Home தேசிய national tamil பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது?

பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது?

13
0

SOURCE :- BBC NEWS

பச்சா கான் பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Getty Images

“பல்கலைக்கழகத்திலிருந்து நான் நீக்கப்பட்ட விஷயம் எனது தந்தைக்கு தெரியாது. இது எனது தாய்க்கு மட்டுமே தெரியும்.”

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லோயர் டிர் மாவட்டத்தைச் சேர்ந்த முராத் கான், ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று பச்சா கான் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். அவர் உட்பட நான்கு மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியது.

வைரலான காணொளியில், ஒரு மாணவர் இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதையும், அவருடன் பல மாணவர்கள் இணைவதையும் காண முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பச்சா கான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்தை அறிய பிபிசி பலமுறை தொடர்பு கொள்ள முயன்றது. இருப்பினும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

வீடியோவில் என்ன இருக்கிறது?

இந்த வீடியோ பிப்ரவரி 11 அன்று மாலை பச்சா கான் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டது. அப்போது வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்திருந்தன.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில், பார்மசி மாணவர் ஜிப்ரான் ரியாஸ் இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதைக் கேட்க முடிகிறது. அவருடன் நின்று கொண்டிருந்த மற்ற சில மாணவர்களும் அவருடன் இணைந்து இந்திய தேசிய கீதத்தைப் பாடுகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13 அன்று பச்சா கான் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

 மாணவர், இந்திய தேசிய கீதம், பாகிஸ்தான், பல்கலைக்கழகம், பச்சா கான் பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Jibran Riaz/Social Media

அது குறித்து வெளியிடப்பட்ட பல்கலைக்கழக அறிவிப்பில், “ஜிப்ரான் ரியாஸ், சையத் கதீப் ஷா, பஷீர் கான் மற்றும் முராத் கான் ஆகியோர் அமைதியின்மையை உருவாக்கி தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்திய தேசிய கீதத்தைப் பாடினர். அவர்கள் அந்த சம்பவத்தைப் பதிவுசெய்து சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட நான்கு மாணவர்களும் தங்கள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 மாணவர், இந்திய தேசிய கீதம், பாகிஸ்தான், பல்கலைக்கழகம், பச்சா கான் பல்கலைக்கழகம்

‘வாய்ப்பு வழங்கப்படவில்லை’

இந்த வீடியோ வைரலான பிறகு, மாணவர் ஜிப்ரான் ரியாஸ் மற்றொரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கிறார்.

“இளைஞர் விழாவில் அனைத்து மாணவர்களும் கூடியிருந்தனர். நாங்கள் அடிக்கடி இந்தியப் பாடல்களைப் பாடுவது அல்லது கேட்பது போல, நானும் தேசிய கீதத்தைப் பாடினேன். பிறகு எனது நண்பர் ஒருவர் நான் பாடிய வீடியோ வைரலாகிவிட்டதாக என்னிடம் கூறினார்” என்று அவர் கூறினார்.

“பாகிஸ்தான் எங்கள் சொந்த நாடு, அதற்கு எதிராக சிந்திக்கக்கூட முடியாது, இந்தியா எங்கள் எதிரி” என்று அவர் கூறினார்.

மறுபுறம், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றொரு மாணவர் முராத் கான், “சம்பவத்திற்குப் பிறகு, எங்களை அழைத்தார்கள். நாங்கள் ஒரு வீடியோவில் தோன்றியதாக மட்டுமே கூறினார்கள்” என்று கூறுகிறார்.

தங்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், ஒரு அறிவிப்பு மூலம் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

“எங்களுக்கு விளக்கமளிக்க ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. எங்கள் வாழ்க்கை பாழாகிவிட்டது. அடுத்த செமஸ்டர் மற்றும் விடுதிக்கான கட்டணங்களை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம்” என்று அவர் கூறினார்.

“இத்தகைய செயலுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. தேசிய கீதம் முடிந்ததும், ஜெய் ஹிந்த் என முழக்கத்தை மட்டுமே நான் கூறினேன்” என்று முராத் கான் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU