Home தேசிய national tamil ‘மீசையை சுட்டுப் பொசுக்கி சித்ரவதை’ – ஆர். நல்லகண்ணு தண்டிக்கப்பட்ட நெல்லை சதி வழக்கின் பின்னணி...

‘மீசையை சுட்டுப் பொசுக்கி சித்ரவதை’ – ஆர். நல்லகண்ணு தண்டிக்கப்பட்ட நெல்லை சதி வழக்கின் பின்னணி என்ன?

3
0

SOURCE :- BBC NEWS

ஆர். நல்லகண்ணு, நெல்லை சதி வழக்கு, பொதுவுடமைக் கட்சி, வரலாறு

பட மூலாதாரம், HANDOUT

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா சுதந்திரமடைந்த தருணத்தில் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில், மறைந்த பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. இந்த வழக்கின் பின்னணி என்ன?

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், அப்போதைய அரசுக்கு எதிரான போராட்டங்கள், நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றில் பல வழக்குகள் ‘சதி வழக்குகள்’ என அழைக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் இதுபோல தூத்துக்குடி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, குலசேகரபட்டினம் சதி வழக்கு போன்ற வழக்குகள் உண்டு.

திருநெல்வேலி சதி வழக்கு

இதில், திருநெல்வேலி சதி வழக்கு என்ற பெயரில் பல சதி வழக்குகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவது சதி வழக்கு, வாஞ்சிநாதன் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை 1911ல் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்ற வழக்கு. இது தொடர்பான வழக்கே பெரும்பாலும் திருநெல்வேலி சதி வழக்கு என்று குறிப்பிடப்பட்டது. சிவலை இளமதி எழுதிய ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ நூலும் இந்த வழக்கையே திருநெல்வேலி சதி வழக்காக குறிப்பிடப்படுகிறது.

இதற்குப் பிறகு, 1941ல் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்ட வழக்கையும் சில நாளிதழ்கள் திருநெல்வேலி சதி வழக்கு என்று குறிப்பிட்டன.

இதற்குப் பிறகு, 1949வாக்கில் தமிழ்நாட்டில், குறிப்பாக தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கும் நெல்லை சதி வழக்கு என்றே குறிப்பிடப்பட்டது. ஆங்கிலத்தில் ‘Tirunelveli District Communist Conspiracy Case’ என்று இந்த வழக்கு குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கில்தான் தமிழ்நாட்டின் மூத்த இடதுசாரித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்து சில மாதங்களிலேயே, 1948ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பொதுவாக ‘Tirunelveli District Communist Conspiracy Case’ எனக் குறிப்பிடப்பட்டது.

“அந்தக் காலகட்டத்தில்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுவுடைமை இயக்கத்தை வளர்க்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், அதற்குள் இடதுசாரி இயக்கங்களின் மீது தடை விதிக்கப்பட்டது. இதனால், தலைவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள். தலைமறைவு என்றால், எங்காவது ஒளிந்திருப்பது அல்ல. தலைமறைவாக இருந்துகொண்டே கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். இப்படி தலைமறைவாக இருப்பவர்கள் இரவு நேரங்களில் கிராமங்களில் ஆட்களைத் திரட்டி கட்சியின் சித்தாந்தத்தைப் பரப்புவார்கள், மக்களிடம் பேசுவார்கள். அந்தத் தருணத்தில் அரசு ஊழியர்கள் பலரும்கூட வேறு பெயரில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை சிலர் காவல்துறையிடம் காட்டிக் கொடுத்தனர். அப்படிக் காட்டிக் கொடுத்தவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். அடுத்ததாக, மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு சரக்கு ரயில் கவிழ்க்கப்பட்டது. இவையெல்லாம் சேர்த்துத்தான் ஒரு வழக்காக திருநெல்வேலி சதி வழக்குத் தொடரப்பட்டது” என்கிறார் வரலாற்றாய்வாளரான ஆ. சிவசுப்பிரமணியன்.

நல்லகண்ணு கைது செய்யப்பட்டது எப்படி?

ஆர். நல்லகண்ணு, நெல்லை சதி வழக்கு, பொதுவுடமைக் கட்சி, வரலாறு

பட மூலாதாரம், NAKKHEERAN PUBLICATIONS

மத்திய, மாநில அரசுகளைக் கவிழ்க்க முயற்சி, கொலை, சேதம் ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடதுசாரிகள் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் தவிர, சிலர் மீது கொலை வழக்குகளும் போடப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் ஆர். நல்லகண்ணுவும் பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினரான கே. பாலதண்டாயுதமும் தேடப்பட்டனர். 1949ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நல்லகண்ணு கைது செய்யப்பட்டார். நாங்குநேரி தாலுகா புலியூர் குறிச்சி கிராமத்தில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து சில வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டது.

“நல்லகண்ணு மீது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் இவர் குண்டுகளைத் தயாரித்தது மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது,” என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி. மகேந்திரன் எழுதிய ‘கைதி எண் 9658’ நூல்.

“எனக்குக் கிடைத்த தகவல்படி அவரைக் கைது செய்யும்போது அவரிடம் நான்கு குண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. கைதுப்பாக்கியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்தபோது இவர் ஏன் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி இன்றுவரை என்னிடம் இருந்துகொண்டே இருக்கிறது. நல்லகண்ணுவிடம் கேட்டபோது என்னைத் தெளிவுபடுத்தும் எந்த பதிலையும் அவர் சொல்லவில்லை” என்கிறார் சி. மகேந்திரன்.

ஒருவரைப் பிடித்தால், அவரிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த நபர் கைது செய்யப்பட்டார். ஆகவே, மற்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆர். நல்லகண்ணு மிகக் கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன. தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்படுவது, மீசையை சிகரெட்டால் சுட்டுப் பொசுக்குவது போன்ற சித்ரவதைகள் அவருக்கு நடத்தப்பட்டதாக, பல தருணங்களில் நினைவுகூர்ந்திருக்கிறார் நல்லகண்ணு. பிறகு, நெல்லை சதி வழக்கில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

ஆர். நல்லகண்ணு, நெல்லை சதி வழக்கு, பொதுவுடமைக் கட்சி, வரலாறு

பட மூலாதாரம், HANDOUT

“நெல்லைச் சதி வழக்கில் ஒட்டுமொத்தமாக, 97 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் ஆர். நல்லகண்ணு, மாயாண்டி பாரதி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 1951ஆம் ஆண்டு மே மாதத்தில் வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகள் துவங்கப்பட்டபோதும், 10 பேர் பிடிபடாமல் தேடப்பட்டு வந்தனர். இதன் காரணமாக, இந்தப் பத்து பேர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. ஆகவே, 87 பேர் மீது முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த 87 பேரில் முதலில் எட்டுப் பேரை நீதிபதி விடுவித்தார். அதற்குப் பிறகு மேலும் 10 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 69 பேர் மீது வழக்கின் விசாரணைகள் துவங்கின. வழக்கில் 196 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்” என்கிறது அந்த காலகட்டத்தில் வெளியான ஆங்கில நாளிதழின் செய்திக் குறிப்பு.

பாதிக்கப்பட்டவர்களுக்காக என்.டி. வானமாமலையும் என். சண்முகமும் வழக்கறிஞர்களாக ஆஜரானார்கள்.

ஜனவரி 1949லிருந்து 1950ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், மத்திய – மாநில அரசுகளை நிலைகுலையச் செய்ய வைக்க இவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நேரடியாக நிரூபிக்க முடியாது என்றும் அப்ரூவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து மட்டுமே நிரூபிக்க முடியுமென அரசுத் தரப்பு வாதிட்டது. இந்த வழக்கில் காசி குடும்பன், பெருமாள், வேங்கடசாமி உள்ளிட்ட நான்கு பேர் அப்ரூவர் ஆனார்கள். இவர்கள் வழக்கின் விசாரணையின்போது, பிறழ்சாட்சியாக மாறியதால், அவர்கள் மீது காவல்துறை வேறு ஒரு வழக்கைத் தொடர்ந்தது என்பதையும் ஆங்கில நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?

1952வது ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை சதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஆர். நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனையும் வெடிகுண்டு வைத்திருந்ததற்காக ஆறு ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. ப. மாணிக்கம், வேலாயுதம், மாயாண்டி பாரதி, வேலுச்சாமி உள்ளிட்ட வேறு பலருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தேடப்பட்டுவந்த 10 பேரில் கே. பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், பயில்வான் அருணாச்சாலம் ஆகியோர் பிறகு கைது செய்யப்பட்டனர். இவர்களது வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டது. இது இரண்டாவது நெல்லை சதி வழக்காகக் குறிப்பிடப்பட்டது. இவர்கள் மீது அரசைக் கவிழ்க்க சதி, கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில், 1953ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

கே. பாலதண்டாயுதத்திற்கு ஆயுள் தண்டனையும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மீனாட்சிநாதனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. பயில்வான் அருணாச்சலத்துக்கு ஒரு குற்றத்துக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றொரு குற்றத்துக்கு நான்காண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், முதலாவது பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆர். நல்லகண்ணுவும் விடுவிக்கப்பட்டார். ஆனால், வெடிகுண்டு வைத்திருந்ததற்காக விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படவில்லை. ஏழாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு 1956ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி விடுதலையானார் ஆர். நல்லகண்ணு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU