 2024ஆம் ஆண்டில் மேற்கு மண்டலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர். 2025இல் இந்த எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்க மாநில முகவரிகளில்தான் ஆதார் அட்டை உள்ளிட்ட பலவிதமான போலி ஆவணங்களை வைத்திருந்துள்ளனர்” என்றார்.
கடந்த பிப்ரவரி 5 அன்று, க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நடத்திய கூட்டு சோதனையில் அன்னூர் அருகே ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 11 வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதேநாளில் ஈரோட்டில் 4 பேரும், மறுநாள் திருப்பூரில் 13 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

”இவர்களில் பெரும்பாலானோர் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில்தான் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அந்த வேலை அவர்களுக்குத் தெரியும் என்பதுடன், தொழிலாளர்களின் தேவை அதிகமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். தொழில் நிறுவனங்களை நடத்துவோர், புதிதாகச் சேரும் தொழிலாளர்களின் ஆவணங்களைச் சரி பார்க்காமல் இருப்பதால்தான் இவர்களால் எளிதில் ஊடுருவ முடிகிறது” என்றார் ஐஜி சரவணசுந்தர்.
ஜவுளித்தொழிலைப் பொருத்தவரை, புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பின்றி இயங்குவது கடினம் என்பதை தொழில் அமைப்பினர் ஒப்புக்கொள்கின்றனர்.
தென் மாநிலங்களில் உள்ள ஆலைகள் உள்ளிட்ட ஜவுளி கட்டமைப்புகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் உள்ள ஆலைகள் உள்ளிட்ட ஜவுளி நிறுவனங்களில் 90% புலம்பெயர் தொழிலாளர்களையே நம்பியிருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (SIMA) பொதுச் செயலாளர் செல்வராஜூ.
”தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மில்கள் செயல்படுகின்றன. சராசரியாக ஒவ்வொரு ஆலையிலும் குறைந்தபட்சம் 300 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள நிலைமைப்படி, இவர்களில் 70% பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்தான்.
ஆனால் இவர்களின் ஆவணங்களைச் சரி பார்க்காமல் யாரையும் பணிக்குச் சேர்ப்பதில்லை. இதுவரையிலும் ஆலைகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்துக் கைதானதாக எங்களுக்கு தகவல் இல்லை” என்றார் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன்.
பட மூலாதாரம், Getty Images
போலி ஆவணங்களை கண்டுபிடிக்க உதவும் வங்கிக் கணக்கு
இதே கருத்தை ஏற்கெனவே தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன்(டாஸ்மா) நிர்வாகிகள் பிபிசியிடம் தெரிவித்திருந்தனர்.
நுாற்பாலைகளைப் பொருத்தவரை, ஒரு தொழிலாளரைப் பணியில் சேர்ப்பதற்கு நிறைய நடைமுறைகளைக் கடைபிடித்து வருவதாகவும் அதன் நிர்வாகிகள் விளக்கினர். மில்களைவிட, பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்களில்தான் வங்கதேசத்தவர்கள் அதிகமாகப் பிடிபட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்தத் கூற்றை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருக்குமரன் மறுக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”திருப்பூரிலுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்திலும் சேர்த்து எட்டரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 40% பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். இவர்களைப் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் பல கட்டங்களாகப் பரிசோதிக்கப்படுகின்றன” என்றார்.
”ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு, இஎஸ்ஐ கணக்கு துவக்கப்பட்டு, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பிடிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆவணங்கள் சரி பார்க்கப்படுகின்றன. அதில் போலியான ஆவணங்களைக் காண்பித்தால் கைரேகையைப் பதியும்போது சிக்கிவிடுவார்கள். அதனால் போலி ஆவணங்களை வைத்து பனியன் நிறுவனங்களில் பணியில் சேரவே முடியாது” என்றார்.
இவை தவிர்த்து, தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் (DISH) புலம்பெயர் தொழிலாளர்களுக்கான போர்ட்டலில் தகவல்களைப் பதிவு செய்வதாகக் கூறும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகி திருக்குமரன், அவற்றிலிருந்து காவல்துறையினர் உள்பட யார் வேண்டுமானாலும் ஒரு தொழிலாளரின் அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

தொழில்துறையினர் குறிப்பிடும் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில், பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பதிவு செய்வதற்காக ஓர் இணைய சேவை (Portal) வழங்கப்பட்டுள்ளது.
அதில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுச் சான்று வழங்கப்படுகிறது.
இதில் பதிவு செய்வது குறித்து, தொழில் அமைப்பினரிடம் தொழிலாளர் நலத்துறையால் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகக் கூறுகிறார் தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கோவை இணை இயக்குநர் சரவணன். இதன் பயனாக முன்பைவிட, தற்போது பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில், இந்தத் தளத்தில் பதிவு செய்தவர்களின் விவரங்களை பிபிசி தமிழ் சேகரித்தபோது, கோவை மாவட்டத்தில் 70 ஆயிரம் தொழிலாளர்களின் பெயர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் தொழிலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அப்போதிருந்த அதிகாரிகள் தகவல் பகிர்ந்திருந்தனர். இப்போது விசாரித்தபோது, இந்த எண்ணிக்கை கூடியுள்ளதை அறிய முடிந்தது.
கோவையில் கடந்த மாதம் வரை, ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள், இந்த போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் துணை இயக்குநர் துரைராஜ் தெரிவித்தார். இதில் கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஜவுளி நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் என அனைத்தும் இடம் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இதே இயக்ககத்தின் திருப்பூர் துணை இயக்குநர் சந்தோஷ், ”திருப்பூரில் இதுவரை 2.2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல லட்சம் பேர் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். இதில் பதிவு செய்வது அவர்களைப் பணிக்குச் சேர்க்கும் நிறுவனத்தின் பொறுப்பு.
புதிதாக பணிக்குச் சேரும் ஒருவரிடம் சுயவிவரப் படிவங்களில் பெயர், வயது, ஊர், கல்வித் தகுதி போன்ற விவரங்களையும், ஆதார் அட்டையையும் வாங்கி இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள். வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த நபரின் பெயரை அவர்களாகவே ‘அன்-லிங்க்’ செய்யும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது” என்றார்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை அறிவதற்காக இத்தகைய இணைய சேவையை உருவாக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில்தான் இது துவக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொழில் நிறுவனங்கள், கடைகள் என எந்தவொரு நிறுவனத்திலும் பணிக்குச் சேரும் புலம்பெயர் தொழிலாளரின் விவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினாலும், அது சட்டபூர்வமாக கட்டாயமாக்கப் படவில்லை என்பதையும் தொழிலாளர் துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.
இதனால் பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள், ஆவணங்கள் முறைப்படி இந்த போர்ட்டலில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் தரும் ஆவணங்களைப் பரிசீலிக்க ஆதார் இணைய சேவைக்குச் சென்று ‘ஓடிபி’ வருவது போன்ற தொழில்நுட்பம் இருந்தால் இத்தகைய போலி ஆவணங்களை வைத்து யாரும் ஊடுருவாமல் தடுக்க முடியும் என்று துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அடையாள அட்டைகளை வைத்து உறுதி செய்யும் காவல்துறை
சமீபத்தில் அன்னூர் பகுதியில் பனியன் நிறுவனத்தில்தான், வங்கதேசத்தவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு இந்த விவரங்கள், ஆவணங்கள் சரி பார்க்கப்படாதது எப்படி, கணக்கில் காட்டப்படாமல் இந்தத் தொழிலாளர்கள் பணியில் வைக்கப்பட்டிருந்தனரா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் ஏற்றுமதி நிறுவனங்களில் இத்தகைய வெளிநாட்டவர்கள் ஊடுருவ வாய்ப்பில்லை என்பது தொழில் அமைப்பினரின் உறுதியான பதிலாக இருக்கிறது.
திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வரும் முகவர்கள் ஏராளமாகவுள்ளனர். இவர்கள்தான் வங்கதேசத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து, போலி ஆவணங்களைக் கொண்டு இங்குள்ள நிறுவனங்களில் சேர்த்துவிட்டு கமிஷன் பெறுவதாகவும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் தந்து பணிக்குப் பலர் வைத்திருப்பதாகவும் பெயர்கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் தொழில் அமைப்பினர் மறுக்கின்றனர். ஊதியத்தில் யாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறும் தொழில் அமைப்பின் நிர்வாகிகள், அவரவர் திறனுக்கேற்ப திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஊதியம் பெற முடியும் என்றனர்.

பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருக்குமரன், ”சாதாரணமாக பனியன் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான அடிப்படைப் பயிற்சியைப் பெற்ற ஒருவரால் குறைந்தபட்சம் நாளுக்கு ரூ.650 ஊதியம் பெற முடியும்.
தையல் திறன் வாய்ந்தவர்களால் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும், சிலரால் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாகவும் சம்பாதிக்க முடியும். புதிதாக வருவோருக்கு வேலை தெரிந்தால் திறன் பயிற்சியும், வேலை தெரியாவிட்டால் அதற்கேற்ற பயிற்சியும் வழங்குகிறோம்” என்றார்.
போலி ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் எப்படி கண்டுபிடித்துக் கைது செய்கின்றனர் என்ற கேள்வியை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
அதற்கு அவர், ”எங்களுக்கு வரும் ரகசிய தகவல்களின் அடிப்படையில்தான், அவர்களுடைய ஆவணங்களை வாங்கிப் பரிசீலிக்கிறோம். அவர்களிடம் வங்கதேசத்தின் அடையாள அட்டை இருப்பதை வைத்தே அவர்கள் அந்த நாட்டவர் என்பதை உறுதி செய்கிறோம்” என்றார்.
கைது செய்யப்படும் வங்கதேசத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மண்டல ஐஜி சரவணசுந்தர், ”அவர்கள் மீது கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. அவர்களை முதலில் சேலத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு சட்டபூர்வமான சில நடைமுறைகளுக்குப் பிறகு வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புவோம்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



