Home Latest news tamil சமீபத்திய செய்தி பூமி போலவே இன்னொரு கிரகத்தில் உயிர்கள் வாழும் அறிகுறி – நாசா ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

பூமி போலவே இன்னொரு கிரகத்தில் உயிர்கள் வாழும் அறிகுறி – நாசா ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

3
0

SOURCE :- BBC NEWS

விண்கலம்

  • எழுதியவர், பல்லப் கோஷ்
  • பதவி,
  • 20 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சில அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது அறிவை மட்டும் வளர்ப்பதில்லை. அதை விட பெரிய தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தின் அளவையும், அதில் நமது இடத்தையும் நமக்கு வெளிப்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள், நமது உளவியலில் ஒரு மாற்றத்தை உருவாக்குகின்றன.

முதன்முறையாக பூமியின் படங்களை நமக்கு விண்கலம் அனுப்பியது அவற்றில் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகின்றது.

அதேபோல், பூமியில் வாழும் சிறிய கடல் உயிரினங்களால் உருவாக்கப்படும் ஒரு வாயு, K2-18b என்ற கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகியுள்ள செய்தியின் மூலம், வேறொரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை நாம் நெருங்கியுள்ளோம்.

இப்போது வேற்றுகிரக உயிர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை. அதாவது, நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை என இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானி கூறுகிறார்.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கு மதுசூதன் கூறுகையில்,

“இது மிக அடிப்படையான, மிகப் பெரிய கேள்விகளில் ஒன்றாகும். அந்த கேள்விக்கான பதிலை நெருங்கி விட்டோம் ” என்றார்.

ஆனால் இந்த கண்டுபிடிப்பு, மேலும் பல கேள்விகளை எழுப்புகின்றது.

குறிப்பாக, வேறொரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தால், ‘மனித இனமாக’ அது நம்மில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

பறக்கும் தட்டுகள் மற்றும் அறிவியல் புனைகதையில் வரும் வேற்றுகிரகவாசிகள்

100 பில்லியன் கிரகங்கள்

நமது முன்னோர்கள் வேறு கிரகங்களில் வாழக்கூடிய உயிரினங்களைப் பற்றிய கதைகளை நீண்ட காலமாகக் கூறி வந்துள்ளனர்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், செவ்வாயின் மேற்பரப்பில் நேராக உள்ள கோடுகள் போல தோன்றும் அமைப்புகளை வானியலாளர்கள் கவனித்தனர்.

இதனால், பூமிக்கு அருகிலுள்ள இந்த கிரகத்தில் ஒரு மேம்பட்ட நாகரிகம் இருக்கலாம் என்ற ஊகம் உருவாயிற்று. அந்த ஊகமே பறக்கும் தட்டுகள், சிறிய பச்சை வேற்றுகிரகவாசிகள் போன்ற அறிவியல் புனைகதை கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு காரணமாகியது.

இது கம்யூனிசத்தின் பரவலைப் பற்றிய அச்சத்தை மேற்கத்திய அரசாங்கங்கள் தூண்டிய காலகட்டத்தில் நிகழ்ந்தது.

அப்போது, விண்வெளியில் இருந்து வருகிற உயிரினங்கள் பெரும்பாலும் நம்பிக்கையின் தூதுவர்களாக குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களாகவே சித்தரிக்கப்பட்டன.

ஆனால் பல ஆண்டுகள் கடந்த பிறகும், வேறொரு கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கு “இதுவரையில் மிகவும் வலிமையான ஆதாரம்” எதுவும் செவ்வாய் அல்லது வீனஸிலிருந்து இருந்து கிடைக்கவில்லை.

மாறாக, நூற்றுக்கணக்கான டிரில்லியன் மைல்கள் தொலைவில், தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கிரகத்திலிருந்து கிடைத்துள்ளது.

வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்வதில் உள்ள சவால், எங்கு தேட வேண்டும் என்பதை அறிந்துகொள்வதில் தான் உள்ளது.

சமீப காலத்திற்கு முன்பு வரை, உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிவதற்கான நாசாவின் தேடுதல் வேட்டை, செய்வாய் கிரகத்தைச் சுற்றியே இருந்தது. ஆனால் 1992-இல் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் முதல் கிரகம் கண்டறியப்படத்திலிருந்து, அந்தப் பார்வை மாற்றமடையத் தொடங்கியது.

தொலைதூர நட்சத்திரங்களைச் சுற்றி வேறு உலகங்கள் இருப்பதாக வானியலாளர்கள் சந்தேகித்தாலும், அதுவரை எந்த ஆதாரமும் இல்லை. அதன் பிறகு, நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 6,000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் சனி போன்ற பல கிரகங்கள் ‘ராட்சத வாயுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மற்ற சில கிரகங்கள் மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ உள்ளன. அதனால் உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாக கருதப்படும் நீரை அந்தக் கிரகங்கள் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

ஆனால் வானியலாளர்கள் “கோல்டிலாக்ஸ் மண்டலம்” என்று அழைக்கும் இடத்தில் பல கிரகங்கள் உள்ளன, அங்கு (அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல்) உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்”சரியாக” உள்ளது.

மேலும் நமது விண்மீன் மண்டலத்தில் ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கலாம் என்று பேராசிரியர் மதுசூதன் நம்புகிறார்.

பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம்

புறக் கோள்கள்கள் (சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்) என்று அழைக்கப்படும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, விஞ்ஞானிகள் அவற்றின் வளிமண்டலத்தின் ரசாயன கலவையை பகுப்பாய்வு செய்ய கருவிகளை உருவாக்கத் தொடங்கினர். அவர்களின் லட்சியம் பிரமிக்க வைத்தது. சிலர் இதனை துணிச்சலான முயற்சியாகப் பார்த்தனர்.

இந்த தொலைதூர கிரகங்களின் வளிமண்டலங்கள் வழியாக செல்லும் சிறிய அளவிலான நட்சத்திர ஒளியைச் சேகரித்து, பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உருவாக்கப்படும் மூலக்கூறுகளின் ரசாயன குறியீடுகளை ஆய்வு செய்வதே அவர்களின் திட்டமாக இருந்தது.

அதனை ஆய்வு செய்வதற்காக, நிலத்திலிருந்தும், விண்வெளியிலிருந்தும் செயல்படும் தொலைநோக்கிகளுக்கான கருவிகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.

இந்த வாரம் K2-18b என்ற கிரகத்தில் வாயுவை கண்டறிந்தது நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST), இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே, விண்வெளியில் இருந்து செயல்படும் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியாக உள்ளது.

2021 இல் விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி, வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைத் தேடும் பயணத்தில் பெரும் முன்னேற்றம் கிடைத்துள்ளது என்ற உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

K2-18b என்பது பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் ஆகும். இது பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், NASA

“ஆனால் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிக்கு அதன் வரம்புகள் உள்ளன . அதிக ஒளியின் காரணமாக, அது நம்மைப் போன்ற சிறிய கிரகங்களை அல்லது அவற்றின் தாய் நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள கிரகங்களை கண்டறிய முடியாது. அதனால், உயிர்கள் வாழக்கூடிய உலகங்களைக் கண்டறியும் ஆய்வகத்தை (HWO: Habitable Worlds Observatory) 2030 களில் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இது நமது கிரகத்தைப் போன்ற கிரகங்களின் வளிமண்டலங்களைக் கண்டறிந்து அவற்றின் மாதிரிகளை கண்டறியும். (இது நட்சத்திரத்தின் ஒளியைத் தடுக்கும் உயர் தொழில்நுட்ப சூரியக் கவசத்தைப் பயன்படுத்துவதால், அதைச் சுற்றியுள்ள கிரகத்தை குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும்)”

இந்த தசாப்தத்தின் கடைசியில், ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) ‘மிக பெரிய தொலைநோக்கி’ (ELT) பயன்பாட்டுக்கு வரும். இது நிலத்தில் நிறுவப்பட்டு, சிலி பாலைவனத்தின் தெளிந்த வானத்தை ஆய்வு செய்யும்.

39 மீட்டர் விட்டமுள்ள மிகப்பெரிய பிரதிபலிப்பு கண்ணாடியைக் கொண்ட இந்த தொலைநோக்கி, இதற்கு முன் இருந்த அனைத்து தொலைநோக்கிகளையும் விட கிரகங்களின் வளிமண்டலங்களை மேலும் விரிவாகவும் தெளிவாகவும் பார்க்கும் திறன் கொண்டது.

அதிக கண்டுபிடிப்புகள், அதிக கேள்விகள்

K2-18b கிரகத்தைச் சுற்றி உயிர்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை திட்டவட்டமாக நிரூபிக்க, இரண்டு ஆண்டுகளுக்குள் போதுமான தரவுகள் கிடைக்கும் என்று பேராசிரியர் மதுசூதன் நம்புகிறார்.

ஆனால் அவர் தனது இலக்கை அடைந்தாலும், ‘வேறொரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது’ என்பதற்கான உறுதியான ஆதாரமாக, அந்தக் கண்டுபிடிப்பு மக்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, அது பெரிதாக கொண்டாடப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

அதற்கு பதிலாக, உயிர்கள் அங்கு வாழ்வதற்கான அடையாளங்கள், உண்மையாகவே உயிரினங்களால் ஏற்பட்டதா, அல்லது உயிரற்ற பிற கூறுகளால் ஏற்பட்டதா என்பதைக் குறித்தான ஒரு அறிவியல் விவாதத்துக்கான தொடக்கமாக அது அமையும்.

நாசா

பட மூலாதாரம், Reuters

இதேபோல், வெவ்வேறு கிரக வளிமண்டலங்களிலிருந்து அதிகமான தரவுகள் கிடைக்கும் வேளையில், உயிர்கள் அங்கு வாழ்வதற்கான அடையாளங்களுக்கு வேறு காரணங்களை விளக்குவதில் வேதியியலாளர்களும் தோல்வியடையும்போது, ‘வேறொரு உலகத்தில் உண்மையாகவே உயிர்கள் இருக்கலாம்’ என்ற கருத்து மெல்ல மெல்ல உருவாகும் என்கிறார், எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காட்லாந் அரசு வானியலாளர் பேராசிரியர் கேத்தரின் ஹெய்மன்ஸின்.

“தொலைநோக்கிகளை அதிகம் பயன்படுத்தினால், இந்த கிரகங்களின் வளிமண்டலங்களில் என்னென்ன ரசாயனங்கள் இருக்கின்றன என்பதை வானியலாளர்கள் தெளிவாகக் காண முடியும். அது நிச்சயமாக உயிர்கள் வாழ்வதற்கான உறுதியான ஆதாரமாக இருக்காது. ஆனால் தரவுகள் அதிகரிக்கும்போது, அதுவும் ஒரே கிரகத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு அமைப்புகளில் மீண்டும் மீண்டும் தெரிந்தால், அது நம்பிக்கையை உருவாக்கும்,” என்கிறார்.

உலகளாவிய வலைப்பின்னல் (World Wide Web) என்பது தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தொடர்ச்சியான விளைவால் உருவானது. அது முதலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேபோல், மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பது பற்றிய கண்டுபிடிப்பு குறித்து தெரிய வரும் தருணத்தில் அது முழுமையாக கவனிக்கப்படவில்லை என்றாலும், மனித வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல், கலாச்சார மற்றும் சமூக மாற்றங்களில் ஒன்று நிகழ்ந்திருப்பது குறித்து மக்களுக்குப் பின்னர் புரியலாம்.​

ExoMars rover

பட மூலாதாரம், Getty Images

கையடக்க ஆய்வகங்களுடன் கூடிய ரோபோடிக் விண்கலங்களைக் கொண்டு, நமது சூரியக் குடும்பத்தில் உயிரினங்களை கண்டுபிடிப்பது ஒரு தெளிவான கண்டுபிடிப்பாக இருக்கும்.

அதன் மூலம், எந்தவொரு வேற்றுக் கிரக நுண்ணுயிரியும் ஆய்வு செய்யப்படக்கூடும், அல்லது பூமிக்கு கொண்டு வரப்படக்கூடும், வேற்றுகிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்பது குறித்து அறிவியல் ரீதியாக முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களையும் அந்தக் கண்டுபிடிப்பு வழங்கும்.

பல்வேறு விண்கலங்கள் மூலம் அனுப்பப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நமது சொந்த சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் அல்லது கடந்த கால உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிவியல் ஆதாரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. எனவே, அவற்றின் அறிகுறிகளைத் தேடுவதற்கான பல திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ExoMars ரோவர், 2028 இல் ஏவப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் கீழ் துளையிட்டு கடந்த காலத்திலும், தற்போதும் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகளை இது ஆராயத் தொடங்கும்.

செவ்வாய் கிரகத்தின் கடுமையான சூழலைக் கருத்தில் கொண்டால், புதைபடிவமான கடந்தகாலம் குறித்து, அதிகமாக கண்டுபிடிப்புகள் வெளிவருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சீனாவின் Tianwen-3 விண்கலமும், 2028 இல் விண்ணில் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ,

இதன் மூலம் அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 2031 ஆம் ஆண்டுக்குள் பூமிக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வியாழனில் உள்ள குளிரான நிலவுகளின் பனி சூழ்ந்த மேற்பரப்புகளின் கீழ், தண்ணீர் அல்லது பெரிய கடல்கள் இருக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிய, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை அங்கு தனித்தனியாக விண்கலங்களை அனுப்பியுள்ளன.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி

பட மூலாதாரம், NASA/ Reuters

ஆனால் விண்கலங்கள் உயிர்களைக் கண்டுபிடிப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, இந்த திட்டங்கள் அனைத்தும் எதிர்கால பணிகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன, என லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் மைக்கேல் டகெர்டி கூறுகிறார்.

“இது ஒரு நீண்ட மற்றும் மெதுவான செயல்முறை,” என்று விவரிக்கும் அவர், “லேண்டர் விண்கலத்தைப் பயன்படுத்துவது என்பது, எந்த நிலவை ஆராய்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதும், எங்கு தரையிறங்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் அடுத்த கட்டமாக இருக்கும்”என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “பனி மிகவும் தடிமனாக இருக்கும் பகுதிகளில் தரையிறங்குவதைத் தவிர்ப்பது முக்கியம். ஏனென்றால் அந்த மேற்பரப்பின் கீழே செல்ல எந்த வழியையும் கண்டறிய முடியாது. எனவே, இது ஒரு நீண்ட, மெதுவான செயல்முறை, ஆனால் இந்தப் பயணம் உற்சாகமானது” என்கிறார்.

“நாசா 2034 ஆம் ஆண்டில் சனியின் நிலவுகளில் ஒன்றான டைட்டனில் தரையிறங்குவதற்காக ‘டிராகன்ஃபிளை’ என்ற விண்கலத்தை அனுப்புகிறது. இது கார்பன் நிறைந்த ரசாயனங்களால் ஆன ஏரிகள் மற்றும் மேகங்கள் கொண்ட ஒரு விசித்திரமான அமைப்பு, அந்த கிரகத்திற்கு ஒரு வினோதமான ஆரஞ்சு நிறமான மூடுபனியை வழங்குகிறது. “வண்ணமயமான வானங்களைக்” கொண்ட அந்த உலகம், ‘தி பீட்டில்ஸ்’ பாடலான ‘Lucy in the Sky with Diamonds to mind’ யை நினைவிற்கு கொண்டு வருகிறது.

தண்ணீருடன், இந்த ரசாயனங்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒரு அத்தியாவசியப் பொருளாக கருதப்படுகிறது.

பேராசிரியர் டகெர்டி கிரகங்களை ஆய்வு செய்யும் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவர்.

பேராசிரியர் டகெர்டியிடம் , வியாழன் அல்லது சனியின் பனிக்கட்டிகளால் ஆன நிலவுகள் ஒன்றில் உயிர் இருப்பதாக நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, “இல்லை என்று பதில் கிடைத்தால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன்,” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அங்கு உயிர் வாழ்வதற்கு, “மூன்று விஷயங்கள் தேவை: வெப்பம் இருப்பதற்கான ஆதாரம், திரவ நீர் மற்றும் கரிம (கார்பன் அடிப்படையிலான) ரசாயனங்கள்.

அந்த மூன்று பொருட்கள் இருந்தால், உயிர் உருவாகும் வாய்ப்புகள் உண்மையாகவே அதிகரிக்கும்” என்று அவர் விளக்கினார்.

மனிதர்களின் ‘தனித்துவம்’ குறையுமா?

சிறிய உயிரினங்கள் வேறு கிரகங்களில் இருப்பது கண்டறியப்பட்டாலும், அங்கு சிக்கலான உயிரினங்களும் வாழ்கின்றன என்பதை உறுதி செய்ய முடியாது.

சிறிய உயிரினங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவை விண்மீன் மண்டலத்தில் “மிகவும் பொதுவானவையாக ” இருக்கக்கூடும் என பேராசிரியர் மதுசூதன் நம்புகிறார்.

“ஆனால் அங்கு சிறிய உயிர்களின் வாழ்கின்றன என்ற அடிப்படையில், பெரிய உயிரினங்கள் குறித்து கண்டறிவது அடுத்த விஷயம். இது இன்னும் பதில் தெரியாத கேள்வியாகவே உள்ளது. அந்த மாற்றம் எப்போது, எப்படி நடைபெறுகிறது? அதற்கு தேவையான சூழ்நிலைகள் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. மேலும், அந்த உயிர்களில் இருந்து அறிவாற்றலுடைய உயிர்கள் தோன்றுவது குறித்து அறிவது மற்றொரு பெரிய கண்டுபிடிப்பாகும்” என்கிறார் மதுசூதன்.

அந்த உயிர்களில் இருந்து அறிவாற்றலுடைய உயிர்கள் தோன்றுவது குறித்து அறிவது மற்றொரு பெரிய கண்டுபிடிப்பாகும்

பட மூலாதாரம், NASA

வேறொரு கிரகத்தில், சிறிய உயிரினங்களை விட, அறிவார்ந்த உயிரினங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவானது என்பதை ராயல் வானியல் சங்கத்தின் துணை நிர்வாக இயக்குநர் முனைவர் ராபர்ட் மாஸ்ஸி ஒப்புக்கொள்கிறார்.​

“பூமியில் உயிர்கள் தோன்றுவதை நாம் காணும் போது, அது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது.

பல செல்களைக் கொண்ட உயிரினங்கள் உருவாகவும், பின்னர் அவை பல்வேறு வகையான உயிரினங்களாக பரிணமிக்கவும் மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டன.”

“அந்த பரிணாம வளர்ச்சி நடைபெறுவதற்கு சாதகமான ஏதோ ஒன்று பூமியில் இருந்ததா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

அத்தகைய மாற்றம் மற்ற கிரகங்களிலும் நிகழ, பூமியைப் போன்று ஒரே மாதிரியான சூழல், அளவு, பெருங்கடல்கள் மற்றும் நிலப்பரப்புகள் அவசியமா? அல்லது இவை இல்லாமலும் அது நிகழ வாய்ப்பு உள்ளதா?”என்ற கேள்வியும் உள்ளது.

மேலும், வேற்றுகிரகத்தில் சிறிய உயிர்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அது அண்டவெளியில் மனிதகுலத்தின் படிநிலையை குறைப்பதற்கான ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

அது அண்டவெளியில் மனிதகுலத்தின் படிநிலையை குறைப்பதற்கான ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்

பட மூலாதாரம், NASA

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நாங்கள் பிரபஞ்சத்தின் மையத்தில் உள்ளவர்கள் என்று நம்பியிருந்தோம், ஆனால் வானியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும், நமது இடம் அந்த நிலைப்பாட்டிலிருந்து ‘இடம்பெயர்ந்துவிட்டது’. வேறொரு கிரகத்தில் வாழும் உயிர்களைக் கண்டுபிடிப்பது நமது சிறப்பினை மேலும் குறைக்கும்,” என்றும் அவர் கூறுகிறார்.

மறுபுறம், நமது சொந்த சூரிய குடும்பத்தில் இதுபோன்ற உயிரினங்கள் வாழ்வது குறித்து கண்டுபிடிக்கப்படுவது, அறிவியலுக்கு மட்டுமல்லாது, மனிதர்களுக்கும் நல்லது என்று பேராசிரியர் டோகெர்டி நம்புகிறார்.

இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் டோகெர்டி, “சிறிய உயிரினங்கள், அங்கு உயிர் வாழ்வது குறித்த கண்டுபிடிப்புகள், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நாம் முதன்முதலில் பரிணாம வளர்ச்சியடைந்த காலத்தில் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தோம் என்பதைப் பற்றி நமக்கு சிறந்த புரிதலை வழங்கும். எனவே, என்னைப் பொறுத்தவரை, இது பிரபஞ்சத்தில் நமது இடத்தைக் கண்டறிய உதவுகிறது” என்கிறார்.

“நமது சூரிய மண்டலத்தில் வேறு எங்காவது, அல்லது அதற்கு அப்பால் உயிர்கள் இருப்பதாக நமக்குத் தெரிந்தால், [அது] ஏதாவது ஒரு வகையில் எனக்கு ஆறுதலாக இருக்கும். நாம் ஏதோ ஒரு பெரிய அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதை அறிவது, நம்மை வலிமையுடைவர்களாக உணர வைக்கும்.”

புறக்கோள்கள்

பட மூலாதாரம், NASA

“இதற்கு முன்பு, மற்ற உலகங்களில் உயிர் வாழும் உயிரினங்கள் குறித்து, விஞ்ஞானிகள் இவ்வளவு கஷ்டப்பட்டு தேடியதில்லை, இதுபோன்ற பிரமிக்கவைக்கும் கருவிகளை பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு முன்னெப்போதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும், இந்த துறையில் பணிபுரியும் பலர், மற்ற கிரகங்களில் வாழும் உயிரினங்களை கண்டுபிடிப்பார்களா, இல்லையா என்பதை விட ‘அது எப்போது’ என்பது குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

மேலும், அச்சத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, வேற்றுகிரகவாசிகள் குறித்த கண்டுபிடிப்பு நம்பிக்கையை தரும் என்று பேராசிரியர் மதுசூதனன் கூறுகிறார்.

நாம் வானத்தைப் பார்க்கும்போது, ​​இயற்பியல் பொருள்கள், நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை மட்டுமே பார்க்காமல், நாம் ஒரு உயிருள்ள வானத்தைக் காண்போம். அதனால் ஏற்படும் சமூக மாற்றங்கள் மிகப்பெரியவை. இது பிரபஞ்ச வெளியில் நம்மைப் பார்க்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் மதுசூதனன், “நாமும் ஒருவரையொருவர் எப்படிப் பார்க்கிறோம் என்பது குறித்த மனித மனதின் அடிப்படையை இந்த கண்டுபிடிப்புகள் மாற்றும்.

மொழியியல், அரசியல், நிலவியல் போன்ற எந்தத் தடைகளும் கரைந்து போகும், ஏனெனில் நாம் அனைவரும் ஒன்று என்பதைக் கருதும்போது, அது நம்மை மேலும் நெருக்கமாக்கும்.

இது நமது பரிணாம வளர்ச்சியில் மற்றொரு படியாக இருக்கும்” என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC