Home தேசிய national tamil ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது பற்றி இரான் கூறியது என்ன?

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது பற்றி இரான் கூறியது என்ன?

8
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Reuters

15 மார்ச் 2026, 14:18 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா இப்போது “கெஞ்சிக் கொண்டிருப்பதாக” அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கடலில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும் ரஷ்ய எண்ணெயை இந்தியா போன்ற நாடுகள் வாங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா தனது தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ள நிலையில் அரக்சி இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவினர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தியா பொறுப்பான அணுகுமுறையைக் காட்டியுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தியிருந்ததாகவும் அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, பெசன்டின் புதிய அறிவிப்பு, ஏப்ரல் 11-ஆம் தேதி வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பதாக அமெரிக்க கருவூலத் துறையின் இணையதளம் தெரிவிக்கிறது.

முக்கியமாக, பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான ரஷ்ய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயை வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொள்கை மீது அரக்சி விமர்சனம்

“பல மாதங்களாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவை அமெரிக்கா மிரட்டி வந்தது. ஆனால் இரானுடனான மோதல் தொடங்கிய வெறும் இரண்டு வாரங்களில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு வெள்ளை மாளிகை இப்போது கெஞ்சிக் கொண்டிருக்கிறது.” என்று அரக்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது சமூக வலைதளப் பதிவில் ‘ரஷ்யா எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் ஒரு நாளைக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் ஈட்டுகிறது’ என்ற தலைப்பிலான ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ கட்டுரையை அரக்சி மேற்கோள் காட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளையும் விமர்சித்த இரானிய வெளியுறவு அமைச்சர், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெறலாம் என்ற நம்பிக்கையில், இரானுக்கு எதிரான “சட்டவிரோதப் போரை” ஐரோப்பா ஆதரித்ததாகக் கூறினார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனுக்கு எதிரான போருக்கு நிதி திரட்ட ரஷ்யா தனது எண்ணெய் வருவாயைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் கூடுதலாக 25% வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு டிரம்ப் நிர்வாகம் எடுத்த இந்த முடிவை, அரக்சி ஒருவித நையாண்டியுடன் விமர்சித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் இது குறித்து விளக்கம் அளிக்கையில், “இது திட்டமிடப்பட்ட ஒரு குறுகிய கால ஏற்பாடு மட்டுமே. ஏற்கனவே கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கச்சா எண்ணெய் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது அனுமதி அளிக்கிறது என்பதால், இதன் மூலம் ரஷ்ய அரசாங்கத்திற்கு பெரிய அளவில் பொருளாதார நன்மைகள் எதுவும் கிடைக்காது” என்று கூறினார்.

அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?

இரானுடன் அமெரிக்கா-இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர், வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலகம் எவ்வளவு சார்ந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

போர் தொடங்கிய பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டது ஆகிய காரணங்களால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த நீர்வழிப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், இது எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாகக் கருதப்படுகிறது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் சராசரி பெட்ரோல் விலையானது ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 23% அதிகமாக உள்ளது. அதேசமயம் டீசல் விலை மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் டீசல் விலை 9% உயர்ந்துள்ளது.

இந்தப் போரின் தாக்கம் அமெரிக்காவின் சாமானிய மக்களையும் கூட எட்டும் என்பதையே இது காட்டுகிறது. எனவே எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க, உலகம் முழுவதும் அதன் விநியோகத்தைப் பராமரிப்பது அவசியமாகிறது.

ஆசியா கண்டம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடி மிகவும் கடுமையாக உணரப்படுகிறது. கடந்த ஆண்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 90% இந்தப் பிராந்தியத்திற்கே கொண்டு செல்லப்பட்டது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

போர் வெடித்த பிறகு, இந்தியாவில் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்திய அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இருந்த போதிலும், இது மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாகவே உள்ளது.

மற்ற ஆசிய நாடுகளைப் பார்த்தால், பிலிப்பின்ஸ் தனது கச்சா எண்ணெயில் சுமார் 95 சதவீதத்தை மத்திய கிழக்கிலிருந்து பெறுகிறது. பிலிப்பின்ஸ் அதிபர் எரிபொருளைச் சேமிக்க அரசு ஊழியர்களை வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர் வெப்பநிலையை வழக்கத்தை விட அதிகமாக வைப்பது உள்பட எரிபொருளைச் சேமிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தாய்லாந்தின் எரிசக்தி அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சிங்கப்பூர் தனது உணவுப் பொருள்களில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, இந்தோனீசியா தனது கோதுமை முழுவதையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் உணவுப் பொருள் விலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் எண்ணெய் விநியோகத்தில் போரின் தாக்கம்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, மற்ற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்குத் தற்காலிக அனுமதியை மார்ச் 13, வெள்ளிக்கிழமை டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி, அமெரிக்க கருவூலத் துறை “இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க ஏதுவாக, முன்பு விதித்த தடையில் 30 நாள் தற்காலிக விலக்கு” அளித்தது.

தி இந்து ஆங்கில நாளிதழின்படி, மார்ச் 7 அன்று ஃபாக்ஸ் பிசினஸிற்கு அளித்த பேட்டியில் அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், “இந்தியர்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம். அவர்கள் அதையே செய்தார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வாங்கவிருந்தார்கள்” என்றார்.

“ஆனால் தற்காலிக உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, நாங்கள் அவர்களை ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்துள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும், பல நகரங்களில் சமையல் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. பல இடங்களில் பெட்ரோல் பங்குகளிலும் கணிசமான கூட்டம் காணப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் போதுமான அளவு டீசல் மற்றும் பெட்ரோல் கையிருப்பு உள்ளதால், மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை கொள்கலன்களில் வாங்கி சேமிக்க வேண்டாம் என்று சனிக்கிழமை இந்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU