Home Latest news tamil சமீபத்திய செய்தி லக்னௌ வெளியேற்றம்: களத்தில் வீரர்கள் மோதலால் பரபரப்பு – திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் ஆட...

லக்னௌ வெளியேற்றம்: களத்தில் வீரர்கள் மோதலால் பரபரப்பு – திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் ஆட தடை

3
0

SOURCE :- BBC NEWS

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சிவகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 20 மே 2025, 01:56 GMT

    புதுப்பிக்கப்பட்டது 20 மே 2025, 06:37 GMT

ஐபிஎல்லில் லக்னௌ அணியின் பிளேஆஃப் சுற்றுக் கனவை சன்ரைசர்ஸ் அணி கலைத்துள்ளது. நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னௌ நிர்ணயித்த 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே எட்டிய சன்ரைசர்ஸ், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா, கிளாசன், மலிங்கா ஆகியோர் இந்த வெற்றியை சாத்தியமாக்கினர். மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

ஆட்டத்தின் நடுவே இரு அணி வீரர்களும் திடீரென மோதிக் கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. என்ன நடந்தது? ஏற்கெனவே 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள நான்காவது இடத்திற்கு இன்னும் எந்தெந்த அணிகள் போட்டியில் உள்ளன?

லக்னௌ சிறப்பான தொடக்கம்

லக்னௌ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட லக்னௌ அணிக்கு சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. மிட்செல் மார்ஷ் – எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியை மிரட்டியது.

அரைசதம் அடித்து அசத்திய இருவரும் சேர்ந்து 11-வது ஓவரிலேயே 115 ரன்களை சேர்த்துவிட்டனர். ஒரு விக்கெட் கூட இழக்காத நிலையில் இருந்த லக்னௌ அடுத்திருந்த 9 ஓவர்களில் மலைக்க வைக்கும் அளவுக்கு ரன்களை குவிக்கும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பதிலடியால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

10.3 ஓவர்களில் 115 ரன் என்ற நிலையில் லக்னௌ இருந்தபோது முதல் விக்கெட்டாக மார்ஷ் வீழ்ந்தார். அவர் 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

அடுத்து வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடாததால் அந்த அணியால் எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பூரன் 26 பந்துகளில் 45 ரன் சேர்த்தார்.

மற்றொரு தொடக்க வீரர் மார்க்ரம் 38 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்ததால் லக்னௌ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களே சேர்த்தது. இந்த ரன் மழையிலும் சன்ரைசர்ஸ் அணியில் சிக்கனமாக பந்துவீசிய மலிங்கா 4 ஓவர்களில் 28 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சன்ரைசர்ஸ் தடாலடி தொடக்கம்

சன்ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு என்பதால் லக்னௌ அணியினர் நம்பிக்கையுடன் பவுலிங்கை தொடங்கினர். ஆனால், அதனை சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறிது நேரத்திலேயே கலைத்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வர தாமதமானதால் இந்த போட்டியில் பங்கேற்காத டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக தொடக்க வீரராக, இம்பாக்ட் பிளேயராக களம் கண்ட அதர்வா டைட் 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இருவருமே வாண வேடிக்கை நிகழ்த்தியதால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் போர்டு மின்னல் வேகத்தில் எகிறியது. இதனால் அந்த அணி பவர் பிளேயில் 72 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஓவரை வீசிய ரவி பிஷ்னோய்க்கு அது ஒரு கொடுங்கனவாக மாறியது. அந்த ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார். இதனால், சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 என்கிற அளவில் எகிறியது.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், நிகோலஸ் பூரனின் சாதனையை சமன் செய்தார். இருவரும் இதுவரை 4 முறை 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அரைசதம் அடித்துள்ளனர்.

அபிஷேக் சர்மா வெளியேறிய பிறகு ஹென்ரிச் கிளாசன் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் போர்டை கவனித்துக் கொண்டார். அவரது அதிரடியால் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட்டை எளிதாக பராமரிக்க முடிந்தது. கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். கமிந்து மென்டிசும் தனது பணியை சிறப்பாக செய்தார். அவர் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார்.

தொடக்கம் முதல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியதால் சன்ரைசர்ஸ் அணி எந்த சிரமமும் இன்றி 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே 206 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் சர்மா – திக்வேஷ் ராதி மோதல்

ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தனது அணியின் ஸ்கோரை 7.2 ஓவர்களில் 99 ரன்களாக உயர்த்தினார். பின்னர் அவர் திக்வேஷ் ராதியின் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அபிஷேக் சர்மாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் திக்வேஷ் ராதி தனது தனித்துவமான, ‘நோட்புக்’ கொண்டாட்டத்தை நிகழ்த்தினார். அத்துடன், அபிஷேக்கை வெளியே செல்லும்படி ஆக்ரோஷமாக சைகையும் செய்தார்.

ஏற்கனவே ஆட்டமிழந்த ஏமாற்றத்தில் இருந்த அபிஷேக், ராதியின் கொண்டாட்ட பாணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

நடுவர்கள் மற்றும் பிற வீரர்களின் தலையீட்டிற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வீடியோ உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது.

இருப்பினும், போட்டிக்குப் பிறகு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் லக்னோ உதவி பயிற்சியாளர் விஜய் தஹியா ஆகியோர் அபிஷேக் சர்மா – திக்வேஷ் ராதியுடன் பேசியதைக் காண முடிந்தது. பின்னர் இரு வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் விளையாட தடை

நேற்றைய ஆட்டத்தில் நடத்தை விதிகளை மீறியதாக லக்னௌ பந்துவீச்சாளர் திக்வேஷ் ராதி ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஊடக அறிக்கையின்படி, இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் ராதியின் மூன்றாவது லெவல்-1 விதிமீறல் இதுவாகும்.

ஒழுங்கு நடவடிக்கை எதிரொலியாக, லக்னௌ அணி விளையாடும் அடுத்த போட்டியில் திக்வேஷ் ராதி விளையாட முடியாது. அந்த போட்டி மே 22-ஆம் தேதி ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரானதாகும்.

இந்த சீசனில் லக்னோ அணிக்காக அறிமுகமான திக்வேஷ் ராதி ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுத்த பிறகு தனது தனித்துவமான பாணியில் ‘நோட்புக் கொண்டாட்டத்தை’ மேற்கொள்கிறார்.

முதல் இரண்டு போட்டிகளில், நமன் தீர் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (பஞ்சாப் கிங்ஸ்) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, அவர் கையில் ஏதோ எழுத சைகை காட்டினார், அதே நேரத்தில் சுனில் நரைனை (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அவுட் செய்த பிறகு, அவர் தரையில் ஏதோ எழுதுவது போன்ற பாவனை காண முடிந்தது.

3 சந்தர்ப்பங்களிலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

லக்னௌ வெளியேற்றம்

சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த வெற்றியின் மூலம் லக்னௌ அணியின் பிளேஆஃப் வாய்ப்பையும் சன்ரைசர்ஸ் பறித்துள்ளது. ஏனெனில், பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க லக்னௌ அணி தனக்கிருந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதல் போட்டியிலேயே தோற்றுவிட்டதால் அந்த அணிக்கு பிளேஆஃப் வாய்ப்புக்கான கதவுகள் அடைபட்டுவிட்டன.

பிளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே முன்னேறிவிட்டன. எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே உள்ளன.

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

ராஜஸ்தான் vs சிஎஸ்கே

நாள் – மே 20

இடம் – டெல்லி

நேரம்- இரவு 7.30 மணி

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் – மே 21

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs சன்ரைசர்ஸ்

நாள் – மே 23

இடம் – பெங்களூரு

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்)

ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 523 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) 20 விக்கெட்டுகள் (12போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC