Home தேசிய national tamil பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் பயன்படுத்திய ஆயுதமே அவர்களுக்கு எதிராக மாறியது எப்படி?

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் பயன்படுத்திய ஆயுதமே அவர்களுக்கு எதிராக மாறியது எப்படி?

3
0

SOURCE :- BBC NEWS

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

2019-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கசிந்த வீடியோக்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 9 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்ட உதவிய வீடியோக்கள்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாறி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்ததாகச் சொல்கிறார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன். சிபிஐ திரட்டிய ஆதாரங்களை வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் சுரேந்திரமோகன்.

இவ்வழக்கில் சிபிஐக்கு மிகவும் உறுதுணையாக தமிழக காவல்துறையின் பெண் அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர். காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டி, குற்றங்களை நிரூபிப்பதற்கு பேருதவியாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

சிபிஐ சந்தித்த சவால்களும், வழக்கில் உதவிய வீடியோவும்!

முதலில் தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு, அதன்பின் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட, 2 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குள் பாலியல் துன்புறுத்தல் வீடியோ ஆதாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை மீட்டெடுத்ததால்தான் வழக்கில் வெற்றி பெற முடிந்ததாகவும் சிபிஐ தரப்பு கூறுகிறது.

”திருநாவுக்கரசின் ஐஃபோனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. உள்ளூர் போலீசார் கைப்பற்றிய அதை சிபிசிஐடி போலீசார், மண்டல தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு (RFSL) அனுப்பி வைத்திருந்தனர். சிபிஐ வழக்கை எடுத்தபின்பே அந்த முடிவுகள் வந்தன. ஆய்வக அதிகாரிகளே அதை மீட்டுக் கொடுத்தனர். அந்த ஐஃபோன்தான் இந்த வழக்கின் இதயமாக இருந்தது என்று சொல்லலாம்.” என்கிறார் சுரேந்திரமோகன்.

பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதே கடினமாக இருந்த போது, அந்த வீடியோதான் அதற்கும் உதவியதாகத் தெரிவிக்கிறார் அவர். வீடியோவை வைத்து பெண்களை அடையாளம் கண்டு விட்டாலும் யாருமே பேச முன்வரவில்லை என்று கூறுகிறார் வழக்கில் சிபிஐக்காக பிரதான விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள்.

”வழக்கு பதியப்பட்ட போது புகார் கொடுத்த பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அதே நேரத்தில் சில வீடியோக்களும் வெளியில் பரவிவிட்டன. அதனால் பெண்கள் யாருமே புகார் கொடுக்க முன் வரவில்லை. அவர்களை அடையாளம் காண்பதும், அதற்குப் பின் அவர்களை அணுகுவதும், அவர்களைப் பேச வைப்பதும் பெரும் சவாலாக இருந்தது.” என்கிறார் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

வழக்கு தாமதமானதற்கு காரணங்கள் என்ன?

கடந்த 2019 ஆம் ஆண்டில் இதற்கான புகார் பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மே 24 ஆம் தேதி, வழக்கில் முதலில் கைதான சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துவிட்டது. அதற்குப் பின் இதே வழக்கில் கைதான அருள் ஆனந்தம், ஹேரோன்பால் மற்றும் பாபு ஆகியோர் மீது, 2021 பிப்ரவரி 22-ஆம் தேதியும், இறுதியாக கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது 2021 ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

”வழக்கை சிபிஐ எடுத்தபின், 2 ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்றுக் காலம் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திப்பதும், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதும் பெரும் கஷ்டமாக இருந்தது. சிலருடைய வீடியோக்கள் வெளியாகிவிட்டதால், நமது வீடியோவும் வந்து விடுமோ என்று பலரும் பேசவே பயந்தனர். இதற்காக ரகசிய அணியாக நாங்கள் களம் இறங்கினோம். பெற்றோர், பக்கத்துவீட்டார் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்களை சந்தித்து பேசினோம்.” என்கிறார் பச்சையம்மாள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் வழங்கிய பின்பே, அவர்கள் தங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, துணிச்சலாக வாக்குமூலம் கொடுக்க முன் வந்ததாகக் கூறுகிறார் அவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்தித்துப் பேசியதாகக் கூறிய சிபிஐ போலீசார், பாதிக்கப்பட்டவர்களில் 10க்கும் குறைவானவர்களே வாக்குமூலம் தர முன் வந்ததாகத் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

நுாற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தது உண்மையா?

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியில் வந்தபோது, நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்ததாகவும் தகவல்கள் பரவியிருந்தன. திருநாவுக்கரசின் ஐஃபோன் மற்றும் சபரிராஜனின் லேப் டாப் இரண்டிலும் நிறைய வீடியோக்கள் இருந்ததை ஒப்புக் கொள்ளும் சிபிஐ தரப்பு, இரண்டிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி வீடியோக்கள் இருந்ததாகவும், சில வீடியோக்கள் மட்டும் லேப் டாப் மற்றும் ஐஃபோனில் வெவ்வேறானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ”நிறைய வீடியோக்கள் இருந்தன. அவற்றில் பல வீடியோக்கள், பணத்துக்காக வந்தவர்கள் மற்றும் விருப்பத்துடன் வந்தவர்களிடம் எடுக்கப்பட்டவை. அவற்றையெல்லாம் கழித்துவிட்டு, உண்மையிலேயே இவர்களால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை மட்டும் கண்டறிந்து, அவர்களிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டது.” என்கிறார்.

இவையிரண்டும் இல்லாமலிருந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வழியில்லாமல் போயிருக்கும் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். மின்னணு தடயங்கள்தான் (Electronic Evidence) பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவியதுடன், பிரதான சாட்சியாகவும் இருந்து வழக்கில் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் அனைத்தும் ஒரிஜினல் என்பதையும், தொழில்நுட்பரீதியாக எதுவும் மாற்றப்படவில்லை என்பதையும் ஆய்வகம் மூலமாக உறுதி செய்த பின்பே விசாரணையில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் சுரேந்திர மோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

வழக்கில் குற்றத்தை நிரூபிக்க உதவிய முக்கிய சாட்சிகள்!

இந்த வழக்கில் மொத்தம் 160 சாட்சிகளை விசாரித்ததாக பிபிசி தமிழிடம் சிபிஐ போலீசார் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், தடயவியல் ஆய்வக அதிகாரிகள், தகவல் பரிமாற்றம் குறித்த சிடிஆர் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள், தமிழக காவல்துறை, சிபிசிஐடி மற்றும் சிபிஐ ஆகிய முகமைகளைச் சேர்ந்த 5 விசாரணை அதிகாரிகளை சிபிஐ தரப்பு சாட்சியாகச் சேர்த்து விசாரித்துள்ளது.

”மொத்தம் 500 ஆவணங்களை சிபிஐ சேகரித்தது. பெண்களை கடத்திச் சென்ற கார்கள், செல்போன்கள், லேப் டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட 50 பொருட்கள் சாட்சிகளாகக் காண்பிக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் யாரும் விசாரிக்கப்படவில்லை. அந்த பெண்களில் பலருடைய பெற்றோருக்கு இந்த விஷயம் இப்போது வரை தெரியாது.” என்கிறார் சிபிஐ வழக்கறிஞர்.

பாலியல் வன்கொடுமை நடந்த பண்ணை வீடு!

பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள், சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில்தான் நடந்துள்ளதாக சிபிஐ கண்டறிந்துள்ளது. அது கிராமம் என்பதால் யாருமே அந்தப் பக்கம் வருவதில்லை என்றும், அங்கே சிசிடிவி எதுவுமில்லை என்றும் சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.

இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை நடந்துள்ளதாகக் கூறும் சிபிஐ போலீசார், ஆனால் முதல் புகாரே 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் பதிவானதால் அதற்குள் சிசிடிவி காட்சிகள் தானாக அழிந்திருக்க வாய்ப்புள்ளதால் அவை வழக்கில் சாட்சியாக உதவவில்லை என்றனர்.

”பல பெண்களை நட்பு ரீதியாகவும், காதலிப்பது போன்றும் ஏமாற்றியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அம்மா பார்க்க வேண்டுமென்கிறார், என் சகோதரி உன்னை வீட்டிற்கு அழைக்கிறார் என்று சொல்லியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே வைத்து அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.” என்று பிபிசி தமிழிடம் கூறினார் சுரேந்திரமோகன்.

போக்சோ வழக்கு பதியப்படாததற்கான காரணம்!

வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்குட்பட்ட எந்தச் சிறுமியும் இல்லாத காரணத்தால்தான் குற்றவாளிகள் யார் மீதும் போக்சோ வழக்கு பதியப்படவில்லை என்று சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் வேறு விதமான ஒரு சவாலையும் சிபிஐ எதிர் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிப்பது தவறு என்றும், அதற்கெனவுள்ள தனி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பில் ஒரு வாதம் வைக்கப்பட்டது. பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு பாதிப்பு என்பதால், டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரிதான் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரி விசாரிப்பதும் தவறு என்றும் எதிர் தரப்பு வாதிட்டுள்ளது.

அதை முறியடித்தது பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ”மணிப்பூர், வாச்சாத்தி போன்று இங்கு குறிப்பிட்ட ஓர் இனம் அல்லது சமுதாயம் குறி வைக்கப்படவில்லை. சாதிய அடிப்படையில் யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, குற்றவாளிகளிலும் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருப்பதை எடுத்துக் கூறி அந்த வாதத்தை உடைத்தோம்.” என்றார்.

தீர்ப்பில் 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை என்றாலும், சிலருக்கு ஓர் ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3, 4 மற்றும் 5 ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது எப்படி என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சுரேந்திரமோகன்.

”ஒவ்வொரு குற்றவாளியாலும் எத்தனை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர் என்பதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒன்று முதல் 5 வரையிலான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு ஆயுள் தண்டனை பெற்றவர், விரைவில் விடுதலையாகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அனைவருக்குமே சாகும் வரை சிறைத்தண்டனை என்பதே இந்த தீர்ப்பு. ” என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர், ”கடந்த 2013 நிர்பயா வழக்கிற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, ஆயுள் தண்டனை என்பது, ஒரு குற்றவாளியின் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்த பிரிவில் குறைந்தபட்ச தண்டனையே 20 ஆண்டுகளாக்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகள் அனைவர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், தண்டனைக் குறைப்பு (remission) என்ற பேச்சுக்கே இடமில்லை.” என்றார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

பெண்களுக்கான இழப்பீட்டில் வேறுபாடு ஏன்?

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில், ஒருவருக்கு ரூ.25 லட்சம், இருவருக்கு தலா ரூ.15 லட்சம், இருவருக்கு தலா ரூ.10 லட்சம், ஒருவருக்கு ரூ.8 லட்சம், ஒருவருக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் 7 பேருக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். இந்த இழப்பீடு எப்படி நிர்ணயிக்கப்பட்டது, அதில் ஒருவருக்கு மட்டும் அதிகமாகவும், மற்றவர்களுக்கு குறைவாகவும் இருப்பது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

”ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பெண் ஒரே நாளில் 9 பேராலும் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து அதைக் காண்பித்து மிரட்டி, ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. அவருக்கு நேர்ந்த கொடுமைக்கு இது ஈடாகாது.” என்கிறார் சுரேந்திரமோகன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

”மரண தண்டனையை விட இதுவே சிறந்த தண்டனை!”

இந்த வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் துவங்கிய காலகட்டத்தில், குற்றவாளிகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். அதேபோன்று மே 13-ஆம் தேதி காலையில் நீதிபதி நந்தினி தேவி, ”வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும்.” என்று அறிவித்த போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதுபற்றி விளக்கிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ”இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் மரணமடையவில்லை. அப்படியிருந்திருந்தால் அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் விட இதுபோன்று சாகும் வரை ஆயுள் தண்டனைதான் மிகச்சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU