SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், UGC
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய “பெரிய ” மற்றும் தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் இரான் பதில் தாக்குதலில் நடத்தியது. துபையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் தாக்குதலுக்கு இலக்கானது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய நகரமான துபையில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் ஹோட்டலில் சனிக்கிழமை தீப்பிடித்து எரிவதை பிபிசி உறுதிப்படுத்திய வீடியோ காட்டுகிறது. அடர்ந்த கரும்புகை வானத்தை நோக்கி எழுகிறது.
பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் தீப்பற்றியதில் நான்கு பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலதிக விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், உலகின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான துபை சர்வதேச விமான நிலையத்தில் நடந்த “சம்பவத்தில்” நான்கு பேர் காயமடைந்ததாக துபை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. விமான நிலைய முனையத்தில் “சிறிய அளவில் சேதம்” ஏற்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பிராந்தியத்தின் பிற பகுதிகளில் அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூறியுள்ளன.
பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து கரும்புகை மூட்டங்கள் எழுவதைக் காண முடிந்தது.
அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு குறித்துத் தெளிவாக இல்லை, அமெரிக்கா இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
தோஹாவில், அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்கத் தளமான அல்-உதெய்த் விமானப்படைத் தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபை ஹோட்டலுக்கு எதிரே உள்ள ஒரு கட்டடத்திலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு சரிபார்க்கப்பட்ட வீடியோ, பாதிப்பு ஏற்பட்ட தருணத்தையும் அதைத் தொடர்ந்து நடந்த வெடிப்பையும் காட்டுகிறது. ஒரு பெரிய ஆரஞ்சு நிற நெருப்புப் பிழம்பு தோன்றுகிறது. வீடியோ எடுத்தவர் தரையில் விழுவது போல் தெரிகிறது.
பட மூலாதாரம், UGC
அவசரகால சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அந்த ஐந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டலுக்கு மேலே பெரிய புகை மண்டலம் எழுவதைக் காண முடிந்தது.
இரான் ஊடகங்கள் முன்னதாக துபை மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறின. இருப்பினும் அவர்கள் எதைக் குறிவைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சனிக்கிழமை தாக்குதல் நடந்தபோது, ஜுமேரா கடற்கரைக்கு அருகில் உள்ள துபை மெரினாவில் தான் இருந்ததாக ஒரு பிரிட்டிஷ் பெண் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒரு “பலத்த சத்தம்” கேட்டதாகவும், சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அவருக்கு மேலே “ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதற்கு” முன்பு ஒரு “பெரிய கரும்புகையை” கண்டதாகவும் அவர் கூறினார்.
தான் “மிகவும் பதற்றமாக” உணர்வதாகவும், தமக்கு இன்னும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாகத் தெரிவித்ததுடன், இரானின் தாக்குதல்களை “தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்” என்று குறிப்பிட்டது.
மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா சுமார் 13 ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் பொதுவாக 30,000 முதல் 40,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை பஹ்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இது கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்கள் மற்றும் தளவாட சப்ளை கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்கள் நிலை கொண்டிருக்கும் துறைமுகமாகும். தாக்குதல் நடந்த சமயத்தில் அவற்றில் ஏதேனும் அங்கு இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ, ஒரு டிரோன் ஒரு அடுக்குமாடி கட்டடத்தைத் தாக்கி, பிரகாசமான மஞ்சள் நிற நெருப்புப் பிழம்பாக வெடிக்கும் தருணத்தைக் காட்டுகிறது.
மனமா மற்றும் முஹாரக்கில் உள்ள மூன்று கட்டடங்கள் “டிரோன் தாக்குதல்கள் மற்றும் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதைவுகளால்” தாக்கப்பட்டதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.
இரண்டு இடங்களில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து வருவதாகவும், மூன்றாவது கட்டடத்தில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Reuters
குவைத்தில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்த டிரோன் தாக்குதலில் “பல ஊழியர்களுக்கு சிறிய காயங்கள்” ஏற்பட்டதாகவும், ஒரு முனையத்தில் “குறைந்த அளவு” சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனமான குனா தெரிவித்துள்ளது.
கத்தாரின் தோஹாவில், இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
குடியிருப்புப் பகுதியில் விழுந்த ஏவுகணை விழுகையில் மக்கள் பலர் தப்பியோடுவதையும் காட்சிகள் காட்டின.
“கத்தார் பிரதேசத்தை இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இலக்கு வைப்பதை” கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பதாகக் கூறியது. இது “அதன் தேசிய இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இராக்கின் எர்பில் அருகே உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு மேலே ஒரு டிரோனை அமெரிக்க படையினர் சுட்டு வீழ்த்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சனிக்கிழமை காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, “ட்ரூத்ஃபுல் ப்ராமிஸ் 4” (Truthful Promise 4) என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துகளை இலக்கு வைத்ததாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரான் நேரப்படி சுமார் 09:30 மணிக்கு (06:00 GMT) தொடங்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல், இதுவரை இரானியத் தலைமையுடன் தொடர்புடைய பகுதிகளை இலக்கு வைத்துள்ளது.
இரானிய மக்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊக்குவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மூடப்படும் என்று கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக வழிகளில் ஒன்றாகவும், எண்ணெய் போக்குவரத்திற்கான ஒரு முக்கியமான இடமாகவும் கருதப்படுகிறது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இதன் வழியாகவே செல்கிறது.
இந்த நீரிணையை மூடுவது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதோடு எண்ணெய் விலையையும் உயர்த்தக்கூடும்.
இஸ்ரேல் முழுவதும் சனிக்கிழமை எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன. இரான் தங்கள் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றை இடைமறிக்க தனது விமானப்படையினர் பணியாற்றி வருவதாகவும் அதன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில், தங்கள் நிலப்பரப்பைக் குறிவைத்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகம் “இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு தாக்குதலுக்கு” உள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக செயல்திறனுடன் ஏவுகணைகளைக் கையாண்டன மற்றும் பல ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தன” என்றும் அது கூறியது.
அபுதாபியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில், சில பொருட்சேதம் ஏற்பட்டதோடு ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை “முற்றிலும் தூண்டப்படாத, சட்டவிரோதமான மற்றும் முறையற்ற தாக்குதல்” என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கண்டித்துள்ளார்.
இரானின் ஆயுதப் படைகள் “இந்த நாளுக்காகத் தயாராக உள்ளன மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள்” என்றும் அவர் கூறினார்.
கூடுதல் அறிக்கை : டாம் மெக்ஆர்தர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



