Home தேசிய national tamil மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?

மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?

10
0

SOURCE :- BBC NEWS

ஊதிய ஆவணம் இல்லையென்றால் வீட்டுக் கடன் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட மூலாதாரம், Getty Images

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் அதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் தான்.

பொதுவாக, வீட்டுக் கடன் தொகை பல லட்ச ரூபாயில் இருக்கும். எனவே, வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் விண்ணப்பதாரரிடம் இருந்து பல ஆவணங்களைக் கேட்கின்றன. இதில் வீடு தொடர்பான ஆவணங்கள், விண்ணப்பதாரரின் அடையாளம், இருப்பிடம் மற்றும் வருமானம் தொடர்பான ஆவணங்கள் அடங்கும்.

வேலையில் இருப்பவர்கள் அல்லது வழக்கமான சம்பளம் பெறுபவர்களிடம் கடந்த 3 அல்லது 6 மாதங்களுக்கான ஊதிய ஆவணங்கள்(Salary slip) கேட்கப்படுகின்றன.

இருப்பினும், சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் ஊதிய ஆவணம் (Salary Slip) கிடைப்பதில்லை.

அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஊதிய ஆவணம் இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?

ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்களுக்கான வீட்டுக் கடன்

நீங்கள் ஒரு பணியாளராகவோ அல்லது மாதச் சம்பளம் பெறுபவராகவோ இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மாதமும் உங்களுக்குச் ஊதிய ஆவணம் கிடைக்காவிட்டாலும், உங்களால் வீட்டுக் கடன் பெற முடியும்.

வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் பிற ஆவணங்களின் அடிப்படையில் வீட்டுக் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடும்.

நிமேஷ் ரத்தோர் ஒரு தனியார் வங்கியில் கடன் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

ஊதிய ஆவணம் இல்லாத பட்சத்தில், வருமானத்திற்கான மாற்று ஆதாரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கூறினார். இதில் வங்கி கணக்கு அறிக்கைகள் (bank statements), வருமான வரித் தாக்கல் மற்றும் வணிக நிதிப் பதிவுகள் ஆகியவை அடங்கும். இந்த ஆவணங்களின் அடிப்படையில், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை நிரூபிக்க முடியும்.

வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் அதிகப்படியான ‘சிபில் ஸ்கோர்’ மீது அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.

உங்கள் சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், வீட்டுக் கடன் பெறுவது எளிதாகிறது. கூடுதலாக, நீங்கள் சுயதொழில் செய்பவராகவோ அல்லது முறைசாரா துறையில் பணிபுரிபவராகவோ இருந்தால், வீட்டுக் கடனுக்காக ஒரு இணை விண்ணப்பதாரரின் (co-applicant) பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊதிய ஆவணம் இல்லையென்றால் வீட்டுக் கடன் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட மூலாதாரம், Getty Images

என்னென்ன ஆவணங்கள் தேவை?

வீட்டுக் கடன் வாங்கும்போது ஊதிய ஆவணம் தவிர மற்ற ஆவணங்களும் முக்கியமானவை. உதாரணமாக,

வங்கி கணக்கு அறிக்கை:

இது 6 முதல் 12 மாதங்களுக்கான உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பைக் காட்டுகிறது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின் விவரங்கள் கோரப்படுகின்றன.

வருமான வரித் தாக்கல் மற்றும் பிற ஆவணங்கள்:

இதில் கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரித் தாக்கல், ஜிஎஸ்டி பதிவு மற்றும் வணிக உரிம ஆவணங்கள் அடங்கும்.

இணை விண்ணப்பதாரர்:

குடும்ப உறுப்பினர் அல்லது மனைவியை நீங்கள் ஒரு விண்ணப்பதாரராகச் சேர்க்கலாம். அந்த நபரும் தனது வருமானத்திற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இது உங்கள் வருமானத்தை அதிகப்படுத்திக் காட்டுவதுடன், உங்கள் வீட்டுக் கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

பிற சொத்துகள்:

உங்கள் நிதி நிலை எவ்வளவு வலுவாக உள்ளது என்பதைக் காட்ட, நிலையான வைப்புத்தொகை, எல்ஐசி பாலிசிகள் அல்லது பிற சொத்துகளைப் பிணையாகவோ அல்லது பாதுகாப்பாகவோ நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

கூடுதலாக, பின்வரும் ஆவணங்கள் மற்றும் தகவல்களும் கோரப்படுகின்றன:

  • விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல்.
  • வணிகத்திற்கான ஆதாரமாக எம்எஸ்எம்இ தொழில் சான்றிதழ்
  • வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி பயனர் அடையாள எண் மற்றும் கடவுச்சொல்
  • ஏற்கனவே கடன் ஏதேனும் இருந்தால், அந்தக் கடனின் கணக்கு அறிக்கை அல்லது விவர அறிக்கை

முறைசாரா துறையில் பணிபுரிபவர்கள் அல்லது மாத வருமானம் நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் இருப்பவர்களுக்குச் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிறப்பு கடன் திட்டங்களை வழங்குகின்றன.

உங்கள் சிபில் ஸ்கோர் 725 அல்லது 750-க்கு மேல் இருந்தால், கடன் பெறுவது எளிது. சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஊதிய ஆவணம் இல்லையென்றால் வீட்டுக் கடன் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட மூலாதாரம், Getty Images

மாத வருமானத்திற்கான ஆதாரம் இல்லாத போது

ஊதிய ஆவணம் இல்லாத பட்சத்தில், வருமான வரித் தாக்கல் ஆவணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வங்கியின் வீட்டுக் கடன் அதிகாரி பிரதீப் சர்மா கூறுகையில், “ஊதிய ஆவணம் இல்லாத விண்ணப்பதாரர்களிடம் 3 ஆண்டுகளுக்கான வருமான வரித் தாக்கல் ஆவணங்கள் கேட்கப்படும். ஒருவேளை வருமான வரித் தாக்கல் ஆவணம் இல்லை என்றால், வங்கி கணக்கு அறிக்கைகளின் அடிப்படையில் கடன் வழங்கப்படலாம். ஆனால், இத்தகைய சூழல்களில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கணிசமாக அதிகரிக்கும்,” என்றார்

“கூடுதலாக, நீங்கள் ஏற்கனவே கடன் பெற்று அதன் தவணைகளைத் தவறாமல் செலுத்தியிருந்தால், உங்கள் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் பெறலாம். ஆனால், நீங்கள் இதற்கு முன்பு கடன் எதையும் பெறவில்லை என்றால், உங்கள் சிபில் ஸ்கோர் மைனஸ் ஒன் (-1) எனக் கருதப்படும்.”

வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதில் வங்கிகளிடையே பெரும்பாலும் போட்டி நிலவுகிறது. எனவே, சில வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் வருமான ஆதாரம் இல்லாமலேயே கடன் வழங்க முன்வருகின்றன.

உதாரணமாக, பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், குறிப்பிட்ட சில திட்டங்களின் கீழ் வருமான ஆதாரம் இல்லாமலேயே வீட்டுக் கடன்களைப் பெறலாம் என்று கூறியுள்ளது.

இந்தத் திட்டம் முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கானது. சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இத்தகைய சூழல்களில் ஒரு இணை விண்ணப்பதாரர் தேவை. அந்த இணை விண்ணப்பதாரரின் வருமான ஆதாரம் அவசியமாகும்.

இத்தகைய சூழ்நிலைகளில், அனுமதிக்கப்படும் கடன் தொகை பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். பொதுவாக, மாத வருமானம் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

ஊதிய ஆவணம் இல்லையென்றால் வீட்டுக் கடன் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட மூலாதாரம், Getty Images

“ஒரு நபர் ஃப்ரீலான்ஸராக (freelancer) பணிபுரிந்து, அவரது வருமானம் ஒவ்வொரு மாதமும் மாறினாலும், ஊதிய ஆவணம் இல்லாமலேயே அவர் வீட்டுக் கடன் பெற முடியும்” என்று நிமேஷ் ரத்தோர் கூறினார்.

“வங்கி அறிக்கைகள் மற்றும் வருமான வரி கணக்குத் தாக்கல் ஆவணங்களுடன், சில மாதங்கள் செய்த பணிக்காக பெற்ற வருவாய் விவரமும் அத்தகைய நபர்களிடம் கோரப்படுகின்றன. அந்த நபருக்கு எவ்வளவு வருமானம் உள்ளது அல்லது அவர்கள் தங்கள் வணிகத்திலிருந்து எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதையும், அந்த நபரால் வீட்டுக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த முடியுமா இல்லையா என்பதையும் தீர்மானிக்க இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.”

விவசாயிகள் மற்றும் என்ஆர்ஐ-களுக்கான வீட்டுக் கடன்கள்

பிரதீப் சர்மா கூறுகையில், “சில வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. அவை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஊதிய ஆவணம் இல்லாமலேயே வீட்டுக் கடன்களை வழங்குகின்றன” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “வணிகத்தின் வருமான வரித் தாக்கல் ஆவணங்களுடன், முந்தைய ஆண்டின் லாப நஷ்டக் கணக்கு மற்றும் இருப்பு குறித்த அறிக்கை (balance sheet) சமர்ப்பிப்பது அவசியம். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களிடம் வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றின் ரசீதுகள் கேட்கப்படுகின்றன” என்றார்.

“ஓய்வூதியம் பெறுபவர்கள் 3 அல்லது 6 மாத கால வங்கி அறிக்கை மற்றும் ஓய்வூதிய ஆவணம் (Pension slip) அடிப்படையில் வீட்டுக் கடன் பெறலாம். அதேசமயம், வெளிநாட்டில் பணிபுரியும் என்ஆர்ஐ-கள், வங்கி அறிக்கை அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன் பெற முடியும்.”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

“விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள், பயிர் உற்பத்தி, விளைபொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் போன்றவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலமும் வீட்டுக் கடன் பெறலாம். நிச்சயமாக, இதில் வங்கி அறிக்கைகளே மிக முக்கியமானவை,” என்று அவர் கூறுகிறார்.

சில வங்கிகள் குறிப்பிட்ட ஆவணங்கள் விஷயத்தில் தளர்வுகளை அளிக்கலாம். அதாவது ஆவணங்கள் இல்லாவிட்டாலும் விண்ணப்பத்தைச் செயல்படுத்தி, பழைய பதிவுகளின் அடிப்படையிலேயே கடனை அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கியுடன் வாடிக்கையாளர் நீண்டகால வங்கி உறவைக் கொண்டிருக்க வேண்டும்.

கூடுதலாக, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நிலுவைக் கடன்கள் இருந்தால், அந்தத் தவணைகளை முதலில் திருப்பிச் செலுத்துமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU