SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், X/MK Stalin
சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
“அதே ஆறு இடங்களைப் பெறுவதற்கு நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை. ஓர் இடத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரே கூறியதால் ஏற்றுக் கொண்டோம்,” என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
ஆனால், “ஆறு தொகுதிக்குக் குறைவாக கொடுத்தால் ஏற்க மாட்டோம்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளால் தி.மு.க கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியிருந்தது. ‘இந்தமுறை அதே எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டும்,’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக, இரு தரப்பிலும் நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் ஐந்து இடங்களை மட்டுமே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது.
புதன்கிழமையன்று தி.மு.க – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பட மூலாதாரம், Veerapandiyan
‘போராடினோம்… கிடைக்கவில்லை’
“ஓர் இடம் குறைவதைப் பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏழை எளிய மக்களுக்கான போராட்டங்களில் உறுதியாக இருந்தால் போதும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அல்ல” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்திருப்பதால் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், “அவரே கூறும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.” என்கிறார்.
தொகுதிப் பங்கீட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, “6 + 1 என்ற கணக்கில் தொகுதிகளை ஒதுக்குமாறு கூறினோம். அதற்காக நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை.” எனக் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், X/MK Stalin
“தொகுதிகளைக் குறைப்பதற்கு தி.மு.க நிர்பந்தம் கொடுத்ததா?” என்ற கேள்விக்குப் பதில் அளித்த மு.வீரபாண்டியன், “ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. இதைப் பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான் பேசினார்கள்.” என்கிறார்.
“கட்டளையிடும் தொனியில் தி.மு.க நிர்வாகிகள் பேசவில்லை” எனக் கூறும் அவர், “சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால் கடந்து சென்றிருப்போம்.” எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், X/MK Stalin
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே அளவு இடங்களை ஒதுக்கும் முடிவில் தி.மு.க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்குமுறை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க நடத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “சுமூகமான முறையில் தொகுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.” எனக் கூறினார்.
“கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்” எனவும் பெ.சண்முகம் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், X/MK Stalin
‘5 தொகுதிகளை ஏற்க மாட்டோம்’ – கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து, “ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து செயல்படுகின்றனர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை,” என்கிறார் அவர்.
தொடர்ந்து பேசும்போது, “தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஓர் எண்ணைக் கூறுகின்றனர். நாங்கள் ஓர் எண்ணைக் கூறியுள்ளோம். கூடுதல் தொகுதி குறித்து எந்த விவரங்களையும் அவர்கள் கூறவில்லை.” எனக் கூறுகிறார்.
கூட்டணியில் ஐந்து தொகுதிகளைக் கொடுப்பதாக தி.மு.க கூறுவதாகக் குறிப்பிடும் கனகராஜ், “அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தரப்பில் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற முடிவை கூறிவிட்டோம். தி.மு.க தான் தெரிவிக்க வேண்டும்.” என்கிறார்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, “தி.மு.க தரப்பில் இருந்து அழைத்தால் பேசுவோம். எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்.” என்கிறார் அவர்.
இதே கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “ஒவ்வொரு கட்சியும் அவரவர் பலத்துக்கேற்ப தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. எங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்வதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.” எனக் கூறினார்.
பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், Shyam
“இதுபோன்ற முரண்பாடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?” என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“தி.மு.கவிடம் முன்வைத்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகளிடையே சற்று வருத்தம் இருக்கும். ஆனால், வாக்குப்பதிவு நெருக்கத்தில் அவை மறைந்துவிடும்” எனக் கூறுகிறார்.
“கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியும் இல்லை. தி.மு.க ஒதுக்கியுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் கூட்டணிக் கட்சிகளுக்கான சவாலாக இருக்கும்.” என அவர் குறிப்பிட்டார்.

திமுக கூறுவது என்ன?
“தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளை குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருகிறது” என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
“தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும்” எனக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், “புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பது பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன,” எனக் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



