Home தேசிய national tamil மூழ்கடிக்கப்பட்ட இரான் போர்க்கப்பல் – இந்தியா என்ன செய்திருக்க முடியும்?

மூழ்கடிக்கப்பட்ட இரான் போர்க்கப்பல் – இந்தியா என்ன செய்திருக்க முடியும்?

5
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கிய இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரானிய போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் டெனா'வை  மூழ்கடிப்பது காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், US Department of Defense via Getty Images

மார்ச் 4, புதன்கிழமை அன்று அமெரிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாகத் தெரிவித்தது.

பிபிசி சிங்கள மொழிச் சேவைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது.

இதுவரை 32 மாலுமிகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 84 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கூற்றுப்படி, இந்த கப்பலின் பெயர் ‘டெனா’. இதில் சுமார் 130 மாலுமிகள் இருந்தனர். இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி இது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் செய்தி வெளியான பிறகு, சில கேள்விகள் எழுந்துள்ளன.

இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா?

இதன் பொருள் இந்தப் போர் இப்போது இந்தியாவிற்கு இன்னும் நெருக்கமாக வருகிறதா? இது தொடர்பாக இந்தியா என்ன செய்ய முடியும்? இரானியப் போர்க்கப்பலின் பாதுகாப்புக்கு இந்தியாவுக்கு எந்த வகையிலும் பொறுப்பு இருந்ததா?

இந்தியப் பெருங்கடலில் இரானின் போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ ஏவுகணை மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Reuters

தாக்குதல் பற்றி தெரிந்தது என்ன?

இரானியப் போர்க்கப்பலை மூழ்கடிக்க ‘மார்க் 48’ நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது போர்க்கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்தும் ஏவ முடியும்.

அமெரிக்கக் கடற்படையின் கூற்றுப்படி, அவர்களின் அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இந்த மார்க் 48 நீர்மூழ்கி ஏவுகணைகள் உள்ளன. அமெரிக்கக் கடற்படை கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த வகை நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இதன் புதிய பதிப்பின் எடை சுமார் 1700 கிலோ கிராம் ஆகும்.

இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது?

இந்தக் கேள்விக்கு மார்ச் 2 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமெரிக்க விமானப்படை ஜெனரல் டான் கேன் பதிலளித்திருந்தார், “முழு பிராந்தியத்திலும் உலகம் முழுவதிலும் எங்களது நடவடிக்கைகள் தொடரும்.”

இந்த வார்த்தைகள் அமெரிக்காவின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா?

பிபிசி சிங்களத்தின் செய்தியின்படி, இந்தப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடம் தெற்கு இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல்கள் (சுமார் 35 கிலோமீட்டர்) தொலைவில் இருந்ததாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

நிபுணர்களின் கூற்றுப்படி, 'இந்தச் சம்பவம் இலங்கையின் சிறப்பு பொருளாதார் மண்டலத்தில் நடந்திருந்தால், அதை சர்வதேச அளவில் எழுப்ப இலங்கைக்கு முழு உரிமை உண்டு'.

பட மூலாதாரம், Ishara S. KODIKARA/AFP via Getty Images

கடல்சார் மற்றும் சர்வதேச வர்த்தக சட்ட நிபுணரான மூத்த வழக்கறிஞர் ராகுல் நரிச்சானியா, பிபிசி ஹிந்தியிடம், “எந்தவொரு நாட்டின் கடற்கரையிலிருந்தும் 12 கடல் மைல்கள் வரையிலான பகுதி ‘பிராந்திய கடல் பகுதி’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அங்கு நடக்கும் எந்தவொரு சம்பவமும் நிலத்தில் நடந்தது போலவே கருதப்படும், மேலும் சட்ட விதிகளும் அவ்வாறே பொருந்தும்.

இதற்கு அப்பால், 200 கடல் மைல்கள் வரையிலான பகுதி ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ ஆகும். இங்கே நாட்டுக்கு எண்ணெய்-எரிவாயு, மீன்பிடித்தல் போன்றவற்றில் சில வணிக உரிமைகள் கிடைக்கும். ஆனால் இந்தப் பகுதி பிராந்திய கடல் பகுதி போன்றது அல்ல,” என்றார்.

“இப்போது, இந்தச் சம்பவம் இலங்கையின் பகுதியில் நடந்திருந்தால், அந்தப் பிரச்னையை சர்வதேச அளவில் எழுப்ப இலங்கைக்கு முழு உரிமை உண்டு. உதாரணமாக, இந்தக் கப்பல் மூழ்கியதால் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருந்தாலோ, அல்லது மற்ற கப்பல்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டாலோ, அல்லது இலங்கையின் வணிக நலன்கள் பாதிக்கப்பட்டாலோ, இலங்கை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.”

இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி ரியர் அட்மிரல் சுதீர் பிள்ளை, “அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த மோதலைத் தொடங்கியது சட்டபூர்வமானதா அல்லது அரசியல் ரீதியாகச் சரியானதா என்பது தனித்த மற்றும் விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் போர் தொடங்கிய பிறகு, திறந்த கடலில் அமெரிக்காவின் எதிரி போர் கப்பல் (இரான்) இருந்தால் அது ஒரு சட்டபூர்வமான ராணுவ இலக்காக கருதப்படும்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச கடற்படை ஆய்வு 2026-இன் போது வங்காள விரிகுடாவில் இரானியக் கப்பல் டெனா.

பட மூலாதாரம், AP

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரைபடத்தின்படியும், மார்ச் 4 அன்று ஜெனரல் டான் கேன் அளித்த தகவலின்படியும், ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.

பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே இரான் சுற்றியுள்ள பகுதிகளில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய அரபிக் கடலிலும் காணப்பட்டன.

அமெரிக்கக் கடற்படை தனது துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தவிர வளைகுடா நாடுகளையும் குறிவைத்ததிலிருந்து இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சி காணப்படுவதாக எங்களுடன் பேசிய நிபுணர்கள் கூறுகின்றனர். இலங்கை அருகே நடந்ததையும் அந்தச் சூழலிலேயே பார்க்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதையும், அமெரிக்கா தான் எடுத்த இந்த நடவடிக்கைக்காகப் வருத்தப்படும் என்று அவர் கூறியுள்ளதையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.

அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்க இந்தியா சட்டப்பூர்வமாக என்ன செய்திருக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியா என்ன செய்திருக்க முடியும்?

இரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கையுடன் இணைந்து தானும் பல உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்தியக் கடற்படை மார்ச் 5 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அட்மிரல் சுதீர் பிள்ளை கருத்தின்படி, இந்தச் சூழலில் இந்தியா அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்கச் சட்டப்பூர்வமாக எதையும் செய்திருக்க முடியாது. ஏனெனில் அப்படிச் செய்திருந்தால் இந்தியாவே இந்த மோதலில் ஒரு தரப்பாகக் கருதப்பட்டிருக்கும்.

“அந்தக் கப்பல் இந்தியப் பிராந்திய கடல் எல்லைக்குள் அல்லது இந்தியத் துறைமுகத்தில் இருந்திருந்தால், இந்தியாவின் நடுநிலைத்தன்மை காரணமாக அதற்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கும், மேலும் எந்தவொரு தரப்பும் அங்கு தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்காது.

ஆனால் கப்பல் நமது எல்லைக்குள்ளும் இல்லை, நமது துறைமுகத்திலும் இல்லை எனும்போது, கடற்படை போர் விதிகளின்படி போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் அதை ஒரு ராணுவ இலக்காகக் கருதலாம். இந்தியா அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தால், அது மோதலில் இந்தியா ஒரு பக்கம் சேருவதாகப் பார்க்கப்பட்டிருக்கும்.”

நாங்கள் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் நடந்த கடற்ப்படை பயிற்சிக்குப் பிறகு, அந்தப் போர்க்கப்பலின் பாதுகாப்பு என்பது அந்த நாடு மற்றும் அந்தக் கப்பலின் சொந்தப் பொறுப்பாகும்.

தூதரக ரீதியாக இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறது மற்றும் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU