SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
2025 ஐபிஎல்லில் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து மீண்ட சென்னை அணி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.
‘ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ’ என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரஷீத் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய தீபக் சஹர், நான்கு டாட் பந்துகளுடன் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
நிதானமாக ஆடிய துவக்க ஆட்டக்காரர்கள், மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தனர். ஆனால் நான்காவது ஓவரின் முதல் பந்திலே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஷ்வினி குமார் வீசிய பந்தில், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிர்ச்சியடைந்த சென்னை ரசிகர்களுக்கு, அடுத்து களமிறங்கிய அயூஷ் மாத்ரே வாணவேடிக்கை காட்டினார். அதே நான்காவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்து அசத்தினார் அயூஷ்.
ஐந்தாவது ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்து அதிரடியை தொடர்ந்தார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
அயூஷின் இன்றைய ஆட்டம் அசத்தலாக இருக்கப் போகிறது என சென்னை ரசிகர்கள் நம்பும் அளவுக்கு, ஏழாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரது அசத்தலான ஆட்டம் ஏழாவது ஓவரின் கடைசி பந்தில் முடிவுக்கு வந்தது.
15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அயூஷின் விக்கெட்டையும் தீபக் சஹர் வீழ்த்தினார்.
மறுபக்கம், தொடக்கம் முதலே பொறுமையாக ஆடிவந்த ஷேக் ரஷீத், எட்டாவது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, சான்ட்னரின் பந்தில் ரியான் ரிக்கல்டன் ஸ்டம்பிங் செய்ததால் ஆட்டமிழந்தார்.
இந்த சூழலில் ஷிவம் துபேவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர்.
ஒன்பதாவது ஓவரை அருமையாக வீசிய பும்ரா, பெரிய ஹிட்டர்கள் களத்தில் இருந்தபோதிலும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
பத்தாவது ஓவரிலும் பவுண்டரிகள் எதுவும் சென்னை அணிக்கு கிடைக்காத நிலையில், 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தொடங்கிய அதிரடி
11வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச வந்தார். அந்த ஓவரிலும் சென்னை அணியால் பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து பவுலர்களை மாற்றும் உத்தியுடன் விளையாடிய மும்பை, டிரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா என மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்களை தொடர்ந்து மாற்றியது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு, 14வது ஓவரில் சென்னை அணிக்கு ஒரு சிக்ஸர் கிடைத்தது.
இந்த சிக்ஸின் மூலம் அதிரடியை தொடங்கிய ஷிவம் துபே, 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார்.
16வது ஓவரில் இந்த அதிரடியில் ஜடேஜாவும் இணைய, பவுண்டரிகள் பறந்தன. அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் சென்னை அணிக்கு கிடைத்தன.
ஆனால், இந்த அதிரடி ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 17வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் ஷிவம் துபே 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து தோனி களம் இறங்க, 17 மற்றும் 18வது ஓவரில் சென்னைக்கு பவுண்டரிகள் எதுவும் கிடைக்கவில்லை.
19வது ஓவரை பும்ரா வீசினார். 4-ஆம் பந்தில் தோனி திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரின் ஜடேஜா ஸ்ரைக் எடுத்து 3-ஆம் பந்தில் ஒரு சிஸ்சர் மற்றும் அடுத்த பந்தில் ஒரு ஃபோர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.கடைசி ஒவரில் 16 ரன்கள் குவித்து சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.
சென்னை வீரர்கள்
ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
மும்பை வீரர்கள்
ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பண்ட்யா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, அஷ்வனி குமார்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU