SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) நடந்த தீவிரவாதத் தாக்குதல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாகவும், நெடுஞ்சாலை மூலமாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து சுற்றுலாப் பயணிகள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
“தீவிரவாதிகள் எங்கே இருக்கிறார்கள், அடுத்து என்ன நடக்கக்கூடும் என்று எங்களுக்குத் தெரியாததால் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம்” என்று சுற்றுலாப் பயணியான கௌதம் பிபிசியிடம் கூறினார்.
அடுத்து வரவிருக்கும் நாட்களில், காஷ்மீரை சுற்றிப் பார்க்க அவர் விரிவான திட்டங்களை வைத்திருந்தார். ஆனால் இப்போது அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீரில் பல தசாப்தங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல்கள் அரிதானவை.
“சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது” என்று ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறினார்.
கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியமான காஷ்மீர் தொடர்பாக இரு அண்டை நாடுகளும் சண்டையிட்டுக் கொள்கின்றன.
காஷ்மீர் முழுவதையும் இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. ஆனால் இரு நாடுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதிகளை வைத்துள்ளன.
கடந்த 1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும், இந்திய ஆட்சியின் மீதான அதிருப்தி இப்பகுதியில் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்வதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்தக் கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
“கடந்த 2004, 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 7,217 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை, இந்த எண்ணிக்கை 2,242 ஆகக் குறைந்துள்ளது” என்று கடந்த மார்ச் மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.
காஷ்மீரில் சுற்றுலா தொழில்

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா பெரும் பங்கு வகிக்கிறது. இந்தத் துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 20 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்ததாக இந்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கோவிட் காலகட்டத்திற்கு முந்தைய நிலைமையைவிட 20 சதவீதம் அதிகம்.
இருப்பினும், பஹல்காம் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் அளவு குறையுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
“எல்லாம் முடிந்துவிட்டது, நான் அழுதுகொண்டிருக்கிறேன்” என்றார் பஹல்காமில் உள்ள சால்வை வியாபாரியான ஷகீல் அகமது.
பிபிசியிடம் பேசிய அவர், “எங்கள் முழு வாழ்க்கையும் சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்தே இருக்கும். நான் வங்கியில் கடன் வாங்கியிருந்தேன். ஆனால் இப்போது என் பொருட்களை வாங்க இங்கே யாரும் இல்லை” என்றார்.

இந்தப் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தும் ஜாவேத் அகமது, “கொடூரமான, மனிதாபிமானமற்ற” இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இது காஷ்மீர் மக்களுக்கும், இந்தப் பகுதியின் சுற்றுலாத் துறைக்கும் ஒரு மோசமான செய்தி என்று கூறுகிறார்.
வரும் ஜூன் மாதம் வரை அகமதுவின் ஹோட்டலில் தங்க, சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள், அவர்களது முன்பதிவுகளை ரத்து செய்வதால் தனது தொழில் பாதிக்கப்படும் என்று அவர் இப்போது அச்சத்தில் உள்ளார்.
முன்பதிவுகளை ரத்து செய்யும் சுற்றுலா பயணிகள்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் நேரம் இது. பள்ளி விடுமுறை நாட்களில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்து பல்வேறு குடும்பங்கள் குளுமையான இந்தப் பகுதிக்கு சுற்றுலா வருகின்றனர். ஆனால் இந்தப் பள்ளி விடுமுறை நாட்கள், காஷ்மீர் பகுதியில் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
குழுவாக மக்கள் சுற்றுலா செல்வதை ஏற்பாடு செய்யும் மும்பையை சேர்ந்த அபிஷேக் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் சன்சாரே, “ஸ்ரீநகரில் ஏற்கெனவே உள்ள சில சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் இருக்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி இனி அங்கு செல்லத் திட்டமிட்டிருப்போர் இடையிலும் பயம் கலந்த கோபம் இருக்கிறது” என்று பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
“இதன் விளைவாகத் தங்களது முன்பதிவுகளைப் பல்வேறு மக்கள் ரத்து செய்வதாகவும்” அவர் கூறுகிறார்.
உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் மோதியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி உள்ளூர் காஷ்மீர் மக்களும் போராட்டப் பேரணிகளை நடத்தினர். ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் தனது நாட்டிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள், இந்திய அரசுக்கு எதிரான உள்நாட்டு கிளர்ச்சிகளின் விளைவாகவே நிகழ்ந்ததாக அவர் வர்ணித்தார். மேலும், இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை காரணம் காட்டுவது “எளிதானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்து வந்த சுற்றுலாத் துறை

பட மூலாதாரம், Getty Images
பஹல்காம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இரண்டு அணு ஆயுதம் ஏந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் 2019ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இந்தப் பிராந்தியத்திற்கு அரசமைப்பின் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து மோசமடைந்துள்ளன. அந்தச் சிறப்பு அந்தஸ்து இந்தப் பிராந்தியத்திற்குக் கணிசமான தன்னாட்சியை வழங்கியது.
இதன் பிறகு, அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன.
அந்த முடிவைத் தொடர்ந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பள்ளிகளும் அலுவலகங்களும் மாதக்கணக்கில் மூடப்பட்டன. அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரம்கூட கட்டுப்படுத்தப்பட்டது.
மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ஆனால், அதை உறுதி செய்ததுடன், ஐந்து ஆண்டுகளுக்குள் இப்பிராந்தியத்தில் தேர்தல்களை நடத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், இப்பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா செயற்குழுக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் ஏராளமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அந்தப் பிராந்தியத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு, 2024ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் பகுதிக்குத் தனது முதல் பயணத்தின்போது, உள்ளூர் விவசாயம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் 64 பில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.
“ஜம்மு-காஷ்மீர் இப்போது சுதந்திரமாக இருக்கிறது என்பதால், அது வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைய முடிகிறது. இந்தச் சுதந்திரம் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு வந்தது. இந்தs சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது” என்று பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
‘சுற்றுலா பயணிகள் வெளியேறுவது வேதனை அளிக்கிறது’

பட மூலாதாரம், Getty Images
ஆனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டத்திலேயே சிலர் இதில் ஒருவிதமான ஆபத்து இருப்பதாக எச்சரித்திருந்தனர்.
“சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மட்டுமே அந்தப் பிராந்தியத்தின் இயல்பு நிலையைக் குறிக்காது. அது பொருளாதார நடவடிக்கைக்கான ஓர் அளவுகோல் மட்டுமே. இயல்பு நிலை என்பது பயம் இல்லாதது, பயங்கரவாதம் இல்லாதது, தீவிரவாதிகள் விரும்பியபடி தாக்குதல் நடத்த முடியாதது, ஜனநாயக ஆட்சி இருப்பதுதான். நீங்கள் பயன்படுத்தத் தேர்வு செய்யும் எந்த அளவுகோலின்படி பார்த்தாலும், காஷ்மீர் இன்று இயல்பு நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது” என்று 2022ஆம் ஆண்டு உமர் அப்துல்லா கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற தேர்தலில் உமர் அப்துல்லா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது” என்று பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாநிலத்தில் வரும் மொத்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் பஹல்காமுக்குதான் வருகிறார்கள். பசுமையான புல்வெளிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்ற இந்த இடம், திரைப்படப் படப்பிடிப்பிற்குப் பெயர்போனது. இதுநாள் வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் நிகழாத இடமாக இது இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நடந்த தாக்குதல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த இடத்தைப் பற்றிய உண்மையான நிலவரம் நாடு முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று காஷ்மீர் ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் சார்பாக ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மெஹபூப் ஹுசைன் மிர் கூறுகிறார்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பும் தாக்குதல்கள் நடந்துள்ளன, இப்போதும் நடக்கின்றன. ஒவ்வொரு முறை கிளர்ச்சிகள் ஏற்படும்போதும், உள்ளூர் மக்களே பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் இதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும். இல்லையெனில் எங்கள் வாழ்க்கை தொடர்ந்து ஊசலாட்டத்தில் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU