Home தேசிய national tamil டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி – சூப்பர் 8 சுற்றுக்குள்...

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி – சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி

9
0

SOURCE :- BBC NEWS

இந்தியா- பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

15 பிப்ரவரி 2026, 13:06 GMT

புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 27வது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் முதல் ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார், அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.

ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது ஓவரின் இரண்டாவது மற்றும் கடைசி பந்துகளில், சயிம் அயூப் மற்றும் சல்மான் அகாவை திருப்பி அனுப்பினார்.

ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் பாபர் அசாமை அக்சர் படேல் வீழ்த்தினார். பாபர் அசாம் ஐந்து ரன்கள் எடுத்தார்.

ஏழு ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் மட்டுமே எடுத்தது.

18 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின் போதும் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை.

போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். எனினும் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா தொடர்ந்து ஆடினர்.

இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்

பட மூலாதாரம், Viraj Kothalawala/MB Media/Getty Images

அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த போதும் இஷான் கிஷன் பெரிய ஷாட்களை ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா சிங்கிள் ரன்களை எடுத்து ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.

இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா களத்தில் இருந்தனர்.

24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா சயிம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா வலுவான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர்

பட மூலாதாரம், Matthew Lewis-ICC/ICC via Getty Images

சவால் கொடுத்த சயிம் அயூப்

இந்திய பேட்டர்களுக்கு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயிப் அயூப் பெரும் சவால் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீசினார்.

இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைத்துமே பெரிய விக்கெட்டுகள். பெரும்பாலும் ‘அரௌண்ட் தி ஸ்டம்ப்’ வந்து ஸ்டம்ப் லைனில் சீராக வீசிக்கொண்டே இருந்தார். அதன் பலனாக ரன்கள் கட்டுக்குள் இருந்ததோடு விக்கெட்டுகளும் கிடைத்தது.

18 ஓவர்களை வீசிய ஸ்பின்னர்கள்

இந்த இன்னிங்ஸின் 20 ஓவர்களில் 18 ஓவர்களை பாகிஸ்தான் ஸ்பின்னர்களே வீசினார்கள். சல்மான் அகா, சயிம் அயூப், அப்ரார் அஹமது, முகமது நவாஸ், சதாப் கான், உஸ்மான் தாரிக் என 6 ஸ்பின்னர்கள் அந்த 18 ஓவர்களை வீசினார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்களில் ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே 2 ஓவர்கள் வீசினார். மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனான ஃபஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் கேப்டனால் பயன்படுத்தப்படவில்லை.

3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி ஒரேயொரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே இன்று களமிறக்குகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்த்து ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மற்ற வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களாக உள்ளனர்.

வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் என்று 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கியிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானும் உஸ்மான் தாரிக், அப்ரார் அஹமது, சதாப் கான், முகமது நவாஸ் என பல ஸ்பின்னர்களை தங்கள் பிளேயிங் லெவனில் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பிளேயிங் லெவன் விவரம் பின் வருமாறு:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தானின் பிளேயிங் லெவன்

பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்த போட்டிக்கு முன்புவரை டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன.

ஆரம்பத்தில் இந்த போட்டிக்கான அனுமதியை மறுத்த பாகிஸ்தான் அரசு, பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு, இறுதியில் முடிவை மாற்றிக் கொண்டு, தனது அணி உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி அளித்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, இரு அணிகளின் மோதலை விட இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான்.

கைகுலுக்காத கலாசாரம் தொடர்கிறது

இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Matthew Lewis-ICC/ICC via Getty Images

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் இரு அணி கேப்டன்கள் இன்றும் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.

2025 ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவதை தவிர்த்தனர். அதே போல போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். இந்திய அணியின் இந்த செயல் பேசுபொருளானது. காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களோடு நிற்க இந்த முடிவை எடுத்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமா யாதவ் கூறினார். இந்த விஷயத்தில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐசிசியிடம் முறையிட்டது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் கைகுலுக்கல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது பற்றி சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கேட்கப்பட்ட போது டாஸ் போடும் நேரத்தில் கைகுலுக்குவதைப் பற்றி பார்ப்போம். 24 மணி நேரம் காத்திருங்கள் என்றார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவும் அதே பதிலை கூறினார். இந்த நிலையில், டாஸின் போது மீண்டும் கைகுலுக்கலை தவிர்த்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU