Home தேசிய national tamil ‘பின்வாங்க வழியே இருக்காது’ – இரானுக்கு டிரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை என்ன?

‘பின்வாங்க வழியே இருக்காது’ – இரானுக்கு டிரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை என்ன?

6
0

SOURCE :- BBC NEWS

டிரம்ப், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் மறுபுறம், இரான் அமெரிக்காவின் அமைதி திட்ட முன்மொழிவை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இரான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ‘இரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும், பின்வாங்குவதற்கு வழியே இருக்காது’ என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மறுபுறம், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டிரம்ப், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், EPA

டிரம்ப் கூறியது என்ன?

‘மிகவும் தாமதமாகிவிடுவதற்கு முன்பே இதை விரைவாகவும் தீவிரமாகவும் அணுகுங்கள்’ என்று பேச்சுவார்த்தைகள் குறித்து இரானியத் தலைவர்களுக்கு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒரு சமூக ஊடகப் பதிவில், டிரம்ப் இரானின் பேச்சுவார்த்தையாளர்களை ‘மிகவும் விசித்திரமானவர்கள்’ என்று விவரித்துள்ளார்.

அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக அமெரிக்காவிடம் ‘கெஞ்சுகிறார்கள்’ என்று அவர் கூறுகிறார், மேலும் இரானின் ராணுவம் ‘நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது’ என்றும் ‘மீண்டு வருவதற்கு பூஜ்ய வாய்ப்புகளே உள்ளன’ என்றும் அவர் கூறுகிறார்.

“இருந்தபோதிலும், அவர்கள் எங்கள் ‘முன்மொழிவை பரிசீலிக்க மட்டுமே செய்கிறோம்’ என பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள். அது தவறு” என்று அவர் ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார்.

“இரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும், பின்வாங்குவதற்கு வழியே இருக்காது, அது நன்றாகவும் இருக்காது” என்று டிரம்ப் கூறுகிறார்.

புதன்கிழமை (மார்ச் 25) அன்று, இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “இரானிற்கு தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை” என்றார்.

“செய்திகள் நட்பு நாடுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த தகவல் பரிமாற்றங்கள் உரையாடலோ அல்லது பேச்சுவார்த்தையோ இல்லை” என்றும் அவர் கூறினார்.

டிரம்ப், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Tasnim

இரானின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்

இதற்கிடையே இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஹோர்மூஸ் நீரிணையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் நீரிணையைத் தடுத்தது போன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு டங்சிரி நேரடியாகப் பொறுப்பானவர்” என்றும், “டங்சிரி, குண்டு வீசி கொல்லப்பட்டார்” என்றும் தெரிவித்தார்.

மேலும், இரானின் பல மூத்த கடற்படைத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

இரான் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

அலிரேசா டங்சிரி 2018- ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் 2010 முதல் ஐஆர்ஜிசி கடற்படையின் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.

அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு எக்ஸ் தள கணக்கு இந்த ஆண்டு மார்ச் 10 முதல் செயல்பாட்டில் உள்ளது, அதில் உள்ள பதிவுகளை இரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டி வருகின்றன.

அந்தப் பதிவுகளில், அவர் ஹோர்மூஸ் நீரிணை பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

“இரானுக்கு எதிராக போர் புரியும் நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலுக்கும் இதைக் கடந்து செல்ல உரிமை இல்லை” என்று அந்த எக்ஸ் தள கணக்கின் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டங்சிரி, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஓர் இரானிய தளபதி ஆவார். கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில், இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU