SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், IRTV
அந்தச் செய்திகள் முதலில் வெளிநாட்டு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானது.பெரும்பாலான இரானியர்களால் அந்த தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியாது.
பிப்ரவரி 28 அன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “கொடுங்கோலன் இனி இல்லை என்பதற்கான அறிகுறிகள் உள்ளன” என்று கூறினார்.
இதன் மூலம் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை அவர் உணர்த்தினார்.
ஆனால், அரசு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இரான் மக்கள் நிசப்தத்தையே எதிர்கொண்டனர்.
அரசு அதிகாரிகள் காமனெயியின் மரணத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் சேனல்களில் ஒன்றான IRTV3-இல், ஒரு செய்தி வாசிப்பாளர் பார்வையாளர்களைத் தன்னையும், அரசு வைத்திருக்கும் “சமீபத்திய தகவல்களையும்” “நம்புமாறு” வலியுறுத்தினார்.
காமனெயியின் மரணம் குறித்த செய்தியை விரைவில் அம்பலப்படப்போகும் “அடிப்படையற்ற வதந்திகள்” என்று அவர் நிராகரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
செய்திகள் எப்படி இருந்தன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அடுத்த நாள் காலை வரை இரான் அரசு ஊடகங்கள் காமனெயியின் மரணத்தைப் பற்றிச் செய்தி வெளியிடவில்லை.
இரான், லெபனான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் பரவியுள்ள இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, இரான் அரசு ஊடகங்கள் உண்மையை புனைவுடன் கலந்து, நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ பதிப்பை தனது உள்நாட்டுப் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
மில்லியன் கணக்கான இரான் மக்கள் வெளிநாட்டைத் தளமாகக் கொண்ட பாரசீக மொழி செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களைப் பின்தொடர்ந்த போதிலும், சுதந்திரமான தகவல்களை அணுகுவது கடினமாக இருக்கலாம்.
இணைய முடக்கம், தணிக்கை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சேனல்கள் காரணமாக, கலவரம் மற்றும் மோதலின் போது இரான் மக்கள் வெளி உலகத்திலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்படுகிறார்கள்.
போரின் முதல் வாரத்தின் இரான் அரசு ஊடகங்களின் செய்திகளை பிபிசி கவனித்ததில், அவர்கள் தங்களின் செய்திகளில் பொதுமக்களின் துயரம், தங்களின் “எதிரிகளுக்கு” எதிராகப் பழிவாங்குவதற்கான அழைப்புகள், இஸ்லாமியக் குடியரசிற்குப் பொதுமக்களின் விசுவாசத்தைத் தூண்டுதல் ஆகியவற்றை மையப்படுத்தியிருப்பதைக் கண்டறிந்தது.
அதே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ராணுவ தளங்கள் மற்றும் அரசு மையங்கள் குறித்து மிகக் குறைந்த கவனத்தையே அளிக்கின்றன.
தவறான தகவல்களுக்கான எடுத்துக்காட்டுகளையும் நாங்கள் கண்டோம்.
இரான் நாட்டின் ஊடக இயந்திரம்
எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடகக் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, உலகில் ஊடக சுதந்திரம் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாக இரான் உள்ளது.
இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்ட 1979 புரட்சியிலிருந்து, அனைத்து ஊடகங்களும் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றன.
பிபிசி பாரசீக மொழி சேவை உட்பட பெரும்பாலான மேற்கத்திய நாடுகளைத் தளமாகக் கொண்ட மற்றும் பாரசீக மொழிச் செய்தி நிறுவனங்கள் நாட்டிலிருந்து செய்தி சேகரிக்கத் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியின் முக்கியத் தளங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி என்றாலும், இது செய்தி இணையதளங்கள், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் ஆன்லைனில் இயங்குகிறது.
இரான் நாட்டிற்குள்ளிருந்து இந்தச் சமூக ஊடகத் தளங்களை அணுக விபிஎன் (VPN) வசதி தேவைப்படுகிறது
அதன் ஊடக இயந்திரம், நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக இணையம் துண்டிக்கப்படும் போது, தகவல்களின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
“அவர்கள் முன்னிறுத்தும் ஒரு கதையாடல் உள்ளது,” என்று மனித உரிமைகள் அமைப்பான விட்னஸை சேர்ந்த மஹ்சா அலிமர்தானி கூறுகிறார்.
“அவர்கள் மிகவும் வெற்றிகரமானவர்கள் மற்றும் அவர்களின் ராணுவம் மிகவும் வலிமையானது என்பதுதான் அது.”
பல இரான் அரசு ஊடக நிறுவனங்கள், இரான் படைகள் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றதாக அல்லது காயப்படுத்தியதாகத் தெரிவித்தன, இது எதிரிகளின் காயம்/ உயிர்ச்சேத எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டியது.
மார்ச் 3 அன்று, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் (ஐஆர்ஜிசி) தொடர்புடைய பகுதி அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் நியூஸ், போரின் முதல் இரண்டு நாட்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 650 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. இது ஐஆர்ஜிசியின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டியது.
இந்தக் கூற்று இந்தியா, துருக்கி மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளின் உலகளாவிய செய்தி நிறுவனங்களால் எடுக்கப்பட்டது.
அந்த நேரத்தில், ஆறு வீரர்களின் மரணத்தை அமெரிக்க உறுதிப்படுத்தியிருந்தது. மார்ச் 13 அன்று, அமெரிக்க ராணுவம் மேலும் ஏழு அமெரிக்க வீரர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

உண்மையைத் திரித்தல்
புதிய தொழில்நுட்பமும் அரசு ஊடகங்கள் பிரசாரத்தை முன்னெடுக்க உதவுகிறது.
தற்போது நீக்கப்பட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், அரசு நடத்தும் ஆங்கில மொழிச் செய்தி சேனலான ‘பிரஸ் டிவி’, வானத்தில் புகைப் படலங்கள் எழும் ஓர் எரியும் கட்டடத்தின் வீடியோவைப் பகிர்ந்தது.
“இரான் தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள ஓர் உயரமான கட்டடத்திலிருந்து புகை எழுகிறது” என்று அந்த விளக்கம் கூறியது.
ஆனால் வீடியோவை உற்று நோக்கியதில், இரண்டு கார்கள் ஒன்றாகக் கலப்பது போன்ற அசாதாரண விவரங்கள் வெளிப்பட்டன. இது அந்த வீடியோ போலியானது என்பதற்கும், ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதற்கும் அறிகுறியாகும்.
சமூக ஊடகங்களில் பெருகி வரும் போரைப் பற்றிய பல ஏஐ உள்ளடக்கங்களைப் போலவே, இதை யார் உருவாக்கினார்கள், எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், போர் தொடங்கியதிலிருந்து, அரசு நிறுவனங்கள் தங்களின் கதையாடலை முன்னெடுப்பதற்காகப் பகிர்ந்த ஏஐ படங்களின் பிற எடுத்துக்காட்டுகளை பிபிசி கண்டுள்ளது.
இந்த படங்களில் பெரும்பாலானவை யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை மற்றும் தவறாக வழிநடத்துவதை விடப் பெருமைப்படுத்தும் நோக்கம் கொண்டவை.
வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரும் பொதுவாகப் பெருமைப்படுத்தும் நோக்கம் கொண்ட ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னையும், டிரம்ப் மற்றும் போர்க்கால பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் ஒரு வெற்றிகரமான தோரணையில் சித்தரிக்கும் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பட மூலாதாரம், Iranian Press Center/AFP via Getty Images
உண்மைத் துளிகள்
பொய்யான தகவல்களுடன் உண்மைத் துளிகளையும் சேர்த்து வழங்கும் இரான் நாட்டின் வழக்கம், நாட்டிற்குள்ளும் வெளியேயும் உள்ள ஆட்சியின் விமர்சகர்கள் பலரிடையே சந்தேகத்தை விதைத்துள்ளது.
மார்ச் 3 அன்று ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தபோது (இது அருகிலுள்ள ராணுவத் தளத்தை இலக்காகக் கொண்ட அமெரிக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்) அது ஒரு கூட்டு இறுதிச் சடங்கின் வான்வழிப் படத்தையும் பகிர்ந்தது.
அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்கள் அந்த இறுதிச் சடங்கு படம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது என்று கூறினர்.
ஆனால் அந்தப் படம் உண்மையானது. நாங்கள் அதை அந்தப் பள்ளியிலிருந்து சுமார் 3.7 கிமீ (2.3 மைல்) தொலைவில் உள்ள ஒரு இடுகாடு என புவிசார் இருப்பிடத்தை உறுதி செய்தோம்.
இறுதிச் சடங்கிற்கு அடுத்த நாள் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களிலும் புதிதாகத் தோண்டப்பட்ட கல்லறைகள் காணப்படுகின்றன. அதற்கு முந்தைய நாள், அந்த நிலம் காலியாக இருந்தது.
“நாங்கள் ஒரே நேரத்தில் இரண்டு உண்மைகளை வைத்திருக்க வேண்டும்,” என்கிறார் விட்னஸ் அமைப்பைச் சேர்ந்த மஹ்சா அலிமர்தானி.
இரான் ஆட்சி முறைகேடுகளைச் செய்யும்போது பெரும்பாலும் ஆதாரங்களை மறைக்கிறது, ஆனால் போரின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளை ஆவணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
அந்த ஆவணப்படுத்தல் பிரசாரத்திற்கும் மற்றும் அரசு போர்க் கதையாடலுக்கும் உதவக்கூடும் என்றாலும், அது பொய்யானது என உடனடியாக கருதமுடியாது என்று அவர் கூறுகிறார்.
இரான் நாட்டின் அரசு செய்திகளைப் பொறுத்தவரை, ஒருவர் “ஆரோக்கியமான சந்தேகத்தை” கொண்டிருக்க வேண்டும் என்று அலிமர்தானி குறிப்பிடுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



