Home தேசிய national tamil பிளே ஆஃப் சுற்றில் மும்பை – ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்; தகர்ந்த டெல்லி...

பிளே ஆஃப் சுற்றில் மும்பை – ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்; தகர்ந்த டெல்லி அணியின் நம்பிக்கை

2
0

SOURCE :- BBC NEWS

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் 2025 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இருந்த ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில், அதில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று (மே 21) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 63-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களில் ஆட்டமிழந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

11வது முறை

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் பொறுப்பேற்றபின் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை அணி செல்கிறது. ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 11வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம், Getty Images

பிளே ஆஃப் சுற்றில் 4 இடங்கள் யாருக்கு?

ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத்தான் தகுதி பெற்றுள்ளன, அதில் முதலிடம் முதல் கடைசி இடம் வரை இன்னும் முடிவாகவில்லை. இதில், மும்பை அணி தவிர மற்ற 3 அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருப்பதால், அதில் வெற்றி தோல்வியைப் பொருத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்கள் முடிவாகும்.

மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருப்பதால் அதில் வென்றால் 18 புள்ளிகளுடன் 1.292 நிகர ரன்ரேட்டுக்கும் அதிகமாக சென்று, 2 அல்லது 3வது இடத்தைப் பிடிக்கலாம். அதேசமயம், பஞ்சாப் அணி 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட பஞ்சாப் அணி 3வது இடத்தைப் பிடித்துவிடும். அதேபோல, ஆர்சிபி அணியும் 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று, பஞ்சாபும் ஒரு போட்டியில் வென்றால் 19 புள்ளிகளில் நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் முடிவாகும். இல்லாவிட்டால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றால் 2வது இடம் கிடைக்கும்.

குஜராத் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வென்றால் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று, ஒன்றில் தோற்றால் 20 புள்ளிகள்தான் பெறும். ஆனால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம். ஆர்சிபி ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கும். அப்போது, குஜராத்தின் ஒரு வெற்றியே அந்த அணியை முதலிடத்துக்கு உயர்த்தும்.

டெல்லி அணியைப் பொருத்தவரை இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றால்கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது. ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்கத்தில் முதல் 4 போட்டிகளில் வென்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கடைசி நேரத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய முதல் அணி என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ளது. முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும், அடுத்த 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றதால்தான் டெல்லி அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியவில்லை.

அக்ஸர் படேல் கேப்டன்சியில் அற்புதமாக சீசனைத் தொடங்கி, முதல் 6 போட்டிகள் வரை முதலிடத்தில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாகத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீசனின் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்தது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவையும், நிகர ரன்ரேட்டில் பெரிய சரிவையும் ஏற்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

அதேசமயம், மும்பை அணி முதல் போட்டியிலேயே தோற்றாலும், ரோஹித் சர்மா, ரெக்கில்டன், பும்ரா ஆகியோர் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லாமல் இருந்து பின்னர் தொடர் வெற்றிகளுடன் மும்பை அணி அற்புதமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ளது.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்

டெல்லி அணியைப் பொருத்தவரை பந்துவீச்சில் மும்பையைக் கட்டுப்படுத்தி 18-வது ஓவர் வரை ஆட்டத்தை தங்கள் பக்கம்தான் வைத்திருந்தது. சூர்யகுமார், நமன் திர் இருவரும் கடைசி இரு ஓவர்களில் அடித்த 48 ரன்கள் தான் ஆட்டத்தையே திருப்பிவிட்டது.

ஒருவேளை இந்த இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக டெல்லி அணி வீசியிருந்தால், 150 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும். இந்த 2 ஓவர்களில்தான் ஆட்டத்தை மட்டுமல்ல வெற்றியையும் சேர்ந்து டெல்லி அணி இழந்தது. 43 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம், Getty Images

சிதைத்த பும்ரா, சான்ட்னர்

மும்பை அணியின் பந்துவீ்ச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணிக்கு தோல்வியைக் கொடுத்தனர். சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3.2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்து, டெல்லி அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினர்.

சூர்யகுமார் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றியதைப் போல், இருவரின் 5 ஓவர்களும் டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாகியது.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம், Getty Images

சேஸிங்கில் தோல்வியடைந்த டெல்லி

181 ரன்கள் இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. தீபக் சஹர் ஓவரில் டூப்பிளசிஸும், போல்ட் ஓவரில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தபோது பாதி நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அபிஷேக் போரெல் (6), நடுவரிசையில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (6), அசுடோஷ் சர்மா (18) ஆகியோர் ஏமாற்றியது டெல்லி அணியை தோல்விக்கு இழுத்து வந்தது.

சமீர் ரிஸ்வி (39), விப்ராஜ் நிகம் (20) ஆகியோர் சேர்த்ததுதான் டெல்லி அணியின் கௌரவமான ஸ்கோராகும். மற்ற வகையில் எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

மும்பை அணி திணறல்

மும்பை அணிக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா பெரிய தொடக்கத்தை அளிக்க முயன்றனர். ஆனால் முஸ்தஃபிசுர் பந்துவீச்சில் ரோஹித் சர்மா (5), முகேஷ் கமார் பந்துவீச்சில் ஜேக்ஸ் (21) ரன்னில் ஆட்டமிழந்தனர். பவர் பிளே ஓவருக்குள் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. குல்தீப் பந்துவீச்சில் ரெக்கிள்டன் (25) ரன்களில் ஆட்டமிழந்தபோது ஐபிஎல் போட்டிகளில் குல்தீப் 100-வது விக்கெட்டை எட்டினார்.

விப்ராஜ் நிகம், குல்தீப் இருவரும் சேர்ந்து மும்பை பேட்டர்கள் சூர்யகுமார், திலக் வர்மா திணறவிட்டதால் 10 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே மும்பை சேர்த்தது. தடுமாறிய திலக் வர்மா 27 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த கேப்டன் ஹர்திக் 3 ரன்னில் சமீரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி இரு ஓவர்கள்

நமன் திர், சூர்யகுமார் இருவரும் தங்களுக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். 18வது ஓவரை முகேஷ் குமார் வீசியபோதுதான் சூர்யகுமார், நமன்திர் அதிரடியாக ஆடி சிக்ஸர் பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சமீரா வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என சூர்யகுமார் விளாச மும்பை அணி 180 ரன்களை எட்டியது.

18-வது ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 2 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறி 180 ரன்களை எட்டியது. நமன் திர் 8 பந்துகளில் 24 ரன்களும், சூர்யகுமார் 73 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூர்யகுமார் கணக்கில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

டெல்லி அணியில் விப்ராஜ், குல்தீப் வீசிய 8 ஓவர்கள் தான் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து அவர்கள் கைவசம் வைத்திருந்தது. இருவரும் சேர்ந்து 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ், சமீரா இருவரும் கடைசி இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாகினர். முஸ்தபிசுர் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம், Getty Images

‘பணி எளிதாக இருந்தது’

வெற்றிக்குப் பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “உண்மையாகவே நான் யாரிடம் பந்தை வீசி பந்துவீசச் சொன்னேனோ அவர்களிடம் இருந்து பந்துவீச்சில் துல்லியம், கட்டுக்கோப்பு இருந்ததால் என் கேப்டன்சி பணி எளிமையாக இருந்தது. 180 ரன்கள் நல்ல ஸ்கோர்தான் என்றாலும், டெல்லி அணி வலுவாக ஆடியிருந்தால் இது பாதுகாப்பில்லாத ஸ்கோர்தான். நமன் திர், சூர்யாவும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இல்லாவிட்டால் 160 ரன்களுக்குள்தான் ஸ்கோர் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஆட்டங்களின் விவரம்

இன்றைய ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ்

இடம்: ஆமதாபாத்

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள் (12 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள் (12 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள் (13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU