SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
4 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் “மத்தியஸ்தர்” பங்கு குறித்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் வியாழக்கிழமை சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானை ஒரு நம்பிக்கைக்குரிய நாடாக இஸ்ரேல் பார்க்கவில்லை என்று ரூவன் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரானும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளும் [இஸ்ரேல்] போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தபோது, லெபனான் மீதும் எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்று கூறியிருந்தார்.
ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம், லெபனான் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என்று கூறுகிறது.
இந்த போர் நிறுத்தத்தில் லெபனான் விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் முதல் நாளிலேயே வெளிப்படையாகத் தெரிந்தன.
லெபனான் மீதான தாக்குதலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாக இரான் கருதுகிறது.
இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இந்தக் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ரூவன் அசார் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம், “நாங்கள் பாகிஸ்தானை ஒரு நம்பிக்கைக்குரிய நாடாகப் பார்க்கவில்லை. அமெரிக்கா தனது சொந்த காரணங்களுக்காக பாகிஸ்தானைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக நான் நம்புகிறேன்,” என்றார்.
மேலும் இந்த போர் நிறுத்த விவகாரத்தில் இஸ்ரேலுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என அங்குள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் பாகிஸ்தானிடம் என்ன கூறினார்?
இரானைப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதிக்க வைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக பிரிட்டிஷ் நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ தனது செய்தி ஒன்றில் கூறியுள்ளது
“உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் குறித்து கவலையடைந்தும், இரானிய ஆட்சியின் வலிமையைக் கண்டு ஆச்சரியமடைந்தும், டிரம்ப் குறைந்தது மார்ச் 21 முதல் போர் நிறுத்தத்தை விரும்பினார். அப்போதுதான் அவர் முதன்முறையாக இரானின் மின் உற்பத்தி நிலையங்களை ‘அழித்துவிடுவேன்’ என்று மிரட்டினார். இதனை பாகிஸ்தானை சேர்ந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின” என பைனான்சியல் டைம்ஸில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், “இருப்பினும், பல சிக்கல்கள் இன்னும் நீடிப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற லெபனான் அமைப்பான ஹெஸ்பொலாவுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. மேலும் லெபனான் இந்த போர் நிறுத்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் சில பிரிவுகள் போர் நிறுத்தத்தைப் பலவீனப்படுத்துவதற்காக வளைகுடா பகுதிகளில் உள்ள தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் பாகிஸ்தானில் நிலவுகிறது.” என கூறப்பட்டுள்ளது
பாகிஸ்தான் கடந்த ஆண்டு செளதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
செளதி அரேபியாவின் பல தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் செளதி கடும் அதிருப்தியில் இருந்தது. ஆனால் பாகிஸ்தான், செளதி மற்றும் இரான் ஆகிய இரு தரப்பில் யாருடைய பக்கமும் சாயவில்லை. அது தன்னை ஒரு நடுநிலையான நாடாகவே காட்டி வந்தது.
இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘தி இந்து’வின் பாகிஸ்தான் செய்தியாளராக இருந்தவரும், சர்வதேச விவகார நிபுணருமான நிருபமா சுப்பிரமணியம், “கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டதே இரானுக்கு எதிரானதுதான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுத வலிமை கொண்ட நாடாகும். செளதி உடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சம்மதம் இல்லாமல் நடந்திருக்காது என்பதே எனது கருத்து.” என குறிப்பிட்டுள்ளார்.
“பலர் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை இஸ்ரேலுக்கு எதிரானது என்று பார்க்கிறார்கள், ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை. செளதியின் எதிரி இரான் தானே தவிர இஸ்ரேல் அல்ல. இரானிடமிருந்து பாதுகாப்பைப் பெற செளதி அரேபியாவுக்கு அணு ஆயுதம் ஏந்திய ஒரு பாதுகாவலர் தேவைப்பட்டார், அது பாகிஸ்தானாக மட்டுமே இருக்க முடியும். இத்தகைய சூழலில், பாகிஸ்தான் நம்பிக்கைக்குரிய நாடு அல்ல என்று இஸ்ரேல் கூறினாலும், அமெரிக்கா இருக்கும் வரை பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக மாற முடியாது” என அவர் கூறுகிறார்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் குறித்த அச்சம்
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெருசலேமில் நடைபெற்ற அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில், இப்பிராந்தியத்தில் துருக்கி, கத்தார், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டி வருவதாகவும், செளதி அரேபியாவையும் தன்வசப்படுத்த முயற்சிப்பதாகவும் நஃப்தாலி கூறினார்.
துருக்கி இஸ்ரேலுக்குப் புதிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், இதைப் பற்றி அரசாங்கம் அறியாமல் இருப்பதாகவும் பென்னட் அந்த மாநாட்டில் எச்சரித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்ட போதிலும், அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் முன்னணி ஆங்கில நாளிதழான ஹாரெட்ஸ், “போர் நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டாளிகள், டிரம்பின் எந்த முடிவையும் தாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமெரிக்க நிர்வாகத்திற்குச் சமிக்ஞை கொடுத்திருந்தனர். இருப்பினும், தங்களின் சில முக்கியக் கவலைகள் இறுதி ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் போய்விடுமோ என்று இஸ்ரேலிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இஸ்ரேல் தற்போது இரானில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது, ஆனால் லெபனானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.
“இஸ்ரேலுடன் நேரடியாகத் தொடர்புடைய பல விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. முதலாவது இரானின் அணுசக்தித் திட்டம், அதில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் எதிர்காலம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து இரான் தரப்பிலிருந்து இதுவரை எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.” என்றும் எழுதியுள்ளது.

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட், இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஒரு ‘அரசியல் பேரழிவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாபிட், “அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை. நெதன்யாகு நம்மை ஒரு சார்பு நாடாக மாற்றிவிட்டார். நமது தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயங்களுக்குக் கூட தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்களைப் பெறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்,” என்றார்.
மேலும் அவர், “நெதன்யாகு இஸ்ரேலை ஒரு பேரழிவிலிருந்து மற்றொரு பேரழிவிற்கு இட்டுச் செல்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலிய குடிமக்கள் அவரது தோல்விக்குக் கனமான விலையைக் கொடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்குத் தகவல் தாமதமாக வழங்கப்பட்டதா?
அமெரிக்க நாளிதழான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தனது செய்தியில், போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த தகவல் இஸ்ரேலுக்குத் தாமதமாகவே வழங்கப்பட்டதாக எழுதியுள்ளது.
“பேச்சுவார்த்தையின் அதிகாரப்பூர்வ அங்கமாக இஸ்ரேல் இல்லாததால், ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டிய பிறகே தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாலும், தன்னிடம் ஆலோசனை நடத்தப்படாததாலும் இஸ்ரேல் மகிழ்ச்சியாக இல்லை என இந்த விவகாரத்தை அறிந்த ஒரு நபர் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்குச் சற்று முன்பே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். அப்போது நெதன்யாகு போர் நிறுத்தத்தில் இணைய ஒப்புக்கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.”
மேலும் அந்த நாளிதழில், “லெபனானையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கும் திட்டங்கள் உள்ளிட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் இஸ்ரேலிய அதிகாரிகள் திருப்தி அடையவில்லை. ஏனெனில் இஸ்ரேல், இரான் மற்றும் லெபனானை வெவ்வேறு போர்க்களங்களாகக் கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று நெதன்யாகு தெரிவித்தார். இது பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தானின் முந்தைய கருத்துக்கு மாறானதாக இருந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



