Home தேசிய national tamil டியாகோ கார்சியா மீதான இரான் ஏவுகணை தாக்குதலால் இந்தியாவுக்கு என்ன சவால்?

டியாகோ கார்சியா மீதான இரான் ஏவுகணை தாக்குதலால் இந்தியாவுக்கு என்ன சவால்?

5
0

SOURCE :- BBC NEWS

டியாகோ கார்சியா, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், இந்தியா

பட மூலாதாரம், US National Archives

இந்தியாவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக் – பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியாவை நோக்கி இரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. அவற்றில் எந்த ஏவுகணையும் அந்தத் தளத்தைச் சென்றடையவில்லை.

ஹோர்முஸ் நீரிணை வழியாக சரக்கு போக்குவரத்தை தடுப்பதற்கான இரானின் முயற்சிகளை முறியடிக்க தங்களது ராணுவத் தளங்களைப் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. ஆனால், அவ்வாறு ராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவது “பதற்றங்களின் அதிகரிப்பாகவே” பார்க்கப்படும் என்று பிரிட்டனை இரான் எச்சரித்தது.

சனிக்கிழமை இரானின் ஏவுகணைத் தாக்குதல் இலக்கை எட்டாமல் தோல்வியடைந்தாலும் அது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இரானுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான போர் இந்தியாவின் எல்லையை எட்டிவிட்டதா? இது இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

இரண்டாவது கேள்வி, வேண்டாம் என்று சொல்லியும் பிரிட்டனும் இந்தப் போரில் இணைந்துள்ளதா? இது இந்தப் போரின் எல்லையை விரிவுபடுத்துமா?

இந்தச் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிபுணர்கள் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், இந்த முன்னேற்றம் இந்தியாவிற்குப் பல கவலைகளை எழுப்புகிறது என்றும், டியாகோ கார்சியா மீதான தாக்குதல் இந்தப் போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இரான் தாக்குதல்

டியாகோ கார்சியாவை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்ட செய்தியை, பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை முதலில் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து பிபிசி பல்வேறு தரப்பினரிடம் பேசியதில், அவர்கள் இச்செய்தியை உறுதிப்படுத்தினர்.

இரான் அந்தத் தளத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகளை ஏவியதை பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

இருப்பினும், அந்தப் பிராந்தியம் முழுவதும் இரான் நடத்தும் பொறுப்பற்ற தாக்குதல்கள் “பிரிட்டிஷ் நலன்களுக்கும் பிரிட்டனின் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவிலிருந்து “தற்காப்பு தாக்குதல் பணிகளை” மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்திற்கு பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது.

தற்போது வரை, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தளத்திலிருந்து அமெரிக்கா அத்தகைய பணிகளை மேற்கொண்டதாக எந்தச் செய்தியும் இல்லை.

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவை சென்றடையும் திறன் கொண்ட ஏவுகணைகள் இரானிடம் உள்ளதா என்பதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது.

உண்மையில், அமெரிக்க விமானப்படையின் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்த தளம், இரானில் இருந்து 4,000 கிமீ-க்கும் அப்பால் உள்ளது.

இதுவரை இரானிடம் 2,000 கிலோமீட்டர் வரை இலக்குகளை தாக்கக் கூடிய நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாக நம்பப்பட்டது.

இருப்பினும், இரானின் கோர்ரம்ஷார் ஏவுகணை அதிக தூரம் பாயும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று சில ராணுவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இஸ்ரேலின் அல்மா ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின்படி, இரானின் கோர்ரம்ஷார் ஏவுகணை 3,000 கிலோமீட்டர் வரை செல்லும் வரம்பைக் கொண்டிருக்கலாம். இது வடகொரியாவின் நடுத்தர தூர ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

டியாகோ கார்சியா, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், இந்தியா

பட மூலாதாரம், EPA

இந்தியாவுக்கு என்ன சவால்?

இந்தியப் பெருங்கடலில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவின் நிலையைப் பாதிக்குமா?

பிபிசி ஹிந்தியின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் பிரேமானந்த மிஸ்ரா, “டியாகோ கார்சியா மிகவும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படுகிறது. இரான் அங்கு தாக்குதல் நடத்தியிருந்தால், அது இலக்கைத் தவறவிட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்திருந்தால், அது எதிர்காலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகும். இது இந்தியாவின் இந்தோ – பசிபிக் உத்திக்கு கவலைக்குரிய விஷயமாகும்,” என்று கூறுகிறார்.

“இது இந்தியாவின் மூலோபாய சுதந்திரக் கொள்கை, குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்த கடல் பகுதியில் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்து ஆகியவற்றின் மீது ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது.”

பேராசிரியர் பிரேமானந்த மிஸ்ரா மேலும் கூறுகையில், “நாளை இந்தப் போர் தீவிரமடைந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் ஏற்பட்டால், இந்தியா என்ன செய்யும்? அல்லது என்ன செய்ய முடியும்?

உண்மையில், இந்தோ – பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தொடர்பான இந்தியாவின் மூலோபாய சுதந்திரத்திற்கு டியாகோ கார்சியா மிகவும் முக்கியமானது.”

“டியாகோ கார்சியா தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வகையான உறவு இருந்து வருகிறது. எனவே இத்தகைய அச்சுறுத்தல் அதிகரித்தால், அமெரிக்கா மீதான இந்தியாவின் சார்பு அதிகரிக்கும். ஏனெனில் அமெரிக்கா இல்லாமல் சீனாவின் விரிவாக்கத்தையோ அல்லது சீனாவின் கண்காணிப்பையோ எதிர்கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை.”

டியாகோ கார்சியா, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கு நுண்ணறிவு தளத்தின் (Middle East Insights Platform) நிறுவனர் டாக்டர் ஷுபதா சௌத்ரி, டியாகோ கார்சியா மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவிற்கு மிகவும் சவாலானது எனக் கருதுகிறார். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்தியாவின் திறன்களின் வரம்புகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் கூறுகிறார்.

“டியாகோ கார்சியா இந்தியாவின் தெற்கு முனையிலிருந்து சுமார் 1,800 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பெரும்பாலான இந்திய போர் விமானங்களின் தாக்குதல் வரம்பிற்கு அப்பாற்பட்டது. நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பாமல் இது சாத்தியமில்லை. இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் திறன்கள் மிகவும் குறைவாகவே உள்ளன,” என்று அவர் கூறுகிறார்.

“டியாகோ கார்சியாவை சென்றடையும் திறன் கொண்ட அக்னி-III/IV/V போன்ற நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் பிரதானமாக அணுஆயுதங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை”

இந்தியப் பெருங்கடலில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஷுபதா சௌத்ரி சுட்டிக்காட்டுகிறார்.

“டியாகோ கார்சியாவில் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுக்கள், பேட்ரியாட்/தாட் (Patriot/THAAD) ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மின்னணு போர் முறைகள் உள்ளிட்ட அமெரிக்க ராணுவ தளவாடங்கள் உள்ளன. இவை பெரும்பாலான வழக்கமான தாக்குதல்களை முறியடிக்கக் கூடியவை,” என்று அவர் கூறுகிறார்.

“கூடுதலாக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த கடல் பகுதிகளில் வழக்கமாக இயங்குகின்றன. எந்தவொரு இந்திய கடற்படை குழுவும் டியாகோ கார்சியா மீதான அதன் தாக்குதல் வரம்பை எட்டுவதற்கு முன்பே, எதிர் தரப்பு நீர்மூழ்கிக் கப்பல்களின் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும்.”

டியாகோ கார்சியா, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், இந்தியா

‘போரின் தீவிரம் அதிகரிக்கும்’

இரானுடனான இந்த மோதலில் நேரடியாக ஈடுபட பிரிட்டனும் ஐரோப்பாவும் தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால் டியாகோ கார்சியா மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதல் அதை மாற்றியமைக்குமா?

பேராசிரியர் பிரேமானந்த் கூறுகையில், “இந்தத் தாக்குதல் பிரிட்டனின் தயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும். நீங்கள் டியாகோ கார்சியா மீது ஐ.ஆர்.பி.எம் (IRBM – இடைநிலைத் தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை) பயன்படுத்துகிறீர்கள் என்றால், உலகம் முழுவதும் உள்ள பிரிட்டனின் கடற்படை அல்லது ராணுவத் தளங்கள் ஆபத்தில் இருப்பதாகப் பொருள். எனவே, ஐரோப்பா மற்றும் குறைந்தபட்சம் பிரிட்டனைப் பொறுத்தவரை, இந்தத் தயக்கம் முடிவுக்கு வரும். அவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்புக் குடையின் கீழ் வரவேண்டியிருக்கும்.”

அவர் கூறுகையில், “இது ஐரோப்பாவிற்கான ஒரு சமிக்ஞை ஆகும். அவர்களின் ராணுவத் தளங்களும் பாதுகாப்பானவை அல்ல என்பதையும், இரானின் இந்தத் தாக்குதல் இந்தப் போரின் தீவிரத்தை மட்டுமே அதிகரிக்கும் என்பதையும் இது காட்டுகிறது.”

அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ‘சிறப்பு உறவு’ மிகவும் ஆழமானது, எனவே அமெரிக்காவின் எந்தவொரு பெரிய ராணுவ நடவடிக்கையிலும் பிரிட்டன் நடுநிலை வகிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று ஷுபதா சௌத்ரி கூறுகிறார்.

நேட்டோ அமைப்பிற்குள் உளவுத் தகவல் பகிர்வு செயல்முறைகள் மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பு ஆகியவை தானாகவே செயல்படுத்தப்படுகின்றன.

அவர் கூறுகையில், “பிரிட்டன் ‘ஃபைவ் ஐஸ்’ (Five Eyes) கூட்டணியின் ஒரு அங்கமாகும். பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரானுடனான எந்தவொரு மோதலிலும் அமெரிக்காவுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமை பிரிட்டனுக்கு உள்ளது.”

“கூடுதலாக, டியாகோ கார்சியா என்பது அமெரிக்காவிற்கு குத்தகைக்கு விடப்பட்ட ஒரு பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எந்தவொரு வான்வழி நடவடிக்கைகளுக்கும் இந்தத் தளம் பயன்படுத்தப்படுகிறது. இது பிரிட்டன் தானாகவே இதில் பங்கேற்கவேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU