Home தேசிய national tamil டிரம்ப் அறிவிப்பால் மகிழும் பாகிஸ்தான் – பொறியில் சிக்குவாரா மோதி?

டிரம்ப் அறிவிப்பால் மகிழும் பாகிஸ்தான் – பொறியில் சிக்குவாரா மோதி?

4
0

SOURCE :- BBC NEWS

டிரம்ப் , இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், சீனா, தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

பல்லாண்டுகளாக இந்திய வெளியுறவுத் துறையில் குறிப்பாக காஷ்மீர் குறித்த பாகிஸ்தானுடனான நீண்ட கால சர்ச்சையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று.

விவரம் அறிந்தவர்கள், மரபுகளை தாண்டிய ராஜ தந்திர நடவடிக்கைகளுக்காக அறியப்படும் டொனால்ட் டிரம்ப்பின் இந்த செயலால் ஆச்சரியப்படவில்லை. இது டெல்லியில் பலரையும் சீண்டியுள்ளது.

சனிக்கிழமையன்று தன்னுடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் நான்கு நாட்கள் எல்லை கடந்த மோதல்களுக்குப் பிறகு அமெரிக்கா முன்மொழிந்துள்ள “முழு மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு” இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் இன்னொரு பதிவில், “ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூட பாகிஸ்தான் தொடர்பாக ஏதாவது தீர்வை எட்ட முடியுமா என்று காண நான் உங்கள் இருவருடனும் வேலை செய்வேன்” என்றார்.

காஷ்மீர் விவகாரம் என்பது 1947-இல் இரு நாடுகளும் உருவானதில் இருந்தே தொடங்குகிறது.

பல தசாப்தங்களாக இரு தரப்பும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் பலனில்லை. இந்தியா காஷ்மீரை தனது ஒன்றுபட்ட பகுதியாக கருதுகிறது. அதனால் காஷ்மீர் மீது எந்த விதமான பேச்சுவார்த்தையும், குறிப்பாக ஒரு மூன்றாம் தரப்பு மூலம் மேற்கொள்வதை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது.

டிரம்ப் தலையீடு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்திய பிறகு இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டும் நிலையில் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

இரு அணு ஆயுத நாடுகள் இடையேயான சண்டை முழுமையான மோதலாக உருப்பெறலாம் என்கிற அச்சம் நிலவிய சூழலில் டிரம்பின் தலையீடு வந்தது.

இரு தரப்பும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி எதிர்தரப்பின் ராணுவ இலக்குகளை, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் குறிவைத்ததாகக் கூறின.

அமெரிக்க மத்தியஸ்தர்கள், ராஜதந்திர வழிமுறைகளை கையாண்டு ஒரு பெரிய மோதலைத் தவிர்த்த நிலையில் டிரம்பின் அறிவிப்பு இந்தியாவை சிக்கலான இடத்தில் நிறுத்தியுள்ளது.

“நிச்சயம் இது இந்திய தரப்பால் வரவேற்கப்படாது. இது பல வருடங்களாக உள்ள நம்முடைய நிலைப்பாட்டிற்கு எதிரானது,” என்கிறார் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரான ஷ்யாம் சரண்.

ஆனால் மறுபுறம் பாகிஸ்தானோ டிரம்பின் கருத்துகளை வரவேற்றுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அறிக்கை டிரம்பின் முன்னெடுப்பை பாராட்டியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “தெற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரமான தாக்கங்களைக் கொண்ட நீண்டகால பிரச்னையான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் டிரம்பின் விருப்பத்தை நாங்கள் பாராட்டுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 2019ஆம் ஆண்டு நீக்கிய பிறகு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மேலும் இறுக்கமானதாக மாறியுள்ளது.

டிரம்பின் கருத்துகள் பல இந்தியர்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது. இவர்கள் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியாகவே அதனை பார்க்கின்றனர்.

டிரம்ப் , இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், சீனா, தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமா?

போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு முதலில் அமெரிக்காவிடம் இருந்து வந்தது பற்றி விளக்கம் கேட்டுள்ள இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கோரியுள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக பேசுகையில், “நாம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு கதவுகளை திறந்துள்ளோமா? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராஜாங்க தொடர்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளனவா என காங்கிரஸ் கேட்க விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை அறிவிக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் அறிக்கை, இருநாடுகளும் நடுநிலையான ஓரிடத்தில் பரவலான பிரச்னைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தது. இது இந்தியர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றச்சாட்டி அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா மறுத்துள்ளது.

1971 யுத்தத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி இந்தியா மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வரலாற்று ரீதியாகவே எதிர்த்துள்ளது. இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள சிம்லா ஒப்பந்தத்தின்படி, அவர்கள் வேறுபாடுகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியாக தீர்த்து கொள்ள ஒப்புக்கொண்டனர்.

பாகிஸ்தான் அரசுடன் இந்தியா ஒரு புரிதலை எட்டினாலும், அந்நாட்டில் செல்வாக்கு செலுத்தும் ராணுவம் அந்த ஒப்பந்தங்களை மட்டுப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது என இந்திய அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

அவர்கள் 1999-இல் நடந்த கார்கில் போரைக் குறிப்பிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரின் முக்கியமான பகுதிகளை பாகிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுவினர் கைப்பற்றிய போது இரு நாடுகளுக்கும் இடையே மற்றுமொரு மோதல் வெடித்தது.

டிரம்ப் , இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், சீனா, தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் பிரச்னைகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கவும், மற்றவரின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும் ஒப்புக்கொண்ட சில மாதங்களுக்குள்ளேயே இந்த மோதல் நடைபெற்றது.

மத்தியஸ்தம் செய்வதற்கான டிரம்பின் முன்னெடுப்பு குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை. ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா அனைத்து வகையான தீவிரவாதத்திற்கு எதிரான நிலையான மற்றும் சமரசமில்லாத நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைபிடித்துள்ளது. இனியும் அதைத் தொடர்ந்து செய்யும்” எனத் தெரிவித்தார்.

இது இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்காது என்பதற்கான குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் பாகிஸ்தானில் பார்வை வேறாக உள்ளது.

டிரம்ப் , இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், சீனா, தெற்காசியா

பட மூலாதாரம், Reuters

‘ஒரு தார்மீக வெற்றி’

“இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாத சூழலில் பாகிஸ்தான் எப்போதுமே காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும் எனக் கூறி வருகிறது” என்கிறார் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆய்வு மற்றும் பாதுகாப்பு கல்விக்கான மையத்தின் இணை இயக்குநர் இம்தியாஸ் குல்.

“தற்போது ஒரு வல்லரசு நாடு அதைச் செய்ய முன்வந்துள்ளது. பாகிஸ்தான் இதை ஒரு தார்மீக வெற்றியாக பார்க்கும்” என்றார் குல்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தொடர்ந்து மறுத்து வருவதால் தான் எதிர்கால மோதலை தவிர்க்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என வாதிடுகிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த வல்லுநரான சையத் முகம்மது அலி.

“சர்வதேச சமூகத்திற்கு காஷ்மீர் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று. சமீபத்திய நிகழ்வுகள், ராணுவ நடவடிக்கைகள் கையை மீறி போகலாம் என்பதை தான் நிரூபிக்கின்றன” எனக் கூறுகிறார் அலி.

இந்தியாவின் உறுதிமிக்க ராஜ தந்திர நடவடிக்கைகள், குறிப்பாக 2014-ம் ஆண்டு மோதி ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய நடவடிக்கைகள் உலக பொருளாதார சக்தியாக வளர்ந்து வருவதான அதன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

ஆனால் டிரம்பின் முன்னெடுப்புகளைத் தவிர்க்க, இந்தியா சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

சமீப ஆண்டுகளில் சீனாவுக்கு எதிரான அரணாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பில் இந்திய ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

டிரம்ப் , இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், சீனா, தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய ஆயுதங்களை அதிகமாகச் சார்ந்திருக்கும் 1.4 மில்லியன் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த விரும்பும் இந்தியாவுக்கு சமீப ஆண்டுகளில் நவீன போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை அமெரிக்கா விற்றுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து முந்தைய அமெரிக்க அரசுகள் இதில் தலையிடாமல் விலகியே இருந்தன. ஆனால் டிரம்பிடம் அதே நிலைப்பாடு உள்ளதா என்கிற கேள்விக்குறியும் உள்ளது.

2024-இல் 130 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. மோதியின் அரசாங்கம் தற்போது வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா ஒரு தெளிவான, சிக்கல் இல்லாத பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். மத்தியஸ்தம் செய்வதற்கான டிரம்பின் முன்னெடுப்பு அல்லது அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்தம் அல்லது உடன்பாட்டை தற்போதைய ராணுவ பதற்றங்களைத் தாண்டி எடுத்துச் செல்ல இந்தியா விரும்பாது. அதேசமயம் அமெரிக்காவுடன் சாதகமான வர்த்தக உறவை வைத்துக் கொள்ள இந்தியா குறியாக உள்ளது.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் அல்லது காஷ்மீரின் நிலை என சர்ச்சைக்குரிய இரு தரப்பு பிரச்னைகள் மீது பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எந்த முயற்சியும் உள்ளூரில் கடுமையான விமர்சனங்களை வரவழைக்கும். இந்த பொறியை மோதி நன்கு அறிவார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU