Home தேசிய national tamil ‘தினமும் பல் துலக்கினால் மட்டும் போதாது’ – உங்கள் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் 7 செயல்கள்

‘தினமும் பல் துலக்கினால் மட்டும் போதாது’ – உங்கள் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் 7 செயல்கள்

4
0

SOURCE :- BBC NEWS

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

ஆனால், ‘நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க’ என நீங்கள் கேட்டால், ஆம் போதாது.

நம்மை அறியாமல் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் பற்களை மிகவும் பாதிக்கின்றன. அதில், சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பது

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

சிலருக்கு காலை எழுந்தவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்து, நன்கு அழுத்தி பல் தேய்ப்பது என்பது வழக்கமாகவே இருக்கும். நன்கு அழுத்தி தேய்த்தால் தான் பற்கள் சுத்தமாகும் என்ற நம்பிக்கையுடன், தேய்த்து முடித்துவிட்டு கண்ணாடியைப் பார்த்து சோதித்துக் கொள்வார்கள்.

ஆனால், உண்மையில் அவ்வாறு அழுத்தித் தேய்ப்பது பற்களுக்கு ஆபத்தாக தான் முடியும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி.

“அழுத்தி தேய்த்து பல் பிரஷ் செய்தால் அல்லது அதிக நேரம் பிரஷ் செய்தால், அனைத்து கிருமிகளும் அழிந்துவிடும் என்ற எண்ணம் தவறு. உண்மையில் எந்த முறையில் பிரஷ் செய்கிறீர்கள் என்பதே முக்கியம். மேலும் கீழும் அல்லது ஒரு பக்கமாக தேய்ப்பது பற்களை சேதப்படுத்தும். வட்ட இயக்க (Circular motion) முறையில், மெதுவாக பற்களை தேய்க்க வேண்டும்” என்கிறார் அவர்.

அதிக அழுத்தம் கொடுப்பதால், எனாமல் (Enamel) தேய்மானம் ஏற்பட்டு, ஈறுகளில் எரிச்சல் ஏற்படலாம் என்கிறார் தாரிணி.

“இது தொடர்ந்தால், காலப்போக்கில் ஈறுகள் தேய்ந்து பற்களின் வேர்கள் வெளிப்படத் தொடங்கும். பல் சென்சிட்டிவிட்டி (Sensitivity) பிரச்னையும் ஏற்படும்” என்று அவர் எச்சரிக்கிறார்.

‘சாஃப்ட்’ அல்லது ‘அல்ட்ரா- சாஃப்ட்’ பிரிஸ்டில் பிரஷ்களை பரிந்துரைக்கும் அவர், “2-3 நிமிடங்கள் பல் துலக்கினால் போதும். ஆனால் ஒரு நாளுக்கு இருமுறை என்பது அவசியம். பற்பசை அளவு கூட ஒரு பட்டாணி அளவுக்கு இருந்தால் போதும்” என்கிறார்.

2. பற்களை கருவியாக பயன்படுத்துவது

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

பற்களை கொண்டு ஒரு பாட்டிலை திறப்பது, ஒரு கவரைப் பிரிக்க முடியவில்லை என்றால் உடனடியாக பல்லைக் கொண்டு கிழிப்பது, நகம் கடிப்பது, இதெல்லாம் காலப்போக்கில் பற்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இம்பிளான்டாலஜிஸ்ட், மருத்துவர் அபினவ்.

“உணவை மெல்வதற்கு தான் பற்கள். அவை கத்தரிக்கோலுக்கோ, பிளேடுக்கோ அல்லது பாட்டில் ஓபனருக்கோ மாற்று அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பற்களை ஏதோ கருவிகளைப் போல பயன்படுத்துவது அவற்றில் விரிசலை ஏற்படுத்தலாம், சில நேரங்களில் பற்கள் உடையக்கூட செய்யலாம்.” என்று எச்சரிக்கிறார் அபினவ்.

நகம் கடிப்பதன் ஆபத்தை விளக்கிய அபினவ், “பலரும் நகம் கடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது பற்களின் வடிவத்தையே மாற்றிவிடும். அதிக அழுத்தம் கொடுத்து நகம் கடிப்பது, தாடையை சேதப்படுத்தும்” என்கிறார்.

3. அடிக்கடி காபி/தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பது

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

பலர் சோடா, பழச்சாறுகள், காபி, தேநீர் அல்லது குளிர்பானங்களை அடிக்கடி பருகுகிறார்கள். அவற்றின் அதிக அமிலத்தன்மை பற்களை படிப்படியாக அரிக்கும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி.

பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், காபி மற்றும் தேநீரில் இருக்கும் அதிகளவு சர்க்கரை, காஃபின் போன்றவை பற்களை சேதப்படுத்தும் எனக் கூறுகிறார் அவர்.

“அடிக்கடி சோடா நிறைந்த குளிர்பானங்கள், காபி/தேநீர் குடிப்பது உடலில் நீர் வற்றச் செய்யும். அதன் விளைவு, உமிழ்நீர் சுரப்பது குறையும். உமிழ்நீர் என்பது வாய் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, கேவிட்டிகள் மற்றும் ஈறு பாதிப்பைத் தடுக்கிறது. அது குறைந்தால், பற்கள் பாதிப்பு மட்டுமல்லாது வயிறு சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்” என்கிறார் தாரிணி.

மேலும், “இத்தகைய பானங்களை குடித்தவுடன் வாயைக் கொப்பளிப்பது மிகவும் முக்கியம். தண்ணீரும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்துகிறார்.

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

4. அடிக்கடி நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது

“ஏதாவது கொறித்துக் கொண்டே இருப்பது என்பதன் அர்த்தம், பற்களில் எப்போதும் உணவுத் துகள்கள் இருக்கும் என்பதே. அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். மேலும் அவை பற்களில் துளைகள், விரிசல்களை ஏற்படுத்தும் (Cavities)” என்கிறார் பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி.

இதற்கு தீர்வு, ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே, குறைவான அளவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தான் என்றும் அவர் கூறுகிறார்.

“அதிலும் சர்க்கரை குறைவானவை என்றால் இன்னும் சிறந்தது. அதிக சர்க்கரை உடலின் பிற பாகங்களுக்கு மட்டுமல்ல, பல்லுக்கும் ஆபத்து தான். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அல்லது மவுத்-வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிப்பது நல்லது” என்கிறார் தாரிணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

5. பற்களைக் கடிப்பது

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

கோபம் வந்தால் பற்களைக் கடிப்பது என்பது பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது பற்களை நிச்சயம் சேதப்படுத்தும் என்கிறார் மருத்துவர் அபினவ்.

பதற்றம், மன அழுத்தம் என மனரீதியான காரணங்களாலும் பற்களைக் கடிக்கும் பழக்கம் வரலாம் என்கிறார் அவர்.

“சிலர் தூக்கத்தில் கூட பற்களை அவ்வாறு கடிப்பார்கள். இது

  • பற்களை பலவீனப்படுத்தும்,
  • அவற்றின் வடிவம் மாறும்,
  • பல் கூச்சம் ஏற்படும்,
  • தாடை வலியைக் கூட ஏற்படுத்தும்.

ஒரு கட்டத்தில் வாயை திறந்து, மூடுவது கூட வலியை ஏற்படுத்தும். பல் மருத்துவரிடம் ஆலோசித்து, ‘டென்டல் நைட்கார்டு’ (Dental nightguard) பயன்படுத்துவது தீர்வாக இருக்கும்” என்கிறார் அபினவ்.

6. புகை பிடிப்பது/புகையிலை பயன்பாடு

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

“புகையிலை பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே பற்களில் கறை படிவது. அதன் தொடர்ச்சியாக, வாய் துர்நாற்றம், ஈறுகள் பலவீனமடைவது மற்றும் வாய் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்” என எச்சரிக்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி.

“புகையிலை பயன்பாட்டின் காரணமாக பற்களை எடுக்கும் நிலைகூட வரலாம். ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் புகையிலை பயன்பாட்டை விடவில்லை என்றால், அது சிகிச்சையின் விளைவுகளை மட்டுப்படுத்தும்.” என்கிறார்.

புகையிலை பயன்பாட்டை கைவிடுவது வாய் சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெரிதும் மேம்படுத்தும் என அவர் வலியுறுத்துகிறார்.

7. பல் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் இருப்பது

பற்கள், உடல்நலம், ஆரோக்கியம், மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

பல் வலி வந்தால் மட்டுமே பல் மருத்துவரிடம் செல்வேன் என்ற எண்ணம் தவறு என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் எனக்கூறும் அவர், “கையில் எலும்பு முறிவு என்றால் கையை சரிசெய்ய தானே நினைப்போம், ஆனால் பற்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திவிட்டு, கடைசியில் பிரச்னை என்றால் எளிதாக பிடுங்கிவிட்டு செயற்கைப் பல் மாட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

ஒரு பல்லை எடுத்தால், மற்ற பற்களும் காலப்போக்கில் பாதிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

“பல் சிதைவு, ஈறு தொற்றுகள் மற்றும் வாய்வழி புற்றுநோய் கூட குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக வளரும்” என எச்சரிக்கும் தாரிணி, “வெறுமனே பல் தேய்ப்பது மட்டுமே போதாது. ஏனென்றால், பற்களின் ஆரோக்கியமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி” என்கிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU