SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், @arivalayam/X
-
3 மணி நேரங்களுக்கு முன்னர்
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பல கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சமீபத்தில் கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
‘வாக்கு வங்கியை இழந்துள்ள தேமுதிகவுக்கு இத்தனை இடங்களை ஒதுக்கியதில் லாபம் தேமுதிகவுக்கு மட்டும்தான், மற்ற கட்சிகளை விட அதிக இழப்பு திமுகவுக்குதான்’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
ஆனால் தேமுதிகவுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக வாக்குகள் இருப்பதை வைத்தே இந்த முடிவை தலைமை எடுத்ததாக திமுக தரப்பு கூறுகிறது.
கூட்டணியிலுள்ள மக்கள் நீதி மய்யம், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதும் அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள், அரசியலில் ஜீரோ என்பதை கமல் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், இதே நிலை நாளை விஜய்க்கு ஏற்படுமென்றும்’ அதிமுக விமர்சித்துள்ளது.
கமலின் இந்த முடிவால் தாங்கள் பெரும் குழப்பத்தில் இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், @arivalayam/X
‘கூடியது கூட்டணிக் கட்சிகள், குறைந்தது தொகுதிகள் எண்ணிக்கை’
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய 4 கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இவற்றைத் தவிர்த்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற கட்சிகள் இருந்தன.
நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில புதிய கட்சிகள் இணைந்துள்ளன. கடந்த தேர்தலில் துவங்கி கடந்த மாதம் வரையிலும் கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறி, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளது.
பட மூலாதாரம், @arivalayam/X
மக்கள் நீதி மய்யமும் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் திமுகவை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
இவ்விரு கட்சிகளைத் தவிர, கடந்த 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 –8 என்ற எண்ணிக்கையிலும், விடுதலைச் சிறுத்தைகள் இரட்டை இலக்கத்திலும் தொகுதிகளை எதிர்பார்த்திருந்த நிலையில், சென்ற தேர்தலை விட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், மதிமுகவுக்கு 2 தொகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் அதிகமாகத் தரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லீம் லீக் தவிர பிற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமென்று தெரியவந்துள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் இருந்த இந்த கட்சிகளுக்கு, கேட்டதை விடவும், சில கட்சிகளுக்கு முந்தைய தேர்தலைவிடவும் குறைவான தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
ஆனால் சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு, ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் தரப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எதன் அடிப்படையில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியது என்பது யாருக்குமே புரியாத புதிர் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
ஏற்கெனவே மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய நிலையில், இப்போது 10 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கியதன் பின்னணியில், தேமுதிகவுக்கு நெருக்கமான யாரோ ஒருவர், திமுக தலைமையை தவறாக வழி நடத்தியதாகவே தோன்றுகிறது என்றார் அவர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.கே. ராதாகிருஷ்ணன், ”இதை யார் செய்திருந்தாலும் திமுகவுக்கும், கூட்டணிக்கும் செய்யக்கூடிய துரோகமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியே போய்விடுமென்ற நிலை இருந்த போது, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இவ்விரு விஷயங்களையும் திமுக தலைமை ஏற்றுக்கொண்டு, அதை மறுக்க முடியாமல் இப்படிச் செய்திருக்கிறதோ என்றும் சந்தேகம் எழுகிறது.” என்றார்.
”இந்தத் தேர்தலில் அதிகபட்ச பலனடைந்த கட்சிகள் என்று பட்டியலிட்டால் முதலில் தேமுதிகவும், இரண்டாவது அமமுகவும் இடம் பெறும். இரு கட்சிகளுக்கும் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குவங்கியே இருக்கும் நிலையில் இந்த கட்சிகளுக்கு எதிரெதிர் கூட்டணிகளில் 10, 11 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக இழப்பு என்று பார்த்தால் அது திமுகவுக்குதான். அதனுடன் நீண்டகாலமாக பயணிக்கும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கும்தான் இது இழப்பு. அது தேர்தல் முடிவில் தெரியவரும்.”
விடுதலைச் சிறுத்தைகளை விட தேமுதிக பெரிய கட்சியில்லை என்று கூறும் ராதாகிருஷ்ணன், தேமுதிகவுக்குக் கொடுத்த 10 தொகுதிகளை அக்கட்சிக்குக் கொடுத்திருந்தால் அது திமுகவுக்கே சாதகமாக அமைந்திருக்கும் என்றார்.
”பிற கட்சிகளுக்கு சீட்டைக் குறைத்து, அதை தேமுதிகவுக்கு கொடுத்ததில் தொகுதி பங்கீட்டில் ஸ்டாலின் தோற்றிருக்கிறார். அதேநேரத்தில் பாஜகவுக்கு காங்கிரசை விட ஒரு தொகுதியைக் குறைத்ததில் எடப்பாடி பழனிசாமி வென்றிருக்கிறார்” என்றார் அவர்.
பட மூலாதாரம், @arivalayam/X
2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கியதால் இந்த முடிவை எடுத்தாரா கமல்?
திமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கும் தொகுதிகளைக் குறைத்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அறிவித்ததும் பேசுபொருளாகியுள்ளது. .
பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கக்கூடாது என்பதற்காகவே, தொகுதிகள் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து கூறியிருந்தனர்.
அதே கருத்தையே வேறு விதமாகத் தெரிவித்துள்ள கமல், ”தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.” என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
”இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை. அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்.” என்றும் கமல் தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், @arivalayam/X
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியதால், அதை ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது கெளரவக் குறைச்சலாக இருக்குமென்று கருதி கமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார் பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன்.
ஆனால் இந்த முடிவை அவருடைய கட்சியினர் எப்படி பார்ப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்றார் அவர்.
கமலின் முடிவை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சத்யன், தனது எக்ஸ் பதிவில், ”இன்று கமல், நாளை விஜய். நடிகர்கள் வெள்ளித்திரையில் கேமரா முன் வசனம் பேசி அசத்துகிறார்கள், ஆனால் பொது வாழ்வில் நிஜ வாழ்க்கைச் செயல் என்று வரும்போது அவர்கள் பெரிய பூஜ்யம்தான். இதில் பரப்புரைக்காக எம்ஜிஆர், ஜெயலலிதாவை இழுக்க வேண்டாம்.” என்று கூறியிருக்கிறார்.
கமலின் இந்த முடிவு குறித்து, மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சிநேகனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ”தலைவர் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவருடைய இந்த முடிவால் நாங்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறோம். எதையும் இப்போது பேசுகிற மனநிலையில் இல்லை. ஓரிரு நாட்கள் கழித்தே, எதையும் தெளிவாகப் பேசமுடியும்.” என்றார்.
பட மூலாதாரம், @arivalayam/X
தொகுதிகளை குறைத்தது தேர்தல் பணிகளில் எதிரொலிக்குமா?
திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் தொகுதிகள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீட்டில் சில தவறுகள் நடந்திருப்பதாகக் கூறும் பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன், இது தேர்தல் பணிகளிலும், முடிவுகளிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்கிறார்.
உதாரணமாக ”அதிமுக கூட்டணியில் தமாகா மற்றும் சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது, திமுகவுக்கு சாதகமாக இருக்கும்” என்கிறார் அவர்.
”அந்த கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்தில் நின்றிருந்தால் போட்டி கடுமையாக இருந்திருக்கும். சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கலாம். தாமரை சின்னத்தில் போட்டியிடுவது வெற்றி வாய்ப்பைக் குறைக்கும். அத்தகைய தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோன்று காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடவும் வாய்ப்பு அதிகம். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திராவிடக் கட்சிகளுடன் ஒட்டாமலிருக்கும் தேசியக்கட்சிக்காக தேர்தல் பணி செய்ய கீழ்நிலை தொண்டர்களுக்கு உடன்பாடு இருக்காது. அது தேர்தல் பணிகளில் எதிரொலிக்கும்.” என்றார் ராதாகிருஷ்ணன்.
தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியதில், கூட்டணிக்கட்சிகளுக்கு வருத்தமிருந்தாலும் அது எதுவும் தேர்தல் பணியில் எதிரொலிக்காது என்கிறார் திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம்.
பிபிசி தமிழிடம் பேசிய காசிமுத்து மாணிக்கம், ”ஒரு தேர்தலில் ஒரு கட்சி பின்னடைவை சந்தித்ததை வைத்து, அக்கட்சியின் அடித்தளத்தை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, விஜயபிரபாகரன் மட்டும்தான். அதிலும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் தேமுதிக முதலிடம் பிடித்திருந்தது. இக்கட்டான சூழலில் திமுகவை நம்பி வந்த தேமுதிகவை அங்கீகரிக்கவே, வாக்கு மாறாமல் எங்கள் தலைவர் இந்த இடங்களைக் கொடுத்துள்ளார்.” என்றார்.

இதுபோன்று கூட்டணிகளில் தொகுதி பங்கீட்டில் ஏற்படும் மனக்கசப்புகள் எப்போதும் தேர்தல் பணியில் எதிரொலிக்காது என்கிறார் பத்திரிக்கையாளர் குபேந்திரன்.
திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் இந்த அதிருப்தி, பல கட்சிகளுக்கு இருந்தாலும் தேர்தல் பணிகள் என்று வரும்போது அதை யாரும் வெளிக்காண்பிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
”கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கும்போது, பெரிய கட்சிகளில் இருப்பவர்கள் வருத்தப்படுவார்கள். அதிருப்தி அடைவார்கள். அதேபோல சில தொகுதிகளில் தங்களுக்குதான் சீட்டு என்று நினைத்து பணியாற்றிய பலரும் தொகுதி கிடைக்காமல் ஏமாற்றமடைவார்கள். இந்த அதிருப்தியெல்லாம் நான்கைந்து நாளைக்கே நீடிக்கும். தேர்தல் பணி என்று வந்து விட்டால், எதிரணி வெற்றி பெற வேண்டுமென்று யாரும் வேலை பார்க்க மாட்டார்கள்.” என்றார் குபேந்திரன்.
பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



