Home தேசிய national tamil ரஜினி விரும்பியும் கூட அவரை வைத்து படம் இயக்காதது ஏன்? பிபிசி தமிழுக்கு டி.ராஜேந்தர் பேட்டி

ரஜினி விரும்பியும் கூட அவரை வைத்து படம் இயக்காதது ஏன்? பிபிசி தமிழுக்கு டி.ராஜேந்தர் பேட்டி

6
0

SOURCE :- BBC NEWS

டி ராஜேந்தர்

பட மூலாதாரம், Insta @elakkiya_rajendar

டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த உயிருள்ளவரை உஷா படம், 43 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் உள்பட தமிழ் சினிமா உலகில் தனது அனுபவங்களை பிபிசி தமிழிடம் டி.ராஜேந்தர் பகிர்ந்து கொண்டார்.

”நான் நடிகன், இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளர், விநியோகஸ்தரும் கூட. ரசிகர்களை கவரும் வகையில் ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும், அந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். எந்த காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள், எந்த பாடலுக்கு தாளம் போடுவார்கள் என்பதை உன்னிப்பாக பார்ப்பேன். இது ஒருவகையில் உளவியல் ரீதியான அணுகுமுறை. அதனால்தான் என் படங்கள், பாடல்களை இப்போதும் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் இன்றைய காலகட்டத்துக்கு சரியான படம் உயிருள்ளவரை உஷா.” என்று அவர் பேச ஆரம்பித்தார்.

அவரது நேர்காணல் கேள்வி – பதில் வடிவில் தரப்பட்டுள்ளது.

இப்போது காதல் மாறியிருக்கிறதே?

அந்த காலத்தில் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல தயங்கினார்கள். ஏன், பெண்களிடம் பேசவே யோசிப்பார்கள். கடிதம், கவிதை எழுதி காதலை வெளிப்படுத்தினார்கள். இப்போது, அந்த நிலை இல்லை. இப்போது ஜென் ஸீ, சாட்ஜிடிபிடி காலம் நடக்கிறது. காதல் பரிமாற்றம் கூட வேகமாக நடக்கிறது. ஒரு தலை ராகத்தில் நான் மௌனமான காதலை சொன்னேன். அதனால், ஆண்களை விட, பெண்களுக்கு அந்த படம் ரொம்பவே பிடித்துபோனது, பெண்கள் திரையரங்குகளுக்கு படை எடுத்தார்கள்.

குடும்ப பாரத்தின் காரணமாக காதலை சொல்ல முடியாமல் தவித்தவர்கள், அந்த பட கதாபாத்திரத்துடன் தங்களை ஒப்பிட்டு பார்த்தார்கள். ரயில் பயணங்களில், மைதிலி என்னை காதலி ஆகிய படங்களில் ‘கிளாஸ்’ லவ்வை சொன்னேன். நெஞ்சில் ஓர் ஆலயம், ராகம் தேடும் பல்லவி இன்னொரு ரக காதல். ஜனரஞ்சகமான காதலை சொல்ல படம் உயிருள்ளவரை உஷா. நானே பலவித காதலை எடுத்து இருக்கிறேன்.

காதல் அப்படிதான் இருக்கிறது. அதை சொல்லும் விதம், காலகட்டம் மாறியிருக்கிறது.

உயிருள்ளவரை உஷா படத்தில் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன்?

‘ரயில் பயணங்களில்’ படத்தின் மூலம் ரஜினிகாந்துடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அவர் என் படத்தில் நடிக்க தயாராக இருந்தார். ஆனால், ரொம்ப பிஸியாக இருந்தார். அதனால், குறைந்த கால்ஷீட்டில் அவரை என் படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். உயிருள்ளவரை உஷா படத்தில் என் கதாபாத்திரத்தில் அவர் தான் நடிக்க இருந்தார். அவருக்காகவே அந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன். தவிர, அந்த சமயத்தில் ‘ராகம் தேடும் பல்லவி’ பட விநியோகம் காரணமாக எனக்கு பொருளாதார ரீதியாக சிக்கல். அதை சரி செய்யவும் ரஜினிகாந்தை நடிக்க வைக்க நினைத்தேன்.

அவருக்காக 4 சண்டை காட்சிகள் வைத்து கதாபாத்திரத்தை உருவாக்கினேன். அவரை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு என் கதை மட்டுமல்ல, என் பாடல், இசை அனைத்தும் பிடிக்கும். என்னை ரொம்ப பிடிக்கும். ஆனால், சில சூழ்நிலை, அவரின் முடிவு காரணமாக நடிக்க வைக்க முடியவில்லை. ஒரு பெரிய தயாரிப்பாளர் படத்தில்தான் நடிப்பேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

என் சுயநலத்துக்காக அவர் சினிமா வாழ்க்கையை கெடுக்க விரும்பவில்லை. என் பிரச்னைகள் காரணமாக, உயிருள்ள வரை உஷாவை நானே தயாரித்தேன். அவர் நடிக்கவில்லை, ரஜினிகாந்தை வைத்து தயாரிக்கும் அளவுக்கு பெரிய தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று அப்போது நினைத்தேன். நானே அதில் நடித்தேன். படம் பெரிய ஹிட். பெரிய தயாரிப்பாளர் ஆனேன்.

டி ராஜேந்தர், உயிருள்ளவரை உஷா

பட மூலாதாரம், SIMBHU CINI ARTS

பெரிய தயாரிப்பாளர் ஆன பின்னரும் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்காதது ஏன்?

ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்தின் மார்க்கெட், இமேஜ் மாறிவிட்டது. டி.ராஜேந்தர் என்ற இயக்குநர் எப்போதும் மாற மாட்டார். அவர் பாணி மாறாது. ரஜினிக்காக கதை எழுதும் சூழல் அல்லது சூழ்நிலை அமையவில்லை. அதனால் அவர் படத்தை இயக்க முடியவில்லை. அவர் நடித்த பிளட்ஸ்டோன், ராஜாதிராஜா படங்களை நான்தான் விநியோகம் செய்தேன். அதில் ராஜாதிராஜா மூலம் ரஜினிக்கு ஒரு பெரிய மார்க்கெட் உருவாக்கி கொடுத்தேன். அப்போது மீண்டும் என் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், என் மனநிலை வேறு மாதிரி இருந்தது. என் இமேஜ் மாறிவிட்டது. ரஜினியின் கமர்ஷியல் இமேஜ் மாறிவிட்டது.

நாங்கள் இணைந்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என நினைத்து ஒதுங்கிவிட்டேன். டி.ஆர் படம் மாதிரி இல்லையே என்று ரசிகர்கள் விமர்சனம் செய்வார்கள். எங்கள் நட்பு பற்றி அவர்கள் யோசிக்க மாட்டார்கள். சினிமாவில் குறை சொல்பவர்கள் அதிகம். இதேபோல் கமல், ஸ்ரீதேவியை வைத்து ஒரு படம் இயக்க கதை உருவாக்கினேன். ஸ்ரீதேவிக்காக, சரிதாவுக்காக நாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை எழுதினேன். சினிமாவில் நினைப்பது அனைத்தும் நடக்காதே. இப்போதும் ரஜினி நட்பு தொடர்கிறது. கூலி பட விழாவில் கூட என்னை பற்றி அவர் பேசினாரே?

சினிமாவில் காதலை பிரமாதமாக சொல்கிறீர்கள். உங்க நிஜ வாழ்க்கையில் நீங்க காதல் மன்னனா?

என் நிஜ வாழ்க்கை, அதிலும் சிறுவயது வாழ்க்கை சோகமானது. அப்போது ‘டிரம்’ அடிக்க ஆசைப்படுவேன். ஆனால், அதற்கான எந்த வசதியும் கிடையாது. அப்போது எண்ணெய் வைக்காத பரட்டை தலையுடன் சுற்றிக்கொண்டு இருந்தேன். வீட்டு சூழல் இப்படியிருக்கையில் காதலிக்கும் வாய்ப்பு இல்லை.

பின்னே எப்படி உஷாவை காதலித்து மணம் புரிந்தீர்கள்?

காதல் எப்போது வரும், யார் மீது வரும் என்று யாருக்கும் தெரியாது. அதுதான் காதல். என் வசனத்தை ஒரு தலை ராகம் படத்தில் பேசி நடித்தார் உஷா. ‘வசந்த அழைப்புகள்’ படத்தில் நடித்த போது நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் அழகை, ஸ்டைலை பார்க்கிறார். ‘ரயில் பயணங்களில்’ நடிப்பதாக இருந்தார். ஆனால், நடிக்க வைக்க முடியவில்லை. அந்த இடைவெளிதான் என் மீதான அவரின் அன்பை, காதலை அதிகரித்தது.

நாங்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்தோம். 45 ஆண்டுகளாக இந்த பயணம் நன்றாக செல்கிறது. அதனால்தான் திருமணத்துக்குப் பின் நான் இயக்கிய படத்துக்கு உயிருள்ளவரை உஷா என தலைப்பு வைத்தேன்.

டி ராஜேந்தர், உயிருள்ளவரை உஷா , நளினி

நீங்கள் படத்தில் நாயகியை தொட்டுக் கூட பேச மாட்டீர்கள். ஆனால், உங்கள் படங்களில் குறிப்பாக பாடல் காட்சிகளில் அவர்கள் கவர்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி காண்பிக்கிறீர்கள். இது முரணாக உள்ளதே?

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும், பாடல் காட்சியை அழகாக காண்பிக்க வேண்டும் என்று நினைப்பேன். என் கொள்கையை ரசிகர்களிடத்தில் ஏன் திணிக்க வேண்டும்? ஒரு பெண்ணின் இதயத்தை பார்த்தால் காதல், தேகத்தை பார்ப்பது காமம். கதைக்கு தேவையான கமர்ஷியல் விஷயத்தை பாடலில் சொல்கிறேன்.

டி.ஆர் படங்கள் என்றால் பிரமாண்டமான செட் இருக்கும். பாடல் காட்சிகளில் உதடு, போன், மலர் என வித்தியாசமாக இருக்குமே?

பதில்: எஸ்.எஸ்.வாசன், சாந்தாராம், எம்ஜிஆர், டி.ஆர்.சுந்தரம், ராமண்ணா ஆகியோர் இந்த செட் விஷயத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் படங்களில் செட்டுக்கு முக்கி்யத்தும் இருக்கும். நான் சிறுவயதில் செட்டுக்காக பல படம் பார்த்து இருக்கிறேன்.

என் அப்பா பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர். சிமென்ட், கம்பி, செங்கல், கட்டட கலை பின்னணியில் வளர்ந்தேன். நானும் சிறுவயதில் சிறப்பாக ஒப்பந்த பணிகளுக்கு டிசைன் வரைவேன். அந்த ரத்த பந்தமும் சினிமாவில் என்னுடன் வந்துவிட்டது. அப்படி செட் போடுவதில் ரசிகர்களுக்கும், எனக்கும் சந்தோஷம்.

உங்களின் அடையாளமாக இருக்கும் தாடியை எடுக்க நினைத்து இருக்கிறீர்களா? எப்போதுதாவது எடுத்து இருக்கிறீர்களா?

ஆம், என் அம்மா இறந்தபோது சடங்குகளுக்காக எடுத்தேன். அப்போது, ‘நீ தாடியை எடுக்கப் போறியா’ என ஊரில் கேட்டார்கள். எனக்கு உயிரை கொடுத்தவருக்காக, இதை கூடகொடுக்க மாட்டேனா என்றேன். (கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்). அந்த தாடி வளரும் வரை சென்னைக்கு வராமல் ஊரில் இருந்தேன்.

என் அம்மாவிடம் இருந்து இசை உட்பட நிறைய விஷங்களை கற்று இருக்கிறேன். நான் இந்த நிலையில் இருக்க அவரும் முக்கியமான காரணம். அவர் மைக் பிடித்து பாடியதில்லை. மைக் முன்னால் நின்றது இல்லை. ஒரு ரசிகர், நானும் என் அம்மாவும் மைக் முன்பு பாடும் ஓவியத்தை பரிசாக கொடுத்தார். அதைதான் என் அறையில் வைத்து இருக்கிறேன்.

உங்களை சினிமாவுக்கு வருகிற ஆசையை துாண்டியது யார்?

எனக்கு இசை ஞானம் இருக்கிறது. சினிமா ஆசை இருக்கிறது என என் அம்மாவுக்குதான் தெரியும். சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது சிலேட்டில் தாளம் போடுவேன். ஒருநாள் அப்படி தாளம் போட்ட போது அதில் எழுதியிருந்த எழுத்து அழிந்துவிட்டது. அதை பார்த்து வாத்தியார் அடித்தார். நான் அப்போது இன்னும் அடிங்க சார், நான் தாளம் போடுவதை நிறுத்த மாட்டேன் என்றேன். உன் தலையெழுத்து என்று திட்டினார்.

பல ஆண்டுகள் கழித்து நான் சினிமாவில் ஜெயித்த பின், நீ அன்றைக்கு சொன்னது நடந்து இருக்கிறது. உனக்கு கடவுள் அருள் இருக்கிறது என்று மனதார பாராட்டினார். இப்படி பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. ஒவ்வொரு கச்சேரிக்கு சென்று இசைக்கருவிகளை உன்னிப்பாக கவனிப்பேன். அந்த இசை உருவாவதை பார்ப்பேன்.

டி ராஜேந்தர், உயிருள்ளவரை உஷா

பட மூலாதாரம், SIMBHU CINI ARTS

அடுத்த படம்?

ஒரு பெரிய படம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்றன.க செட் போட்டேன். ஆனால், அப்படியே நிற்கிறது. இப்போது சினிமா மாறிவிட்டது. திறமைசாலியான நடிகர்கள் இல்லை. இப்போது காமெடி பண்ணுவதற்கு கூட தகுந்த நடிகர்கள் இல்லை.

தமிழ் சினிமாவில் காமெடி குறைய என்ன காரணம்?

நடிகர்களும், கதையமைப்பும், இயக்குநர்களும் காரணம். என் படங்களில் கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சந்தானம் என ஏகப்பட்ட பேர் நடித்தார்கள். அந்த காமெடி பேசப்பட்டது. வடிவேலுவை சிறிய காட்சியில் நான்தான் முதலில் நடிக்க வைத்தேன். அவர் இன்று எவ்வளவு உயரத்தில் இருக்கிறார். அவரை விட்டு மீம்ஸ் போட முடியுமா? இந்த நடிகர்கள் மற்ற படங்களை விட, என் படத்தில் குறைவான சம்பளம் வாங்கி நடித்தார்கள். அவர்கள் பணத்தை பற்றி யோசிக்கவில்லை. கலையை நேசித்தார்கள்.

என் நாவில் சரஸ்வதி இருக்கிறார் என வெண்ணிற ஆடை மூர்த்தி பாராட்டினார். காமெடிக்கு மட்டுமல்ல, இப்போது திறமைசாலியான கதாநாயகிகளுக்கு கூட பஞ்சம். நான் எத்தனை கதாநாயகிகளை உருவாக்கினேன். அவர்கள் எத்தனை படங்களில் நடித்தார்கள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்னால் உருவாக்கப்பட்டவர்கள் எப்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொண்டே இருப்பேன்.

சினிமா இசையில் ராயல்டி பெரிய பிரச்னை ஆகி வருதே?

என் பாடல்களை, இசையை எத்தனையோ பேர் பயன்படுத்தினார்கள். பல இணையதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது. அவர்களிடம் நான் பணம் வாங்கியது இல்லை. இப்போதுதான் அதை வரைமுறைப்படுத்தி இருக்கிறேன். தவறாக செல்வதை தடுத்து இருக்கிறேன்.

இந்திரலோகத்து சுந்தரி பாடலை நான் மீண்டும் பயன்படுத்திய போது, அது எங்கள் பாடல். எங்களிடம் உரிமை இருக்கிறது என பலர் என்னிடம் பஞ்சாயத்து பேசுகிறார்கள். இதென்ன விசித்திரம். என் படைப்புகளை காப்பாற்ற வேண்டும். காப்பிரரைட் போன்ற சட்டதிட்டங்கள் இல்லாவிட்டால் ‘இந்திரலோகத்து சுந்தரி’ போல தொடர்ந்து ஏற்படும்.

நீங்கள் நிறைய கேள்வி கிண்டல்களுக்கு ஆளாகிறீர்கள்? விமர்சனங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்

கல்லுாரியில் படிக்கும்போது கொட்டாங்குச்சியில் நான் இசை அமைப்பேன். அதை பார்த்து ‘டேய் கொட்டாங்குச்சி’ என என்னை கிண்டல் செய்வார்கள். அவர்களிடம் ‘சொல்றா மச்சி என்பேன். காலங்கள் மாறின. நான் சென்னைக்கு வந்து சினிமாவில் ஜெயித்தேன்.

என்னை கிண்டல் செய்தவர்கள் ஊரில் மோசமான நிலையில் இருந்தார்கள். அதிலும் சிலர் ஊருக்கு சென்றபோது என்னிடம் உதவிகள் கேட்டார்கள், நாங்கள் நன்றாக சாப்பிட வேண்டும், பணம் கொடு என்றார்கள். விமர்சனங்களை பார்த்து பயப்பட, கவலைப்படக் கூடாது. இறைவனை மட்டும் நம்பினால் போதும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தபின் மாறிவிட்டீர்கள் என்கிறார்களே?

நான் பாவத்தை என் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என நினைக்கிறேன். என் பேரப் பிள்ளைகளுக்கும் கொடுக்க மாட்டேன். அனைவருக்கும் நல்லது செய்ய நினைக்கிறேன். என்னை பார்த்து கோபப்படுபவர்களை கூட திட்டுவதில்லை. வார்த்தைகளால் காயப்படுத்தினால் பதில் சொல்வது இல்லை. நான் இப்போது கோவிலுக்கு அதிகம் செல்வதில்லை. என் உள்ளத்தில் ஒளி வடிவில் கடவுளை காண்கிறேன். என் வாழ்க்கை அமைதியாகிவிட்டது. ‘நீங்கள் அரசியல் பேசுங்கள், உங்கள் யூடியூப்பில் பேச்சு வைரல் ஆகும். வியூஸ் அதிகம் வரும்’ என்கிறார்கள்.

என் பாசிட்டிவ் ‘வைப்’ பத்துபேருக்கு கூட வந்தால் போதும், தவறாக பேச மாட்டேன். மற்றவர் மனம் புண்படும்படி பேட்டி கொடுக்க மாட்டேன் என மறுத்துவிடுகிறேன், நான் அமைதியாகி விட்டேன், மனதளவில். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கிக் கொள்வேன். அரசியல் அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. கடவுள் சித்தம் அப்படி. சிறுவயதில் நிறைய முடியுடன் இருக்கலாம். ஆனால், இந்த வயதில் இவ்வளவு முடியுடன் இருப்பதை பாக்கியமாக, புண்ணியமாக நினைக்கிறேன். இறைவன்தான் எல்லாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

தவறான, வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்காதது ஏன்?

ஒரு தலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைக்க விரும்பினார் தயாரிப்பாளர். ஆனால், நான் சிகரெட் பிடித்தபடி நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டேன். அன்றைய தேதியில் பத்தாயிரத்தில் ஆரம்பித்து ஏலம் அதிகரித்து ஒரு லட்சம்வரை சம்பளம் தருவதாக ஆசை காண்பித்தார். நான் கொள்கையில் உறுதியாக இருந்தேன். அப்போது என் சம்பளம் சில ஆயிரம் மட்டுமே. நான் லட்சியத்துக்காக வாழ்கிறேன். லட்சத்துக்காக அல்ல என்றேன். இன்றைக்கு நன்றாகத்தானே இருக்கிறேன்.

உங்கள் பேரன், பேத்திகள் எப்படி ரசிக்கிறார்கள்?

எனக்கு 2 பேரன், ஒரு பேத்தி. அவர்கள் தாத்தாவை ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். அந்த பாட்டு பாடு, இப்படி நடி என அன்பால் அரவணைக்கிறார்கள். அந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. என் மாதிரியே தலையை ஆட்டி ஆடுகிறார்கள். உன்னை மாதிரி எங்களுக்கு ஏன் முடி வளரவில்லை என கேட்கிறார்கள். கவண் பாடலை பாடி ஆடுகிறார்கள். ‘எங்க தல டீஆர்’ என பாடுகிறார்கள். அவர்கள் அன்பால் நிறைவாக இருக்கிறேன்.

சிம்பு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவாரா? அவரை லிட்டில் ஸ்டார், ஆவேன் சூப்பர்ஸ்டார் என்று நீங்களே பாடல் எழுதினீர்களே?

ரஜினிகாந்த் உயரம் வேறு. அவர் அந்த இடத்தை அடைய உழைத்த உழைப்பு அதிகம். சிம்பு அதற்காக உழைக்க வேண்டும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU