Home தேசிய national tamil வக்ஃப் சட்டத்திருத்தம்: தமிழ்நாட்டில் அரசின் எதிர்ப்பை மீறி அமலுக்கு வருமா?

வக்ஃப் சட்டத்திருத்தம்: தமிழ்நாட்டில் அரசின் எதிர்ப்பை மீறி அமலுக்கு வருமா?

4
0

SOURCE :- BBC NEWS

வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய மக்களவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா வியாழக்கிழமை (ஏப்ரல் 3) அதிகாலையில் நிறைவேற்றப்பட்டது.

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான இந்திய அரசின் தாக்குதல்’ என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்? தமிழ்நாட்டில் நிறைவேறுமா?

இந்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, புதன்கிழமையன்று வக்ஃப் (திருத்த) மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலையில் வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

பட மூலாதாரம், ANI

கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

இந்த விவகாரம், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. வியாழக்கிழமையன்று மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி சட்டமன்றத்துக்கு வந்தனர்.

முன்னதாக, மார்ச் 27 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க தவிர அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனை சட்டமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “வக்ஃப் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாக திரும்பப் பெற வேண்டியது” எனக் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தி.மு.க வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin/X

வக்ஃப் மசோதா – தமிழ்நாட்டில் நிறைவேறுமா?

“சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் மாநில அரசு உள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு அரசு வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது முக்கியமான ஒன்று” எனக் கூறுகிறார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் ஹாஜாகனி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதன் தேவைக்கேற்ப வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வக்ஃப் சட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது” என்கிறார்.

“வக்ஃப் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து அம்சங்களையும் சட்டத் திருத்தம் மூலம் நீக்கிவிட்டனர். சட்டத்தின் பெயரில் பள்ளிவாசல்களைப் பறிப்பதற்கு மத்திய அரசு திட்டமிடுகிறது” எனக் கூறுகிறார் ஹாஜாகனி.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

பட மூலாதாரம், Haja Kani/Facebook

வக்ஃப் சொத்து என்றால் என்ன?

வக்ஃப் என்பது இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் “அல்லாவின் பெயரால்” சேவை நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படுகிறது என்கிறார் ஹாஜாகனி.

“முஸ்லிம்களில் ஏழைகள், ஆதரவற்றோர், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காகவும் வணக்க தலங்களை (தொழுவதற்கான இடங்கள்) உருவாக்குவதற்காகவும் வக்ஃப் உருவாக்கப்பட்டது” எனக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் பாத்திமா முசாஃபர்.

“வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்துக்குள் நுழைவது மிகவும் தவறானது” எனக் கூறும் பாத்திமா முசாஃபர், “தமிழ்நாட்டில் பழமைவாய்ந்த பள்ளிவாசல்கள், ஈத்காக்கள், தர்காக்கள் சிறப்பாக செயல்படுகின்றன. வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் சொத்துகளும் உள்ளன” என்கிறார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

பட மூலாதாரம், Fathima Muzaffer/Facebook

‘தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்’

ஒருவர் முஸ்லிமாக ஐந்து ஆண்டுகள் இருந்தால் மட்டுமே வக்ஃப் வாரியத்துக்கு சொத்துகளை தானமாக அளிக்க முடியும் என்ற திருத்தத்தை சுட்டிக் காட்டிப் பேசிய ஹாஜாகனி, “இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை ஆற்காடு நவாப் இனாமாக கொடுத்தார். இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒருவர் தானம் செய்ய விரும்பினால், அவர் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறினால் ஏற்பார்களா?” என்றார்.

‘வக்ஃப் வாரியத்தில் நியமிக்கப்படும்12 உறுப்பினர்களில் எட்டு பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்’ என சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

“முஸ்லிம் அல்லாத ஒருவரை வக்ஃப் வாரியத்துக்குள் கொண்டு வருவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனக் கூறுகிறார் ஹாஜாகனி.

“முஸ்லிம் மக்களின் நலனுக்காக அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை அவர்கள் நிர்வகிக்கின்றனர். அங்கு முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதாக கூறுவது அநீதி” எனக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் பாத்திமா முசாஃபர்.

“சிதைக்கும் நோக்கம் இல்லை” – பா.ஜ.க

அதேநேரம், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை முன்வைத்து பேசப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார், பா.ஜ.க சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்.

முத்தலாக், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை இந்திய அரசு கொண்டு வந்தபோது எழுந்த அதே எதிர்ப்பை தற்போதும் சிலர் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

‘வக்ஃப் வாரியத்துக்கு யார் வேண்டுமானாலும் சொத்துகளை கொடுக்கலாம்’ என்ற சட்டப் பிரிவை 2013 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததாகக் கூறும் இப்ராஹிம், “இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது” என்கிறார்.

“தானம் செய்தால் மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். அப்படியிருக்கும்போது யார் வேண்டுமானாலும் வக்ஃப் வாரியத்துக்கு தானம் கொடுக்கலாம் என்பதை ஏற்க முடியாது” என குறிப்பிட்டார்.

தானம் கொடுப்பதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவு குறித்துப் பேசிய வேலூர் இப்ராஹிம், “இதன் அவசியத்தை மக்கள் பிறகு உணர்ந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

பட மூலாதாரம், Vellore Ibrahim / Facebook

“வக்ஃப் நிலத்தில் சர்ச்சை இருந்தால் அதை ஆய்வு செய்யும் வரை நிலம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்கும். சொத்தும் பாதுகாக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

உறுப்பினர்கள் நியமனத்தில் அறநிலையத்துறையுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்துப் பேசிய வேலூர் இப்ராஹிம், “கோவில் பொறுப்புகளில் பிற மதத்தவர் இருக்கக் கூடாது என்பதில் நியாயம் உள்ளது. ஆனால், பள்ளிவாசல்கள், தர்காக்களில் பிற மதத்தினர் நுழைவதற்கு தடை இல்லை. கோவில்களில் தடை இருப்பதால் இதைப் பின்பற்றுகின்றனர்” எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “வக்ஃப் சொத்துகளில் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மதவழிபாட்டை சிதைக்க வேண்டும் என்ற நோக்கம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை” என்றார்.

தமிழ்நாட்டில் நிறைவேறுமா?

மாநில அரசின் எதிர்ப்பு குறித்து பேசிய மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரன்,” சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு தாமதப்படுத்தலாம். ஆனால், இதனை தடுக்க முடியாது. ” என்றார்

சட்டமன்றத் தீர்மானம் குறித்துப் பேசிய அவர், “அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு இவை பயன்படும். மக்களின் உணர்வை பிரதிபலிப்பதற்கான உத்தியாகவும் இதைப் பார்க்கலாம். சட்டம் என்பதால் அமல்படுத்துவதைத் தடுக்க வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU