SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ஆ.நந்தகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
20 ஏப்ரல் 2025, 13:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்
சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில் ‘கழக முதன்மை செயலாளர்’ என துரை வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ நேற்று அறிவித்திருந்த நிலையில், அவரது பதவி விலகலை மதிமுக தலைமை இன்று ஏற்க மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீர்மான அறிக்கை இருந்தது.
‘நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் ‘ஒருவர்’ மத்தியில் பணியாற்றிட இயலாது’ என தனது ராஜினாமா அறிக்கையில் பெயரை குறிப்பிட விரும்பாமல் குற்றஞ்சாட்டியிருந்தார் துரை வைகோ.
அந்த ‘ஒருவர்’ மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என்பது இன்று வைகோ மேடையில் பேசியதன் மூலம் உறுதியானது. இன்று நடந்த கூட்டத்தில் அதே மல்லை சத்யா உடன் மேடையை பகிர்ந்துகொண்டார் துரை வைகோ.
துரை வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக மெளனம் காத்துவந்த மல்லை சத்யா, இன்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
சமூக ஊடக பதிவுகள் மற்றும் திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக திர்மானம் போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் குறித்து பல அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் நேற்று (ஏப்ரல் 19) வைகோவிடம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் எந்த பக்கமும் சாயாததுபோல இருந்தது வைகோவின் பதில்கள். ஒரு கட்டத்தில் கட்சியில் பிரச்னையே இல்லை என்ற தொனியில் அவரது பதில்கள் இருந்தன.
ஆனால், ”மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை” என இன்று காலை கூட துரை வைகோ கூறியதன் மூலம் இந்த விவகாரம் இன்னும் புகைந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற தோற்றத்தை கொடுத்தது.
‘இணைந்த கைகள்’

பட மூலாதாரம், ANI
இதற்கிடையே திடீர் திருப்பமாக,”துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டுப் பேசி கட்டித் தழுவினர். இணைந்து பணியற்றுவோம் என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளனர்” என இன்றைய நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.
”துரை வைகோவும், மல்லை சத்யாவும் இன்று மனம் விட்டுப் பேசினார்கள். தங்கள் உணர்ச்சிகளையும் ஆவேசத்தின் வடியிலாக வந்த வார்த்தைகளையும் இருவரும் நாகரிகமாக கையாண்டனர்,” எனவும் வைகோ கூறினார்.
அடுத்து பேசிய துரை வைகோ, மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக கூறினார். பின்னர் பேசிய மல்லை சத்யாவும் இதே பாணியிலான கருத்தை கூறி இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.
குறிப்பாக, மல்லை சத்யா வருத்தம் கோரினார் என செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறினாரே தவிர, வைகோ அப்படி கூறவில்லை. மல்லை சத்யா, துரை வைகோவுக்கு உறுதிமொழி கொடுத்தார் என்ற பதத்தையே அவர் பயன்படுத்தினார்.
இந்தநிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மல்லை சத்யா,”சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டேன். இதனை ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என அறிவித்துள்ளார்” என கூறியுள்ளார்

பட மூலாதாரம், MDMK
மதிமுகவில் நடக்கும் இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்: ”மதிமுகவிற்கு ஏற்கனவே அடிப்படை கட்டமைப்பு பல மாவட்டங்களில் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் இதுபோன்ற குழப்பம் கட்சியை மேலும் சுணக்கம் அடையவைக்கும்” என்கிறார்.
இன்று காலை தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிய துரை வைகோ, கூட்டம் முடிந்த பிறகு பதவி விலகலை பின்வாங்குவதாக கூறுவது அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை கட்டுவதாக கூறுகிறார்.
”கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் துரை வைகோ என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று. உயர் பதவிக்கு வர விரும்புபவர் கட்சியின் பிரச்னை என்றால் அதை தற்போதைய பொதுச்செயலாளர் வைகோவிடம் சொல்லி தீர்த்திருக்க வேண்டும். ஆனால், பொதுவெளியில் ராஜினாமாவை அறிவிப்பது பதவிக்கு அழகல்ல, என்கிறார் பிரியன்.
வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரது மகன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
” கிட்டதட்ட அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது. அதனால், இரண்டு மூன்று தசாப்தமாக கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அதுதான் தற்போது மதிமுகவிலும் வந்துள்ளது” என்கிறார் பிரியன்.
இந்த மோதலுக்கு மத்தியில், வைகோ மல்லை சத்யாவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மல்லை சத்யா அமைதி காத்து தனது அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU