Home தேசிய national tamil மலேசியா வாசுதேவன் பாடிய ‘மயங்க வைக்கும்’ 10 பாடல்கள்

மலேசியா வாசுதேவன் பாடிய ‘மயங்க வைக்கும்’ 10 பாடல்கள்

6
0

SOURCE :- BBC NEWS

மலேசியா வாசுதேவன் பாடிய மயக்க வைக்கும் 10 பாடல்கள்

பட மூலாதாரம், prashanthini_vasudevan/IG

கேரளாவை பூர்வீமாகக் கொண்ட மலேசியா வாசுதேவனின் பெற்றோர் வேலைக்காக மலேசியா சென்றார்கள். அங்குள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ராஜகிரி எஸ்டேட்டில் ஜூன் 15, 1944 அன்று எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் சாத்து ஆறுமுகம் நாயர். இந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் மலேசியா வாசுதேவன் என்ற பெயரில் கொடிகட்டிப் பறந்தது.

மலேசியா தமிழ் பள்ளியில் படித்து, தமிழர்களுடன் நெருக்கமாக இருந்த மலேசியா வாசுதேவன் ஆரம்பத்தில் அங்குள்ள நாடகக் குழுவொன்றில் நடிகராகவும் பாடகராகவும் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

தான் நடித்த “ரத்தப் பேய்” எனும் நாடகத்தைப் படமாக எடுக்க விரும்பிய நாடகக் குழுவினரோடு சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் “ரத்தப் பேய்” உருவானது. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அவரின் உதவியாளராக அப்போது பணியாற்றியவர் இளையராஜா. அன்று முதல் இளையராஜா, மலேசியா வாசுதேவன் நட்பு உருவானது.

மலேசியா வாசுதேவன் என்ற பெயர் வந்தது எப்படி?

ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டு மதராஸ்” எனும் படத்தில் வரும் “பாலு விக்கிற பத்தும்மா… உன் பாலு ரொம்ப சுத்தம்மா…” என்ற நகைச்சுவைப் பாடலை மலேசியா வாசுதேவன் முதலில் பாடினர். அந்தப் பாடலுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

பின்னர் வாசுதேவன் இளையராஜாவின் “பாவலர் சகோதரர்கள்” குழுவில் இணைந்து வாசுதேவன் என்ற பெயரில் கச்சேரிகளில் பாடினார். ஒரு நாடகத்தில் அவரது குரலைக் கேட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் “பாரத விலாஸ்” படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பிரபலமான பாடலில் வரும் “சுனோ சுனோ பாய்… சுனோ சுனோ மே பஞ்சாப் வாலா கீத்து சுனோ…” என்ற வரிகளைப் பாட வைத்தார். பின்னர், அவர் இசையில் “தலைப் பிரசவம்” படத்தில் ஒரு பாடலை அவர் பாடினார்.

குன்னக்குடி வைத்தியநாதன் தான் இசையமைத்த “குமாஸ்தாவின் மகள்” படத்தில் “காலம் செய்யும் விளையாட்டு… அது கண்ணாமூச்சி விளையாட்டு…” என்ற பாடலைப் பாட வாசுதேவனுக்கு வாய்ப்பளித்தார். அப்போது அவர் பெயர் “மலேசியா வாசுதேவன்” ஆனது. அந்த படத்தின் இயக்குனரான ஏ.பி.நாகராஜன்தான் இந்தப் பெயரைச் சூட்டினார்.

அந்த நேரத்தில் இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் சினிமாவில் இசைமைப்பாளர் ஆனார். அடுத்து தனது நண்பரான மலேசியா வாசுதேவனுக்கு “16 வயதினிலே” படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலைக் கொடுத்தார்.

அந்தப் பாடலின் வெற்றி காரணமாக 30 ஆண்டுகளுக்கு மேலாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி உச்சத்தை அடைந்தார் மலேசியா வாசுதேவன். தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடியிருக்கிறார். பாடகராக மட்டுமல்ல, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என்று பன்முகங்களில் ஜொலித்த மலேசியா வாசுதேவன் பிப்ரவரி 20ஆம் தேதி 2011ஆம் ஆண்டு காலமானார்.

அவரது நினைவு நாளை முன்னிட்டு, மலேசியா வாசுதேவனின் மகளும் பாடகியுமான பிரஷாந்தினி மற்றும் மகனும் பாடகருமான யுகேந்திரன் ஆகியோரிடம், காலம் கடந்து நிலைத்திருக்கும் அவர்களது தந்தையின் பத்து பாடல்கள் குறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பேசியது. அவர்கள் அளித்த பாடல்களின் பட்டியல் இனி…

மலேசியா வாசுதேவன் பாடிய மயக்க வைக்கும் 10 பாடல்கள்

பட மூலாதாரம், prashanthini_vasudevan/IG

1. வெட்டி வேரு வாசம் – முதல் மரியாதை

“பொதுவாக, முதல் மரியாதை படத்தில் இடம் பெற்ற ‘பூங்காற்று திரும்புமா’ பாடலைப் பிடிக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ‘வெட்டிவேரு வாசம்’ ரொம்ப பிடிக்கும். இந்தப் பாடலில் அப்பாவின் வரிகளில் ஒரு கிராமத்து வாசம் தாலாட்டும். ஓர் அழகிய கிராமத்திற்குள் சென்று வந்த உணர்வை இந்தப் பாடல் கொடுக்கும். என் அனுமதி இல்லாமல் பல நேரங்களில் என் மனதிற்குள் நுழைந்து அந்தக் குரல் மாயம் செய்யும்” என்று தெரிவித்தார் பிரஷாந்தினி.

2. ஒரு தங்க ரதத்தில் – தர்மயுத்தம்

தர்ம யுத்தம் படத்தில் வரும் ஒரு தங்க ரதத்தில் என்ற பாடல் குறித்து பிரஷாந்தினி விவரித்தார்.

அதோடு, “அண்ணன், தங்கை பாசம் என்றால் இந்தப் பாடல் கண்டிப்பாக நினைவுக்கு வரும். இந்தப் பாடலைக் கேட்கும் அண்ணன், தங்கைகள் அழுவது நிச்சயம். நிஜ வாழ்க்கையில் தனது அக்காவுடன் ரொம்பவே பாசமாக இருந்தார் அப்பா.

அதனால், இந்தப் பாடலில் அக்கா மீதான அன்பையும், பாசத்தையும் குழைத்துப் பாடியிருப்பார். அதுவே பாடலின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன். அதிலும் ‘தங்கையல்ல, தாயானவள் கோடி பாடல் பொருள் ஆனாள்’ என்ற கண்ணதாசனின் வார்த்தையை கேட்கும்போது நானே பலமுறை உடைந்து அழுது இருக்கிறேன்” என்றும் பிரஷாந்தினி கூறினார்.

மலேசியா வாசுதேவன் மகள் பிரசாந்தினி

பட மூலாதாரம், prashanthini_vasudevan/IG

3. தானந்தன கும்மி கொட்டி – அதிசய பிறவி

மேலும், “சாரசங்கி என்ற ராகத்தில் அமைந்த பாடல் இது” என்று அதிசய பிறவி படத்தில் வரக்கூடிய தானந்தன கும்மி கொட்டி என்ற பாடல் குறித்துப் பேசினார்.

“இளையராஜா இசையும், அப்பாவின் குரலும் அழகாக ஒன்றியிருக்கும். கச்சிதமான மெலோடி என்பார்கள். அந்த வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று.”

4. மாமாவுக்கு குடும்மா, குடும்மா – புன்னகை மன்னன்

மேற்கொண்டு பேசிய பிரஷாந்தினி, “நாம் எந்த கதாபாத்திரத்திற்குப் பாடுகிறோம். அதன் பின்னணி என்ன? அந்த பாத்திரத்தின் குணங்கள், நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அப்பா பாடிய அழகான பாடல்களில் இதுவும் ஒன்று” என்று புன்னகை மன்னன் படத்தில் வரும் மாமாவுக்கு குடும்மா, குடும்மா என்ற பாடலைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“இப்போது பார்த்தாலும் அந்தப் பாடலில் கமல்ஹாசன் நடிப்பு, நடனத்திற்கு அப்பாவின் குரல் அவ்வளவு நேர்த்தியாகப் பொருந்தியிருப்பது தெரியும்.” என்கிறார்.

மலேசியா வாசுதேவன் பாடிய மயக்க வைக்கும் 10 பாடல்கள்

பட மூலாதாரம், devanekambarammusic/IG

5. காதல் வந்திருச்சு, ஆசையில் ஓடிவந்தேன் – கல்யாணராமன்

இவை மட்டுமின்றி, “அப்பா பாடிய பாடல்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. அதன் சூழ்நிலை அப்படி. இந்தப் பாடலும் அந்த கதாபாத்திரத்தை மனதில் நிற்கும்படி ரசித்துப் பாடியிருப்பார். பாடலில் ஒருவித காமெடி டோன் இருக்கும். கமல்ஹாசனின் அந்த கெட்-அப்பை பார்த்தால், இந்தப் பாடலைக் கேட்டால் சிரிப்பும் வரும்” என்று கூறினார் பிரஷாந்தினி.

6. ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக – படிக்காதவன்

“சில பாடல்களில் எமோஷன் பொங்கி வழியும்” என்கிறார் பிரஷாந்தினி. “பொதுவாக, நடிகர் திலகம் சிவாஜிக்கு டி.எம்.எஸ் குரல்தான் பக்காவாக செட்டாகும். எத்தனையோ படங்களில், எத்தனையோ காலம் நாம் பார்த்து ரசித்த கூட்டணி அது. ஆனால், இந்தப் பாடலில் அப்பாவின் கொஞ்சும் மென்மையான குரல் பக்காவாக பொருந்தியிருக்கும்.

இன்றைக்கும் எத்தனையோ கச்சேரிகளில் ஒலிக்கும் பாசத்தைப் பொழியும் பாடல் இது. என்னென்ன தேவைகள், அண்ணனை கேளுங்கள் என்ற வரிகளை அண்ணன், தம்பி பாசத்தின் உச்சமாகக் கருதுவார்கள்,” என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

7. ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே – மனிதன்

மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகர் மற்றும் பாடகருமான யுகேந்திரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “அப்பாவின் பாடல்களை சில வகைகளில் பிரித்துப் பார்க்கிறேன். முதலாவதாக அவர் டி.எம்.எஸ்-க்கு அடுத்தபடியாக உச்சஸ்தாயியில் பாடுவதில் வல்லவர். அப்படி அவர் பாடியதில், மனிதன் படத்தில் வரும், ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே, மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ஆகிய பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன” என்று தெரிவித்தார்.

8. ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே – மணிப்பூர் மாமியார்

அதேபோல அவர் குரலை மாற்றிப் பாடுவதிலும் திறமை வாய்ந்தவர் என்கிறார் யுகேந்திரன்.

“மணிப்பூர் மாமியார் படத்திற்காக, பாடகர் ஜெயராமன் குரலில் அப்பா பாடினார். இன்று போய் நாளை வா படத்திற்காக மதனமோக ரூப சுந்தரி என்ற பாடலையும் தனது ஸ்டைலில் இருந்து மாற்றிப் பாடினார்,” என்று தெரிவித்தார்.

மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன்

பட மூலாதாரம், Yugendran_Vasudevan/IG

9. தூக்கு சட்டியை தூக்கிப் பார்த்து மோப்பம் பிடிடா – எஜமான்

காமெடியாக பாடுவதில் அவருக்கு நிகர் அவரே என்கிறார் யுகேந்திரன்.

“குறிப்பாக, எஜமான் படத்தில் வரும் துாக்குசட்டியை ‘துாக்கி பார்த்து மோப்பம் பிடிடா’ என்ற பாடலில் ரஜினியின் குரலுக்கும் அவர்தான் பாடினார், கவுண்டமணி கதாபாத்திரத்திற்கும் அவர்தான் பாடினார் என்பது பலரும் அறியாத உண்மை” என்று விவரித்தார்.

10. பூங்காற்று திரும்புமா – முதல் மரியாதை

இவற்றைப் போலவே, காதல் பாடல்களில் எம்.ஜானகியுடன் இணைந்து மலேசியா வாசுதேவன் பாடிய பல பாடல்கள் தனக்குப் பிடிக்கும் என்கிறார் அவரது மகன் யுகேந்திரன்.

“அந்தக் கூட்டணி நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது. அதில் குறிப்பாக, முதல் மரியாதை படத்தில் வரும் ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடல் இன்றும் பலராலும் ரசித்து கேட்கப்படுகிறது.” என்கிறார் யுகேந்திரன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU