SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘கூட்டணி ஆட்சி கிடையாது’ என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் வகையில் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் தாமதமாகி வருவதில் காங்கிரஸ் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஏதும் துவங்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியன்று ஊடகம் ஒன்றிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், “எங்கள் கட்சியின் சார்பில் வாக்குறுதிகளை கட்சியின் தலைவர்கள் வழங்குவார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம்” என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியான மாணிக்கம் தாகூர், புரொஃபஷனல் காங்கிரசைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரும் வலியுறுத்த ஆரம்பித்தனர்.
பட மூலாதாரம், @mkstalin/X
டெல்லியில் கூட்டம்
இதற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ எனக் கூறிவந்ததால், அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாமோ என்ற யூகங்கள் எழுந்தன. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதெல்லாம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் துவங்கவேயில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப. சிதம்பரம், மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்காதது தொடர்பாக காங்கிரசின் வருத்தத்தை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார்.
“தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாகக் குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை எட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவும் வேட்பாளர் தேர்வுகளைச் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம்தான் வரும். தி.மு.க பேச்சு வார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், K.Selvaperunthagai/FB
கு. செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சுக்கு விளைவு இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று இரவில், கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்பாக அறிக்கை ஒன்றை தி.மு.க. வெளியிட்டது.
“வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்” என்று அந்த அறிக்கை கூறியது.
இதற்கு அடுத்த நாள் சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கிரசுடனான கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது எனத் தெரிவித்திருக்கிறார்.
“(காங்கிரசுடன்) கூட்டணி நிச்சயமாக நன்றாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பதைப் போல இல்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் (காங்கிரசுக்கும்) தெரியும். இடையில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்தலாம் என நினைப்பவர்கள் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். நாங்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களும் கவலைப்படவில்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, தி.மு.க-வின் சில அமைச்சர்கள் கூட்டணி ஆட்சி தி.மு.கவுக்கு ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் எதிர்வினை
பட மூலாதாரம், Manickam Tagore / Facebook
அடுத்தது கூட்டணி ஆட்சிதான் என காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றினார்கள்.
விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூர், “மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தியும் எதிர்வினையாற்றினார். “மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும்போது, தமிழ்நாட்டின் ‘தனித்தன்மை’ என்ற காரணத்தைக் கூறி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? மற்ற இந்தியர்களைப் போலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
கூட்டணி ஆட்சி என்பதை முதல்வர் மறுத்துவிட்ட நிலையில் இனி காங்கிரஸ் இதனைத் தொடர்ந்து வலியுறுத்துமா? “அதனை இப்போது வெளியில் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் அந்தத் தருணத்தில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள்” என பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கு. செல்வப்பெருந்தகை மிகக் கவனமாகவே இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும் சேர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வைக் காண்பார்கள். எல்லோரும் அவரவர் கருத்தைச் சொல்வார்கள். முடிவு செய்ய வேண்டியது, தேசியத் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும்தான். ஊடகங்களில் யூகங்களை உருவாக்காதீர்கள்” என்று கூறி இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
பட மூலாதாரம், Praveen Chakravarty/Facebook
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இது குறித்து பேசாதபோது மாநில அளவில் சிலர் சொல்லும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
“2006ல் தவறு செய்துவிட்டோம் என மாணிக்கம் தாகூர் நினைத்தால், அவர் அதனை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு, மூன்று பேர்தான் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் இடங்களைக் கேட்பது நியாயமானதுதான். தேர்தல் முடிவுகள் வரும்போது எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போதுகூட ஆட்சியில் பங்கு கேட்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பே இப்படிக் கேட்பது சரியல்ல. தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்பார்கள்?” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
தி.மு.கவைப் பொறுத்தவரை 22ஆம் தேதிதான் பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருக்கிறார்கள். இந்த நிலையில், முதல்வரின் பேச்சு ஆழம் பார்ப்பதற்காக சொல்லப்பட்ட கருத்து என்று கருதுவதாகச் சொல்கிறார் ப்ரியன்.
“காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை யாரும் எதையும் சொல்ல முடியும். கேரளாவில் காங்கிரஸின் கொள்கைக்கே மாறுபட்ட கருத்தையெல்லாம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியைப் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். காங்கிரசின் பக்கம் இருந்து பார்க்கும்போது இதுபோன்ற அழுத்தம் நல்லதுதான். கூடுதல் இடங்களைப் பெற உதவலாம். ஆனால், முதல்வர் இது குறித்து தெளிவுபடுத்திய பிறகும் இதைச் சொல்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கிறது” என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

திமுக கூறுவது என்ன?
ஆனால், தனித்து ஆட்சி என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. “கூட்டணி ஆட்சி வேண்டுமென்றால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும். மக்கள் யாருக்கு எவ்வளவு இடங்களை அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், மற்ற கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், நாம் ஒரே கூட்டணியாக இணைந்து நின்று, அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வாக்குக் கேட்கிறோம். அம்மாதிரி சூழலில், கூட்டணி ஆட்சி என்று கேட்டால் எப்படி?” என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.
2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தவறுசெய்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் சொல்வது குறித்துக் கேட்டபோது, அந்தக் கருத்து சரியானதல்ல என்கிறார் அவர்.
“2006ஆம் ஆண்டில் தி.மு.க 128 இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தத் தருணத்திலேயே தனித்துப் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பது தி.மு.க-வுக்குத் தெரியும். இருந்தபோதும் தி.மு.க. ஆட்சியமைக்க வாக்களியுங்கள் என்றுதான் பிரச்சாரம் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன. ஆகவே அது தி.மு.க. ஆட்சியமைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட இடங்கள்தான். கூட்டணி ஆட்சி அமையட்டும் என்று கொடுத்தது அல்ல. அப்போது காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் அந்த ஆட்சி நீடித்திருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
“தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த அலையும் இல்லாவிட்டால் ஒரே ஒரு கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கடினம்” என்று கூறும் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன், “2006ஆம் ஆண்டு தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைப்பது என்றும் தமிழ்நாட்டில் தி.மு.க. மந்திரிசபை அமைப்பது என்றும் இரு கட்சித் தலைமைகளும் முடிவெடுத்தன. அதனை இப்போது பேசுவது பொருத்தமில்லாதது. தமிழ்நாட்டில் எப்போதுமே மக்கள் ஒரே கட்சியின் ஆட்சிக்காகத்தான் வாக்களிக்கிறார்கள்” என்கிறார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
பட மூலாதாரம், X/Edappadi K Palaniswami
இந்நிலையில், ‘கூட்டணி ஆட்சி’ குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக- என்டிஏ கூட்டணியில் இந்தப் பிரச்னை இல்லையென்றும்”, “அதிமுக தான் ஆட்சியமைக்கும்” என்றும் கூறினார்.
இன்று (பிப்ரவரி 11) தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் “இது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உள்ள கூட்டணி பிரச்னை. இதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், முதலமைச்சர் பேசியதற்கு உடனடியாக ஒரு காங்கிரஸ் தலைவரிடமிருந்து எதிர்வினை வருகிறது. இது அங்கு ஒரு குழப்பமான சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் கூட்டணியில் இந்தக் குழப்பம் இல்லை, அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக- தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், அதிமுக ஆட்சியமைக்கும், நான்தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர், இதெல்லாம் முன்பே தெரிவிக்கப்பட்டதுதான்” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



