Home தேசிய national tamil ‘திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்’ – குஜராத் அரசின் புதிய திட்டத்தால் எழும் கேள்விகள்

‘திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்’ – குஜராத் அரசின் புதிய திட்டத்தால் எழும் கேள்விகள்

5
0

SOURCE :- BBC NEWS

குஜராத்தில், இப்போது திருமணப் பதிவின் போது தம்பதியினரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி மாநில சட்டமன்றத்தில் திருமண பதிவு சட்டம் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, ‘குஜராத் திருமண பதிவு சட்டம் 2006’-ல் அம்மாநில அரசு சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது.

அதன்படி, திருமண பதிவின்போது பெற்றோர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இதற்கென தனியே ஒரு இணையதளமும் உருவாக்கப்படும்.

இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக தங்களின் எதிர்ப்பு மற்றும் பரிந்துரைகளை மக்கள் அடுத்த 30 நாட்களில் மேற்கொள்ள முடியும். இதன்பின், அரசியலமைப்பு வரம்புக்குட்பட்டு தகுந்த பரிந்துரைகளை பரிசீலித்து அவற்றை செயல்படுத்த குழு ஒன்று அமைக்கப்படும்.

திருமண பதிவின்போது நடைபெறுவதாக கூறப்படும் ‘மோசடியை’ களைவதற்காகவே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக துணை முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறினார். அப்போது, “திருமண பதிவு நடவடிக்கையில் உள்ள சில ‘குளறுபடிகள்’ காரணமாக, அது ‘தவறாக பயன்படுத்தப்படுவதாக” தெரிவித்தார்.

ஹர்ஷ் சங்வி கூறுகையில், “பஞ்ச்மஹால் மாவட்டத்தில் சில போலி திருமண பதிவுகள் ஆச்சர்யகரமான சிலவற்றை வெளிப்படுத்துகின்றன. பஞ்ச்மஹாலில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட இல்லாத கண்கோடகோய் மற்றும் நத்குவா ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ‘நிக்காஹ்’ சான்றிதழ்கள் தலாதியால் (செயலாளர்) வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நாங்கள் முழுமையாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.

அவர் கூறுகையில், “சமூக விரோதிகள் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து, மாநிலத்தின் மகள்களை காதல் என்ற வலையில் சிக்கவைத்து, மயக்குகின்றனர்.” என்றார்.

ஹர்ஷ் சங்வி கூறுகையில், “காதல் திருமணத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், ‘போலியான’ மற்றும் ‘கட்டாயப்படுத்தப்பட்ட திருமணத்திற்கு’ எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.

முன்மொழியப்பட்ட புதிய மாற்றங்கள் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளன. எனினும், இந்த புதிய மாற்றங்கள், ‘ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்’ விடுப்பதாக சட்ட நிபுணர்கள் நம்புகின்றனர்.

திருமண பதிவில் முன்மொழியப்பட்ட புதிய திருத்தங்கள் என்ன?

ஹர்ஷ் சங்வி

பட மூலாதாரம், Harsh Sanghavi/fb

அரசால் முன்மொழியப்பட்ட புதிய திருமண பதிவு நடைமுறை, ஆறு நிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமண பதிவு விண்ணப்பத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் அவர்களின் சார்பில் இரு சாட்சியங்களும் கையெழுத்திட வேண்டும். அந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட (notarized) வேண்டும். இரு தரப்பும் மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட அடையாள அட்டை உட்பட அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசால் மேற்கொள்ளப்படும் எல்லா திருமண பதிவுகளும் உதவி பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். திருமண பதிவு விண்ணப்பம் படிவம் 1(I)-யில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் அத்துடன் வழங்க வேண்டும்.

  • மணப்பெண் மற்றும் மணமகனின் ஆதார் அட்டைகள் மற்றும் சாட்சியங்கள்
  • இருவரின் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மாற்று சான்றிதழ்
  • திருமண அழைப்பிதழ்
  • இருவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு
  • திருமணத்தின்போது எடுக்கப்பட்ட இருவரின் புகைப்படம்
  • சாட்சியங்களின் பாஸ்போர்ட் புகைப்படங்கள் இரண்டு
  • திருமணம் குறித்து இருவரும் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரகடனம்
திருமண பதிவு, குஜராத்

பட மூலாதாரம், Wodicka/ullstein image via Getty Images

தங்களின் பெற்றோர் குறித்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

  • பெற்றோரின் ஆதார் அட்டை
  • தந்தையின் முழு பெயர்
  • தந்தையின் முழு முகவரி
  • தந்தையின் மொபைல் எண்
  • தாயின் முழு பெயர்
  • தாயின் முழு முகவரி
  • தாயின் மொபைல் எண்

அத்துடன், உதவிப் பதிவாளரின் உறுதிப்படுத்தல் குறித்து மணமகனின் பெற்றோருக்கு 10 வேலை நாட்களுக்குள் தெரிவிக்கப்படும். இந்தத் தகவல் மின்னணு அல்லது நேரடி முறையில் (அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஊடகங்கள் மூலம்) வழங்கப்படும்.

இந்த விண்ணப்பத்தை பெற்றவுடன் உதவி பதிவாளர் அதனை சம்பந்தப்பட்ட மாவட்டம் அல்லது தாலுகாவின் பதிவாளருக்கு அனுப்புவார். துணை விதிகளில் (1-10) குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பதிவாளர் உறுதிப்படுத்திய 30 நாட்களுக்குள் அத்திருமணம் பதிவு செய்யப்படும்.

இந்த அனைத்து தகவல்களும் அரசால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவாளரால் பதிவு செய்யப்படும், அதில் வரிசை எண், பக்க எண் மற்றும் பிரிவு எண் ஆகிய தகவல்களும் அடங்கியிருக்கும். மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, படிவம் 2-யின்படி திருமண பதிவு சான்றிதழை பதிவாளர் தயாரிப்பார். இதன்பின் இச்சான்றிதழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாகவோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பப்படும்.

திருமண பதிவு

பட மூலாதாரம், Getty Images

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?

காங்கிரஸ் எம்.பி ஜெனிபென் தாக்கூர் (Thakor) இந்த முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசுகையில், “சமூக விரோத சக்திகள் எங்கள் மகள்களை காதல் எனும் வலையில் சிக்க வைத்தனர். எனவே இச்சட்டத்தின்படி காதல் திருமணங்கள் கிராமங்களில் சாட்சியங்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்” என்றார்.

அவர் கூறுகையில், “பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், கிராமங்களிலேயே சாட்சியங்களின் முன்னிலையில் காதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மசோதாவை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என நான் முன்மொழிந்துள்ளேன்” என்றார்.

ஊடகங்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ கோபால் இடாலியா கூறுகையில், “இதுகுறித்து மக்கள் தங்களின் எதிர்ப்புகள் மற்றும் பரிந்துரைகளை கூறுமாறு அரசு கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. திருமண பதிவு சட்டத்தை திருத்துவதற்கு முன்பாக கருத்துகள் பெறப்படுவது பாராட்டத்தக்கது.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “(சலீம் சுரேஷ் போன்று) ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணை ஏமாற்றுவது தவறு. அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணை ஏமாற்றுவதும் தவறு.” என குறிப்பிட்டார்.

சலீம் சுரேஷ் என்பது சிலர் வேறோரு ஆளாக நடித்து பெண்களை சிக்க வைத்து திருமணம் செய்வதாக அரசு கூறும் குற்றச்சாட்டுக்கு பயன்படுத்தப்படும் பதமாகும்.

திருமண பதிவு, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்த திருத்தங்கள் ஒருவரின் அடிப்படை உரிமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று சட்ட நிபுணர்கள் நம்புகின்றனர்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய சமூகவியல் ஆய்வாளர் கௌரங் ஜானி கூறுகையில், “18-ஆம் நூற்றாண்டின் பழமைவாத சமூகத்திற்கு இத்தகைய விஷயங்கள் சமூகத்தை இட்டுச் செல்வதாக” தெரிவித்தார்.

கௌரங் ஜானி கூறுகையில், “இது ஜனநாயகத்திற்கு எதிரானது. நாட்டின் சிறப்பு திருமண சட்டத்தின்படி, 18 வயது நிரம்பிய பெண்ணும் 21 வயது ஆணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளலாம். அதில் அரசு தலையிட முடியாது. இத்தகைய சட்டங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறது. உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் திருமண பதிவுக்கு பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்ற கேள்வியே இல்லை” என்றார்.

கௌரங் ஜானி கூறுகையில், “திருமணத்தின்போது பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என அரசியலமைப்பின் எந்தவொரு விதியிலும் இல்லை. சொல்லப்போனால் இந்த சட்டங்களை பெற்றோர்களும் எதிர்க்க வேண்டும்” என்றார்.

கௌரங் ஜானி கூறுகையில், “சமூகம் இப்போது மாறிவருகிறது, சாதி கடந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனை பழமைவாதிகள் எதிர்க்கின்றனர். இத்தகைய சட்டங்கள் பழமைவாதிகளின் எண்ணங்கள் மற்றும் மனநிலையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளன. இது முழுக்கமுழுக்க அரசியல் ரீதியானது.” என்றார்.

துணை முதலமைச்சர் சலீம் சுரேஷ் என்ற வார்த்தையை பயன்படுத்தியது குறித்து கௌரங் ஜானி கூறுகையில், “இது அரசியல் லாபத்திற்காக சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரை இலக்கு வைப்பதாகும். இத்தகைய கருத்துகள், சிறுபான்மை சமூகத்தினரிடையே பயத்தை உருவாக்கும்.” என்றார்.

குடும்ப நல வழக்கறிஞர் சேத்தன் பாண்ட்யா பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “இந்த முடிவை அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை,” என்றார்.

அவர் கூறுகையில், “இதன்மீது மக்கள் 30 நாட்களுக்கு கருத்து தெரிவிக்க முடியும். இந்த சட்டம் குறித்து குடிமக்களோ அல்லது ஒரு தலைவருக்கோ எதிர்ப்பு இருந்தால் அதை அரசிடம் தெரிவிக்கலாம். தற்போதுவரை இது சட்டமாக செயல்படுத்தப்படவில்லை.” என்றார்.

திருமண பதிவு குறித்த நிபுணரான வழக்கறிஞர் பரேஷ் மோதி பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பின்படி, திருமணத்திற்கான பெற்றோரின் அனுமதி போன்ற விஷயங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. இது, உயிர் வாழ்வதற்கான சுதந்திரம் போன்ற உரிமைகளை அச்சுறுத்துகிறது. இதன்மூலம், குழந்தைகள் மீதான முழு கட்டுப்பாடும் பெற்றோர்களின் கைகளுக்கு செல்கிறது. அப்படியான சூழலில், திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு பெற்றோர்கள் இல்லையென்றாலோ அல்லது விவாகரத்து போன்ற தீவிரமான பிரச்னைகள் இருந்தாலோ, இந்த முடிவை யார் எடுப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.” என்றார்.

பரேஷ் மோதி கூறுகையில், “பெற்றோர் ஒப்புதல் போன்ற விஷயங்களை அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவும் ஆதரிக்கவில்லை. இந்த விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டாலும், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குடிமக்கள் சவால் விடுக்கலாம்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்து திருமண சட்டத்தின்படி திருமண பதிவு

பரேஷ் மோதி கூறுகையில், “இந்து திருமண சட்டத்தின்படி, திருமணத்தை நடத்தும் பண்டிட் (மதகுரு) ஒருவரால் வழங்கப்படும் உறுதிச் சான்று, மணப்பெண் மற்றும் மணமகனின் பிறப்பு சான்றிதழ்கள் அல்லது அவர்களின் வயதை வெளிப்படுத்தும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன்பின், இந்து திருமண சட்டத்தின்படி, திருமணம் பதிவு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்படும்.” என்றார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பியூஷ் ஜடுகார் கூறுகையில், “இந்து திருமண சட்டத்தின்படி, திருமண பதிவு சட்டத்தின்கீழ் கங்கோத்ரி (குஜராத்தி முறைப்படியிலான புனித திருமண அழைப்பிதழ்) அச்சடிக்கப்பட வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் ஜோடி சப்தபடி (ஏழு அடிகள்) செய்ய வேண்டும். மணப்பெண் தன்னுடைய முடியை வகிடெடுத்து அதில் குங்குமம் (maang) இட்டிருக்க வேண்டும், தாலி அணிந்திருக்க வேண்டும். இருவரும் கைகளை பற்றியோ அல்லது மாலைகள் அணிந்தோ இருக்க வேண்டும். இதன் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். திருமணத்தை நடத்தும் பண்டிட் சான்றளித்த பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.” என்றார்.

பியூஷ் ஜடுகார் கூறுகையில், குடும்பத்தைப் பிரிந்து திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இது மிகவும் பலனளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் ஜடுகார் பியூஷ் கூறுகையில், “சிறப்பு திருமண சட்டத்தின்கீழ், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்துகொள்ள விரும்பினால், மாவட்ட அளவில் பதிவாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே 30 நாட்களுக்கு நோட்டீஸ் ஒட்டப்படும், அதற்குள் யாரேனும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் தெரிவிக்கலாம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால், திருமணம் முடிந்தது என அர்த்தம்.” என்றார்.

“அந்த ஜோடி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக (உடன்பிறந்தவர்கள்) இருந்தாலோ அல்லது ஜோடியில் ஒருவர் குறிப்பிட்ட வயதை பூர்த்தி செய்யவில்லை என்றால்தான் அந்த எதிர்ப்பு பரிசீலிக்கப்படும். அவர்கள் குறிப்பிட்ட வயதை பூர்த்தி செய்திருந்தால் திருமணம் நடக்கலாம்.” என்றார்.

வழக்கறிஞர் பியூஷ் ஜடுகார் கூறுகையில், “எனவே, இந்த எதிர்ப்புக்காக அல்லாமல் வேறு காரணத்திற்காக திருமணத்தை பதிவு செய்ய பதிவாளர் மறுக்க முடியாது. அந்த பெண் 18 வயதை பூர்த்தி செய்திருக்கிறாரா மற்றும் அந்த ஆண் 21 வயதை பூர்த்தி செய்திருக்கிறாரா என்பதையும் அவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் அல்ல என்பதையுமே பதிவாளர் பார்க்க வேண்டும். அப்படி இல்லையெனில், அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் திருமணத்தை பதிவு செய்ய பதிவாளர் சட்டபூர்வ பொறுப்பு இருக்கிறது.” என்றார்.

‘முன்மொழியப்பட்ட புதிய சட்டங்கள் மகள்களின் உரிமைகளை மீறுகின்றன’

திருமண பதிவு, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

“பெரும்பாலான திருமணங்கள் சமூக விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதால், திருமணத்திற்கு பெற்றோரின் அனுமதியை ஜோடிகள் பெற வேண்டும் என அரசியலமைப்பின் எந்த விதிமுறையும் கூறவில்லை,” என வழக்கறிஞர் சுரேந்திரநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள விஜய் மக்வானா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.

“பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என கூறினால், காதல் திருமணங்கள் முடிந்துவிடும். எனவே, அனுமதி பெற வேண்டும் என கூறுவது முற்றிலும் அடிப்படையற்றது.”

விஜய் மக்வானா கூறுகையில், “இது சட்டமாக மாறினால், அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் இது நிலைத்திருக்க முடியாது. ஏனெனில், திருமணம் என்பது தனிப்பட்ட முடிவாக இருக்கும்போது, அனுமதியை கோரும் எந்தவொரு பிரிவும் தனிநபரின் சுதந்திரத்தை மீறுவதாகும்” என்றார்.

இந்த பிரச்னைக்கான தீர்வு குறித்து கூறிய விஜய் மக்வானா, “ஜோடிகள் இந்த மாநிலத்திற்கு வெளியேயும் திருமணம் செய்துகொள்ள முடியும். அதாவது, இந்தியாவின் எந்த பகுதியிலும் திருமணம் செய்துகொள்வது சாத்தியம்” என்றார்.

“திருமணம் செய்துகொள்பவர்களை இந்த மாநிலத்தில் தடுத்து நிறுத்தினால், அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொள்ள முடியும்,” என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, ராஜஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்துகொண்ட பிறகு ஒருவரின் மகளின் திருமணத்தைப் பதிவு செய்த அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவில், ‘ஒருவர் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை அரசியலமைப்பின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்’ என்று கூறியது.

“இதுபோன்ற சட்டங்கள் மகள்கள் மீது உரிமை கோருவது போன்ற பாரபட்சமான கொள்கைகளை ஊக்குவிக்கின்றன. இது பெண்களைக் கட்டுப்படுத்துவது பற்றியது, அரசியல் தலைவர்கள் வாக்குகளுக்காக பெண்களின் உரிமைகளை அழித்து வருகின்றனர்” என்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பியூஷ் ஜடுகார் கூறுகிறார்.

இது நடக்காமல், உறவுகள் வலுவடைந்துவிட்டால், மக்கள் கணவன் மனைவியாக வாழ்வதற்குப் பதிலாக லிவ்-இன் உறவுகளில் வாழ விரும்புவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU