SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
இரானியர்கள் தங்கள் பாரசீக புத்தாண்டான நவ்ரூஸைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இரவு நேரத்தில் ஜெருசலேமிலும் இரானிய தலைநகர் தெஹ்ரானிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இரான் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் “தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மற்றொருபுறம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்கள் மீது ஏவுகணை அல்லது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.
இரான் தொடர்ந்து முக்கிய உட்கட்டமைப்புகளைத் தாக்கினால், தாங்கள் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற இதுவரை இல்லாத அளவிலான வலுவான சமிஞ்சையை செளதி அரேபியா வெளிப்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Reuters
செளதி எச்சரிக்கை
”எங்களின் பொறுமைக்கு எல்லை உண்டு,” என்று கூறி இரனை செளதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் எச்சரித்தார்.
தனது நாடும் மற்ற வளைகுடா அரபு கூட்டாளிகளும், ”தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய முக்கியமான திறன்கள்” தங்களிடம் உள்ளன என்றும் அவர் கூறினார்.
வளைகுடா நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து வாங்கப்பட்ட சக்திவாய்ந்த போர் விமானங்களைக் கொண்டுள்ளன.
ஆனால், அமெரிக்கா-இஸ்ரேலுடன் இவர்கள் இந்த போரில் இணைவது மிகுந்த ஆபத்துகளை உள்ளடக்கியது.
இரான், வளைகுடா நாடுகள் முழுவதும் தனது தாக்குதல்களை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், அரசாங்க கட்டடங்கள் போன்ற இடங்களையும் இலக்காகக் கொள்ளும் அபாயமும் உள்ளது.
மேலும், உள்நாட்டு மக்களின் மனநிலை என்ற முக்கிய காரணியும் உள்ளது. மற்றொரு முஸ்லிம் பெரும்பான்மை நாட்டுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து போரிடுவது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை செளதி மக்கள் பலர் ஆதரிக்காமல் போகலாம்.
பட மூலாதாரம், Reuters
கத்தாரில் கடும் பாதிப்பு
நேற்று கத்தாரின் ராஸ் லஃபான் எரிவாயு உற்பத்தி தொழிற்பேட்டை மீதான இரானியத் தாக்குதலின் விளைவாக, கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 17% குறையும் என்று அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ராஸ் லஃபான் மீதான இரானின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை, ஆனால் அந்நாட்டின் எரிசக்தி அமைச்சரால் குறிப்பிடப்படும் இந்த எண்கள் மிகப் பெரியவை.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறன் 17% குறையும் என்றும், இதனால் நாட்டிற்கு ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
இயற்கை எரிவாயுவை ‘டிரெயின்’ (train) எனப்படும் ஒரு பெரிய தொழில்முறை செயலாக்க அலகு மூலம் மிகக் குறைந்த வெப்பநிலைக்கு குளிர்விப்பதன் மூலம் எல்என்ஜி உருவாக்கப்படுகிறது.
ராஸ் லஃபானில் உள்ள 14 டிரெயின்களில் இரண்டை இரானிய தாக்குதல்கள் சேதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
பாரசீக வளைகுடாவின் வடக்கே அமைந்துள்ள இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மீது புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே ராஸ் லஃபான் மீது இரான் இந்தத் தாக்குதலை நடத்தியது.
பட மூலாதாரம், Getty Images
‘5 ஆண்டுகள்’
”பாதிப்புகளை சரி செய்ய ஐந்து ஆண்டுகள் அல்ல” என்று சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் சந்தை நுண்ணறிவு நிறுவனமான ஹைசைட்ஸ்-ன் தலைமை வணிக அதிகாரி சியாரன் ரோ பிபிசியிடம் தெரிவித்தார்.
“இங்கு ஒரு முழுமையான மறுகட்டமைப்பு தேவை” என்றார் அவர்.
ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா ஆகியவை கத்தார் நாட்டு எல்என்ஜி-யையே பெரிதும் நம்பியுள்ளன.
ஐரோப்பாவில், இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஏற்கனவே பெரிய வாடிக்கையாளர்களாக உள்ளன. ஆனால் யுக்ரேன் போரைத் தொடர்ந்து ரஷ்ய இறக்குமதிகளைப் புறக்கணித்ததால், ஒட்டுமொத்த ஐரோப்பா கண்டமுமே மத்திய கிழக்கு நாடுகளின் எரிவாயுவை முன்னெப்போதையும் விட அதிகமாகச் சார்ந்து வருகின்றன.
உலகளாவிய இயற்கை எரிவாயு சந்தையில் கத்தார் மிக முக்கியமான நாடு.
“இந்த அச்சம் சந்தையில் சில மாதங்களுக்கு அல்லது சில ஆண்டுகளுக்குக் கூட நீடிக்கலாம்,” என்கிறார் ரோ.
“இது எல்என்ஜி இறக்குமதி குறித்த அரசாங்கங்களின் சிந்தனையை மாற்றும்”.
மக்களின் வீடுகளை வெப்பப்படுத்தவும், உணவு சமைக்கவும், ஏன் கப்பல்கள் மற்றும் தொழிற்சாலைகளை இயக்கவும் எல்என்ஜி ஒரு முக்கியமான எரிசக்தி ஆதாரமாகும்.
உரங்களைத் தயாரிக்கவும் இது அவசியமானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



