Home தேசிய national tamil டிரம்பின் ‘பேச்சுவார்த்தை’ குறித்து இரான் மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?

டிரம்பின் ‘பேச்சுவார்த்தை’ குறித்து இரான் மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?

6
0

SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images

அமெரிக்காவுடன் போர் நிறுத்த குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை இரானிய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் இரானிய ஊடகங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

இரானுடன் நடந்த “பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு” பிறகு, இரானிய மின் நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 23 அன்று தெரிவித்தார்.

இரான் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படும் என்று கூறி மார்ச் 21 அன்று டிரம்ப் 48 மணிநேர காலக்கெடுவை விதித்திருந்தார்.

மார்ச் 23 அன்று இரவு, “குழந்தைகளைக் கொல்லும் தாக்குதல் நடத்துபவர்களை” எதிர் கொள்வதற்கு இதுவே சரியான வழி என்று கூறி, தனது சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நியாயப்படுத்தியது.

இரானின் முக்கிய ராணுவ கட்டளை மையமான காத்ம்-உல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர், ஹோர்மூஸ் நீரிணையை சேர்ந்து கட்டுப்படுத்தலாம் என்ற டிரம்பின் யோசனையை நிராகரித்தார்.

மேலும், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் மீது இரானுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக அவர் கூறினார்.

கர்னல் இப்ராஹிம் சோல்ஃபகாரி கூறுகையில், “பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு அமைப்பில் தலையிட இப்பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு உரிமை இல்லை” என்றார்.

மேலும் இரானின் ஆயுதப் படைகள் பிராந்திய நாடுகளுடன் இணைந்து, வெளித்தலையீடு இன்றி அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Roberto Schmidt/Getty Images

இரானிய ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி, “அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எடுக்கப்படவும் மாட்டாது” என்று கூறினார்.

மேலும் டிரம்பை ஒரு “பொறுப்பற்ற சூதாட்டக்காரர்” என்றும் அவர் அழைத்தார்.

“கண்ணியம், மனிதநேயம் அல்லது மனசாட்சியின் சுவடே இல்லாத, உண்மைக்கு மாறான ஒருவரிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் அலி நிக்ஸாத் தெரிவித்தார்.

பல கடும்போக்குத் தலைவர்களும், அரசாங்க ஆதரவு இணைய பயனர்களும் டிரம்பின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவரது “பின்வாங்கல்” என்று குறிப்பிட்டனர்.

மார்ச் 24 அன்று, சில செய்தித்தாள்கள் இரானுடனான பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் “அப்பட்டமாகப் பொய் சொல்கிறார்” என்று எழுதின.

மேலும் அவரது இந்த நிலைப்பாட்டை “கோழைத்தனமானது” என்றும் குறிப்பிட்டன.

பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞையைத் தனித்துப் பார்க்கக் கூடாது என்றும், அது அரசியல், பொருளாதாரம் மற்றும் உளவுத்துறை இலக்குகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் பன்முனை உத்தியின் ஒரு பகுதியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும் கடும்போக்கு செய்தித்தாளான ஃபர்ஹெய்க்டகூன் குறிப்பிட்டது.

தீவிர பழமைவாத தலைவராக கருதப்படும் சயீத் ஜலிலி, ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் மாறிவரும் நிலைப்பாட்டை ‘பின்வாங்கல்’ என்று கிண்டல் செய்தார்.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “கடந்த நான்கு தசாப்தங்களில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளால் இரான் ஒருபோதும் பயனடைந்ததில்லை. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக இரான் தாக்குதல்களை நாட வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.

பத்திரிகையாளர் பயம் ஃபஸ்லினெஜாத், ”அமெரிக்கா இப்போது உளவியல் போரை கையாளக்கூடும். வஞ்சகத்தின் மூலம் நமது வெற்றியைத் தோல்வியாக மாற்றக்கூடும்” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images

‘பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா’

அமெரிக்க அதிகாரிகள் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்பைத் தொடர்பு கொண்டதாக வெளியான செய்திகளை கடும்போக்கு ஊடகங்களும் சில சமூக ஊடக பயனர்களும் மறுத்துள்ளனர்.

இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, டிரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் காலிபாப்பைத் தொடர்பு கொண்டதாக ‘ஆக்ஸியோஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம், அவருக்கும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முன்மொழிந்ததாக மற்றொரு செய்தி கூறுகிறது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமான தஸ்னிம் செய்தி நிறுவனம், மார்ச் 24 அன்று இத்தகைய தகவல்கள் இரானுக்குள் உட்பிரிவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறியது.

அதேபோல், காலிபாப்பின் பிம்பத்தைச் சிதைக்கவும், கருத்து வேறுபாடுகளை உருவாக்கவும், ‘கொலைக்கான களத்தைத் தயார் செய்யவும்’ இந்த ‘புனையப்பட்ட’ கதை உருவாக்கப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க இரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணிநேர காலக்கெடு, மோதலில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கக்கூடும் என்று ஒரு நாளைக்கு முன்னதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பட மூலாதாரம், Erik Marmor/Getty Images

இஸ்ரேலிய ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

டொனால்ட் டிரம்பின் முடிவை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்தாலும், இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமெரிக்கா அறிவித்தது குறித்து மார்ச் 24 அன்று இஸ்ரேலிய ஊடகங்கள் கவலை தெரிவித்தன.

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க இரானுக்கு டிரம்ப் விதித்த 48 மணிநேர காலக்கெடு, மோதலில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கக்கூடும் என்று ஒரு நாளைக்கு முன்னதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அப்போது வலதுசாரி ஊடகங்கள் அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களை வரவேற்றதுடன், அதனை விரைவாக முடிவெடுக்கும் அமெரிக்காவின் சக்தி எனவும் வர்ணித்தன.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் “முக்கிய சாதனைகளை” சாதகமாகப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தைகள் மூலம் தனது போர் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இஸ்ரேலுக்கு வாய்ப்பு இருப்பதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மார்ச் 23 அன்று ஒரு வீடியோ செய்தியில் தெரிவித்தார்.

இரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் இஸ்ரேலின் “முக்கிய நலன்களை” பாதுகாக்கும் என்றும் நெதன்யாகு கூறினார்.

பேச்சுவார்த்தைகள் நடந்தால், இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க இரான் முன்வராது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், Channel 12 News

பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கும் இஸ்ரேலிய ஊடகங்கள்

பேச்சுவார்த்தைகள் நடந்தால், இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க இரான் முன்வராது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக மார்ச் 24 அன்று ‘யெடியோட் அஹ்ரோனோட்’ செய்தித்தாள் ‘கவலைக்குரிய சரணாகதி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

பிரபல செய்தித்தாள் கட்டுரையாளரான பென்-ட்ரோர் எமினி எழுதுகையில், “அதே விஷயம் மீண்டும் நடக்குமோ என்ற பயம் உள்ளது. இரான் ஒருபோதும் போரில் வெல்வதில்லை, ஆனால் அது ஒருபோதும் பேச்சுவார்த்தையில் தோற்பதும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“டிரம்ப் விட்டுக்கொடுக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டாலும், அவர் பேச்சுவார்த்தைப் பாதையைத் தேர்ந்தெடுத்த உடனேயே, இரான்தான் இருக்க விரும்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 23 அன்று சேனல் 12 நியூஸில் நிபுணர்கள், ஓர் ஒப்பந்தம் இரானின் அணுசக்தி திட்டத்தை உண்மையாகவே நிறுத்துமா என்பது குறித்து விவாதித்தனர். அவர்களில் சிலர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

‘இரான் ஏற்காது’

ஓர் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவைக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சேனல் 12 செய்தியாளர் டானா வெய்ஸ் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒப்பந்தத்திற்கு “எந்த வாய்ப்பும் இல்லை” என்று கூறியதாகத் தெரிகிறது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைத்தல், அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் ஏவுகணை இருப்பைக் குறைத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை இரான் ஏற்க வாய்ப்பில்லை என்று அந்த அதிகாரி கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

வலதுசாரி செய்தித்தாளான ‘இஸ்ரேல் ஹயோம்’-இன் தூதரக செய்தியாளர் ஏரியல் கஹ்னாவும், பேச்சுவார்த்தைகளில் இருந்து குறிப்பிடத்தக்க பலன் கிடைப்பதற்கு சிறிதளவே நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

மேலும், “இரான் மேலும் பிடிவாதமாக மாறி மறுக்கக்கூடும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஏற்க முடியாத நிபந்தனைகளை அது விதிக்கக்கூடும், இது தொடர்ச்சியான குண்டுவீச்சிற்கு வழிவகுக்கும்” என்றும் அவர் கூறினார்.

வலதுசாரி மற்றும் நெதன்யாகு ஆதரவு ‘சேனல் 14’ , டிரம்ப் “முதலில் பணிந்துவிட்டார்” என்றும், இது “மிகவும் தீவிரமானது” என்றும் கூறியது.

ஆனால் அதே சேனலில், விவாதங்களில் பங்கேற்ற சிலர் டிரம்ப்பைப் பாராட்டினர். அவர் மிகவும் புத்திசாலித்தனமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விமர்சகர் மோஷே கோஹன் எலியா, டிரம்ப் “அனைவரையும் குழப்புகிறார்” என்றும் “எதிரியைக் குழப்புகிறார்” என்றும் கூறினார்.

மேலும் “டிரம்ப் இறுதி வரை செல்வார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

இதற்கிடையில், தாராளவாத செய்தித்தாளான ‘ஹாரெட்ஸ்’-இன் தலையங்கம், ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ராஜீய முயற்சிகளை ஆதரித்தது.

“இரான் அணுசக்தி நாடாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் ஓர் ஒப்பந்தம் அவசியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.

மேலும், “அமெரிக்காவும் இரானும் எந்தத் தடையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். மூன்று வாரங்களுக்கும் மேலான மோதலுக்குப் பிறகு, இப்போது சர்வதேச ராஜீயத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டிய நேரம் இது” என்றும் அது கூறியுள்ளது.

பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU