Home தேசிய national tamil பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள்

பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள்

5
0

SOURCE :- BBC NEWS

கிரிக்கெட்டுக்கு ஈடாக கபடிக்கு முன்னுரிமை தரும் தமிழக பெண்கள் – பிபிசி ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

19 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்திய பெண்கள் விளையாட்டைப் பார்க்கும் விதத்தில் ஓர் அமைதியான, ஆனால் முக்கியமான மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும், மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்போரின் எண்ணிக்கையும், அதை ஒரு தொழில்வாய்ப்பாகக் கருதும் மனப்போக்கும் அதிகரித்து வருவதை பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வு கூறுகிறது.

ஆனால், இந்த முன்னேற்றக் கதையின் நடுவில் ஒரு சிக்கலான உண்மையும் பொதிந்துள்ளது. பெண்கள் விளையாட்டுத் துறைக்குள் வந்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார்களா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. இந்த முரண்பாடு மிகவும் தெளிவாகத் தெரியும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.

இந்த ஆய்வு 2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 30 வரை, 14 மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1,155 பேரின் பதில்கள் இந்த ஆய்வுக்காகப் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆய்வு, ‘முழு இந்தியா’வையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மாநிலங்கள் குறித்தான மனப்போக்குகள், பழக்கங்களைப் புரிந்து கொள்வதற்காகவே இது நடத்தப்பட்டது. எனவே, இதனை ஒரு தேசிய அளவிலான சூழலின் முடிவு எனக் கருதாமல், சமூக மாற்றத்திற்கான திசையைப் பற்றிச் சுட்டிக்காட்டும் வழிகாட்டியாகக் கருத வேண்டும்.

விளையாட்டில் பெண்கள்: தமிழ்நாட்டில் என்ன நிலைமை?

இந்த ஆய்வில் கிடைத்த முதன்மையான கண்டுபிடிப்பு, கிரிக்கெட்டில் 2020இல் 5 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2026இல் 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆய்வில் பங்கேற்ற பெண்களில் இப்போது பத்தில் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதாகக் கூறுகிறார்கள்.

இளம் பெண்களிடையே இது இன்னும் வேகமாக உயர்ந்துள்ளது. 15-24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் ஆறு பேரில் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதாக ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த ஆறு மாதங்களில் பெண்கள் விளையாட்டை ஏதேனுமொரு வடிவில் பார்த்துள்ளதாகக் கூறுவோரின் அளவும் 51 சதவிகிதமாக இருக்கிறது. 2020இல் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது முக்கியமான மாற்றமாகும்.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அளவிலான இந்த மாற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், முக்கியமான ஒரு வேறுபாடு தெரிகிறது. நாட்டின் பல பகுதிகளில் மகளிருக்கான விளையாட்டு வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிரிக்கெட்டின் எழுச்சியுடன் சேர்த்துப் பேசப்படுகிறது.

இருந்தாலும் தமிழ்நாட்டின் கதை அது மட்டுமாக இல்லை. இங்கு மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்பவர்களின் உள்ளூர் கலாசாரம் பல்வேறு வடிவங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. குறிப்பாக, இந்தப் பார்வையில், கிரிக்கெட்டுக்கு இணையாக கபடியும் பிரபலமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென்னிந்தியா முழுக்கவே மகளிர் விளையாட்டுக்கான பார்வையாளர்கள் அளவு அடிப்படையில் வலுவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது கலாசாரத்துடனும் பிணைக்கப்பட்டு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல, ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் கிரிக்கெட் பிரபலமாக இருந்தாலும், கேரளாவில் கிரிக்கெட்டுக்கு நிகரான இடத்தை மகளிர் கால்பந்து விளையாட்டும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் விளையாட்டு அடையாளம்

கிரிக்கெட் இந்திய அளவில் பெரும் வளர்ச்சியடைந்து இருந்தாலும், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் கபடி இன்னும் முக்கியமான இடத்தில் இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்த ஆய்வில் பங்கெடுத்து பதிலளித்தவர்களில் 18% பேர் கபடி விளையாடுவதாகத் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற, ஊடக மைய வளர்ச்சியின் அடையாளமாக கிரிக்கெட் இருக்கிறது என்றால், கபடி இன்னமும் தெருக்கள், பள்ளிகள், உள்ளூர்ப் போட்டிகளில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

இங்குதான் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பார்வை சுவாரஸ்யமாகிறது. இந்திய அளவில் மகளிர் கிரிக்கெட்டில் இரட்டிப்பு வளர்ச்சி என்பது தேசிய அளவிலான மாற்றத்தைப் பறைசாற்றினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளையாட்டுத் துறையின் எதிர்காலம் என்பது கிரிக்கெட் மட்டுமாகச் சுருங்கிவிடவில்லை.

மாறாக, ஒருபுறம் கிரிக்கெட் மீது ஆர்வம் உயரும்போது, மறுபுறம் கபடி போன்ற உள்ளூர் வேர்களைக் கொண்ட விளையாட்டுகளையும் மகளிரின் பங்களிப்பு தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம். ஏனெனில், மகளிர் விளையாட்டுத் துறையை விரிவுபடுத்த வேண்டுமெனில், தேசிய அளவில் புகழ் பெற்றுள்ள விளையாட்டுகளை மட்டுமே ஊக்கப்படுத்துவது போதாது, உள்ளூர் சமூகங்களுடன் ஏற்கெனவே பிணைந்திருக்கும் விளையாட்டுகளையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும்.

‘விளையாட வேண்டும்’ என்ற ஆசையும் தடையும்

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள மற்றுமொரு முக்கியமான அம்சம், விளையாட்டுத் துறையில் ஈடுபடுவது குறித்துச் சிந்திக்கையில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு கவலை.

தற்போது எந்த விளையாட்டிலும் பங்கேற்காத பெண்களில் 13% பேர் பாதுகாப்பு குறித்தான கவலை காரணமாக விளையாட்டுகளில் சேரவில்லை என்று கூறியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் மொத்த அளவில் இது 32.7 மில்லியன் பெண்களுக்குச் சமம் என அறிக்கை மதிப்பிடுகிறது.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக நம்புவோரின் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது. இது ஆய்வில் மிகவும் அதிகமான அளவீடாகும். அதே நேரம், விளையாட்டில் பங்கேற்காத பெண்களில் 21% பேர் பாதுகாப்பு தங்களுக்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு தரவுகளையும் சேர்த்துப் பார்க்கையில், விளையாட்டு மேடைகள், பள்ளி மைதானங்கள், திடல்கள், கிளப் வசதிகள் ஆகியவை மட்டுமே மகளிர் விளையாட்டின் அடித்தளமல்ல, பெண்கள் அங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பதும் அதே அளவுக்கு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த அறிக்கை நேரடியாக காரண-விளைவு உறவை நிரூபிப்பதில்லை. ஆனால் பாலின வன்முறை அதிகரித்து இருப்பதாக மக்கள் உணரும் மாநிலங்களில், பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலகுவதற்கான அபாயமும் அதிகமாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

பள்ளியில் தொடங்கும் பயணம் பாதியில் நின்றுவிடுவது ஏன்?

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள மற்றொரு முக்கியமான விஷயம், குழந்தைப் பருவத்தில் அதிகமாக இருக்கும் விளையாட்டு மீதான ஆர்வம் வளர்ந்த பிறகும் நீடிக்கவில்லை என்பதாகும்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 74% பேர் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது விளையாடியதாகக் கூறுகிறார்கள். பெண்களிடையே இந்த விகிதம் 70 சதவிகிதமாக உள்ளது.

பெண்கள் சிறு வயதில் விளையாடிய இடங்களில் பள்ளி மிக முக்கியப் பங்கு வகிப்பதாக அறிக்கை கூறுகிறது. சிறுவயதில் விளையாடிய பெண்களில் 37% பேர் பள்ளியில்தான் அதிகமாக விளையாடியதாகக் கூறியுள்ளனர்.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

பட மூலாதாரம், Getty Images

ஆண்களுக்கு அக்கம்பக்கம், தெரு, நண்பர்கள் வட்டம் போன்ற சமூக இடங்களும் விளையாட்டுத் தளங்களாக இருக்கும் நிலையில், பெண்களின் விளையாட்டு அனுபவம் அதிகம் ‘கட்டமைக்கப்பட்ட’, ‘அனுமதி கிடைத்த’ இடங்களுக்குள் மட்டுமே சுருக்கப்படுகிறது.

பள்ளி அளவில் மாணவிகள் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால், கல்லூரிக்குப் பிறகு? வேலையில் சேர்ந்த பிறகு? திருமணத்திற்குப் பிறகு?

ஒரு நகரப் பகுதி அல்லது கிராமத்தில், ஒரு பெண் மாலை நேரத்தில் சுலபமாகச் சென்று விளையாடக்கூடிய திறந்தவெளி மற்றும் பாதுகாப்பான இடங்கள் எவ்வளவு உள்ளன?

இந்த இடைவெளியே இந்தியா முழுவதும் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு இருக்கும் ஒரு பெரிய சவால் என்று அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டிலும் இதே கேள்வி தவிர்க்க முடியாததாக உள்ளது.

நேரமின்மை: மறைந்து நிற்கும் பெரிய தடுப்புச் சுவர்

பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்குப் பெரிய தடையாக பாதுகாப்பின்மை சொல்லப்பட்டாலும், அதற்கு நிகராகச் சொல்லப்பட்ட மற்றுமொரு காரணம் நேரமின்மை.

அறிக்கைப்படி, மொத்தமாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 41% இந்தியர்கள் தங்களுக்கு விளையாட நேரமில்லை எனக் கூறியுள்ளனர். இது சாதாரண பதில் போலத் தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் வேலை-வாழ்க்கை சமநிலை, நீண்ட வேலை நேரம், போக்குவரத்துப் பயணத்தால் ஏற்படும் சோர்வு, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு ஆகிய பல விஷயங்கள் இருக்கின்றன.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

குறிப்பாக, பெண்கள் வேலைக்கும் சென்று, வீட்டுப் பொறுப்புகளையும் அதிகமாகச் சுமக்கின்ற சூழலில், விளையாட்டு என்பது அவர்களுக்கான ‘அதிகப்படியான நேரம் இருந்தால் செய்யக்கூடிய’ செயலாகப் புறந்தள்ளப்படுகிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சென்னை போன்ற நகரங்களில் நீண்ட பயண நேரம், தனியார் வேலைப்பழு, தேர்வுக்குப் பிந்தைய கல்வி/வேலை அழுத்தம் ஆகியவை இருந்தாலும், மாவட்டங்கள், சிற்றூர்களில்கூட பெண்களுக்கு வீட்டு வேலை, பராமரிப்பு பொறுப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவை நேரத்தைச் சுருக்கும். விளையாட்டு மீது ஆர்வம் இருந்தாலும், அதற்கு தினசரி வாழ்வில் இடம் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது.

இதனால், “பெண்கள் விளையாட்டில் அதிகமாகத் தெரிகிறார்கள்” என்ற வெளிப்படையான முன்னேற்றத்திற்கும், “பெண்கள் சீராக விளையாட ஏதுவான வாழ்க்கையை வாழ்கிறார்களா?” என்ற அடிப்படைக் கேள்விக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது.

பார்வையாளர்கள் அதிகரித்தாலும் மாறாத மனப்பான்மை

மகளிர் விளையாட்டுகளை நேரலையிலும் நேரடியாகச் சென்றும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் 59% பேர் கடந்த ஆறு மாதங்களில் மகளிர் விளையாட்டு நிகழ்வுகளைப் பார்த்திருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இதில், மகளிர் விளையாட்டுகளுக்கான பார்வையாளர்களை அதிகபட்சமாகக் கொண்டுள்ள மாநிலங்களில் 65% பேருடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதேவேளையில், பெண்களின் விளையாட்டைப் பற்றிய எதிர்மறையான சமூக மனப்பான்மைகள் பல இடங்களில் இன்னும் குறையாமல் இருப்பதாகவும் சில இடங்களில் அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக அறிக்கைப்படி, 43% பேர் மகளிர் விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளைவிடக் குறைவான பொழுதுபோக்கு அம்சம் கொண்டது என நம்புகிறார்கள். அதோடு, 46% பேர் விளையாட்டு வீராங்கனைகள் கவர்ச்சியாகத் தோன்ற வேண்டுமெனக் கருதுகிறார்கள். 38% பேர் ஆண்கள் அளவுக்கு வீராங்கனைகள் திறமையானவர்கள் இல்லையென்ற மனப்பான்மை தங்களுக்கு இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

இது வெறும் ஆண்களின் கருத்து மட்டுமே இல்லையென்றும், பெண்கள் மத்தியிலும் இத்தகைய பார்வைக்கு ஆதரவு இருப்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அதாவது, மகளிர் விளையாட்டுகள் பிரபலம் அடைந்துள்ளது, ஆனால் பரவலாகவும் முழுமையாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு மாநிலம், பெண்கள் விளையாட்டைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்தாலும், பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், எப்படித் தோன்ற வேண்டும், எவ்வளவு ‘பெண்மையானவர்களாக’ இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் மனப்பான்மை அங்கு வலுவாக இருந்தால், அங்கு விளையாட்டின் வளர்ச்சி வெளித்தோற்றத்திற்குப் பாராட்டப்பட்டாலும், உள்ளிருந்து கட்டுப்படுத்தப்படும் சூழலை இது உருவாக்கும்.

விளையாட்டை தொழிலாக நினைக்கும் பெண்களில் தமிழ்நாடு முன்னிலை

தமிழ்நாடு குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள முக்கியமான நேர்மறை கண்டுபிடிப்புகளில் ஒன்று, பெண்கள் விளையாட்டை ஒரு தொழிலாகக் கருதுவதன் விகிதம்.

மொத்தமாக பெண்களில் 17% பேர் விளையாட்டை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதி சிந்தித்ததாகக் கூறியிருக்க, 25 வயதுக்கு உட்பட்ட பெண்களில் இந்த அளவு 26 சதவிகிதமாக இருக்கிறது.

இதையே மாநில அளவில் பார்த்தால், மகளிர் விளையாட்டுகளை தொழில்வாய்ப்பாகக் கருதுவதில் தமிழ்நாடு 27 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இது, பெண்கள் வெறுமனே பார்வையாளர்களாக அல்லது ஆதரவாளர்களாக மட்டுமே இல்லாமல், ‘நானும் இதை என் வாழ்க்கைப் பாதையாகத் தேர்வு செய்யக்கூடும்’ என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பதற்கான வலுவான அறிகுறியாக உள்ளது.

பிற தொழில் வாய்ப்புகளைப் போலவே விளையாட்டையும் ஒரு உண்மையான வாழ்க்கைப் பாதையாகப் பெண்கள் பார்க்கத் தொடங்குவது, மகளிர் விளையாட்டின் சமூக மதிப்பு உயர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறி. ஆனால், இந்தக் கனவு நனவாக வேண்டுமெனில் பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்தில் பயிற்சி அமைப்பு, மாவட்ட அளவிலான போட்டி வாய்ப்புகள், பெண்களுக்குப் பாதுகாப்பான பயிற்சி சூழல், தொடர்ந்து வருமானம் ஈட்டக்கூடிய விளையாட்டு அமைப்புகள் ஆகியவை தேவைப்படும்.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு குறித்து அறிக்கை கூறுவது என்ன?

இந்த ஆய்வு தமிழ்நாட்டைப் பற்றி ஒருசேர இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. முதலாவதாக, பெண்கள் விளையாட்டில் சமூக ஆர்வம், பார்வையாளர் வளர்ச்சி, தொழில்முறை கனவு ஆகியவை உண்மையில் அதிகரித்துள்ளன. ஆனால் அதேவேளையில், பாதுகாப்பு, நேரமின்மை, பாலின பிம்பங்கள், பள்ளிப் பருவத்திற்குப் பிந்தைய இடைவெளி போன்ற அடிப்படை சமூகத் தடைகள் இன்னும் நீங்கவில்லை.

தமிழகத்தில் கபடி போன்ற உள்ளூர் விளையாட்டு அடையாளங்கள், பெண்கள் தொழில்வாய்ப்பாக விளையாட்டை நினைக்கும் முன்னோக்குப் பார்வை ஆகிய இரண்டும் ஒருசேர இருப்பது ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொடுக்கிறது.

இருப்பினும் அந்த வாய்ப்பு எளிதானதல்ல. விளையாட்டில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை உயர்வது மட்டுமே போதாது, அவர்கள் பாதுகாப்பாக விளையாட முடியுமா, பள்ளிப் பருவத்திற்குப் பிறகும் தொடர முடியுமா, குடும்பமும் சமூகமும் அதை ஏற்றுக்கொள்ளுமா, விளையாட்டைத் தொழிலாகத் தேர்வு செய்தால் அதில் நிலைத்திருந்து வாழ முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில்களை வடிவமைக்க வேண்டும்.

இல்லையெனில், மகளிர் விளையாட்டு மீதான தமிழகத்தின் ஆர்வம் பார்வையாளர் மட்டத்திலேயே தங்கி, பங்கேற்புப் புரட்சியாக மாறாமல் தணிந்துவிடும்.

அறிக்கையிலுள்ள தரவுகளின்படி தற்போதைய நிலையைப் பார்த்தால், தமிழ்நாட்டில் மகளிர் விளையாட்டு மாற்றமும் முரண்பாடும் இரண்டறக் கலந்த ஒரு கதையாகவே உள்ளது.

பெண்கள் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். இப்போது அந்த மைதானம் அவர்களுக்கான இடமாக மாறக்கூடிய சூழல் ஏற்படுமா என்பதே அடுத்த பெரிய கேள்வியாக இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இந்த ஆய்வின் அடிப்படையிலான கணக்கெடுப்பு காந்தர் இந்தியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது, அவர்களே 2020ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வையும் நடத்தினர். இந்தத் திட்டத்தில், இந்தியாவின் பதினான்கு மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரை தனியார் இடங்களில் டேப்லெட் மூலம் நேருக்கு நேர் (CAPI) நேர்காணல் செய்யப்பட்டது.

வயது, பாலினம், சமூக-பொருளாதார வகுப்பு (NCCS), கிராமப்புறம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்ட பதினான்கு மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இந்த மாதிரியின் நோக்கமாகும்.

இரண்டு ஆய்வுகளின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதி செய்வதற்காக, புதிதாகச் சேர்க்கப்பட்ட சில கேள்விகளைத் தவிர, கணக்கெடுப்புக்கான வினாப்பட்டியலும், கணக்கெடுப்பின் மாதிரி முறையும் மாறாமல் அப்படியே இருந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU