SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
இன்றைய குழப்பமான, நிச்சயமற்ற உலகில், மக்கள் பதற்றமாகவோ அல்லது மனதளவில் மிகவும் திணறுவதாகவோ உணர்வது இயல்பானது. சில எளிய நுட்பங்கள் மக்கள் சிறப்பாக மீண்டு வரும் தண்மை கொண்டவர்களாக இருக்கவும், அமைதியான உணர்வைக் கண்டறியவும் உதவும் என்றும் அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.
சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கையாள முடியாத அளவுக்கு அதீதமாகத் தோன்றலாம். இது உலகம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய கெட்ட செய்திகள் மற்றும் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட சோகம் அல்லது வாழ்வை நிர்வகிப்பதில் அன்றாடம் இருக்கும் போராட்டம் காரணமாக இருக்கலாம். விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கையில், கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணர்வது பொதுவானது.
இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க மக்களுக்கு உதவ, பிபிசியின் அறிவியல் குழு சமீபத்திய ஆண்டுகளின் ஆய்வுகளின் அடிப்படையில் சில பயனுள்ள ஆலோசனைகளைச் சேகரித்துள்ளது.
இந்த உதவிக் குறிப்புகளில் மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் கவலைப்படுவதற்குக் கற்றுக்கொள்வது அல்லது திகில் படங்களைப் பார்ப்பது போன்றவையும் அடங்கும். மொத்தத்தில், கடினமான காலங்களில் மக்கள் அமைதியாகவும் வலுவாகவும் இருக்க முயற்சி செய்யக்கூடிய ஒன்பது யோசனைகளை அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
1. விவரிக்க முடியாத உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள்
மக்கள் தங்கள் உணர்வுகளை விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகள் அந்த உணர்ச்சிகளை அவர்கள் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை வலுவாகப் பாதிக்கும். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க மிகவும் குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்துவது சிக்கல்களைச் சிறப்பாகக் கையாள உதவும் என்று பல அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
உதாரணமாக, நீங்கள் “மன அழுத்தத்தில்” இருப்பதாக வெறுமனே சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் விரக்தியடைந்து, பதற்றமாக, கவலையாக அல்லது இருத்தலியல் விரக்தியை அனுபவிக்கிறீர்கள் என்பதை உணர்வுபூர்வமாக உணரலாம்.
வெவ்வேறு உணர்ச்சிகளைத் தெளிவாக அடையாளம் கண்டு பிரிக்கும் திறன் “உணர்ச்சி நுணுக்கத்தன்மை” என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திறன் உளவியல் ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் என இரண்டுக்கும் பயனளிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
பிற கலாசாரங்களில் இருந்து உணர்ச்சிபூர்வமான சொற்களைப் பற்றி அறிந்துகொள்வது மக்கள் தங்கள் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள உதவுமென்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வடகிழக்கு பல்கலைக் கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி லிசா ஃபெல்ட்மேன் பாரெட்டின் கூற்றுப்படி, உணர்ச்சிபூர்வமான சொற்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ள கருவியாக இருக்கலாம்.
“வாழ்க்கைக்கான கருவிகளாக வார்த்தைகள் மற்றும் அவை தொடர்புடைய கருத்துகளை நீங்கள் கருதலாம்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
2. உங்கள் பதற்றத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள்
“பதற்றம்” என்பதற்கான ஆங்கில வார்த்தை பழைய லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது. அதாவது, “மூச்சுத்திணறல்” மற்றும் “அசௌகரியம்” எனப் பொருள்படும். மனப் பதற்ற பாதிப்புக்கு ஆளான எவரும் இந்த வார்த்தைகள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளக்கூடும்.
இதன் காரணமாக, பதற்றம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், சில சூழ்நிலைகளில், இது உதவியாக இருக்குமென ஆய்வு காட்டுகிறது.
உளவியல் நிலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட பதற்றக் கோளாறுகள் போன்ற கடுமையான நிகழ்வுகள் தவிர, பதற்றத்தின் சாதாரண உணர்வுகள் சில நேரங்களில் மக்களை ஊக்குவிக்கும். பதற்றம் நம்மைக் கடினமாக உழைக்கவும், வெகுமதிகளைத் தேடவும், சமூகத் தொடர்புகளை உருவாக்கவும் தூண்டும். இது மக்களை மேலும் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கவும், புதிய யோசனைகளைக் கொண்டு வரவும் உதவும். நாம் பதற்றமாக உணரும்போதும், நமது மூளை அதிக கவனம் செலுத்தி, திறமையாக வேலை செய்யக்கூடும். இது நமது உற்பத்தித் திறனை மேம்படுத்தும்.
எனவே பதற்றத்தின் இத்தகைய நேர்மறையான பக்கத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
இதற்கு முக்கியமாக மனநிலையில் மாற்றம் தேவைப்படுகிறது. நம்மிடையே பெரும்பாலும் “எதிர்மறை” என்று அழைக்கப்படும் உணர்வுகள் பொதுவாக கடினமான சூழ்நிலைகளுக்கு இயற்கையான எதிர்வினைகளாக உள்ளன. மனித உணர்ச்சிகளின் முழு அளவையும் ஏற்றுக்கொண்டு புரிந்துகொள்பவர்கள் பெரும்பாலும் வலுவான மன ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளனர்.
பதற்றத்தை நீக்க வேண்டிய ஓர் எச்சரிக்கை அறிகுறியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதைப் பயனுள்ள தகவலைத் தரும் ஒரு சமிக்ஞையாகவும், சவால்களுக்குத் தயாராக உதவும் ஒரு சமிக்ஞையாகவும் பார்க்க முயல வேண்டும். உதாரணமாக, தங்கள் பதற்றத்தை ஒரு துயரத்தின் அறிகுறியாக அல்லாமல், ஒரு சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கான அறிகுறியாகக் காணக் கற்றுக் கொண்டவர்கள், அழுத்தத்தின் கீழ் இருக்கும்போது பெரும்பாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பதற்றத்தை நேர்மறையான ஒன்றாக மாற்றுவதற்கான நடைமுறை வழிகளும் உள்ளன. அதில் ஒரு முறை, உங்கள் பதற்றத்தின் காரணத்தை ஆர்வத்துடன் அணுகி, தெளிவான, பயனுள்ள இலக்குகளை அமைக்க அதைப் பயன்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, நடிகர்கள் பெரும்பாலும் மேடைப் பதற்றங்களைச் சமாளிக்க இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சிந்தனை முறை கடினமான தேர்வுகளில் அல்லது பொதுவெளியில் பேசும்போது மக்கள் சிறப்பாகச் செயல்பட உதவும் என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.
காலப்போக்கில், இந்த அணுகுமுறை சோர்வடையும் அபாயத்தையும் குறைக்கலாம்.

3. ஆக்கப்பூர்வமாகக் கவலைப்பட கற்றுக்கொள்ளுங்கள்
பொதுவாக மக்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். இதன் விளைவாக, கவலை சில நேரங்களில் பிரச்னைகளுக்குத் தயாராகவும் தீர்வுகளைக் கண்டறியவும் நம்மைத் தூண்டக்கூடும். அது நம்மை நடவடிக்கை எடுக்கத் தூண்டக்கூடும்.
கவலைப்படுவது சில நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, காட்டுத்தீ போன்ற ஆபத்துகளுக்கு மக்கள் சிறப்பாகத் தயாராகிக் கொள்ள அல்லது புகை பிடிப்பதை நிறுத்த கவலை ஒருவரைத் தூண்டுவதற்கு உதவும்.
ஆனால், சில நேரங்களில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை பற்றி நாம் கவலைப்படுகிறோம். அந்தச் சூழ்நிலைகளில், நம்மால் செய்யக்கூடியது மிகக் குறைவு என்பதைப் புரிந்துகொள்வது உண்மையில் கவலையைக் குறைக்க உதவும்.
கலிஃபோனியா பல்கலைக்கழகத்தின் ரிவர்சைடில் உள்ள சுகாதார உளவியலாளர் கேட் ஸ்வீனியின் கூற்றுப்படி, மக்கள் தங்கள் கவலைகளை நிர்வகிக்கவும் தேவைப்பட்டால் அவற்றைத் திசை திருப்பவும் உதவும் ஓர் எளிய செயல்முறை உள்ளது.
அதற்கு அவர் பின்வரும் வழிமுறையைப் பரிந்துரைக்கிறார்:
கவலைக்குப் பெயரிடுங்கள் – நீங்கள் எதைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்பதைத் தெளிவாக அடையாளம் காண வேண்டும்.
சாத்தியமான செயல்களைப் பற்றிச் சிந்தியுங்கள் – சிக்கலைச் சமாளிக்க உங்களால் செய்ய முடிந்த விஷயங்களின் பட்டியலை மனதில் உருவாக்குங்கள்.
நீங்கள் ஏற்கெனவே அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தால், ஒரு செயல்பாட்டில் ஆழமாகக் கவனம் செலுத்துதல், நினைவாற்றல் அல்லது பிரமிப்பு போன்ற கவலையைக் குறைக்க உதவும் செயல்பாடுகளை முயன்று பாருங்கள்.
4. புத்தகம், இசை அல்லது சுற்றுப்புறம் மூலமாக மனநிலையை மேம்படுத்துங்கள்
பட மூலாதாரம், Getty Images
ஒரு நல்ல புத்தகம் சில நேரங்களில் உங்கள் வாழ்க்கையை நேர்மறையான வழியில் மாற்றியமைக்கக்கூடும். நீங்கள் ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, அது உங்களை, வேறு நாட்டிற்கோ அல்லது ஒரு கற்பனை உலகத்திற்கோ என முற்றிலும் மாறுபட்ட ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடும்.
இன்பத்திற்காகத் தொடர்ந்து வாசிக்கும் மக்கள், பெரும்பாலும் குறைந்த அளவே மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் தனிமையையும் உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்கள் சமூகத்துடன் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உணர முனைகிறார்கள்.
“பிப்ளியோதெரபி” எனப்படும் ஒரு சிகிச்சை முறையும் தற்போது வளர்ந்து வருகிறது. இந்த முறையில், ஒருவரின் மனநிலை அல்லது மனநல தேவைகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட புத்தகம் பரிந்துரைக்கப்படுகிறது. இது குறித்த ஓர் ஆய்வின்படி, “துன்புற்ற மனதை ஆற்றுப்படுத்தவும், மீட்டெடுக்கவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுவது, மேலும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குவதில் பங்கு வகிப்பதே இதன் நோக்கம்.”
இருப்பினும், புத்தகங்கள் மட்டுமே முழுமையான தீர்வு அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிற வகையான சிகிச்சை முறைகளுடன் இணைத்து மேற்கொள்ளப்படும்போதுதான் அவை வழக்கமாக சிறப்பாகச் செயல்படுகின்றன. சரியான புத்தகத்தைத் தேர்வு செய்வதும் மிக முக்கியம். தவறான நேரத்தில் தவறான புத்தகத்தை வாசிப்பது ஒருவரை இன்னும் மோசமான மனநிலைக்குத் தள்ளக்கூடும்.
புத்தகம் வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லையெனில், உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பதும் உதவக்கூடும். இசை நமது உணர்ச்சிகளைப் பெரிதும் பாதிக்கக்கூடியது; அது நமது மனநிலையை மிக விரைவாக மாற்றக்கூடியது.
இசையைத் தேர்வு செய்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியான இசை உங்கள் மனநிலையை மேம்படுத்தும், அதேவேளையில் தவறான வகை இசை உங்களை இன்னும் மோசமாக உணரச் செய்யலாம் அல்லது தவறான நடத்தைகளைச் செய்ய ஊக்குவிக்கலாம். உங்களுக்கு மிகவும் பொருத்தமான இசை வகை எது என்பதைக் கண்டறிவது மிக முக்கியம்.
உங்கள் சுற்றுப்புறமும் உங்கள் உணர்வுகளைப் பாதிக்கக்கூடும். உங்கள் சுற்றுப்புறத்தை கவனமாக ஒழுங்குபடுத்துவது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, செடிகளுக்கு மத்தியில் இருப்பது, பசுமையான இயற்கை இடங்களின் படங்களைப் பார்ப்பது, அல்லது அன்புக்கு உரியவர்களின் புகைப்படங்களைப் பார்ப்பதுகூட உங்கள் மனநிலையில் நேர்மறையாகத் தாக்கம் செலுத்தலாம்.
5. பயமுறுத்தும் திரைப்படங்களைப் பாருங்கள்
பட மூலாதாரம், Getty Images
திடுக்கிட வைக்கும் காட்சிகள், கொடூரமான ஜோம்பிக்கள் மற்றும் நிழலில் பதுங்கியிருக்கும் பேய் உருவங்கள் – நீங்கள் ஏற்கனவே பதற்றமாக இருக்கும்போது இவை சரியான தீர்வாகத் தோன்றாமல் போகலாம். ஆனால், ஒரு திகில் படத்தைப் பார்ப்பது “நமது கவலைகளுக்கு ஒரு மருந்தாக” அமையும்.
பாதுகாப்பாக ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டு ஒரு பயமுறுத்தும் படத்தைப் பார்ப்பது ஒரு வகையான விளையாட்டு போன்றது. இது ஆபத்தான சூழ்நிலைகளை ஆராய்வதற்கான ஒரு வழியை நமக்குத் தருகிறது; நிஜ உலகில் நாம் சந்திக்க நேரிடும் அச்சுறுத்தல்களுக்கு நம்மை மனதளவில் தயார்படுத்துகிறது. திகில் கதைகளை விரும்புபவர்கள் கடினமான காலங்களைச் சிறப்பாகக் கையாளுவதோடு, அன்றாட வாழ்வில் குறைந்த அளவிலான கவலையையே அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, நீங்கள் முதுகெலும்பைச் சிலிர்க்க வைக்கும் திகில் படங்களை ரசிப்பவராக இருந்தாலும் சரி அல்லது பயத்தில் தலையணைக்குப் பின்னால் ஒளிந்து கொள்பவராக இருந்தாலும் சரி – மன அழுத்தமான காலங்களில் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உங்கள் மூளையின் பகுதிக்கு இது ஒரு சிறந்த பயிற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. உங்கள் ஆசிர்வாதங்களை எண்ணிப்பாருங்கள்
சிறந்த அறிவுரைகளில் சில, காலப்போக்கில் மிகவும் பிரபலமாகி, அனைவரும் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல்லாடலாகவே மாறிவிடுவதுண்டு. “உங்கள் ஆசிர்வாதங்களை எண்ணிப்பாருங்கள்” என்பதும் அவற்றில் ஒன்று.
இதை நீங்கள் “மூன்று நல்ல விஷயங்கள்” அல்லது “நன்றியுணர்வுப் பட்டியல்” என்றும் அறிந்திருக்கலாம். ஆனால் இதன் அடிப்படை நோக்கம் ஒன்றுதான்: அன்றைய பொழுதில் உங்களுக்கு நடந்த மூன்று நல்ல விஷயங்களை மாலையில் ஒரு நிமிடம் ஒதுக்கி எழுதி வைப்பது. இது ஒரு சிறிய செயலாகத் தெரிந்தாலும், மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. இதற்குப் பின்னால் முறையான அறிவியல் சான்றுகளும் உள்ளன.
2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தினமும் மூன்று நல்ல விஷயங்களைப் பட்டியலிட்டு எழுதியவர்களிடம், ஒரே மாதத்தில் அதிக மகிழ்ச்சியும், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நேர்மறையான விளைவுகள் ஆறு மாத கால ஆய்வு முழுவதும் நீடித்தன. ஆனால், தங்களின் மகிழ்ச்சியை மட்டும் அளவிட்டு வந்த ‘பிளசிபோ’ குழுவினரிடம் (placebo group), மகிழ்ச்சியில் ஒரு சிறிய முன்னேற்றம் தெரிந்ததே தவிர, அது நீண்ட காலம் நிலைக்கவில்லை.
இந்தத் தாளில் நீங்கள் எழுதும் விஷயங்கள் பதவி உயர்வு பெறுவது அல்லது தேர்வில் தேர்ச்சி பெறுவது போன்ற வாழ்க்கை மாற்றும் நிகழ்வுகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை – ஒரு நண்பருடன் உரையாடியது போன்ற அன்றாட எளிய விஷயமாகக் கூட இருக்கலாம்.
7. உங்களால் எதைக் கட்டுப்படுத்த முடியும், எதை முடியாது என்பதை அடையாளம் காணுங்கள்
நிச்சயமற்ற காலங்களில் நாம் வாழும்போது, இன்றும் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ஆலோசனைகளுக்காகப் பண்டைய தத்துவஞானிகளை நாம் நாடலாம்.
கி.பி. 55-இல் பிறந்த எபிக்டெட்டஸ் (Epictetus), துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தவர். அரசியல் கொந்தளிப்புகளை அனுபவித்தவர். இந்த ஆரம்பகால அனுபவங்களே பிற்காலத்தில் ‘ஸ்டோயிசிசம்’ (Stoicism) எனும் தத்துவப் பள்ளியில் அவர் போதித்த கருத்துகளை வடிவமைத்தன.
வாழ்க்கையில் நமது முதன்மையான பணி, நம்மால் எதைக் கட்டுப்படுத்த முடியும் (நமது எண்ணங்கள், தேர்வுகள் மற்றும் செயல்கள்) மற்றும் எதை முடியாது என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பிரித்துப் பார்ப்பதுதான் என்று அவர் கூறினார். தவிர்க்க முடியாதவற்றை எதிர்ப்பதாலோ அல்லது நமது முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத முடிவுகளின் மீது நமது நம்பிக்கையை வைப்பதாலோதான் நமக்கு பெரும்பாலான மனவேதனைகள் ஏற்படுகின்றன என்று ஸ்டோயிக் தத்துவவாதிகள் வாதிட்டனர்.
நமது வாழ்க்கையில் ஏதேனும் கொந்தளிப்பான சூழலை சந்திக்கும்போது நம்மைத் தயார்படுத்திக்கொள்ள, சிறிய விஷயங்களில் கூட இந்தத் தெளிவைப் பயிற்சி செய்ய எபிக்டெட்டஸ் அறிவுறுத்தினார். அவர் கூறியதாகக் கருதப்படும் இந்த வரிகளை நினைவில் கொள்வது அவசியம்: “நிகழ்வுகள் மக்களைத் தொந்தரவு செய்வதில்லை, அந்த நிகழ்வுகள் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பீடுகளே அவர்களைத் தொந்தரவு செய்கின்றன.”
மாற்றங்களும் இன்னல்களும் எதிர்பார்க்கப்பட வேண்டியவை என்பதையும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு கடினமான நிகழ்விலிருந்தும் (போர், பெருந்தொற்று, உடல்நலம் அல்லது நிதிச் சிக்கல்கள்) நம்மால் பாடம் கற்க முடியும் என்பதையும் நாம் உணர்ந்தால், நாம் இன்னும் வலிமையானவர்களாக மாறுவோம்.
பட மூலாதாரம், Getty Images
8. நம்பிக்கையை சரியான வழியில் பயன்படுத்துங்கள்
சில நிபுணர்கள், ‘எல்லாம் நன்றாகிவிடும்’ என்ற வெறும் நம்பிக்கை (wishful thinking) மனிதர்களுக்கு, தங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்றதும் பயமூட்டுவதுமான சூழ்நிலைகளிலிருந்து விலகிக் கொண்டு, அதைச் சரி செய்ய எதையும் செய்யாமல் இருக்க ஒரு காரணமாக மாறுகிறது என்று நம்புகின்றனர்.
ஆனால், காலநிலை மாற்றம் போன்ற ஒரு விஷயத்தில் ‘நம்பிக்கை’ (hope) எந்தளவுக்குப் பங்காற்றுகிறது என்பது குறித்து பிபிசி செய்தியாளர் டியாகோ அர்குவேடாஸ் ஓர்டிஸ் (Diego Arguedas Ortiz) மேற்கொண்ட ஆய்வில், சரியான வகையான நம்பிக்கையைக் கண்டறிவது முக்கியம் என்பதைக் கண்டறிந்தார்.
பிறர் மீது நம் நம்பிக்கையை வைப்பதற்கோ அல்லது நேர்மறையான செய்திகளுக்காகக் காத்திருப்பதற்கோ பதிலாக, அந்த நம்பிக்கையானது நமது சொந்த மற்றும் மற்றவர்களுடன் இணைந்த செயல்பாடுகளோடு தொடர்புபடுத்தப்படும்போதுதான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“நம்பிக்கை என்பது அர்த்தம் சார்ந்த ஒரு சமாளிக்கும் முறை” என்கிறார் ஸ்வீடனில் உள்ள ஓரேப்ரோ பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் மரியா ஓஜாலா. இது மக்கள் தங்கள் உலகில் உள்ள சிரமங்களைப் புரிந்துகொள்ளவும், முன்னேறிச் செல்வதற்கான ஒரு வழியை வழங்கவும் உதவுகிறது.
உண்மையில், தனிப்பட்ட ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அவற்றை அடைவதற்கான பயணத்திலிருந்தே நம்பிக்கை பிறக்கிறது என்று உளவியலாளர்கள் நம்புகின்றனர்.
9. துன்பமான காலங்களில் குழந்தைகளுடன் எவ்வாறு உரையாடுவது?
பட மூலாதாரம், Getty Images
இருண்ட காலங்கள் நம்மை மட்டும் பாதிப்பதில்லை. அவை நம் அன்புக்குரியவர்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும் பாதிக்கலாம்.
அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவது கடினமாக இருக்கலாம்; ஆனால் நாம் அதை எப்படிக் கையாளுகிறோம் என்பது அவர்களின் மனநலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு பராமரிப்பாளர் தனது குழந்தையுடன் பேசும் விதம், அக்குழந்தையின் நினைவுகளையும் நடத்தையையும் வடிவமைக்கக்கூடும்; இது அவர்கள் ஆத்திரப்படாமல் எதையும் யோசித்துச் செய்ய உதவும்.
ஓர் ஆய்வில், குழந்தைகளின் அனுபவங்களைப் பற்றிய உரையாடல்களின் போது அதிக கேள்விகளைக் கேட்ட பெற்றோர்கள், குழந்தைகளின் கவனிப்புத் திறன் மற்றும் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவியது கண்டறியப்பட்டது.
கடினமான உணர்வுகளை ஆராய்வது குறிப்பாக ஆற்றல் வாய்ந்ததாகத் தோன்றியது; இது குழந்தைகள் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்ள உதவியது. இது “உணர்வுப் பயிற்சி” என்று அழைக்கப்படுகிறது; இதில் உணர்வுகளை அடையாளம் கண்டு அவற்றை அங்கீகரிப்பதும், அவற்றைப் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதும், ஆரோக்கியமான சமாளிக்கும் முறைகளை நோக்கி குழந்தைகளை வழிநடத்துவதும் அடங்கும்.
இதே செயல்முறை பெருந்தொற்று காலத்தின் போது மன அழுத்தத்தின் விளைவுகளைக் குறைக்க உதவியது. ஒரு குழந்தை எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறது என்பதை அங்கீகரிப்பதும் முக்கியம் – இது மன அழுத்த காலங்களில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவுவதோடு, அவர்களுக்குப் பரந்த அளவிலான உணர்வுப்பூர்வமான திறன்களையும் வழங்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



