SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், X/Narendramodi
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது.
சிலருக்கு தக்க வைப்பதற்கான போராட்டம் என்றால், வேறு சிலருக்கு அரசியல் இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டுடன் ஒரே நாளில் வாக்குப்பதிவை சந்தித்து வந்த புதுச்சேரியில், இந்த முறை தமிழ்நாட்டை விட சற்று முன்னதாகவே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், இந்த தேர்தலில் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது பல்வேறு மாறுபட்ட அம்சங்கள் புதுச்சேரியில் காணப்படுகின்றன. அவற்றில் 4 முக்கிய விஷயங்கள் என்ன?

முதல் பாஜக கூட்டணி ஆட்சி
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு 2021ஆம் ஆண்டு அமைந்தது.
இந்த 15வது சட்டப்பேரவையில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர்.
2018ஆம் ஆண்டு நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் பலமாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த பாஜக, 2021 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி வந்த நமச்சிவாயம், ஜான்குமார் போன்றவர்களுக்கு சீட் வழங்கி, தேர்தலில் வெற்றி பெற்று புதுச்சேரி அரசியலில் முக்கிய கட்சியாக உருவெடுத்தது.

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக பாஜக கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம் உள்துறை அமைச்சராக, முதல்வர் ரங்கசாமிக்கு அடுத்த முக்கிய இடத்தில் அமர்ந்தார்.
அமைச்சரவை ஒதுக்கீடு, மாநில அந்தஸ்து உள்ளிட்ட விஷயங்களில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே ஆட்சியின் தொடக்கம் முதலே சில முரண்பாடுகள் இருந்து வந்தன.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள ஒரே தொகுதியும் அந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக அறிவித்த பாஜக தனது வழக்கமான “இரட்டை என்ஜின்” பிரசாரத்தை முன்னிறுத்தியது. ஆனாலும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்திடம் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.
பாஜகவைச் சேர்ந்த சாய் சரவணகுமார் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஜான்குமாரை அமைச்சர் பதவிக்கு பாஜக முன்மொழிந்தது. அவர் 2025ஆம் ஆண்டு அமைச்சராக பதவியேற்றாலும், தேர்தல் அறிவிக்கப்படும் வரை அவருக்கு முதல்வர் ரங்கசாமி எந்த இலாகாவையும் ஒதுக்கவில்லை. கடைசி வரை இலாகா இல்லாத அமைச்சராகவே ஜான்குமார் இருந்தார்.
தமிழ்நாட்டுக்கு அருகில் தங்களது கூட்டணி ஆட்சி இருப்பதை பல புதுச்சேரி பாஜக தலைவர்கள் பெருமையாகக் கூறி வருகின்றனர். அதேபோல், மீண்டும் “இரட்டை என்ஜின்” என்ற முழக்கத்துடன், பிரதமர் மோதி உள்ளிட்ட பல பாஜக தேசிய தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட, மீதமுள்ள 14 இடங்களில் பாஜக, அதிமுக, லஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் 10 இடங்களில் பாஜக நிற்கிறது
பட மூலாதாரம், X/PYCONGRESS
காங்கிரஸ் – திமுக இடையே ‘நட்பு’ போட்டி
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
ஆனால், 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணியில் இரண்டாம் நிலையில் இருந்த திமுக 6 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் 2021 தேர்தலில் படுதோல்வி சந்தித்த பின்னர், புதுச்சேரியில் ஏற்கனவே ஆட்சி புரிந்துள்ள திமுக மாநில அரசியலில் மீண்டும் முக்கிய இடத்துக்கு முன்னேறியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அக்கட்சிக்கு கிடைத்தது.
2026 தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, புதுச்சேரி திமுக பொறுப்பாளராக எம்.பி. ஜெகத்ரட்சகனை அக்கட்சி தலைமை நியமித்தது. அதனைத் தொடர்ந்து, கூட்டணிக்குத் தலைமையாக கருதப்படும் காங்கிரஸை விடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
வேட்பு மனுத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முன்புவரை காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு பிரச்னை நீடித்தது. இறுதியாக, காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், திமுகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டன. திமுக தனது ஒதுக்கீட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
காலாப்பட்டு, ராஜ்பவன் போன்ற திமுகக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், காங்கிரஸ் சார்பில் சீட் கேட்டவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதேசமயம், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்களில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இதனால், ஒரே கூட்டணியில் இருந்தாலும், சில இடங்களில் காங்கிரஸ், திமுக, விசிக ஆகியவை மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. சில காங்கிரஸ் தலைவர்கள் இதனை “நட்பு ரீதியான போட்டி” எனக் கூறி, நிலைமையின் தீவிரத்தை குறைத்து காட்ட முயன்ற சம்பவங்களும் இடம்பெற்றன.
பட மூலாதாரம், X/PYCONGRESS
முதல்வர் – முன்னாள் முதல்வர் நேருக்கு நேர்
புதுச்சேரியில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிகழ்ந்துள்ளது.
இங்கு என்.ஆர். காங்கிரஸ் சார்பில் களம் இறங்கும் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். வைத்தியலிங்கம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆவார்.
தற்போதைய முதல்வரும் முன்னாள் முதல்வரும் நேருக்கு நேர் மோதுவதால், இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.
முன்பு இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள ரங்கசாமி, பின்னர் வேறு தொகுதிக்கு மாறினாலும், 2021ஆம் ஆண்டு மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மறுபக்கம், புதுச்சேரியில் நெட்டப்பாக்கம், காமராஜ் நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள வைத்தியலிங்கம், தட்டாஞ்சாவடியில் இதற்கு முன் போட்டியிட்டதே இல்லை.
தற்போதைய முதல்வரும் முன்னாள் முதல்வரும் நேருக்கு நேர் மோதும் இந்த தொகுதியின் தேர்தல் முடிவை புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பட மூலாதாரம், TVKHQ
அதிக கவனம் பெறும் சுயேச்சைகள்
காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய புதுச்சேரி அரசியலில் 2011ஆம் ஆண்டு என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சி களம் கண்டது. உட்கட்சி சிக்கல் காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி, புதிய கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே ரங்கசாமி ஆட்சியைப் பிடித்தார்.
அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
2021ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி படுதோல்வி சந்தித்தபோது, புதுச்சேரியில் மற்றொரு கட்சியின் வளர்ச்சியை மக்கள் கண்டனர். அந்தத் தேர்தலில்தான் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, ஆட்சியிலும் இடம்பெற்று, புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வழிவகுத்தது.
ஒரு காலத்தில் புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோதிலும், ஓர் இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.
2026 தேர்தலில் இரண்டு புதிய கட்சிகள் புதுச்சேரியில் களம் இறங்குகின்றன. ஒன்று விஜயின் தமிழக வெற்றிக்கழகம்; மற்றொன்று லாட்டரி தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சி.
ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரியில் தொழில் கூட்டாளியாக இருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மூலம் அரசியலில் நுழைந்தார். முதலில் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்த அவர், பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். தற்போது அவரது கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது; அதில் ஓரிடத்தில் அவரே களம் இறங்குகிறார்.
விஜயின் தமிழக வெற்றிக்கழகம், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருவர், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். பாஜகவின் புதுச்சேரி தலைவராகவும் நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சுவாமிநாதனும், என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த சாய் சரவணகுமாரும் இந்த முறை தவெக சார்பில் களம் இறங்குகின்றனர்.
காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும், முத்தியால்பேட்டை தொகுதியின் தற்போதைய சுயேச்சை உறுப்பினரும் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியிலும் தடம் பதிக்க முயலும் தவெக, பல இடங்களில் ஏற்கனவே அறிமுகமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தலில் மற்றொரு முக்கிய அம்சமாக, 6 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்ட நிலையில், ஏனாம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் அவர் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் பிரதான எதிர்கட்சிக்கு இணையான எண்ணிக்கையில் சுயேச்சைகள் வென்றது அதிக கவனம் பெற்றது.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
SOURCE : THE HINDU


