Home தேசிய national tamil ப்ளே ஆஃப் சுற்றில் நுழையப்போவது யார்? 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி

ப்ளே ஆஃப் சுற்றில் நுழையப்போவது யார்? 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி

7
0

SOURCE :- BBC NEWS

ப்ளே ஆஃப்  4 அணிகள் யார்? 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மே 2025, 16:13 GMT

    புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்

2025 சீசன் ஐபிஎல் தொடரில் 50-வது லீக் ஆட்டம் நேற்றுடன் முடிந்தது. அனைத்து அணிகளும் ஏறக்குறைய 9 முதல் 10 ஆட்டங்களில் விளையாடிவிட்டன. இன்னும் ஒவ்வொரு அணியும் 3 அல்லது 5 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியுள்ளதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் நிலவரம் தெரியத் தொடங்கியுள்ளது.

10 அணிகளில் ஏற்கெனவே சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் 8 அணிகள் மட்டுமே ரேஸில் உள்ளன.

இதில் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது கம்பி மேல் நடக்கும்கதைதான். சிறிய சறுக்கல் அல்லது தோல்வி ஏற்பட்டாலும் ப்ளே ஆஃப் வாய்ப்பு காணாமல் போய்விடும். ஆதலால், உண்மையான போட்டி என்பது டாப்-6 இடங்களில் இருக்கும் அணிகளிடையேதான்.

டாப்-6 இடங்களில் மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், குஜராத், டெல்லி கேபில்ஸ், லக்னெள ஆகிய அணிகள் உள்ளன.

ப்ளே ஆஃப்  4 அணிகள் யார்? 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி

பட மூலாதாரம், Getty Images

மும்பை இந்தியன்ஸ்

(ஆட்டங்கள்-11, புள்ளிகள்-14, நிகர ரன்ரேட்(1.124), மீதமுள்ள போட்டிகள்: குஜராத், பஞ்சாப், டெல்லி )

மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள், 1.124 என வலுவான நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறது.

மும்பை அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வென்றுள்ளது. தொடரின் தொடக்கத்தில் 9-வது இடத்தில் இருந்த மும்பை, தற்போது முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் மும்பை அணிக்கு 3 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் 2(குஜராத், பஞ்சாப்) போட்டிகள் மும்பையில் நடப்பது அந்த அணிக்கு சாதகம், டெல்லி அணியுடனான ஆட்டம் மட்டும் டெல்லியில் சென்று மும்பை விளையாடுகிறது.

மும்பை அணி அடுத்த 3 போட்டிகளிலும் வென்றால் 20 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பிடிக்கும், ஏனென்றால் தற்போது மும்பை அணிதான் 1.124 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பதுதான் காரணம்.

ஒருவேளை மும்பை அணி ஒரு போட்டியில் தோற்றால்கூட மீதமுள்ள இரு ஆட்டங்களில் வென்றாலே வலுவான நிகர ரன்ரேட்டில் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும்.

இதுவரை சொந்த மைதானத்தில் 5 போட்டிகளில் ஆடி 4 ஆட்டங்களில் மும்பை வென்றுள்ளதால், அடுத்துவரக்கூடிய சொந்த மைதானத்தில் நடக்கும் 2 ஆட்டங்களும் மும்பைக்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

(ஆட்டங்கள்-10, புள்ளிகள்-14, நிகர ரன்ரேட்(0.521), மீதமுள்ள போட்டிகள்: சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னெள, கொல்கத்தா )

ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை அணியும் தலா 14 புள்ளிகள் பெற்றிருந்தபோதிலும், நிகர ரன்ரேட்டில் மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேமயம், மும்பை 11 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் ஆர்சிபி 10 போட்டிகளில் மட்டுமே ஆடியிருப்பது அந்த அணிக்கு சாதகம்.

ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் பெங்களூருவில் உள்ள சொந்த மைதானத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகளுடனும், லக்னெளவுடனும் ஆர்சிபி மோதுகிறது.

இதில் சிஎஸ்கே அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், அந்த அணிக்கு கிடைக்கும் வெற்றி பயன் அளிக்காது. அதேசமயம், கடந்த சீசனில் சிஎஸ்கேவை பழிவாங்கியதுபோல் இந்த சீசனில் ஆர்சிபியை பழிதீர்க்க சிஎஸ்கே முயலலாம், ஆதலால், சிஎஸ்கே உடனான போட்டியை ஆர்சிபி எளிதாக எடுக்கக்கூடாது.

ஆர்சிபி அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 2 அல்லது 3 போட்டிகளில் வலுவான நிகர ரன்ரேட்டுடன் வென்றுவிட்டாலே ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றில் 20 அல்லது 18 புள்ளிகளுடன் இடம் பெற முடியும்.

சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகளை ஆர்சிபி வென்றுவிட்டாலே 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும், சொந்த மைதானத்தில் நடக்கும் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 2 வென்றால் போதுமானது.

இதுவரை வெளி நகரங்களில் ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் ஆர்சிபி வென்றிருப்பதால், ஜெய்பூரில் ராஜஸ்தானுடன் நடக்கும் ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் 20 புள்ளிகளை எளிதாகப் பெற்று ப்ளே ஆஃப் செல்லலாம், ஒருவேளை 4 ஆட்டங்களிலும் ஆர்சிபி வெல்லும் பட்சத்தில் 22 புள்ளிகளுடன் மும்பையை முந்தி, ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தையும் பிடிக்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாப் கிங்ஸ்

(ஆட்டங்கள்: 10, புள்ளிகள்: 13, நிகர ரன்ரேட்: 0.199, மீதமுள்ள ஆட்டங்கள்: லக்னெள, டெல்லி, மும்பை, ராஜஸ்தான்)

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடி வருகிறது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது, மற்ற 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டி மழையால் நடக்கவில்லை.

தற்போது 13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி மீதமுள்ள 4 போட்டிகளிலும் வென்றால் 21 புள்ளிகள்வரை பெற முடியும் அல்லது குறைந்தபட்சம் 4 ஆட்டங்களில் 3ல் வென்றால் 19 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றில் 2வது அல்லது 3வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

இதில் பஞ்சாப் அணிக்கு அடுத்துவரக்கூடிய 3 ஆட்டங்களுமே சொந்த மைதானத்தில் நடப்பது கூடுதல் சாதகம். ஆனால் 3 அணிகளுமே டாப்-4 இடத்துக்காக போட்டியிடுபவை என்பதால் சவாலாக இருக்கும். மும்பை, லக்னெள, டெல்லி அணிகளுடனான ஆட்டத்தில் வெல்வது உண்மையில் பஞ்சாப்புக்கு சவாலாகத்தான் இருக்கும்.

இதில் ராஜஸ்தானுடன் கடைசி ஆட்டம், லக்னெளவுடனான ஆட்டத்தில்கூட பஞ்சாப் வெல்ல முடியும், ஆனால், டெல்லி, மும்பையை வீழ்த்த சிறிது சிரமப்பட வேண்டும். 17 புள்ளிகள்வரை பஞ்சாப் அணி எளிதாகப்பெறலாம், 3வது ஒரு வெற்றி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். ஒருவேளை 15 புள்ளிகள் பெற்றால்கூட ப்ளே செல்லலாம் என்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

ஆனால் 17 புள்ளிகளுடன் பஞ்சாப் முடித்தால், ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கலாம். ஆகவே பஞ்சாப் அணிக்கு குறைந்தபட்சம் இரு வெற்றிகள், அல்லது 3 வெற்றிகள் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும்.

குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் டைட்டன்ஸ்

(ஆட்டங்கள் -9, புள்ளிகள்-12, நிகர ரன்ரேட் 0.748, மீதமுள்ள ஆட்டங்கள்: சன்ரைசர்ஸ், மும்பை, டெல்லி, லக்னெள, சிஎஸ்கே)

குஜராத் அணி இந்த சீசனில் சிறப்பாக ஆடி வருகிறது, இதுவரை 12 புள்ளிகளுடன் இருக்கிறது, 5 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதிகபட்சமாக 22 புள்ளிகள்வரைகூட குஜராத் அணியால் பெற்று முதலிடத்தைப் பிடிக்கலாம்.

ஆனால், ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய குறைந்தபட்சம் 3 வெற்றிகள் குஜராத் அணிக்கு அவசியம். குஜராத் அணி நிகர ரன்ரேட்டில் 0.748 என மும்பைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

இதில் ஃபார்மில் இல்லாத சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் குஜராத் வென்றாலே ப்ளே ஆஃப் உறுதியாகிவிடும். ஆமதாபாத்தில் மட்டும் 3 ஆட்டங்களில் குஜராத் விளையாடுகிறது, சொந்த மைதானத்தில் நடக்கும் ஆட்டங்களில் குஜராத் அணி வென்றாலே போதுமானது 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதியும் செய்யும். ஒருவேளை 4 போட்டிகளில் வென்றால் நிகர ரன்ரேட் வலுவாக இருந்தால் 2வது இடத்தைக் கூட பிடிக்கலாம்.

டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி கேபிடல்ஸ்

(ஆட்டங்கள்-10, புள்ளிகள் :12, நிகர ரன்ரேட்: 0.362, மீதமுள்ள ஆட்டங்கள்: சன்ரைசர்ஸ், பஞ்சாப், குஜராத், மும்பை)

டெல்லி அணி தொடக்கத்தில் 6 போட்டிகளில் 5ல் வென்று முதலிடத்தில் இருந்தது. ஆனால், தொடர்ந்து 3 தோல்விகள் அந்த அணியை 5வது இடத்துக்கு தள்ளியது.

12 புள்ளிகளில் இருக்கும் டெல்லி அணி, அடுத்துவரும் 4 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பாக இருக்கலாம். டெல்லி அணிக்கு அடுத்துவரும் 4 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியுடனான ஆட்டம் மட்டுமே ஓரளவு எளிதாக இருக்கும், மற்ற 3 அணிகளான மும்பை, பஞ்சாப், குஜராத் ஆட்டங்களும் கடும் சவாலாக இருக்கும். ஏனென்றால் இந்த அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முயலும் என்பதால், வெற்றிக்காக கடுமையாகப் போராடும்.

நிகர ரன்ரேட்டில் பஞ்சாப் அணியைவிட டெல்லி கூடுதலாக இருப்பதுசாதகமான அம்சம், இதை பயன்படுத்தி குறைந்தபட்சம் 3 ஆட்டங்களில் வென்று 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முடித்தால் ப்ளே ஆஃப் உறுதியாகும்

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

(ஆட்டங்கள்-10, புள்ளிகள் 10, நிகரரன்ரேட்: -0.325, மீதமுள்ளஆட்டங்கள்: பஞ்சாப், ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ்)

லக்னெள அணி தற்போது 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்தாலும், அதன் நிகரரன்ரேட் மைனஸில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். கடைசியாக நடந்த 4 போட்டிகளில் 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது, பெரிய பாதிப்பைக் கொடுத்தது.

லக்னெள அணிக்கு அடுத்ததாக இருக்கும் 4 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் ஆட்டம் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியை உறுதி செய்யக்கூடிய ஆட்டமாகும். மற்றவகையில் ஆர்சிபி, குஜராத், பஞ்சாப் ஆட்டங்கள் உண்மையில் கடும் சவாலாக இருக்கும். அதிலும் நிகரரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு அடுத்துவரும் ஆட்டங்களில் வெற்றி இருந்தால்தான் லக்னெள தாக்குப்பிடிக்கும்.

அடுத்துவரும் 4 போட்டிகளில் 3 ஆட்டங்களில் வென்று 16 புள்ளிகள் பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது, நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பிரமாண்ட வெற்றி அவசியம், சாதாரண வெற்றி லக்னெளவுக்கு பயன் அளிக்காது.

லக்னெள அணியைப் பொருத்தவரை மைனஸில் இருக்கும் நிகரரன்ரேட் அந்த அணிக்கு பெரிய தடைக்கல்லாக மாறியுள்ளது, அடுத்துவரும் ஆட்டங்களில் லக்னெள வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு. இதில் ஒன்றில் தோற்றாலும் லக்னெள ப்ளே ஆஃப் செல்லும்பாதை கடினமாகிவிடும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

(ஆட்டங்கள்-10, புள்ளிகள் 9, நிகரரன்ரேட்: 0.271, மீதமுள்ளஆட்டங்கள்: ராஜஸ்தான், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ஆர்சிபி)

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்வது மதில்மேல் பூனையாக மாறியுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பு மறுக்கப்படவில்லை என்றாலும், கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. 9 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா அணிக்கு ப்ளே ஆஃப் செல்ல 16 அல்லது 18 புள்ளிகள் தேவை.

ஆனால், எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும் 18 புள்ளிகள் கிடைக்காது 17 புள்ளிகள்தான் கிடைக்கும், 3 ஆட்டங்களில் வென்றாலும் 15 புள்ளிகள்தான் கிடைக்கும், 16புள்ளிகள் கிடைக்காது.

ஆதலால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால்கூட கொல்கத்தா அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களில் வென்றால்தான் சாத்தியமாகும். 3 போட்டிகளில் வென்று 15 புள்ளிகளில் இருப்பது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாது, மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்துக்கான புள்ளிகள் 16 ஆக இருக்கும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கு இடம் கிடைக்காது.

கொல்கத்தா அணிக்கு அடுத்துவரும் 4 போட்டிகளில் 3 ஆட்டங்களில் எளிதாக வெல்லலாம், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகளை வென்றுவிடலாம், ஆர்சிபி அணியுடன் மட்டும் போராடி வெல்லவேண்டும். ஒருவேளை 4 போட்டிகளிலும் வென்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசிஇடம் கிடைப்பது உறுதி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

(ஆட்டங்கள்-9, புள்ளிகள்-6, நிகரரன்ரேட்- மைனஸ்1.103, மீதமுள்ள ஆட்டங்கள்: குஜராத், டெல்லி, கொல்கத்தா, ஆர்சிபி, லக்னெள)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் ப்ளே ஆஃப் வாய்ப்பு கதவுகள் மூடப்பட்டதாகக் கூற இயலாது. அதேசமயம், அடுத்து ஓர் ஆட்டத்தில் தோற்றாலும் சன்ரைசர்ஸ் அணி வெளியேற வேண்டியதிருக்கும். அடுத்துவரும் 5 போட்டிகளில் வென்றாலும் 16 புள்ளிகள்தான் பெற முடியும்.

இது ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்க போதும் என்றால் நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியம். தற்போது மைனஸில் இருக்கும் நிகரரன்ரட்டை உயர்த்த சன்ரைசர்ஸ் அணிக்கு பிரம்மாண்ட வெற்றிகள் தேவை. 14 புள்ளிகள் பெற்றாலும், நிகரரன்ரேட் மோசமாக இருக்கும்பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடம் கிடைப்பதும் சந்தேகம்தான்.

இப்போதுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு குறைந்தபட்சம் 5 போட்டிகளிலும் வெற்றி அவசியம். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்துவரும் 5 ஆட்டங்களும் சவாலானவை. டாப்-4 இடங்களில் இருக்கும் அணிகளுடன் சன்ரைசர்ஸ் மோதுவதால், வெற்றி பெறுவது சாதாரணமல்ல.

ஒருவேளை சன்ரைசர்ஸ் 4 போட்டிகளில் சிறந்த வெற்றியுடன் 14 புள்ளிகளில் முடித்தால், பிற அணிகளின் முடிவுக்காகவும் காத்திருக்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது ஒரு மோசமான தோல்வியில் முடிவு செய்யப்பட்டுவிடும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU