SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Reuters
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதிபர் டிரம்ப் விரும்பியது நடக்குமா, இந்தியாவில் எந்தெந்தத் தொழில் துறைகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும், தங்கத்தின் விலை அதிகரிக்குமா என்பவை குறித்து பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமையன்று இறக்குமதிக்கான புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைவாக இருக்கும் வேளையில், பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் இறக்குமதி வரி விதிப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். அதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டுக்குமான இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளார். அதன்படி இந்தியாவுக்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதென்பது உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது, வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது, அரசுக்கு வருவாயை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுக்காகச் செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை இதன் மூலம் ஈர்க்க நினைத்தாலும், அது சுலபமல்ல என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
“அதிபர் டிரம்பை பொறுத்தவரை அமெரிக்காவை மீண்டும் ஒரு மகத்தான நாடாக்க வேண்டுமென நினைக்கிறார். 1980களில் தொடங்கி அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்ந்து குறைந்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை மிகக் குறைவான விலைக்கு இறக்குமதி செய்வதால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் கருதுகிறார். ஒருவேளை இறக்குமதி வரியை அதிகப்படுத்தினால், அமெரிக்காவிலேயே உற்பத்தி அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கையில் இதைச் செய்கிறார். ஆனால், அப்படி நடக்காது” என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தொடர்ந்து பேசிய ஆனந்த் ஸ்ரீனிவாசன், டேவிட் ரிக்கார்டோ என்ற பொருளாதார நிபுணர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்வைத்த The theory of comparative advantage என்ற கோட்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.
“ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சாதகமான அம்சம் இருக்கும். அப்படி தங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சத்தை அந்தந்த நாடுகள் பயன்படுத்தும். அதுதான் அந்தக் கோட்பாடு” என உதாரணத்துடன் விளக்கத் தொடங்கினார்.
ஒரு அமெரிக்க செல்போன் தயாரிப்பு நிறுவனம் வெளிநாட்டில் தயாராகும் தங்களது செல்போனை 1,000 டாலருக்கு விற்கிறது என்றால், அதை உருவாக்க 100 டாலர்கூட செலவாகாது. மீதமுள்ள 900 டாலர்கள் அந்த நிறுவனத்துக்கு லாபமாகக் கிடைக்கும்.
“இந்த லாபத்தின் பெரும்பகுதி அமெரிக்காவுக்குத்தான் செல்லும். அமெரிக்காவில் இதே போனை உற்பத்தி செய்தால் தயாரிப்புச் செலவே 500 – 600 டாலர்கள் ஆகிவிடும். அப்படியானால் 1,500 டாலருக்குத்தான் விற்க முடியும்.
சீனா, இந்தியா, வியட்நாம் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்தால், உற்பத்திச் செலவு மிகவும் குறைவு. அதனால் இந்த நாடுகளில் உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கிறார்கள்” என விளக்கினார்.
அறிவியல், ஆராய்ச்சி போன்றவைதான் அமெரிக்காவின் பலம் எனச் சுட்டிக்காட்டும் ஆனந்த் ஸ்ரீநிவாசன், ஆகவேதான், பல கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் உருவாகின்றன எனத் தெரிவித்தார்.
“முதல் பெட்ரோல் காரும் முதல் மின்சாரக் காரும் அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட்டன. டிரான்சிஸ்டர்கள், மைக்ரோ ப்ராசசர்கள் போன்றவையும் முதலில் அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட்டன.
மற்றவர்கள் அதைச் சிறப்பாகப் பிரதி செய்தார்கள், அவ்வளவுதான். ஆய்வு, வடிவமைப்பு, புது தயாரிப்புகளை உருவாக்குவதில் அமெரிக்கா ஒரு வலுவான நாடு. வடிவமைப்பு செய்த பிறகு பெரிய அளவில் உற்பத்தி செய்ய வெளிநாடுகளை நாடுகிறார்கள். இதில் இரு தரப்புக்கும் லாபம் இருக்கிறது” என்று அவர் விளக்கினார்.

பட மூலாதாரம், EPA
ஆனால், டிரம்பை பொறுத்தவரை, உற்பத்தியும் அமெரிக்காவுக்கு வர வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்ட ஆனந்த் ஸ்ரீனிவாசன் அதை விரிவாக விளக்கினார்.
“அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் பொருட்களின் விலை குறைவாக இருக்கும் என டிரம்ப் கருதுகிறார். அமெரிக்காவை மற்றவர்கள் ஏமாற்றுவதாக அவர் நினைக்கிறார். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை மற்ற நாடுகள் திருடுவதாகச் சொல்கிறார்.
ஆனால் உண்மை அப்படியல்ல, அமெரிக்காவுக்கான பொருட்களை குறைவான விலைக்கு மற்ற நாடுகள் செய்து தருகின்றன, அவ்வளவுதான்” என்றார்.
டிரம்ப் ஏன் இதைச் செய்தார்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் இருந்த விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்குத் தீர்வாக, இறக்குமதி வரியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதையும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதையும் தனது தேர்தல் பிரசாரத்தில் ஒரு தீர்வாக டிரம்ப் முன்வைத்தார்.
விலைவாசி அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு என அமெரிக்க சமூகத்தில் நிலவிய பல சூழல்களைப் பயன்படுத்தி டிரம்ப் சில விஷயங்களை முன்வைத்ததாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார்.
“ஒரு கட்டத்தில் அமெரிக்க சமூகம் பல பிரச்னைகளால் தவித்துக் கொண்டிருந்தது. அதாவது, உற்பத்தி தொடர்பான வேலைகளை வெளிநாட்டவர்கள் திருடிவிட்டார்கள் என்றார் டிரம்ப். இரண்டாவதாக, விசா இல்லாமல் எல்லோரையும் உள்ளே அனுமதித்து நம் வேலைவாய்ப்புகளைக் கெடுத்துவிட்டார்கள் என்றார்” எனக் கூறுகிறார் ஆனந்த்.
டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதே இந்த இரு விஷயங்களை முன்வைத்துத்தான் எனக்கூறும் அவர், அதற்குத் தீர்வாக சில விஷயங்களை முன்வைத்ததாகவும் கூறுகிறார்.
அதாவது, இறக்குமதி வரிகளை விதித்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாகவும் விசா இல்லாமல் அமெரிக்காவில் இருப்பவர்களை நாட்டைவிட்டு அனுப்புவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.
“அமெரிக்காவில் உரிய அனுமதியின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை என்று ஓர் எண்ணிக்கையை டிரம்ப் முன்வைத்தார். இப்போது அந்த எண்ணிக்கை அளவுக்கு ஆட்களை வெளியில் அனுப்ப நினைக்கிறார். ஆகவே முறையான விசா இருப்பவர்கள்கூட குறி வைக்கப்படுகிறார்கள்” எனக் கூறுகிறார் அவர்.
டிரம்பின் புதிய வரி விதிப்பால் யாரெல்லாம் பாதிக்கப்படலாம்?

பட மூலாதாரம், EPA
டிரம்பின் புதிய இறக்குமதி வரி விதிப்பால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்பில் வேறுபாடுகள் இருக்கும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
“அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம். அமெரிக்க பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். அமெரிக்காவில் இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம்.
அது உடனடியாக வராது என்றாலும் ஆறு மாதங்களில் இருந்து ஓர் ஆண்டுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் பொருளாதாரம் மந்தமடைந்தால் இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதன் தாக்கம் இருக்கும்” எனக் கூறுகிறார் அவர்.
ஏற்கெனவே, செயற்கை நுண்ணறிவின் வருகையால் அடிப்படை நிரல் எழுதும் பணிகள் குறைந்துவிட்டன எனக் குறிப்பிடும் அவர், இனி 50 வயதுக்கு மேலானவர்களுக்கு வேலை கிடைக்காது என்றும், அதேபோல, புதிதாக வருபவர்களுக்கும் வேலை கிடைப்பது கடினம் என்றும் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
“இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வாகன உதிரி பாகங்களைத் தயாரித்து அனுப்புகிறார்கள். அவர்களுக்குச் சிரமம் ஏற்படும். இந்த வரி விதிப்பால் திருப்பூர் போன்ற ஜவுளி நகரங்களுக்குச் சிறிய சாதகம் இருக்கிறது. ஜவுளிப் பொருட்களுக்கு 27 சதவிகித வரி விதித்தாலும் சீனாவுக்கு 34 சதவிகிதம் வரி, வியட்நாமுக்கு 46 சதவிகிதம் வரி, வங்கதேசத்துக்கு 37 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவுக்கு குறைவான வரியே விதிக்கப்பட்டிருப்பதால், இது சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே, ஜவுளி, மருந்துத் துறைகளுக்கு நன்மை இருக்கலாம். ஆனால், ஐடி, வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகளுக்கு இந்தப் புதிய வரி விதிப்பு பாதகமானது” என்றார்.
அதேபோல, ஸ்டார்ட் அப்களுக்கு நிதி வருவது குறையலாம் என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அமெரிக்காவில் இருந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குப் பணம் வருவதில் சிரமமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“வட்டி விகிதம் குறைந்தால்தான் வெளிநாட்டுக்கு முதலீடுகள் செல்லும். ஆனால், அமெரிக்காவில் வட்டி விகிதம் இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. ஏனெனில், இப்போது இறக்குமதி வரி விகிதம் அதிகரித்துள்ளதால் விலைவாசி அங்கே அதிகரிக்கும்.
இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அதை எதிர்கொள்ள வட்டி விகிதத்தை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர, குறைக்க வாய்ப்பு இல்லை. வட்டி விகிதத்தை அதிகரித்தால், அங்கேயே முதலீடு செய்வார்களே தவிர, இங்கு வந்து முதலீடு செய்ய மாட்டார்கள்,” என்கிறார் அவர்.
இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில தசாப்தங்களில் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கார் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தப் புதிய வரி விதிப்பால் கார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, இங்குள்ள தொழிற்சாலைகளும் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. ஆனால், அந்த அச்சம் தேவையற்றது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
“கார் ஏற்றுமதியில் நமக்குப் பிரச்னை வராது. ஏனென்றால், அமெரிக்க கார் நிறுவனங்களான ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், க்ரைஸ்லர் போன்றவை இங்கே இல்லை. இந்தியாவில் இருப்பதெல்லாம் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்கள்தான்.
இந்த நிறுவனங்கள், இங்கே உற்பத்தியாகும் கார்களை ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்குத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, வாகன உதிரி பாகங்கள், இஞ்சினீயரிங் பொருட்கள், தோல் பொருட்கள், ரசாயனங்கள், செல்போன் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். அமெரிக்காவில் பொருளாதார மந்தம் வரும்போது ஐடி துறையும் அதன் விளைவாக அடிபடும்” என்றார்.
மறுபுறம், பிற ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, சீனா போன்றவற்றுக்கு இந்தப் புதிய வரி விதிப்பால் கணிசமான பாதிப்பு இருக்கும் என்றும் கூறுகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
தொழிற்சாலைகள் இந்தியாவை விட்டு வெளியேறுமா?

பட மூலாதாரம், Getty Images
அதிபர் டிரம்ப் எதிர்பார்ப்பதைப் போல உற்பத்தி உடனடியாக அமெரிக்காவுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
“எந்தத் தொழிற்சாலையாலும் உடனடியாக அதைச் செய்ய முடியாது. இங்குள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு, அமெரிக்காவில் உடனடியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதெல்லாம் நடக்காத காரியம்” என்று விளக்கினார் அவர்.
“மாறாக, அமெரிக்காவில் விலைவாசி அதிகரிக்கும். அதிபர் டிரம்ப் இறக்குமதி வரிகளை அதிகரித்துள்ளதால் கார்களின் விலை அமெரிக்காவில் உடனடியாக அதிகரிக்கும். இதன் விளைவாகப் பழைய கார்களின் விலையும் அதிகரிக்கும்.”
அதோடு, “பொதுவான விலைவாசியும் அமெரிக்காவில் அதிகரிக்கும், நுகர்வு குறையும். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை, பங்குச் சந்தை ஏற்கெனவே விலை அதிகமுள்ள சந்தை என்பதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவார்கள். தங்கத்தைப் பொறுத்தவரை, நிச்சயமாக விலை ஏறும். இந்த நிலையற்ற தன்மை உள்ளவரை விலையேற்றம் நீடிக்கும்,” என்று விளக்கினார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC